உங்களுக்கு உணவு அலர்ஜியா அல்லது உணவு சகிப்பின்மையா?
எமிலி: “நான் சாப்ட்டுட்டு இருந்தப்போ எனக்கு ஒரு மாதிரி இருந்துச்சு. அப்புறம் வாயெல்லாம் அரிக்க ஆரம்பிச்சிடுச்சு, நாக்கு வீங்கிடுச்சு. லேசா தலை சுத்துற மாதிரி இருந்துச்சு, மூச்சுவிட கஷ்டமா இருந்துச்சு. கையிலயும் கழுத்துலயும் தடிப்புதடிப்பா வந்துடுச்சு. எனக்கு ஒரே பதட்டமா ஆயிடுச்சு. உடனே ஆஸ்பிட்டலுக்கு போனேன்.”
நிறைய பேருக்கு சாப்பிடுவது என்றாலே சுவையான அனுபவம்தான். ஆனால் சிலரைப் பொறுத்தவரை, சில வகை உணவு “எதிரி” மாதிரி. எமிலியை போல, அவர்களும் உணவு அலர்ஜியால் அவதிப்படுகிறார்கள். எமிலிக்கு வந்த பயங்கரமான அலர்ஜிக்கு பெயர்தான் அனாஃபைலாக்சிஸ், இது ரொம்ப ஆபத்தானது! ஆனால் கவலைப்படாதீர்கள், எல்லா அலர்ஜிகளும் ரொம்ப ஆபத்தானது கிடையாது.
சமீப காலமாக நிறைய பேருக்கு உணவு அலர்ஜி, உணவு சகிப்பின்மை (food intolerance) வருகிறது. நிறைய பேர் தங்களுக்கு உணவு அலர்ஜி இருப்பதாக நினைத்தாலும், அவர்களில் கொஞ்சம் பேர்தான் மருத்துவரிடம் போய் பரிசோதனை செய்து பார்த்திருப்பதாக ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.
உணவு அலர்ஜி என்பது...
“உணவு அலர்ஜியை பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விளக்கம் கொடுக்கிறார்கள்” என்று ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் மெடிக்கல் அஸோசியேஷன் சொல்கிறது. இருந்தாலும், அலர்ஜியை தூண்டிவிடுவது நோய் எதிர்ப்பு சக்திதான் என்று நிபுணர்கள் பலர் சொல்கிறார்கள்.
அலர்ஜி வருவதற்கு உணவில் இருக்கும் புரதம்கூட ஒரு காரணம். உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி, ஒருவகையான புரதத்தை ஆபத்தானது என்று தவறாக நினைத்துக்கொள்கிறது. அந்த புரதம் நம் உடலுக்குள் போகும்போது அதை தாக்குவதற்காக IgE என்ற ஆன்டிபாடியை நோய் எதிர்ப்பு சக்தி உருவாக்குகிறது. நாம் திரும்பவும் அந்த புரதத்தை எடுத்துக்கொள்ளும்போது ஏற்கெனவே உருவான ஆன்டிபாடி, ஹிஸ்டமைன் போன்ற வேதிப்பொருள்களை உருவாக்குகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியில் இருக்கும் ஹிஸ்டமைன் பொதுவாக ஒருவருக்கு நன்மைதான் செய்யும். ஆனால், IgE என்ற ஆன்டிபாடி இருப்பதாலும் ஹிஸ்டமைன் சுரப்பதாலும் சிலருக்கு அலர்ஜி உண்டாகிறது. ஏதாவது ஒருவகை புரதம் ஒருவருடைய உடலுக்கு ஒத்துக்கொள்ளாமல் இருக்கும்போது இப்படிப்பட்ட அலர்ஜி உண்டாகிறது.
அதனால்தான் சில உணவு வகைகளை முதல் தடவை சாப்பிடும்போது ஒன்றும் ஆவதில்லை. ஆனால் அடுத்த தடவை அதை சாப்பிடும்போது அலர்ஜி வரலாம்.
