குடும்ப ஸ்பெஷல் | கணவன்-மனைவிக்காக...
பிள்ளைகளைப் பிரிந்த பிறகு...
சவால்
பிள்ளைகள் பெரியவர்களாகி வீட்டைவிட்டு போகும்போது, அதைச் சமாளிப்பது பெற்றோருக்குப் பெரிய சவாலாக இருக்கிறது. பிள்ளைகள் வீட்டில் இல்லாததால் பெற்றோர் அன்னியர்களைப் போல உணர ஆரம்பிக்கிறார்கள். இதைப் பற்றி குடும்ப வல்லுநர் எம். கேரி நியூமன் இப்படிச் சொல்கிறார்: “தங்களோட திருமண பந்தத்த மறுபடியும் எப்படி பலப்படுத்தணும்னு தெரியாத நிறைய தம்பதிகளுக்கு ஆலோசனை தர்றேன் . . . இப்போ பிள்ளைங்க வீட்டுல இல்லாததுனால பெற்றோரும் அதிகம் பேசிக்கிறதே இல்ல.” *
இந்தப் பிரச்சினை உங்கள் குடும்பத்திலும் இருக்கிறதா? இருந்தாலும், உங்கள் திருமண பந்தத்தைப் பலப்படுத்திக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. முதலில், உங்கள் திருமண பந்தம் பலவீனமானதற்கான காரணங்களைப் பற்றி பார்க்கலாம்.
பிரச்சினைகளுக்கான காரணம்
பல வருஷங்களாக பிள்ளைகளுக்கே முக்கியத்துவம் கொடுத்தார்கள். நல்ல காரணங்களுக்காகவே, நிறைய பெற்றோர் தங்களுடைய தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்குப் பதிலாக, பிள்ளைகளுடைய தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இப்படி, ஒரு பெற்றோராக தங்களுடைய பொறுப்பை நிறைவேற்றுவதிலேயே அவர்கள் மூழ்கியிருக்கிறார்கள். பிள்ளைகள் வீட்டைவிட்டு போன பிறகு, அவர்களுக்குள் இருக்கிற நெருக்கம் குறைந்திருப்பது தெளிவாகத் தெரியவருகிறது. 59 வயதுள்ள ஒரு மனைவி இப்படிச் சொல்கிறார்: “பிள்ளைங்க இருந்த சமயத்துலயாவது நாங்க எல்லா விஷயங்களயும் சேர்ந்து செஞ்சோம் . . . ஆனா, பிள்ளைங்க போன பிறகு, நான் என்னோட வேலைய பார்த்துக்குவேன், அவர் அவரோட வேலைய பார்த்துக்குவாரு.” ஒரு சமயம் தன் கணவனிடம், “நம்ம ரெண்டு பேருக்கும் இனி ஒத்தே வராது” என்றும் அவர் சொல்லிவிட்டார்.
வாழ்க்கையில் ஏற்படும் இந்த மாற்றத்துக்குச் சில தம்பதிகள் தயாராவது இல்லை. “தங்கள் கல்யாண வாழ்க்கை இப்போதுதான் புதிதாக ஆரம்பிப்பதுபோல் நிறைய தம்பதிகள் உணருகிறார்கள்” என்று எம்ப்டி நெஸ்டிங் என்ற ஒரு ஆங்கில புத்தகம் சொல்கிறது. தங்களுக்குள் நிறைய விஷயங்கள் ஒத்துப்போவதில்லை என்று நினைத்துக்கொண்டு, நிறைய தம்பதிகள் அவரவருடைய சொந்த விருப்பங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். அவர்கள் கணவன் மனைவியைப் போல வாழாமல், வெறுமனே நண்பர்களைப் போல வாழ்கிறார்கள்.
இந்தப் புதிய மாற்றத்தால் வருகிற பிரச்சினைகளை உங்களால் நிச்சயம் தவிர்க்க முடியும். அதோடு, அந்த மாற்றத்திலிருந்து நன்மையடையவும் முடியும். இதற்கு பைபிள் எப்படி உதவுகிறது என்று இப்போது பார்க்கலாம்.
