குடும்ப ஸ்பெஷல் | இளைஞர்களுக்காக...
மாற்றங்களை சமாளிப்பது எப்படி
இது ஏன் கஷ்டம்...
-
உங்கள் அப்பாவின் வேலை காரணமாக, வேறு இடத்துக்கு குடிமாற வேண்டியிருக்கிறது.
-
உங்கள் நெருங்கிய நண்பன் வேறொரு இடத்துக்கு குடிமாறி போகிறான்.
-
உங்கள் அண்ணன் அல்லது அக்கா கல்யாணம் செய்து வேறு வீட்டுக்கு போகிறார்.
இந்த மாற்றங்களை நீங்கள் எப்படி சமாளிப்பீர்கள்?
வளையும் தன்மையுள்ள ஒரு மரம் புயலில் சிக்கினாலும் அதற்கு ஒன்றும் ஆகாது. அதேபோல், உங்களை மீறி சில மாற்றங்கள் நடக்கும்போது உங்களாலும் அதற்கு “வளைந்து” கொடுக்க கற்றுக்கொள்ள முடியும். அதை எப்படி செய்யலாம் என்பதை தெரிந்துகொள்வதற்கு முன்பு, மாற்றங்களைப் பற்றி நீங்கள் சில விஷயங்களை தெரிந்திருக்க வேண்டும்.
தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்...
மாற்றங்களைத் தவிர்க்கமுடியாது. “எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத சம்பவங்கள் எல்லாருக்கும் நடக்கின்றன” என்ற அடிப்படை உண்மையை பைபிள் சொல்கிறது. (பிரசங்கி 9:11, NW) இதை யாரும் மறுக்க முடியாது. எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்கள் எப்போதுமே கெட்டதாக இருக்கும் என்று சொல்லமுடியாது. சொல்லப்போனால், அது நமக்குதான் கெட்டதாக தோன்றியிருக்கலாம் நிறைய பேர் தங்களுக்கு பழக்கமான விஷயங்களை செய்ய விரும்புவார்கள். அதனால், மாற்றங்கள் ஏற்படும்போது, அது நல்லதாக இருந்தாலும் சரி கெட்டதாக இருந்தாலும் சரி அதை சமாளிக்க முடியாமல் திணருகிறார்கள்.
மாற்றங்களை சமாளிப்பது இளம் பிள்ளைகளுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கலாம். ஏன்? “உள்ளுக்குள்ள நடக்குற மாற்றங்களையே சமாளிக்க முடியல அதோட வெளியில இருக்குற மாற்றங்களும் சேரும்போது சமாளிக்குறது ரொம்பவே கஷ்டமாயிடுது” என்று அலெக்ஸ் * என்ற வாலிபன் சொல்கிறார்.
மற்றொரு காரணத்தை கவனியுங்கள்: பெரியவர்களுடைய வாழ்க்கையில் மாற்றங்கள் வரும்போது, தங்களுக்கு இருக்கும் அனுபவத்தை வைத்து அதை அவர்களால் சமாளிக்க முடியும். ஒருவேளை அதேபோன்ற சூழ்நிலையை அவர்கள் முன்பு சமாளித்திருக்கலாம். ஆனால், இளம் பிள்ளைகளுக்கு அப்படிப்பட்ட எந்த அனுபவமும் கிடையாது.
சூழ்நிலைக்கேற்ப நடக்க கற்றுக்கொள்ளுங்கள். மனஉறுதி என்பது இழப்பையோ மாற்றங்களையோ சமாளிப்பதற்கான திறமை. மனஉறுதியுள்ள நபர் ஒரு புதிய சூழ்நிலையை சமாளிப்பதோடு தடைக்கல்லாக தோன்றுகிறதை படிக்கல்லாக மாற்றுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்று பார்ப்பார். கஷ்டமான சூழ்நிலைமைகள் வந்தாலும் மன உறுதியுள்ள டீனேஜ் பிள்ளைகள் அதை சமாளிப்பதற்கு போதை பொருள்களையோ மதுபானத்தையோ பயன்படுத்த மாட்டார்கள்.
நீங்கள் என்ன செய்யலாம்
யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். நாம் நினைக்கும் விதத்தில்தான் நம் வாழ்க்கை இருக்க வேண்டும் என்று நாம் எல்லாரும் ஆசைப்படுவோம். ஆனால், அப்படி நடக்கவே நடக்காது. ஒருவேளை நம் நண்பர்கள் திருமணம் செய்துகொள்ளலாம் அல்லது வேறு இடத்துக்கு குடிமாறி நம்மைவிட்டு பிரிந்துபோகலாம்; கூட பிறந்தவர்கள் வளர்ந்து வீட்டைவிட்டு போய்விடுலாம். நண்பர்களையும் நன்கு பழக்கப்பட்ட இடங்களையும் விட்டு குடிமாற வேண்டிய கட்டாயம் நமக்கும் வரலாம். இப்படி ஏதாவது நடந்தால் நாம் சோகத்தில் மூழ்கிவிடுவதற்கு பதிலாக யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.—பைபிள் தரும் ஆலோசனை: பிரசங்கி 7:10.
