தம்பதிகளுக்கு
2: கூட்டுமுயற்சி
இதன் அர்த்தம் என்ன?
திருமணத்தில் கூட்டுமுயற்சி இருந்தால்தான், ஒரு கணவனும் மனைவியும் ஒரே நோக்கத்தோடு செயல்படுகிற விமானி மற்றும் துணை விமானி போல இருப்பார்கள். பிரச்சினைகள் வரும்போதுகூட, அவர்கள் இருவருமே, “நான், எனக்கு” என்று யோசிப்பதற்குப் பதிலாக, “நாம், நமக்கு” என்று யோசிப்பார்கள்.
பைபிள் நியமம்: “அவர்கள் இரண்டு பேராக இல்லாமல், ஒரே உடலாக இருப்பார்கள்.”—மத்தேயு 19:6.
“கல்யாண வாழ்க்கையில கணவனும் மனைவியும் தனிக்காட்டு ராஜாவாவோ ராணியாவோ இருக்க முடியாது. கணவன், மனைவி ரெண்டு பேருமே சேர்ந்து உழைச்சாதான் அதுல வெற்றி பெற முடியும்.”—க்ரிஸ்டோஃபர்.
இது ஏன் முக்கியம்?
கணவனும் மனைவியும் ஒரு டீமாக இல்லையென்றால், பிரச்சினை வரும்போது, அவர்கள் அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பதிலாக ஒருவரையொருவர் குறை சொல்வதிலேயே குறியாக இருப்பார்கள். அப்போது, உப்புச்சப்பில்லாத விஷயங்கள்கூட பெரிய பிரச்சினைகளாக ஆகிவிடும்.
“டீமா வேலை செய்றதுதான் திருமண பந்தத்துக்கு ரொம்ப முக்கியம். நானும் என் கணவரும் ஒரு டீமா வேலை செய்யலன்னா ஒரே வீட்டுல இருந்தாலும், தனித்தனி தீவுகள் மாதிரி இருப்போம், முக்கியமான தீர்மானங்கள சேர்ந்து எடுக்க முடியாம திண்டாடிட்டு இருப்போம்.”—அலெக்ஸாண்டரா.
நீங்கள் என்ன செய்யலாம்?
உங்களையே சோதித்துப்பாருங்கள்
-
நான் சம்பாதிக்கிறேன் என்பதற்காக, “எல்லாமே என் பணம்தான்” என்று நினைக்கிறேனா?
-
என் துணையைவிட்டு எங்காவது தனியாகப் போனால்தான் என்னால் நிம்மதியாக இருக்க முடியுமென்று நினைக்கிறேனா?
-
என் துணை தன் சொந்தபந்தங்களிடம் நெருங்கியிருக்கும்போது, நான் மட்டும் அவர்களிடம் ஒட்டாமல் இருக்கிறேனா?
உங்கள் துணையோடு கலந்துபேசுங்கள்
-
எந்த விஷயத்தில்(ங்களில்) நாம் ஒரு டீமாக இருக்கிறோம்?
-
எந்த விஷயத்தில்(ங்களில்) நாம் முன்னேற்றம் செய்யலாம்?
-
இன்னும் நல்ல ஒரு டீமாக இருப்பதற்கு நாம் என்ன முயற்சிகளை எடுக்கலாம்?
டிப்ஸ்
-
டென்னிஸ் மேட்சில் நீங்களும் உங்கள் துணையும் எதிரெதிர் டீமாக விளையாடுவதுபோல் கற்பனை செய்யுங்கள். நீங்கள் உங்கள் துணையோடு சேர்ந்து ஒரே டீமாக விளையாடுவதற்கு நடைமுறையான என்ன முயற்சிகளை எடுக்கலாம்?
-
‘நான் எப்படி ஜெயிக்கலாம்?’ என்று யோசிப்பதற்குப் பதிலாக, ‘நாம ரெண்டு பேரும் எப்படி ஜெயிக்கலாம்?’ என்று யோசியுங்கள்.
“யார் செஞ்சது தப்பு, யார் செஞ்சது சரினு எல்லாம் யோசிச்சிட்டு இருக்காதீங்க. சமாதானமா, ஒற்றுமையா இருக்குறதுதான் அதவிட முக்கியம்.”—ஈத்தன்.
பைபிள் நியமம்: “உங்களுடைய நலனில் மட்டுமே அக்கறை காட்டாமல், மற்றவர்களுடைய நலனிலும் அக்கறை காட்டுங்கள்.”—பிலிப்பியர் 2:3, 4.