Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இரத்தமில்லா சிகிச்சைக்கு அமோக வரவேற்பு

இரத்தமில்லா சிகிச்சைக்கு அமோக வரவேற்பு

இரத்தமில்லா சிகிச்சைக்கு அமோக வரவேற்பு

“எல்லா டாக்டர்களும் இரத்தம் ஏற்றாமல் ஆபரேஷன் செய்வதைக் குறித்து சிந்தித்துப்பார்க்க வேண்டும்.”—டாக்டர் யோயாகிம் போல்ட், மயக்கமருந்தியல் பேராசிரியர், லுட்விஷபேன், ஜெர்மனி.

எய்ட்ஸ் பயங்கரத்தால், விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் பாதுகாப்பான ஆபரேஷனுக்காக கூடுதலான நடவடிக்கைகளை எடுக்கின்றனர். இதற்காக இரத்தத்தையும் மிக நுட்பமாக பரிசோதனை செய்கின்றனர். ஆனால் இப்படிப்பட்ட நடவடிக்கைகள் எடுத்தால்கூட ஆபத்தே வராது என சொல்லிவிட முடியாது என்கிறார்கள் வல்லுநர்கள். “இப்போது பாதுகாப்பாக இரத்தமேற்றுவதற்காக சமுதாயம் மிக அதிக அளவில் பணத்தை செலவழித்து பாடுபட்டாலும் நோயாளிகள் இரத்தமேற்றிக்கொள்ள மறுப்பார்கள் என்றே நாங்கள் நினைக்கிறோம். ஏனென்றால் இரத்தம் ஒருபோதும் முற்றிலும் பாதுகாப்பானதாக இருக்க முடியாது” என்பதாக ட்ரான்ஸ்ஃப்யூஷன் பத்திரிகை சொல்கிறது.

ஆக, இரத்தமேற்றுதலைக் குறித்து இப்போது அநேக மருத்துவர்கள் சற்று உஷாராய் இருப்பது ஆச்சரியமல்ல. “இரத்தமேற்றுவதால் எந்தப் பிரயோஜனமுமில்லை, யாருக்கும் நாங்கள் அதை சிபாரிசு செய்வதே கிடையாது” என்கிறார் கலிபோர்னியாவில், சான் பிரான்ஸிஸ்கோவைச் சேர்ந்த டாக்டர் அலெக்ஸ் சப்போலான்சிகி.

இப்போதெல்லாம் இரத்தமேற்றிக்கொள்வதில் இருக்கும் ஆபத்துக்கள் பொது மக்களுக்கும் தெரிந்திருக்கிறது. 1996-⁠ல் எடுத்த வாக்கெடுப்பில் கனடா நாட்டில் 89 சதவீதத்தினர், இரத்தத்திற்கு பதிலாக மாற்று வகை சிகிச்சை முறைகளை விரும்புவதாக தெரிவித்தனர். “யெகோவாவின் சாட்சிகளைப் போல எல்லா நோயாளிகளும் இரத்தத்தை மறுக்கமாட்டார்கள். ஆனாலும் நோய் தொற்றுவதற்கும், நம்முடைய உடலில் இருக்கும் நோய் தடுப்பு சக்தி குறைவதற்கும் வாய்ப்பு இருப்பதால் எல்லாருக்காகவும் மாற்று வகை சிகிச்சைகளை கண்டுபிடித்தே ஆகவேண்டும்” என்பதாக ஜர்னல் ஆஃப் வாஸ்குலர் சர்ஜரி கூறுகிறது.

விரும்பி தேர்ந்தெடுக்கப்படும் சிகிச்சை

நல்லவேளையாக இதற்கு நிவாரணம் இருக்கிறது. அதுதான் இரத்தமில்லா சிகிச்சை. வேறு வழி இல்லாவிட்டால் கடைசியாக இந்த சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்றில்லாமல் அநேகர் இதையே முதலாவதாக தெரிவு செய்கிறார்கள். இதற்கு நல்ல காரணமும் உண்டு. இரத்தமில்லா மருத்துவத்தை நாடுகிறவர்களுடைய நோயின் தன்மையும் இறப்பு வீதமும் “இரத்தமேற்றிக் கொள்பவர்களுடையதைப் போலத்தான் இருக்கிறது, மேலும் இரத்தத்தின் காரணமாக ஆபரேஷனுக்கு பின்னால் வரக்கூடிய தொற்றுநோயும் மற்ற கோளாறுகளும் இவர்களுக்கு வருவதில்லை” என்பதாக பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த சர்ஜன் ஸ்டீவன் ஜெஃபிரி போலார்ட் என்பவர் கூறுகிறார்.