முன்னோக்கி செல்லுங்கள். கடந்த காலத்தையே நினைத்துக்கொண்டு இருப்பது, பின்னால் வரும் வாகனங்களை கண்ணாடியில் பார்த்துக்கொண்டு வண்டியை ஓட்டுவது போல் இருக்கும். சிலசமயங்களில் அப்படிப் பார்ப்பது நல்லதுதான். ஆனால், வண்டி ஓட்டும்போது முன்னால் பார்த்துதான் ஓட்ட வேண்டும். அதுபோலவே, மாற்றங்கள் ஏற்படும்போதும் நாம் கடந்த காலத்தை நினைத்து கவலைப்படுவதற்கு பதிலாக எதிர்காலத்தைப் பற்றி யோசியுங்கள். (நீதிமொழிகள் 4:25) உதாரணமாக, அடுத்த மாதத்துக்கு அல்லது அடுத்த ஆறு மாதத்துக்கு நீங்கள் என்ன குறிக்கோள் வைக்கலாம் என்று யோசித்து பாருங்கள்.
நல்ல விஷயங்கள்மீது கவனம் வையுங்கள். “மன உறுதியோடு இருக்குறது நம்ம கையிலதான் இருக்கு. இப்போ இருக்குற சூழ்நிலைமையில என்ன நல்ல விஷயங்கள் இருக்குதுனு பாருங்க” என்று லாரா என்ற இளம் பெண் சொல்கிறார். உங்களுடைய புது சூழ்நிலையில் இருக்கும் ஒரு நல்ல விஷயத்தை உங்களால் சொல்ல முடியுமா?—பைபிள் தரும் ஆலோசனை: பிரசங்கி 6:9.
டீனேஜில் இருக்கும்போதே நண்பர்கள் எல்லாரும் தன்னைவிட்டு பிரிந்து போய்விட்டதாக விக்டோரியா என்ற இளம் பெண் சொல்கிறார். “நான் ரொம்ப தனிமையா உணர்ந்தேன். எல்லாரும் என் கூட இருந்திருந்தா எவ்வளோ நல்லா இருந்திருக்கும்னு நினைச்சேன். ஆனா இப்போ யோசிக்கும்போது ஒரு விஷயம் புரியுது. என்னை விட்டு எல்லாரும் போனதுக்கு அப்புறம்தான் நான் உண்மையிலயே வளர ஆரம்பிச்சேன். வளர்றதுக்கு மாற்றங்கள் ரொம்ப முக்கியம்னு புரிஞ்சிக்கிட்டேன். அதுக்கு அப்புறம்தான், என்ன சுத்தி இருக்குற நிறைய பேர என் நண்பர்களா ஆக்குறதுக்கான வாய்ப்பு இருக்குறத நான் தெரிஞ்சுக்கிட்டேன்” என்று விக்டோரியா சொல்கிறார்.—பைபிள் தரும் ஆலோசனை: நீதிமொழிகள் 27:10.
கடந்த காலத்தையே நினைத்துக்கொண்டு இருப்பது, பின்னால் வரும் வாகனங்களை கண்ணாடியில் பார்த்துக்கொண்டு வண்டியை ஓட்டுவது போல் இருக்கும்.
மற்றவர்களுக்கு உதவுங்கள். “உங்களுடைய விஷயங்களில் மட்டுமே ஆர்வம் காட்டாமல், மற்றவர்களுடைய விஷயங்களிலும் ஆர்வம் காட்டுங்கள்” என்று பைபிள் சொல்கிறது. (பிலிப்பியர் 2:4) மற்றவர்களுக்கு உதவி செய்வதுதான் நம்முடைய பிரச்சினைகளை சமாளிப்பதற்கான ஒரு நல்ல மருந்து. “வளரவளர நான் ஒரு முக்கியமான விஷயத்தை புரிஞ்சிக்கிட்டேன். எனக்கு இருக்குற அதே சூழ்நிலையில இருக்கிறவங்களுக்கோ அதைவிட மோசமான நிலைமையில இருக்கிறவங்களுக்கோ உதவி செய்யும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று 17 வயது ஆனா சொல்கிறார். ▪ (g16-E No. 4)
^ பாரா. 11 இந்தக் கட்டுரையில் சிலருடைய பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.