Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உயிர் உதிரும்போது...

பிரிவின் பாதிப்புகள்

பிரிவின் பாதிப்புகள்

துக்கத்தில் இருக்கிற ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக நடந்துகொள்வார்கள். சிலர் தங்களுடைய துக்கத்தை வெளியில் காட்டிக்கொள்ள மாட்டார்கள். மனதிலிருக்கும் வேதனையைப் பற்றி மற்றவர்களிடம் பேசும்போது பாரம் குறையும் என்பது உண்மைதான். ஆனால், இப்படித்தான் அல்லது இவ்வளவு நாளுக்குத்தான் துக்கப்பட வேண்டும் என்று சொல்ல முடியாது. கலாச்சாரம், சுபாவம், வாழ்க்கை அனுபவங்கள், அன்பானவர் இறந்த விதம்... இதையெல்லாம் பொறுத்து அவரவர் துக்கப்படும் விதம் வித்தியாசப்படுகிறது.

நிலைமை எந்தளவுக்கு மோசமாகும்?

அன்பானவருடைய இழப்பு தங்களை எந்தளவுக்குப் பாதிக்கும் என்று சிலருக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், இப்படிப்பட்ட சூழ்நிலையில் எல்லாருக்குமே ஒருசில பொதுவான பிரச்சினைகள் வரும். அவை என்னவென்று பார்க்கலாம்.

தவிப்பு. பிரியமான ஒருவரைப் பறிகொடுத்தவர்கள் கதறி அழுவார்கள், அவரை நினைத்து ஏங்குவார்கள், அவர்களுடைய மனநிலையும் திடீர் திடீரென்று மாறும். அதுவும், இறந்தவரைப் பற்றி ஏதாவது நினைவோ கனவோ வந்துவிட்டால், கேட்கவே வேண்டாம்! ஆரம்பத்தில் சிலர், நடந்ததை நம்ப முடியாமல் அதிர்ச்சியில் இருப்பார்கள். தன் கணவர் டீமோ திடீரென்று இறந்தபோது தனக்கு எப்படி இருந்ததென்று டீனா சொல்கிறார்: “என் மனசு மரத்துப்போன மாதிரி ஆயிடுச்சு. என்னால அழக்கூட முடியல. சிலசமயம் நெஞ்சே அடைக்கற மாதிரி இருக்கும். சரியா மூச்சுகூட விட முடியாது. என் கணவர் இறந்தத என்னால நம்பவே முடியல.”

கவலை, கோபம், குற்றவுணர்ச்சி. “என் பையன் எரிக் 24 வயசுல இறந்துட்டான். அதுக்கு அப்புறம் கொஞ்ச நாளா நானும் என் மனைவியும் எதுக்கெடுத்தாலும் எரிஞ்சு எரிஞ்சு விழுந்தோம். பொதுவா எங்களுக்கு இந்த மாதிரியெல்லாம் கோபம் வராது. அதுனால, ‘நாங்களா இப்படி?’ன்னு எங்களாலேயே நம்ப முடியல. எங்க மனசும் உறுத்திட்டே இருந்துச்சு. எங்க பையன இன்னும் நல்லா கவனிச்சிருக்கலாமோன்னு தோணுச்சு” என்று ஐவன் சொல்கிறார். ஆன்ட்ரூ என்பவரின் மனைவி ரொம்ப நாள் படுத்த படுக்கையாக இருந்து கடைசியில் இறந்துபோனார். அவரையும் குற்றவுணர்ச்சி வாட்டியதாகச் சொல்கிறார்: “கடவுள் என்னை கெட்டவன்னு நினைக்கறாரு போலிருக்கு, அதுனாலதான் இந்தளவு கஷ்டத்த கொடுக்குறாருன்னு ஆரம்பத்துல நினைச்சேன். அப்புறம், கடவுள்மேல பழி போடுறேனோ அப்படின்னு நினைச்சு மனசு உறுத்துச்சு” என்று அவர் சொல்கிறார். முதல் கட்டுரையில் நாம் பார்த்த கோஸ்டாஸ் என்பவர் இப்படிச் சொல்கிறார்: “என் மனைவி என்னை தனியா விட்டுட்டு போனத நினைச்சு சிலசமயம் அவமேலயே கோபம் வரும். அப்புறம், அப்படி கோபப்பட்டத நினைச்சு என் மனசு உறுத்தும். அது அவளோட தப்பு இல்லயே.”