உணவு சகிப்பின்மை என்பது...
உணவு சகிப்பின்மையும் ஒருவிதத்தில் உணவு அலர்ஜியை போலத்தான். ஏதாவது ஒரு உணவை சாப்பிட்டால் பின்விளைவுகள் ரொம்ப மோசமாக இருக்கலாம். அலர்ஜிக்கு நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக இருக்கிறது. ஆனால் உணவு சகிப்பின்மைக்கு, உணவு செரிக்காமல் இருப்பதுதான் காரணம். இதற்கு எந்த விதமான ஆன்டிபாடியும் காரணம் கிடையாது. என்ஸைமின் குறைபாட்டினால் அல்லது சில வேதிப்பொருள்கள் உணவில் கலந்திருப்பதால் சிலருக்கு உணவு செரிக்காமல் போகலாம். உதாரணத்துக்கு, பால் பொருள்களில் ஒருவகையான சர்க்கரை இருக்கிறது. அது ஜீரணமாவதற்கு தேவையான என்ஸைம்களை குடல் உற்பத்தி செய்யாததுதான் லாக்டோஸ் சகிப்பின்மைக்கு அல்லது ஒத்துக்கொள்ளாமைக்கு காரணம்.
உணவு சகிப்பின்மைக்கு ஆன்டிபாடிகள் காரணமாக இல்லாததால், முதல்முறையாக ஒரு உணவை சாப்பிட்ட உடனே அந்த உணவு ஒத்துக்கொள்ளவில்லை என்பது நமக்கு தெரிந்துவிடும். ஒரு உணவை எவ்வளவு எடுத்துக்கொள்கிறோம் என்பதை வைத்தும் நமக்கு இந்த பிரச்சினை வரலாம். கொஞ்சமாக எடுத்துக்கொள்ளும்போது நமக்கு ஒன்றும் ஆகாது. ஆனால் அதே உணவை நிறைய எடுத்துக்கொள்ளும்போது பிரச்சினை வரலாம். ஆனால் ஒருவருக்குப் பயங்கர உணவு அலர்ஜி இருந்தால், அலர்ஜியை உண்டாக்கும் உணவை கொஞ்சமாக சாப்பிட்டாலும் அது அவருடைய உயிருக்கே ஆபத்தாகிவிடலாம்.
என்னென்ன அறிகுறிகள் தெரியலாம்?
உங்களுக்கு ஏதாவது ஒரு உணவு அலர்ஜியாக இருந்தால் உங்களுக்கு அரிப்பு ஏற்படலாம், உடலில் ஆங்காங்கே தடிப்புதடிப்பாக ஆகலாம். தொண்டை, கண் அல்லது நாக்கில் வீக்கம் ஏற்படலாம், குமட்டல் உண்டாகலாம், வாந்தி வரலாம், வயிற்றுப்போக்கு ஏற்படலாம். சிலருக்கு இன்னும் மோசமானால் இரத்த அழுத்தம் குறையலாம், தலை சுற்றலாம், மயக்கம் வரலாம், அல்லது மாரடைப்பு வரலாம். இதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி உயிருக்கே ஆபத்தாகிவிடலாம்.
நமக்கு அலர்ஜி வருவதற்கு எந்த உணவு வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம். ஆனால் பால், முட்டை, மீன், நண்டு, இறால், வேர்க்கடலை, சோயாபீன்ஸ், கொட்டை பருப்புகள், கோதுமை போன்றவை அதிக அலர்ஜியை உண்டாக்கும். எந்த வயதில் வேண்டுமானாலும் ஒருவருக்கு அலர்ஜி வரலாம். இதில் மரபணுக்களுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது என்று ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. அப்பா-அம்மாவுக்கு அல்லது அவர்களில் ஒருவருக்கு அலர்ஜி இருந்தால்கூட பிள்ளைக்கும் வரும் வாய்ப்பு இருக்கிறது. பொதுவாக, பிள்ளைகள் வளர வளர இந்த மாதிரியான உணவுகள் அவர்களுடைய உடம்புக்கு ஒத்துப்போய்விடும்.
