Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

குடும்ப ஸ்பெஷல் | இளைஞர்களுக்காக...

சாகசத்தில் ஒளிந்திருக்கும் ஆபத்து!

சாகசத்தில் ஒளிந்திருக்கும் ஆபத்து!

சவால்

“சுரங்க பாதையில வேகமா போயிட்டிருந்த ஒரு ட்ரெயின் பக்கத்துல நின்னுக்கிட்டு இருந்தேன். எனக்கு ரொம்ப பதட்டமா இருந்தாலும், என்னோட பிரச்சினைகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா மறையுற மாதிரி இருந்துச்சு.”—லியான். *

“ஒரு உயரமான பாறையிலருந்து தண்ணீல குதிக்கும்போது, சில நொடிகளுக்கு ரொம்ப ஃப்ரீயா இருக்குற மாதிரி உணர்வேன். இப்படி செய்றது, ரொம்ப சந்தோஷமா இருந்தாலும், சில சமயம் பயமாவும் இருக்கும்.”—லாரிசா.

லியான் மற்றும் லாரிசாவைப் போல, தங்கள் வரம்புகளைச் சோதித்துப் பார்ப்பது, அதுவும், ஆபத்தான வழிகளில் அப்படிச் சோதித்துப் பார்ப்பது, நிறைய இளைஞர்களுக்குச் சுவாரஸ்யமாக இருக்கிறது. இது போன்ற சாகசங்களில் ஈடுபட வேண்டும் என்று நீங்களும் ஆசைப்படுகிறீர்களா? அப்படியென்றால், இந்தக் கட்டுரையைப் படியுங்கள்.

சில உண்மைகள்

நீங்கள் சாகசத்திற்கு அடிமையாகிவிடலாம். சாகசத்தில் ஈடுபடுவது கொஞ்ச நேரத்திற்கு அதிக சந்தோஷத்தைத் தந்தாலும், அதைவிட இன்னும் அதிக சந்தோஷத்தைப் பெற வேண்டும் என்ற தீராத ஆசை அது உங்களுக்குள் ஏற்படுத்திவிடும். லியானைப் போலவே, சுரங்க பாதையில் போய்க்கொண்டிருந்த ட்ரெயின் பக்கத்தில் நின்ற மார்கோ இப்படிச் சொல்கிறார்: “அது ரொம்ப ஆபத்தானதா இருந்தாலும், கொஞ்ச நேரத்துக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருந்தேன். அதே மாதிரி இன்னொரு தடவ செஞ்சு பார்க்கணும்னு ஆசைப்பட்டேன்.”

ஓடுகிற காரைப் பிடித்துக்கொண்டு வேகமாக ஸ்கேட்டிங் செய்த ஜஸ்டின் இப்படிச் சொல்கிறார்: “அப்படி செஞ்சது எனக்கு ரொம்ப சுவாரஸ்யமா இருந்துச்சு. மறுபடியும் அதே மாதிரி செய்யணும்னு ஆசைப்பட்டேன். மத்தவங்க என்னை பார்த்து ரசிக்கணும்னு விரும்புனேன். ஆனா கடைசில, அடிபட்டு ஹாஸ்பிட்டல்ல கிடக்க வேண்டிய நிலைமை வந்துடுச்சு.”

நண்பர்களின் அழுத்தம் உங்கள் யோசிக்கும் திறனைக் கெடுத்துவிடலாம். மார்வின் என்ற இளைஞர் இப்படிச் சொல்கிறார்: “எந்த விதமான பாதுகாப்பு கருவியும் இல்லாம, உயரமான ஒரு கட்டிடத்துல ஏற சொல்லி என்னோட ஃபிரண்ட்ஸ் என்னை கட்டாயப்படுத்துனாங்க. ‘ஏறு! உன்னால முடியும்’னு சொன்னாங்க. எனக்கு ரொம்ப பயமா இருந்துச்சு. கட்டடத்து மேல ஏறிக்கிட்டு இருந்தப்போ எனக்கு நடுக்கமா இருந்துச்சு.” ஏற்கெனவே குறிப்பிடப்பட்ட லாரிசா இப்படிச் சொல்கிறார்: “மத்தவங்க செஞ்சததான் நானும் செஞ்சேன். அவங்க போன போக்குலயே நானும் போனேன்.”

சாகசங்களைப் பற்றிய தகவல்களை இன்டர்நெட்டில் வெளியிடுவதன் மூலம் சிலர் மற்றவர்களுக்கு அழுத்தம் தருகிறார்கள். சாகசத்தில் ஈடுபடுகிறவர்களைப் பற்றி அவர்கள் இன்டர்நெட்டில் புகழ்ந்து பேசுகிறார்கள்; சாகசத்தில் ஈடுபடுவதால் பெரிய ஆபத்து எதுவும் இல்லை என்றும் சொல்கிறார்கள். சிலர் செய்த ஆபத்தான சாகசங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது. சாகசத்தில் ஈடுபடுகிறவர்களுக்கு இது பேரையும் புகழையும் பெற்றுத்தருகிறது.

