உடல்நலம் காக்க . . .
பைபிள் ஒரு மருத்துவப் புத்தகம் கிடையாது. ஆனாலும், ஆரோக்கியமாக வாழ்வதற்குத் தேவையான நிறைய ஆலோசனைகள் அதில் இருக்கின்றன. சில ஆலோசனைகள் இதோ . . .
உடலைக் கவனித்துக்கொள்ளுங்கள்
பைபிள் ஆலோசனை: “ஒருவனும் தன் உடலை வெறுக்க மாட்டான், அதைக் கவனித்துக்கொண்டு நெஞ்சார நேசிப்பான்.”—எபேசியர் 5:29.
இதன் அர்த்தம் என்ன? ஆரோக்கியமாக இருக்க நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய வேண்டும். பெரும்பாலான உடல்நல பிரச்சினைகளுக்கு நம்முடைய வாழ்க்கைமுறைதான் காரணம் என்று ஒரு அறிக்கை சொல்கிறது. அதனால், வாழ்க்கைமுறையை மாற்றுங்கள், ஆரோக்கியமாக வாழுங்கள்!
நீங்கள் என்ன செய்யலாம்?
-
சத்தான உணவு. உடம்புக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்க சத்தான உணவைச் சாப்பிடுங்கள், போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள்.
-
சுறுசுறுப்பாக இருங்கள். உடற்பயிற்சி செய்தால் உடம்பு ஆரோக்கியமாக இருக்கும். உங்களுக்கு எவ்வளவு வயது ஆகியிருந்தாலும் சரி, தீராத நோயால் அவ்வளவாக எதையும் செய்ய முடியாமல் இருந்தாலும் சரி, உடற்பயிற்சி கண்டிப்பாக கைகொடுக்கும். குடும்பத்தாரும், நண்பர்களும், டாக்டர்களும் உடற்பயிற்சி செய்ய சொல்லித்தரலாம், ஆனால் அதைத் தவறாமல் செய்வது உங்கள் கையில்தான் இருக்கிறது.
-
போதுமான அளவு தூங்குங்கள். ஒருவருக்கு ரொம்ப நாளாகவே சரியான தூக்கம் இல்லையென்றால், மோசமான நோய்கள் வர நிறைய வாய்ப்பிருக்கிறது. பொதுவாக, சரியான தூக்கம் வராததற்கு ஒருவருடைய பழக்கவழக்கங்கள்தான் காரணம். அவற்றைக் கொஞ்சம் மாற்றிக்கொண்டு நன்றாக தூங்கினால், உடம்பு நன்றாக இருக்கும்.
கெட்ட பழக்கங்களை நிறுத்துங்கள்
பைபிள் ஆலோசனை: “உடலிலிருந்தும் உள்ளத்திலிருந்தும் எல்லா கறைகளையும் நீக்கி நம்மைச் சுத்தப்படுத்திக்கொள்வோமாக.”—2 கொரிந்தியர் 7:1.
இதன் அர்த்தம் என்ன? புகையிலை போன்ற உயிருக்கு ஆபத்தான பொருள்கள்தான் பல நோய்கள் வருவதற்கும், நிறைய பேர் இறந்துபோவதற்கும் முக்கிய காரணம். இவற்றைப் பயன்படுத்தி உடம்பைக் கெடுக்காதீர்கள்.
நீங்கள் என்ன செய்யலாம்? இந்தப் பழக்கத்தை எப்போது நிறுத்தப் போகிறீர்கள் என்பதை காலண்டரில்
குறித்துவையுங்கள். அதற்கு முந்தின நாள், உங்களிடம் இருக்கிற சிகரெட்டுகள், ஆஷ் ட்ரே, லைட்டர் என புகைபிடிப்பதோடு சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் தூக்கியெறியுங்கள். இந்த மாதிரியான பழக்கங்களில் ஈடுபட தூண்டும் இடங்களுக்குப் போகாதீர்கள். உங்களுக்கு ஆதரவாக இருக்கிற நண்பர்களிடம் உங்களுடைய தீர்மானத்தைப் பற்றிச் சொல்லுங்கள்.இன்னும் சில பைபிள் ஆலோசனைகள்
பாதுகாப்பு உணர்வோடு இருங்கள்.
“நீங்கள் புது வீடு கட்டினால், மொட்டைமாடிக்குக் கைப்பிடிச்சுவர் வைக்க வேண்டும். ஏனென்றால், மாடியிலிருந்து யாராவது கீழே விழுந்தால் உங்கள் வீட்டில் இருக்கிறவர்கள்மேல் கொலைப்பழி வரும்.”—உபாகமம் 22:8.
கோபத்தை அடக்குங்கள்.
“பகுத்தறிவு நிறைந்தவன் சட்டெனக் கோபப்பட மாட்டான். ஆனால், பொறுமை இல்லாதவன் முட்டாள்தனமாக நடந்துகொள்வான்.”—நீதிமொழிகள் 14:29.
அளவுக்கு அதிகமாகச் சாப்பிடாதீர்கள்.
‘அளவுக்கு அதிகமாக . . . சாப்பிடுகிறவர்களோடு சேர்ந்துகொள்ளாதே.’—நீதிமொழிகள் 23:20.