அலர்ஜி ரொம்ப அதிகமானால் அதற்கான அறிகுறிகள் சீக்கிரமாக தெரியும். ஆனால், உணவு சகிப்பின்மைக்கான அறிகுறிகள் அப்படி உடனே தெரிவதில்லை. உணவு சகிப்பின்மையால் நமக்கு வயிற்றுக்கோளாறு, வயிறு உப்புதல், வாயுத் தொல்லை, தசைப் பிடிப்பு, தலைவலி, தேமல், உடல் சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். உணவு சகிப்பின்மை பலவகை உணவுகளால் வரலாம். உதாரணத்துக்கு, பால் பொருள்கள், கோதுமை, பார்லி, ஓட்ஸ், மதுபானம், ஈஸ்ட் போன்றவற்றால் வரலாம்.
பரிசோதனையும் சிகிச்சையும்
இந்த இரண்டு பிரச்சினைகளில் ஏதாவது ஒன்று உங்களுக்கு இருந்தால் மருத்துவ நிபுணரை போய் பாருங்கள். சில உணவுகளை சாப்பிடாமல் இருக்க நீங்களாகவே முடிவெடுத்தால் உங்களுக்குத்தான் ஆபத்து. ஏனென்றால், உடம்புக்கு தேவையான உணவுகளையும் நீங்கள் எடுத்துக்கொள்ளாமல் போவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
பயங்கரமான உணவு அலர்ஜிக்கு எல்லாரும் ஏற்றுக்கொள்ளும் ஒரு சிகிச்சை கிடையாது. அதனால், அதற்கு காரணமாக இருக்கும் உணவை அடியோடு தவிர்ப்பதை தவிர வேறு வழியே இல்லை. * சில அலர்ஜிகளும், உணவு சகிப்பின்மையும் அந்தளவு மோசமாக இருக்காது. இருந்தாலும், அதற்கு காரணமான உணவுகளை அடிக்கடி சாப்பிடாமல் இருப்பதும் அதிகமாக சாப்பிடாமல் இருப்பதும் நல்லது. ஆனால், ஒருவேளை உணவு சகிப்பின்மை அதிகமாக இருந்தால், அதற்கு காரணமான உணவுகளை மொத்தமாக தவிர்க்க வேண்டும் அல்லது கொஞ்ச நாளைக்காவது தவிர்க்க வேண்டும்.
உங்களுக்கு உணவு அலர்ஜியோ உணவு சகிப்பின்மையோ இருந்தால் கவலைப்படாதீர்கள். நிறைய பேர் இந்த பிரச்சினையை சமாளிக்க கற்றுக்கொண்டார்கள். மற்ற உணவு வகைகளை சாப்பிட்டு மகிழ்கிறார்கள். ▪ (g16-E No. 3)
^ பாரா. 19 பயங்கரமான அலர்ஜி இருப்பவர்கள் தாங்களாகவே போட்டுக்கொள்ளக்கூடிய ஊசி-மருந்தை (அட்ரினலின் அல்லது எபிநெப்ரின்) எப்போதும் வைத்துக்கொள்ள வேண்டும். பிள்ளைகளுக்கு இப்படிப்பட்ட பிரச்சினை இருந்தால், டீச்சர்களுக்கு அல்லது பிள்ளைகளை கவனித்துக்கொள்கிறவர்களுக்கு உதவியாக ஒரு சின்ன குறிப்பு எழுதி பிள்ளையின் கழுத்தில் மாட்டிவிடுங்கள்; அல்லது பிள்ளையின் பையில் வைத்து அனுப்புங்கள் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள்.