இரத்தமில்லா சிகிச்சை எவ்வாறு தோன்றியது, வளர்ந்தது? ஒரு கருத்தில் இது அபத்தமான கேள்வி. ஏனென்றால் இரத்தமேற்றும் பழக்கம் தோன்றுவதற்கு முன்பே இதுதான் புழக்கத்தில் இருந்தது. 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்தான் இரத்தமேற்றும் டெக்னாலஜி பிரபலமாகி, இந்தளவு புழக்கத்துக்கு வந்தது. ஆனால் சமீப ஆண்டுகளில் இரத்தமின்றி அறுவை சிகிச்சை செய்வதே பிரபலமாகி வருகிறது. உதாரணமாக, 1960-களில் டென்டென் கூலி என்ற பிரபல அறுவை மருத்துவர் முதன்முறையாக இரத்தத்தை பயன்படுத்தாமல் இருதய ஆபரேஷன்களை செய்தார்.

1970-களில் இரத்தம் ஏற்றிக்கொண்டவர்களில் நிறைய பேருக்கு ஹெபடைடிஸ் வந்தபோது டாக்டர்கள் மாற்று வகை சிகிச்சைகள் இருக்கின்றனவா என்று யோசிக்க ஆரம்பித்தார்கள். 1980-களில் அநேக மருத்துவ குழுக்கள் இரத்தமேற்றாமலே ஆபரேஷன்களைச் செய்துகொண்டிருந்தன. பிறகு, எய்ட்ஸ் கொள்ளை நோயாக பரவியபோது மற்ற மருத்துவர்கள் இந்தக் குழுக்களிடம் அடிக்கடி கலந்துபேசினர்; இவர்களுடைய இதே உத்திகளை பயன்படுத்த விரும்பினர். 1990-களில் அனேக மருத்துவமனைகள், தங்கள் நோயாளிகள் விரும்பும் பட்சத்தில் இரத்தம் ஏற்றாமல் சிகிச்சை அளிக்கும் முறைகளை கையாள ஆரம்பித்தன.

ஆபரேஷனின் போதும் அவசர சிகிச்சையின் போதும் இரத்தமேற்றுவது அவசியம் என்று காலா காலமாக இருந்துவந்த கருத்து மாறியிருக்கிறது; இப்போது டாக்டர்கள் சில உத்திகளை கையாண்டு இப்படிப்பட்ட சூழ்நிலைமைகளிலும் இரத்தமில்லாமல் வெற்றிகரமாக சிகிச்சை செய்துவருகிறார்கள். “இருதய, இரத்தக் குழாய், பெண் பாலுறுப்பியல், மகப்பேறு, எலும்பு முறிவு, சிறு நீர் தொடர்புடைய மேஜர் ஆபரேஷன்களையும் இரத்தமோ இரத்த பொருட்களோ இல்லாமல் வெற்றிகரமாக செய்துவிடலாம்” என்பதாக கனடியன் ஜர்னல் ஆஃப் அனஸ்தீஸியா-வில் டி. எச். டபிள்யூ. வாங் என்பவர் குறிப்பிடுகிறார்.

இரத்தமேற்றாமல் செய்யும் ஆபரேஷனில் இருக்கும் ஒரு நன்மை என்னவென்றால் அதில் நல்ல தரமான கவனிப்பை கொடுக்க முடிகிறது. “இரத்த இழப்பை தடுப்பது சர்ஜனின் திறமையில்தான் இருக்கிறது” என சொல்கிறார் ஒஹாயோ, கிளீவ்லாண்டில் அறுவை மருத்துவ இயக்குனராய் பணியாற்றும் டாக்டர் பெஞ்சமின் ஜே. ரிஸ்டீன். இரத்தமில்லாமல் ஆபரேஷன் செய்தால் “வேகமாகவும், சுத்தமாகவும், குறைந்த செலவிலும்” செய்துவிடலாம் என்பதாக ஒரு தென் ஆப்பிரிக்க சட்ட பத்திரிகை கூறுகிறது. மேலுமாக அது இவ்வாறு கூறுகிறது: “அனேகருடைய விஷயத்தில் ஆபரேஷனுக்கு பின் கொடுக்கப்படும் கவனிப்புக்கும்கூட குறைந்த செலவும் குறைவான நேரமுமே எடுத்திருக்கிறது.” உலகம் முழுவதிலும் தற்போது 180-⁠க்கும் அதிகமான ஹாஸ்பிட்டல்கள் இரத்தம் இல்லாமல் மருத்துவமும் ஆபரேஷனும் செய்வதற்கு விசேஷமான திட்டங்களை வைத்திருப்பதற்கு இவை சில காரணங்களே.