வேண்டாத யோசனைகள். துக்கத்தில் இருப்பவர்கள் சிலசமயம் ஏதேதோ யோசிப்பார்கள். உதாரணத்துக்கு, இறந்தவரின் குரல் கேட்பது போல, அவருடைய உருவம் தெரிவது போல அல்லது அவர் தங்களோடு இருப்பது போல கற்பனை செய்வார்கள். அவர்களால் எதிலும் கவனம் செலுத்த முடியாது, எதையாவது ஞாபகம் வைப்பதும் அவர்களுக்குக் கஷ்டமாக இருக்கலாம். டீனா இப்படிச் சொல்கிறார்: “சிலசமயம் யாராவது என்கிட்ட பேசிட்டு இருக்கறப்போ, என் மனசெல்லாம் எங்கேயோ இருக்கும். என் கணவர் இறந்தப்போ என்னெல்லாம் நடந்துச்சுன்னு யோசிச்சிட்டு இருப்பேன். அப்புறம், எதுலயும் கவனம் செலுத்த முடியாதத நினைச்சு அப்படியே நொந்துபோயிடுவேன்.”

மற்றவர்களைவிட்டு ஒதுங்குவது. துக்கத்தில் தவிக்கிறவர்களுக்கு மற்றவர்களோடு இருக்க பிடிக்காது, அது அவர்களுக்கு எரிச்சலாகக்கூட இருக்கும். மனைவியை இழந்த கோஸ்டாஸை எடுத்துக்கொள்ளுங்கள். “கல்யாணமானவங்களோட இருக்கறப்போ, அந்த இடத்தவிட்டு எப்ப போகலாம்னு தோணும். கல்யாணமாகாதவங்க கிட்டயாவது சகஜமா பழக முடியுமான்னு பார்த்தா, அதுவும் முடியல” என்று அவர் சொல்கிறார். மகனை இழந்த ஒரு தாய் (ஐவனின் மனைவி) இப்படிச் சொல்கிறார்: “யாராவது சின்ன சின்ன பிரச்சினைகள சொல்லி புலம்புறப்போ கோபம் கோபமா வரும். எங்க பிரச்சினைக்கு முன்னாடி அதெல்லாம் ஒண்ணுமே இல்லன்னு தோணும். சிலர் அவங்களோட பிள்ளைங்கள பத்தி பெருமையா பேசுவாங்க. அவங்களாவது பிள்ளைங்களோட இருக்காங்களேன்னு நினைச்சு சந்தோஷப்பட்டாலும், அவங்க சொல்றத கேட்கவே பிடிக்காது. நாங்க மறுபடியும் சகஜமா வாழணும்னு எனக்கும் என் கணவருக்கும் புரிஞ்சுது. ஆனாலும் மத்தவங்க பேசறதயெல்லாம் கேட்க எங்களுக்கு ஆசையும் இல்ல, பொறுமையும் இல்ல.”

உடல்நலப் பிரச்சினைகள். பொதுவாக, துக்கத்தில் இருக்கிறவர்களுக்குப் பசி எடுக்காது, தூக்கம் வராது, அல்லது உடல் மெலியும். ஒருவேளை, இதற்கெல்லாம் நேர்மாறாகக்கூட நடக்கலாம். ஏரன் தன் அப்பாவைப் பறிகொடுத்த பிறகு ஒரு வருஷமாக எப்படி வேதனைப்பட்டார் என்று சொல்கிறார்: “என்னால சரியா தூங்க முடியல. சொல்லி வச்ச மாதிரி தினமும் ராத்திரி ஒரே நேரத்துல முழிப்பு வந்துடும். அப்புறம், அப்பாவ பத்தியே யோசிச்சுட்டு இருப்பேன்.”