நீங்கள் என்ன செய்யலாம்
புதிய மாற்றத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். வளர்ந்த பிள்ளைகள் கடைசியில், தங்கள் பெற்றோரைவிட்டு பிரிந்து போகிறார்கள். (ஆதியாகமம் 2:24) பிள்ளைகள் வளர்ந்து ஒரு நல்ல ஆணாக, பெண்ணாக தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கான திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டிருப்பீர்கள். அதற்குத் தேவையான உதவிகளைச் செய்வதும் உங்கள் குறிக்கோளாக இருந்திருக்கும். அப்படியென்றால், பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகி வீட்டைவிட்டு போகும்போது, நீங்கள் நிச்சயம் பெருமைப்பட வேண்டும், இல்லையா?—பைபிள் அறிவுரை: மாற்கு 10:7.
உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள்தான் எப்போதும் பெற்றோராக இருப்பீர்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை! ஆனால் இப்போது, உங்களால் அவர்களைக் கண்காணிக்க முடியாது, அவர்களுக்கு ஆலோசனை மட்டுமே சொல்ல முடியும். பிள்ளைகள் வீட்டைவிட்டு போன பிறகு, உங்கள் துணைக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியும். அதே சமயத்தில், உங்கள் பிள்ளைகளோடும் நெருக்கமாக இருக்க முடியும். *—பைபிள் அறிவுரை: மத்தேயு 19:6.
மனதில் இருக்கும் கவலைகளைப் பற்றி பேசுங்கள். உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட இந்த மாற்றம், உங்களை எப்படிப் பாதிக்கிறது என்று உங்கள் துணையிடம் சொல்லுங்கள். உங்கள் துணை சொல்வதையும் காதுகொடுத்து கேட்க தயாராக இருங்கள். அதோடு, பொறுமையாக இருங்கள், புரிந்து நடந்துகொள்ளுங்கள். உங்களுக்குள் இருக்கும் பந்தத்தைப் பலப்படுத்திக்கொள்ள கொஞ்சம் காலம் எடுத்தாலும், அதற்காக நீங்கள் எடுக்கும் முயற்சி நிச்சயம் வீண்போகாது.—பைபிள் அறிவுரை: 1 கொரிந்தியர் 13:4.
எதையெல்லாம் சேர்ந்து செய்யலாம் என்று யோசியுங்கள். நீங்கள் சேர்ந்து அடைய விரும்பும் குறிக்கோள்களைப் பற்றி அல்லது சேர்ந்து செய்ய விரும்பும் புதுப்புது விஷயங்களைப் பற்றி உங்கள் துணையிடம் பேசுங்கள். பிள்ளைகளை வளர்த்ததால் உங்களுக்கு நடைமுறையான ஞானம் கிடைத்திருக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்வதற்காக நீங்கள் ஏன் அதைப் பயன்படுத்தக் கூடாது?—பைபிள் அறிவுரை: யோபு 12:12.
ஆரம்பத்தில் கொடுத்த வாக்குறுதியை உறுதிப்படுத்துங்கள். உங்கள் துணையின் என்னென்ன குணங்கள் உங்களை அவரிடம் ஈர்த்தது என்று யோசித்துப் பாருங்கள். கணவன் மனைவியாக நீங்கள் கடந்துவந்த காலத்தைப் பற்றியும், நீங்கள் சமாளித்த பிரச்சினைகளைப் பற்றியும் யோசித்துப் பாருங்கள். கடைசியில், உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட இந்தப் புதிய மாற்றத்தைப் பற்றி நினைத்துப் பார்க்கும்போது உங்களுக்குச் சந்தோஷமாக இருக்கும். சொல்லப்போனால், நீங்கள் இரண்டு பேரும் சேர்ந்து உழைக்கும்போது உங்கள் கல்யாண வாழ்க்கை மேம்படலாம். ஆரம்பத்தில், உங்கள் இருவரையும் நெருக்கமாக கொண்டுவந்த அன்பு உங்களுக்குள் மறுபடியும் துளிர்விட ஆரம்பிக்கலாம்.
^ பாரா. 4 எமோஷனல் இன்ஃபிடிலிட்டி என்ற ஆங்கில புத்தகம் இப்படிச் சொல்கிறது.
^ பாரா. 12 ஒருவேளை, நீங்கள் இன்னும் பிள்ளைகளை வளர்த்துவந்தாலும், நீங்களும் உங்கள் துணையும் “ஒரே உடலாக” இருக்கிறீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். (மாற்கு 10:8) பெற்றோர் நெருக்கமாக இருப்பதைப் பிள்ளைகள் பார்க்கும்போது, அவர்கள் பாதுகாப்பாக உணருவார்கள்.