இரத்தமும் யெகோவாவின் சாட்சிகளும்

பைபிள் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து, யெகோவாவின் சாட்சிகள் இரத்தமேற்றிக்கொள்ள மறுக்கிறார்கள் a ஆனால் அவர்கள் இரத்தத்திற்கு பதிலாக மாற்றுவகை சிகிச்சை முறைகளை நாடித் தேடுகிறார்கள், அவற்றையே ஏற்றுக்கொள்கிறார்கள். “யெகோவாவின் சாட்சிகள் மிகச் சிறந்த சிகிச்சையை நாடுகிறார்கள். இவர்களைப் போல் நன்கு தகவல் அறிந்த ஒரு க்ரூப்பை எந்த சர்ஜனும் சந்திக்கவே முடியாது” என்பதாக நியூ யார்க் ஹாஸ்பிட்டலில் அறுவை மருத்துவ இயக்குநராக இருந்த டாக்டர் ரிச்சர்டு கே. ஸ்பென்ஸ் கூறினார்.

டாக்டர்கள் யெகோவாவின் சாட்சிகளுக்கு இரத்தமில்லாமல் சிகிச்சை செய்து அந்த உத்திகளை மிகவும் துல்லியமாக கற்றுக்கொண்டுவிட்டார்கள். கார்டியோ வாஸ்குலர் சர்ஜன் டென்டென் கூலி என்பவரின் அனுபவத்தை எடுத்துக்கொள்ளுங்கள். 27 வருடங்களில் அவருடைய மருத்துவ குழு 663 யெகோவாவின் சாட்சிகளுக்கு ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்திருக்கிறது. இருதய ஆபரேஷன்களை இரத்தமில்லாமலே வெற்றிகரமாக செய்ய முடியும் என்பதைத்தான் இது தெளிவாக காட்டுகிறது.

யெகோவாவின் சாட்சிகள் இரத்தமேற்றிக்கொள்ள மறுப்பதை அநேகர் குறை கூறுவது என்னவோ உண்மைதான். ஆனால் கிரேட் பிரிட்டன் மற்றும் அயர்லாந்து நாட்டு மயக்கமருந்து நிபுணர்களின் சங்கம் பிரசுரித்திருக்கும் ஒரு கையேடு சாட்சிகளின் நிலைநிற்கையை “உயிருக்கு காட்டும் மரியாதையின் அடையாளம்” என்று அழைக்கிறது. உண்மையைச் சொன்னால், இன்று அனைவருக்கும் பாதுகாப்பான மருத்துவ சிகிச்சை கிடைக்கிறது என்றால் அதற்கு பின்னால் மிகப் பெரிய சக்தியாக இருந்து செயல்பட்டிருப்பது சாட்சிகளின் கண்டிப்பான நிலைநிற்கைதான். “அறுவை சிகிச்சை தேவைப்படும் யெகோவாவின் சாட்சிகள்தான், நார்வே நாட்டு உடல்நல மேம்பாட்டு பணியில் முக்கியமான முன்னேற்றங்கள் செய்வதற்கான வழியைக் காட்டியிருக்கிறார்கள், அதற்குத் தேவையான உந்துவிப்பையும் அளித்திருக்கிறார்கள்” என்பதாக நார்வே நேஷனல் ஹாஸ்பிட்டலின் பேராசிரியர் ஸ்டான் ஏ. ஈவன்சென் எழுதுகிறார்.

இரத்தத்தை பயன்படுத்தாமல் சிகிச்சை அளிப்பதற்கு டாக்டர்களுக்கு உதவிசெய்வதற்காக யெகோவாவின் சாட்சிகள் மருத்துவமனை தொடர்பு குழுக்களை ஏற்படுத்தியுள்ளனர். இன்று இக்குழுக்கள் உலகம் முழுவதிலும் 1,400-⁠க்கும் அதிகமாக உள்ளன. டாக்டர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் கொடுப்பதற்கென தகவல்களை வைத்திருக்கின்றன. இரத்தமில்லாமல் மருத்துவமும் அறுவை சிகிச்சையும் செய்வதன் சம்பந்தமாக 3,000-⁠க்கும் மேற்பட்ட கட்டுரைகளிலிருந்து திரட்டப்பட்ட மருத்துவ தகவல்களைக் கொண்ட பிரசுரத்தை அளிக்கின்றன. “சாட்சிகளுடைய மருத்துவமனை தொடர்பு குழுக்கள் செய்யும் பணியினால் அவர்களுக்கு மட்டுமல்ல, பொதுவாக எல்லா நோயாளிகளுக்கும் அனாவசியமாக இரத்தமேற்றும் வாய்ப்பு குறைந்திருக்கிறது” என்பதாக பாஸ்டன் காலேஜ் லா ஸ்கூலின் பேராசிரியர் டாக்டர் சார்லஸ் பேரன் குறிப்பிடுகிறார்.  b

