பிரமிக்க வைக்கும் ஆர்டிக் டெர்ன்
ஆர்டிக் பகுதியிலிருந்து அண்டார்டிகாவுக்குப் போய்வர ஆர்டிக் டெர்ன் என்ற பறவைகள் சுமார் 35,200 கி.மீ. (22,000 மைல்) தூரம் பயணம் செய்ததாக ரொம்ப காலத்துக்கு நம்பப்பட்டது. ஆனால், அவை அதைவிட அதிக தூரம் பயணம் செய்வதாக சமீப ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.
ஒரு பொருள் எந்த இடத்தில் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்காகப் பயன்படுத்தப்படும் சிறிய கருவிகள் (geolocators) இந்தப் பறவைகளில் பொறுத்தப்பட்டன. இந்தக் கருவிகளின் எடை, ஒரு பேப்பர் க்ளிப்பின் எடைக்குச் சமம். ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத் துக்குப் போய்வர சில டெர்ன் பறவைகள் சராசரியாக 90,000 கி.மீ. (56,000 மைல்) தூரம் பயணம் செய்வதாக இந்தக் கருவிகள் காட்டுகின்றன. இடம்பெயரும் விலங்குகளிலேயே இவைதான் அதிக தூரம் இடம்பெயர்கின்றன! ஒரு பறவை கிட்டத்தட்ட 96,000 கி.மீ. (60,000 மைல்) தூரம் பயணம் செய்தது. டெர்ன் பறவைகள், முன்பைவிட இப்போது அதிக தூரம் பயணம் செய்வதற்குக் காரணம் என்ன?
ஆர்டிட் டெர்ன் பறவைகள் எங்கிருந்து இடம்பெயர்ந் தாலும் நேரான ஒரு வழியில் பயணம் செய்வதில்லை. இந்தப் படத்தில் பார்ப்பது போல, பொதுவாக இவை இடம்பெயர்ந்து போகும் அட்லாண்டிக் பெருங்கடல் வழி, S வடிவத்தில் இருக்கிறது. வழக்கமாக வீசும் காற்றின் திசையில் இவை பறப்பதுதான் அதற்குக் காரணம்!
இந்தப் பறவைகள் சுமார் 30 வருஷங்கள் உயிர் வாழ்கின்றன. இந்தக் காலப்பகுதிக்குள் அவை 24 லட்சத்துக்கும் அதிகமான கி.மீ. (15 லட்சம் மைல்) தூரம் பயணம் செய்கின்றன. இது, மூன்று அல்லது நான்கு முறை நிலா வுக்குப் போய்வருவதற்குச் சமம்! “இது, வெறும் 100 கிராம் எடையுள்ள ஒரு பறவையின் பிரமிக்க வைக்கும் சாதனை” என்பதாக ஒரு ஆராய்ச்சியாளர் சொல்கிறார். இன்னொரு விஷயம் என்னவென்றால், இரண்டு துருவங்களிலும் இவை கோடைக்காலத்தை அனுபவிப்பதால், “வேறெந்த உயிரினத்தையும்விட ஒவ்வொரு வருஷமும் இவைதான் அதிகப்படியான வெளிச்சத்தை” பார்ப்பதாக லைஃப் ஆன் எர்த்: எ நேச்சுரல் ஹிஸ்ட்ரி என்ற ஆங்கில புத்தகம் சொல்கிறது.