ஆன்ட்ரூவுக்கு விநோதமான சில உடல்நலப் பிரச்சினைகள் வந்துவிட்டன. “நிறைய தடவை டாக்டர்கிட்ட போனேன். அவரு என்னை ‘செக்’ பண்ணிட்டு நான் நல்லாத்தான் இருக்கேன்னு சொன்னாரு. என் உடம்பு சரியில்லாம போறதுக்கு என் மனசுதான் காரணமோன்னு எனக்கு தோணுச்சு” என்று அவர் சொல்கிறார். அவருடைய உடல்நலப் பிரச்சினைகள் படிப்படியாகச் சரியாகிவிட்டன. ஆனாலும், அவர் டாக்டரைப் போய் பார்த்தது நல்லதுதான். ஏனென்றால், துக்கப்படும்போது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடலாம், ஏற்கெனவே இருக்கிற உடல்நலப் பிரச்சினை இன்னும் மோசமாகிவிடலாம், அல்லது புதிதாக ஒரு உடல்நலப் பிரச்சினை வந்துவிடலாம்.

அவசியமான வேலைகளைச் செய்யத் திண்டாடுவது. ஐவன் இப்படிச் சொல்கிறார்: “என் பையன் எரிக் இறந்தப்போ எங்க சொந்தக்காரங்களுக்கும் நண்பர்களுக்கும் மட்டுமில்ல, இன்னும் நிறைய பேருக்கு செய்தி அனுப்ப வேண்டியிருந்துச்சு. உதாரணத்துக்கு, எரிக்கோட முதலாளிக்கும் வீட்டு ஓனருக்கும் சொல்லி அனுப்ப வேண்டியிருந்துச்சு. சட்டப்படி நிறைய ஃபார்ம்கள எழுதிக்கொடுக்க வேண்டியிருந்துச்சு. அப்புறம், எரிக்கோட சாமான்கள எல்லாம் பார்த்து, எது வேணும், வேணாம்னு முடிவு பண்ண வேண்டியிருந்துச்சு. இதெல்லாம் ரொம்ப யோசிச்சு செய்ய வேண்டிய வேலைகள். ஆனா, மனசுலயும் உடம்புலயும் கொஞ்சம்கூட தெம்பே இல்லாத சமயத்துல நாங்க இத எல்லாத்தயும் செய்ய வேண்டியிருந்துச்சு.”

சிலருக்குக் கொஞ்சக் காலத்துக்குப் பிறகுதான் பெரிய சவாலே வருகிறது; இறந்தவர் செய்துகொண்டிருந்த வேலைகளை இவர்கள் செய்ய வேண்டிய நிலைமை வருகிறது. டீனாவுக்கு அதுதான் நடந்தது. “பாங்க் வேல, தொழில்னு எல்லாத்தயுமே என்னோட கணவர்தான் செஞ்சிட்டு இருந்தாரு. அவரு இறந்ததுக்கு அப்புறம் அதெல்லாம் என் தலையில விழுந்துடுச்சு. என்னால அதையெல்லாம் ஒழுங்கா செய்ய முடியுமான்னு யோசிச்சு யோசிச்சே டென்ஷன் ரொம்ப ஜாஸ்தியாயிடுச்சு” என்று அவர் சொல்கிறார்.

