பாடம் 6
நல்ல ஒழுக்கங்களைக் கற்றுக்கொள்வது
நல்ல ஒழுக்கங்கள் என்றால் என்ன?
நல்ல ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்கும் ஒருவர், சரி எது தவறு எது என்பதைத் தெளிவாகப் புரிந்து வைத்திருப்பார். அப்போதைக்கு எது சரியென்று தோன்றுகிறதோ அதன்படி நடக்காமல், குறிப்பிட்ட நெறிமுறைகளை எப்போதும் கடைப்பிடிப்பார், அதுவும் மற்றவர்கள் பார்க்காத சமயங்களில்கூட!
நல்ல ஒழுக்கங்கள் ஏன் முக்கியம்?
பிள்ளைகள் கேட்கும் இசை, அவர்கள் பார்க்கும் சினிமா, டிவி நிகழ்ச்சிகள் என எல்லாமே நல்லதைக் கெட்டதாகவும் கெட்டதை நல்லதாகவும் சித்தரிக்கின்றன. அவர்களோடு படிக்கும் பிள்ளைகளும் இதைத்தான் செய்கிறார்கள். அதனால், தங்களுக்குக் கற்றுத்தரப்படும் ஒழுக்கநெறிகள் சரியானவைதானா என்ற சந்தேகம் பிள்ளைகளுக்கு வந்துவிடுகிறது.
முக்கியமாக, டீனேஜ் பருவத்தில் இது ஒரு பெரிய பிரச்சினை. அந்தப் பருவத்தில், “ஊர் உலகத்துக்கு பிடித்த மாதிரி நடந்துகொள்ள வேண்டுமென்றுதான் நண்பர்களும் மற்றவர்களும் வற்புறுத்துவார்கள் என்பதைப் பிள்ளைகள் புரிந்துகொள்ள வேண்டும். நண்பர்களுக்குப் பிடிக்காவிட்டால்கூட, சரியானதைச் செய்ய அவர்கள் தீர்மானமாக இருக்க வேண்டும்” என்று ஒரு புத்தகம் (Beyond the Big Talk) சொல்கிறது. அப்படியென்றால், பிள்ளைகள் டீனேஜ் பருவத்தை எட்டுவதற்கு முன்பே பெற்றோர் இதையெல்லாம் கற்றுக்கொடுக்க வேண்டும்.
நல்ல ஒழுக்கங்களைக் கற்றுக்கொடுப்பது எப்படி?
சரி எது, தவறு எது என்று புரியவையுங்கள்.
பைபிள் ஆலோசனை: ‘முதிர்ச்சியுள்ளவர்கள் . . . சரி எது, தவறு எது என்பதைப் பிரித்துப் பார்க்க தங்களுடைய பகுத்தறியும் திறன்களைப் பயன்படுத்திப் பயிற்றுவித்திருக்கிறார்கள்.’—எபிரெயர் 5:14.
-
சரி எது, தவறு எது என்று நேரடியாகச் சொல்லுங்கள். தினமும் நடக்கும் விஷயங்களைச் சுட்டிக்காட்டி, “நேர்மையா நடக்கறதுன்னா இதுதான்; இது நேர்மை இல்ல,” “விசுவாசமா நடக்கறதுன்னா இதுதான்; இது விசுவாசம் இல்ல,” “அன்பா நடக்கறதுன்னா இதுதான்; இது அன்பு இல்ல” என்றெல்லாம் சொல்லுங்கள். காலப்போக்கில், எப்படியெல்லாம் நடந்துகொள்ள வேண்டும், எப்படியெல்லாம் நடந்துகொள்ளக் கூடாது என்பதை உங்கள் பிள்ளையால் புரிந்துகொள்ள முடியும்.
-
காரணங்களை விளக்குங்கள். “ஏன் நேர்மையா இருக்குறது நல்லதுன்னு நினைக்கிற? பொய் சொன்னா ஏன் நம்ம ஃப்ரெண்ட்ஸ் நம்மளவிட்டு பிரிஞ்சிடுவாங்க? திருடுறது ஏன் தப்பு?” போன்ற கேள்விகளைக் கேளுங்கள். காரணங்களை எடுத்துச் சொல்வதன் மூலம், நல்லது கெட்டதைப் பிரித்துப் பார்க்கும் திறனையும் நல்ல மனசாட்சியையும் வளர்த்துக்கொள்ள உதவுங்கள்.
