கடவுளோடு நெருங்கி வர . . .
முதல் கட்டுரை சொன்னபடி, நிறைய பேர் பைபிளை ஒரு புனித புத்தகமாகப் பார்க்கிறார்கள். பைபிளைப் படித்து, அதன்படி நடக்கும்போது கடவுளோடு நெருக்கமாக இருப்பதுபோல் உணருகிறார்கள், வாழ்க்கையின் நோக்கத்தையும் புரிந்துகொள்கிறார்கள்.
“ஆன்மீக சிந்தை” உள்ளவர்கள், அதாவது கடவுள் யோசிக்கிற விதமாக யோசிக்கிறவர்கள், நல்ல மனப்பான்மையோடு இருப்பார்கள் என்று பைபிள் சொல்கிறது. (1 கொரிந்தியர் 2:15) ஆன்மீக சிந்தை இல்லாதவர்கள் தங்கள் இஷ்டப்படி நடப்பார்கள்; கடவுள் காட்டுகிற வழியில் நடக்க விரும்புகிறவர்களோ, அவருடைய சட்டதிட்டங்களை மதித்து நடப்பார்கள்.—எபேசியர் 5:1.
நம்பிக்கை
பைபிள் ஆலோசனை: “வேதனையில் தவிக்கிற நாளில் நீ சோர்ந்துபோனால், உன் பலம் குறைந்துவிடும்”—நீதிமொழிகள் 24:10, அடிக்குறிப்பு.
இதன் அர்த்தம் என்ன? மனச்சோர்வு நம் சக்தியை உறிஞ்சிவிடுவதால், பிரச்சினைகளோடு போராட நமக்குத் தெம்பு இருக்காது. நம்பிக்கை இருந்தால்... நாம் தைரியமாக எதிர்நீச்சல் போடுவோம். பிரச்சினைகள் எதுவுமே நிரந்தரம் கிடையாது என்பதை மனதில் வைத்திருப்போம். சொல்லப்போனால், பிரச்சினைகள் ஓய்ந்த பிறகு ஏதாவது நல்லதுகூட நடக்கலாம்.
நீங்கள் என்ன செய்யலாம்? எதிர்காலத்தைப் பற்றி நல்லவிதமாக யோசியுங்கள். என்ன நடக்குமோ, ஏது நடக்குமோ என்று கவலைப்படாமல்... சாதகமான சூழ்நிலை வரும்வரை காத்திருக்காமல்... உங்கள் லட்சியத்தை அடைய முயற்சி செய்யுங்கள். வாழ்க்கையில் “எதிர்பாராத சம்பவங்கள்” நடக்கலாம் என்பது உண்மைதான். (பிரசங்கி 9:11) இருந்தாலும், நிறைய சமயங்களில் நாம் பயப்படுகிற அளவுக்கு மோசமாக எதுவும் நடப்பதில்லை, நாம் எதிர்பார்ப்பதைவிட நல்லபடியாகத்தான் பல விஷயங்கள் நடக்கின்றன. அதனால்தான், பைபிள் இப்படி சொல்கிறது: “காலையில் விதை விதைக்கத் தொடங்கு, சாயங்காலம்வரை கை ஓயாமல் விதைத்துக்கொண்டே இரு. ஏனென்றால், எது முளைக்கும் என்று உனக்குத் தெரியாது. இதுவா, அதுவா, அல்லது இரண்டுமா என்று உனக்குத் தெரியாது.”—பிரசங்கி 11:6.
வாழ்க்கையின் முக்கியமான கேள்விகளுக்குப் பதில்கள்
பைபிள் ஆலோசனை: “புரிந்துகொள்ளும் திறனை எனக்குக் கொடுங்கள், . . . சத்தியம்தான் உங்களுடைய வார்த்தையின் சாராம்சம்.”—சங்கீதம் 119:144, 160.
இதன் அர்த்தம் என்ன? பொதுவாக எல்லாருமே கேட்கிற கேள்விகளுக்கு பைபிளில் பதில் இருக்கிறது. உதாரணத்துக்கு, பின்வரும் கேள்விகளுக்கு பைபிள் பதில் சொல்கிறது:
-
மனிதன் உருவானது எப்படி?
-
நாம் எதற்காக வாழ்கிறோம்?
-
சாகும்போது என்ன நடக்கிறது?
-
வாழ்க்கை இவ்வளவுதானா?
இந்தக் கேள்விகளுக்கும் இன்னும் நிறைய கேள்விகளுக்கும் பைபிள் தருகிற பதில்களை நிறைய பேர் தெரிந்துகொண்டார்கள். அதனால், அவர்களுடைய வாழ்க்கை நல்லபடியாக ஆகியிருக்கிறது.
நீங்கள் என்ன செய்யலாம்? பைபிள் என்ன சொல்லித் தருகிறது என்பதை நீங்களே ஆராய்ந்து பாருங்கள். பைபிளைப் புரிந்துகொள்ள யெகோவாவின் சாட்சிகளிடம் உதவி கேளுங்கள். எங்களுடைய jw.org வெப்சைட்டைப் பாருங்கள். அல்லது, எங்களுடைய கூட்டங்களுக்கு வாருங்கள். இந்தக் கூட்டங்களில், யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். அனுமதி இலவசம்.
இன்னும் சில பைபிள் ஆலோசனைகள்
ஆன்மீக பசியைத் தீர்த்துக்கொள்ளுங்கள்.
“ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு இருக்கிறவர்கள் சந்தோஷமானவர்கள்.”—மத்தேயு 5:3.
பைபிளிலிருந்து கடவுளைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ளுங்கள்.
‘அவர் நம் ஒருவருக்கும் தூரமானவராக இல்லை. . . . அவரை நாம் தேட வேண்டும், . . . கண்டுபிடிக்க வேண்டும்.”—அப்போஸ்தலர் 17:27.
பைபிள் சொல்வதைப் படித்து, அதைப் பற்றி ஆழமாக யோசித்துப் பாருங்கள்.
“அவன் யெகோவாவின் * சட்டத்தை ஆசை ஆசையாகப் படிக்கிறான். அதை ராத்திரியும் பகலும் தியானித்துக்கொண்டிருக்கிறான். . . . அவன் செய்வதெல்லாம் வெற்றி பெறும்.”—சங்கீதம் 1:2, 3, அடிக்குறிப்பு.
^ பாரா. 23 கடவுளுடைய பெயர் யெகோவா என்று பைபிள் சொல்கிறது.