Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பிரபஞ்சம் என்ன சொல்கிறது?

பிரபஞ்சம் என்ன சொல்கிறது?

விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் இந்தப் பிரபஞ்சத்தைப் பார்த்து வியந்துபோகிறார்கள்! அதை முழுமையாக புரிந்துகொள்ள இன்னும் சிறந்த கருவிகள் தேவைப்படுகின்றன! சரி, இதுவரை அவர்கள் என்னவெல்லாம் கண்டுபிடித்திருக்கிறார்கள்?

பிரபஞ்சத்தில் ஒழுங்கு இருக்கிறது. “நட்சத்திர மண்டலங்கள் விண்வெளியில் ஏனோதானோ என்று சிதறிக் கிடக்காமல் சீராக அமைக்கப்பட்டு இருக்கிறது” என்று அஸ்ட்ரானமி பத்திரிகையில் வந்த ஒரு கட்டுரை சொல்கிறது. இதெல்லாம் எப்படிச் சாத்தியமாகிறது? கண்ணுக்குக் தெரியாத இருண்ட பருப்பொருள் (dark matter) இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். இந்த இருண்ட பருப்பொருள் என்பது “கண்ணுக்குத் தெரியாத ஒரு கட்டமைப்பைப்போல் இருக்கிறது. . . . இது, நட்சத்திர மண்டலங்களையும், நட்சத்திர மண்டல கொத்துகளையும், மாபெரும் நட்சத்திர மண்டல கொத்துகளையும் . . . அந்தந்த இடங்களில் தாங்கிப் பிடிக்கிறது.”

இந்தப் பிரபஞ்சம் எப்படி இவ்வளவு ஒழுங்காக செயல்படுகிறது? வடிவமைத்தவர் ஒருவர் இல்லாமல் தானாகவே இந்த ஒழுங்கு வந்திருக்குமா? “கடந்த நூறு வருஷங்களில் வாழ்ந்த சிறந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்களில் ஒருவர்” என்று சொல்லப்படுகிற ஆலன் சாந்தேகு சொன்ன ஒரு குறிப்பு இந்தக் கேள்விக்குப் பதில் கொடுக்கிறது. இவருக்குக் கடவுள் நம்பிக்கை இருந்தது!

“பிரபஞ்சத்தில் நாம் காணும் இப்பேர்ப்பட்ட ஒழுங்கும் சீரும் கண்ணா பின்னாவென்று சிதறிக் கிடந்தவற்றிலிருந்து திடீரென்று உருவானது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. இந்தப் பிரபஞ்சம் சில விதிகளின் அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்டிருக்க வேண்டும்” என்று அவர் சொன்னார்.

உயிர் வாழ்வதற்கு ஏற்ற மாதிரி இந்தப் பிரபஞ்சம் இருக்கிறது. எப்படிச் சொல்கிறோம்? மென்விசை (weak force) என்ற ஒன்று இருப்பதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். சூரியன் சரியான அளவில் தொடர்ந்து எரிந்துகொண்டு இருக்க இந்த விசை உதவுகிறது. ஒருவேளை, இந்த விசை இன்னும் பலவீனமாக இருந்திருந்தால் சூரியன் உருவாகியே இருக்காது. அதேசமயம், இந்த விசை ரொம்பவே பலமாக இருந்திருந்தால், சூரியன் எப்போதோ காணாமல் போயிருக்கும்.

இந்த மென்விசையைப் போலவே இன்னும் நிறைய விசைகள் இருக்கின்றன. உயிரினங்கள் தொடர்ந்து வாழ்வதற்கு உதவும் விதத்தில் இவை எல்லாமே சரியான அளவில் இருக்கின்றன. இந்த விசைகளில் ஏதாவது ஒன்று வித்தியாசமாக இருந்திருந்தால்கூட “நட்சத்திரங்கள், கோள்கள், நட்சத்திர மண்டலங்கள் என எதுவுமே உருவாகியிருக்காது. உயிர் வாழ்வதே சாத்தியம் இல்லாமல் போயிருக்கும்” என்று அறிவியல் எழுத்தாளர் அனில் அனந்தஸ்வாமி சொல்கிறார்.

இந்தப் பிரபஞ்சத்தில் மனிதர்களுக்கு என்று ஒரு இடம் இருக்கிறது. பூமியின் வளிமண்டல வாயுக்கள்... தண்ணீர்... ஆகியவை சரியான அளவில் இருக்கின்றன. நிலவின் அளவும் சரியாக இருப்பதால் பூமி நிலைதடுமாறாமல் இருக்கிறது. இவையெல்லாம் பூமியை உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக ஆக்குகிறது. நேஷனல் ஜியோகிராபிக் பத்திரிகை இப்படிச் சொல்கிறது: “இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கோள்களிலேயே, பூமி மட்டும்தான் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமாகத் தெரிகிறது” ஏனென்றால், “பூமியின் புவியியல், சுற்றுச்சூழல், மற்றும் உயிரியல் அமைப்பு பின்னிப்பிணைந்து செயல்படுகிறது.” *

பால்வீதி மண்டலத்தில் இருக்கிற மற்ற நட்சத்திரங்களில் இருந்து நம் சூரியக் குடும்பம் தூரமாகத் தள்ளி இருப்பதாக ஒரு எழுத்தாளர் சொன்னார். இப்படித் தள்ளி இருப்பதால்தான் பூமியில் உயிரினங்கள் வாழ முடிகிறது. ஒருவேளை, சூரியக் குடும்பம் மற்ற நட்சத்திரங்களுக்குப் பக்கத்தில் இருந்தால், அதாவது பால்வீதி மண்டலத்தின் மையத்திலோ ஓரத்திலோ இருந்திருந்தால் நட்சத்திரங்களிலிருந்து வருகிற கதிர்வீச்சால் பூமியில் உயிர்கள் வாழ முடியாமல் போயிருக்கும். அதனால்தான், “இந்த நட்சத்திர மண்டலத்திலேயே, உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற பகுதியில்” பூமி இருப்பதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.

இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றியும் அதன் விதிகளைப் பற்றியும் தனக்குத் தெரிந்த விஷயங்களை வைத்து, பால் டேவிஸ் என்ற விஞ்ஞானி இப்படி ஒரு முடிவுக்கு வந்தார்: “தற்செயலாக நடந்த ஒரு சம்பவத்தினாலோ திடீரென்று நடந்த ஒரு விபத்தினாலோ இந்தப் பிரபஞ்சம் உருவானது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. . . . நாம் இங்கே வாழ்வதற்கென்றே இவையெல்லாம் அமைக்கப்பட்டிருப்பது போல் தெரிகிறது.” கடவுள்தான் இந்தப் பிரபஞ்சத்தையும் மனிதர்களையும் படைத்தார் என்று டேவிஸ் சொல்லவில்லை. ஆனால், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உயிர்கள் வாழ்வதற்காகவே இந்தப் பிரபஞ்சம் வடிவமைக்கப்பட்டிருக்குமோ! அப்படித்தான் தெரிகிறது!

^ பாரா. 8 மனிதர்களையும் பூமியையும் கடவுள் படைத்தார் என்று நேஷனல் ஜியோகிராபிக் கட்டுரை சொல்லவில்லை. இந்தப் பூமி மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக இருக்கிறது என்றுதான் சொல்கிறது.