துக்கத்தில் இருக்கிறவர்களின் மனதும் உடலும் எந்தெந்த விதங்களில் பாதிக்கப்படும் என்பதை இப்போது தெரிந்துகொண்டோம்; இதையெல்லாம் படித்தவுடன், துக்கத்தைச் சமாளிக்கவே முடியாது என்று சிலருக்குத் தோன்றலாம். ஆனால், உண்மை என்ன தெரியுமா? ஒருவரை மரணத்தில் பறிகொடுக்கும்போது மனம் வலியில் துடிக்கும் என்றாலும், நாம் எந்தெந்த விதங்களில் பாதிக்கப்படுவோம் என்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்வது வலியைக் குறைக்க உதவும். எல்லாருக்குமே இந்த எல்லா பிரச்சினைகளும் வராது என்பதையும் நாம் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். அதோடு, துக்கப்படுகிறவர்களுக்குத் தாங்க முடியாத வலியும் வேதனையும் வருவது சகஜம் என்பதைத் தெரிந்துகொள்வது ஆறுதல் தரும்.

எப்போதுதான் நிம்மதி கிடைக்கும்?

எதை எதிர்பார்க்கலாம்? மரணத்தின் வலி நிரந்தரம் அல்ல; காலப்போக்கில் அது மறைந்துவிடும். அதற்காக, ஒருவருக்கு இனி வேதனையே இருக்காது என்றோ, தன்னுடைய அன்பானவரை மறந்துவிட்டார் என்றோ சொல்ல முடியாது. ஆனால், அவருடைய மனதிலுள்ள வலி கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும். இறந்தவரைப் பற்றிய ஞாபகம் வரும்போதோ, திருமண நாள் போன்ற சில நாட்கள் வரும்போதோ அந்த வலி மறுபடியும் தலைதூக்கலாம். இருந்தாலும், கிட்டத்தட்ட எல்லாருமே தங்கள் மனதைத் தேற்றிக்கொண்டு, ஓரளவுக்கு சகஜ நிலைக்குத் திரும்பிவிடுகிறார்கள். துக்கத்தைச் சமாளிக்க அவர்கள் பங்கில் செய்ய வேண்டியதைச் செய்யும்போது அப்படி சகஜ நிலைக்குத் திரும்புவது சுலபமாகிறது. குடும்பத்தில் இருப்பவர்களுடைய ஆதரவும் நண்பர்களுடைய உதவியும் கிடைக்கும்போது அது இன்னும் சுலபமாகிறது.

எவ்வளவு காலம் எடுக்கும்? சிலர் ஒருசில மாதங்களில் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடுகிறார்கள். பலருக்கு, ஒரு வருஷமோ இரண்டு வருஷமோ ஆகலாம். மற்றவர்களுக்கு அதைவிட அதிக காலம் எடுக்கலாம். * “நான் கிட்டத்தட்ட மூணு வருஷம் வேதனையில தவிச்சேன்” என்று ஆன்ட்ரூ சொல்கிறார்.

உங்களிடம் நீங்களே பொறுமையாக நடந்துகொள்ளுங்கள். அந்தந்த நாளை மட்டும் சமாளிக்க முயற்சி செய்யுங்கள். உங்களை நீங்களே அவசரப்படுத்தாதீர்கள். மரணத்தின் வலி நிரந்தரம் அல்ல என்பதை ஞாபகத்தில் வையுங்கள். இப்போதே உங்கள் வேதனை குறைய வேண்டுமா? சீக்கிரத்தில் அது மறைய வேண்டுமா? அடுத்த கட்டுரையைப் பாருங்கள்.

பிரியமானவரைப் பறிகொடுத்தவர்கள் வலியில் துடிப்பது சகஜம்தான்

^ பாரா. 17 சொல்ல முடியாத அளவுக்கும், ரொம்ப அதிக காலத்துக்கும் சிலர் துக்கத்தில் மூழ்கிவிடுகிறார்கள். அது “நாள்பட்ட” அல்லது “தீராத” வேதனை என்று சொல்லப்படுகிறது. அப்படிப்பட்டவர்களுக்கு டாக்டர்களின் உதவி தேவைப்படலாம்.