-
நன்மைகளை வலியுறுத்துங்கள். “நீ நேர்மையா நடந்துகிட்டா மத்தவங்க உன்னை நம்புவாங்க,” “நீ அன்பா நடந்துகிட்டா எல்லாரும் உன்கிட்ட பழக ஆசைப்படுவாங்க” என்றெல்லாம் நீங்கள் சொல்லலாம்.
நல்ல ஒழுக்கங்களை உங்கள் குடும்பத்தின் அடையாளமாக்குங்கள்.
பைபிள் ஆலோசனை: “நீங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைத் தெரிந்துகொள்ள உங்களையே எப்போதும் ஆராய்ந்து பாருங்கள்.”—2 கொரிந்தியர் 13:5.
-
குடும்பத்தில் இருக்கும் எல்லாருமே நல்ல ஒழுக்கங்களைப் பின்பற்ற வேண்டும். அப்போதுதான், உங்களால் இப்படியெல்லாம் நேர்மையாகச் சொல்ல முடியும்:
-
“நம்ம குடும்பத்துல யாருமே பொய் சொல்ல மாட்டோம்.”
-
“மத்தவங்கள அடிக்கற பழக்கமும் கோபத்துல கத்துற பழக்கமும் நமக்கு இல்ல.”
-
“மத்தவங்க மனச கஷ்டப்படுத்துற மாதிரி நாம பேச மாட்டோம்.”
-
நீங்கள் இப்படிச் செய்யும்போது, பிள்ளைகள் நல்ல ஒழுக்கங்களைத் தாங்கள் பின்பற்ற வேண்டிய சட்டங்களாகப் பார்க்காமல், உங்கள் குடும்பத்தின் அடையாளமாகப் பார்ப்பார்கள்.
-
குடும்பமாக நீங்கள் கடைப்பிடிக்கும் ஒழுக்கநெறிகளைப் பற்றி உங்கள் பிள்ளையிடம் அடிக்கடி பேசுங்கள். தினமும் நடக்கும் விஷயங்களையே உதாரணமாகச் சொல்லி அவனுக்குக் கற்றுக்கொடுங்கள். ஒருவேளை, நீங்கள் எதிர்பார்க்கும் ஒழுக்கநெறிகள், டிவியிலிருந்தோ பள்ளியிலிருந்தோ உங்கள் பிள்ளை தெரிந்துகொள்ளும் விஷயங்களிலிருந்து எப்படி வித்தியாசமாக இருக்கின்றன என்று நீங்கள் விளக்கலாம். அதன் பிறகு, “நீ என்ன செஞ்சிருப்ப?” “நாம என்ன செஞ்சிருப்போம்?” என்றெல்லாம் கேளுங்கள்.
தீர்மானமாக இருக்க உதவுங்கள்.
பைபிள் ஆலோசனை: “நல்ல மனசாட்சியோடு இருங்கள்.”—1 பேதுரு 3:16.
-
நல்லது செய்யும்போது பாராட்டுங்கள். உங்கள் பிள்ளை நல்ல விதமாக நடந்துகொள்ளும்போது, அதைக் குறிப்பாகச் சொல்லிப் பாராட்டுங்கள். உதாரணத்துக்கு, “நீ நேர்மையா நடந்துகிட்ட. அதனால உன்னை நெனச்சா பெருமை இருக்கு” என்று சொல்லுங்கள். ஏதாவது தப்பு செய்துவிட்டதாக உங்கள் பிள்ளை சொல்லும்போது, அவனைத் திருத்துவதற்கு முன்பு, தப்பை நேர்மையாக ஒத்துக்கொண்டதற்காக மனதாரப் பாராட்டுங்கள்.
-
கெட்டது செய்யும்போது திருத்துங்கள். உங்கள் பிள்ளைகள் என்ன செய்தாலும் அதற்கு அவர்கள்தான் பொறுப்பு என்பதைப் புரிய வையுங்கள். அவர்கள் என்ன தப்பு செய்தார்கள் என்பதையும், குடும்பத்தில் எதிர்பார்க்கப்படும் ஒழுக்கநெறிகளுக்கு அது எப்படி நேர்மாறாக இருக்கிறது என்பதையும் எடுத்துச் சொல்லுங்கள். பிள்ளைகளைக் கண்டித்தால் அவர்கள் மனம் கஷ்டப்படும் என்று பெற்றோர்கள் சிலர் நினைக்கிறார்கள். ஆனால், பிள்ளைகள் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டினால்தான் அவர்கள் நல்ல மனசாட்சியை வளர்த்துக்கொள்வார்கள், கெட்டதைச் செய்யாமலும் இருப்பார்கள்.