உதாரணத்துக்கு, சில பிரபலமான வீடியோக்கள், ‘பார்க்கர்’ என்ற சாகசத்தைச் சித்தரித்துக் காட்டுகின்றன. எந்தவொரு பாதுகாப்பு கருவியும் இல்லாமல், வேகமாகவும் திறமையாகவும் ஓடியோ, ஏறியோ, குதித்தோ தடைகளை (சுவர், வீடு, படிக்கட்டு போன்றவற்றை) தாண்டும் செயல்தான் பார்க்கர். அது போன்ற வீடியோக்களைப் பார்க்கும்போது, (1) அதில் ஒன்றும் அவ்வளவு ஆபத்து இல்லை என்று நீங்கள் நினைக்கலாம். (2) அதை எல்லாரும் செய்கிறார்களே என்றும் நீங்கள் யோசிக்கலாம். அதனால், உயிருக்கு ஆபத்தான அப்படிப்பட்ட செயல்களைச் செய்து பார்க்கலாமே என்ற ஆசை உங்களுக்கும் வரலாம்.

உங்கள் வரம்புகளைச் சோதித்துப் பார்ப்பதற்கு வேறு பாதுகாப்பான வழிகள் இருக்கின்றன. “உடற்பயிற்சி ஓரளவுக்கு நன்மை தரும்” என்று பைபிள் சொல்கிறது. (1 தீமோத்தேயு 4:8) அதேசமயம், “தெளிந்த புத்தியுள்ளவர்களாக” இருங்கள் என்றும் அது எச்சரிக்கிறது.—தீத்து 2:12.

நீங்கள் என்ன செய்யலாம்

என்னென்ன ஆபத்துகள் இருக்கின்றன என்று யோசித்துப் பாருங்கள். “சாமர்த்தியசாலி அறிவோடு நடந்துகொள்கிறான். ஆனால், முட்டாள் தன் முட்டாள்தனத்தைக் காட்டிவிடுகிறான்” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 13:16) எந்தவொரு செயலிலும் ஈடுபடுவதற்கு முன்பு, அதில் என்னென்ன ஆபத்துகள் இருக்கின்றன என்று தெரிந்துகொள்ளுங்கள். ‘இதை செய்றதுனால என்னோட உயிருக்கு ஆபத்து வருமா, இல்லன்னா, எனக்கு ஏதாவது பலமா அடிபடுமா?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்.—பைபிள் அறிவுரை: நீதிமொழிகள் 14:15.

உயிருக்கு மதிப்பு கொடுப்பவர்களை உங்கள் நண்பர்களாகத் தேர்ந்தெடுங்கள். எந்தவொரு ஆபத்தான செயலிலும் ஈடுபடும்படி உண்மையான நண்பர்கள் உங்களைத் தூண்ட மாட்டார்கள். உங்களுக்குப் பிடிக்காத எந்தவொரு விஷயத்தைச் செய்யும்படியும் சொல்ல மாட்டார்கள். இதைப் பற்றி லாரிசா இப்படிச் சொல்கிறார்: “நல்ல செயல்கள்ல ஈடுபடுறதுக்கு உண்மையான நண்பர்கள் எனக்கு உதவி செஞ்சாங்க. எந்த சூழ்நிலையிலயும் என்கூட இருக்குற, நல்ல நண்பர்கள நான் தேர்ந்தெடுத்ததுனால என் வாழ்க்கையே மாறிடுச்சு.”—பைபிள் அறிவுரை: நீதிமொழிகள் 13:20.

‘இதை செய்றதுனால என்னோட உயிருக்கு ஆபத்து வருமா, இல்லன்னா, எனக்கு ஏதாவது பலமா அடிபடுமா?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்.

உயிருக்கு ஆபத்து வராத விதத்தில் உங்கள் திறமைகளைப் பயன்படுத்துங்கள். ஒரு நபர் ஆணாக அல்லது பெண்ணாக வளர்ந்து வரும்போது, “தனக்கென்று சில கொள்கைகளையும் வரம்புகளையும் ஏற்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும்” என்று அடோலசென்ட் ரிஸ்க் பிஹேவியர் என்ற ஒரு ஆங்கில புத்தகம் சொல்கிறது. பாதுகாப்பு கருவியோடும் முன்னெச்சரிக்கையோடும், ஒரு பாதுகாப்பான சூழலில் உங்கள் வரம்புகளைச் சோதித்துப் பார்க்கலாம்.

சுயமரியாதையை வளர்த்துக்கொள்ளுங்கள். உங்கள் பிரச்சினைகளை நீங்கள் எப்படிச் சமாளிக்கிறீர்கள் என்பதை வைத்துதான் மற்றவர்கள் உங்களை மதிப்பார்களே தவிர, நீங்கள் துணிச்சலாகச் செய்யும் சாகசங்களை வைத்து அல்ல! லாரிசா இப்படிச் சொல்கிறார்: “என் உயிருக்கு ஆபத்தா இருந்த நிறைய விஷயங்களை நான் செஞ்சேன். உயரமான பாறையிலிருந்து குதிச்சதுதான் நான் செஞ்ச முதல் சாகசம். அதை செய்யக் கூடாதுனு முடிவு எடுத்திருந்தா, எவ்ளோ நல்லா இருந்திருக்கும்!”

முக்கியமான விஷயம்: ஆபத்து நிறைந்த சாகசங்களில் ஈடுபடாதீர்கள். பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுப்பதில் தெளிந்த புத்தியைக் காட்டுங்கள்.—பைபிள் அறிவுரை: நீதிமொழிகள் 15:24.

^ பாரா. 4 இந்தக் கட்டுரையில் சிலருடைய பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.