இரத்தமில்லாமல் மருத்துவமும் ஆபரேஷனும் செய்வது சம்பந்தமாக யெகோவாவின் சாட்சிகள் தொகுத்து வைத்திருக்கும் தகவல் மருத்துவ துறையிலுள்ள அநேகருக்கு பிரயோஜனமாக இருந்திருக்கிறது. உதாரணமாக, இரத்தமேற்றுதல்: சிகிச்சை முறைகளும் இன்றைய நிலவரமும் என்ற தலைப்புள்ள ஆங்கில புத்தகம் ஒன்றிற்கு தகவல் சேகரிக்கும்போது அதன் நூலாசிரியர்கள் இரத்தமேற்றுதலுக்கு பதிலாக இருக்கும் மாற்றுவகை சிகிச்சை முறைகளைக் குறித்து தகவல்களை கொடுக்குமாறு யெகோவாவின் சாட்சிகளிடம் கேட்டனர். சாட்சிகளும் சந்தோஷத்தோடு அவர்கள் கேட்ட தகவலைக் கொடுத்தனர். அதைப் படித்த பிறகு அவர்கள் நன்றியோடு சொல்வதாவது: “இதைப் பற்றி எவ்வளவோ புத்தகங்களை வாசித்திருப்போம். ஆனால் இரத்தத்தை தவிர்ப்பதற்கான பல்வேறு முறைகளை ஒன்றுவிடாமல், அதேசமயம் ரத்தின சுருக்கமாக அளிக்கும் தகவலைப் பார்ப்பது இதுவே முதன்முறை.”

மருத்துவ துறையில் நிகழ்ந்துள்ள முன்னேற்றங்கள் இரத்தமில்லா சிகிச்சையை குறித்து சிந்திக்கச் செய்திருக்கின்றன. எதிர்காலத்தில் என்ன முன்னேற்றங்களை நாம் எதிர்பார்க்கலாம்? எய்ட்ஸ் வைரஸை கண்டுபிடித்தவரான பேராசிரியர் லூக் மான்டேனியா இவ்வாறு சொல்கிறார்: “இந்தத் துறையைப் பற்றிய நம்முடைய படிப்படியான புரிந்துகொள்ளுதலின்படி, இரத்தமேற்றுதல் என்பதே ஒரு நாள் மறைந்துவிட வேண்டும்.” இதற்கிடையில் இரத்தத்திற்கு பதிலாக பயன்படுத்தப்படும் மாற்றுவகை சிகிச்சை முறைகளால் ஏற்கெனவே அநேகருடைய உயிர் காக்கப்பட்டுவருகிறது.

[அடிக்குறிப்புகள்]

b மருத்துவமனை தொடர்பு குழுக்கள் ஹாஸ்பிட்டலிலுள்ள மருத்துவர்களுக்கு இது குறித்த விளக்கங்களை அளிக்க தயாராக இருக்கின்றனர். கூடுதலாக, பொறுப்பிலிருக்கும் மருத்துவரோடு ஆரம்பத்திலேயே, ஒளிவுமறைவில்லாமல், தொடர்ந்து பேச்சுவார்த்தை வைத்திருக்க நோயாளி குறிப்பாக உதவி கேட்பாரானால், அதற்கும் ஒத்துழைக்கிறார்கள்.

[பக்கம் -ன் பெட்டி/படம்7]

சில மருத்துவர்கள் சொல்வது

‘இரத்தமில்லாத அறுவை சிகிச்சை யெகோவாவின் சாட்சிகளுக்கு மட்டுமல்ல, எல்லா நோயாளிகளுக்கும்தான். ஒவ்வொரு டாக்டரும் இதைச் செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.’—டாக்டர் யோயாகிம் போல்ட், மயக்கமருந்தியல் பேராசிரியர், லுட்விக்‍ஷஃவான், ஜெர்மனி.

“அந்தக் காலத்தைவிட இந்தக் காலத்தில் பாதுகாப்பாக இரத்தமேற்றலாம் என்றாலும், இன்னும் அதில் ஆபத்துக்கள் இருக்கத்தான் செய்கின்றன. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, ஹெபடைடிஸ் அல்லது பாலியல் சம்பந்தப்பட்ட நோய்கள் பரவும் வாய்ப்பு இருக்கிறது.”​—⁠டாக்டர் டெரன்ஸ் ஜே. சாக்கி, க்ளினிகல் துணைப் பேராசிரியர்.

“பெரும்பாலான டாக்டர்கள் அவசரப்பட்டு உடனடியாக இரத்தமேற்றிவிடுவார்கள். யோசிக்காமல் எவ்வளவு பாட்டிலும் ஏற்ற தயாராயிருக்கிறார்கள். நான் அப்படி செய்ய மாட்டேன்.”​—⁠டாக்டர் அலெக்ஸ் சப்போலான்சிகி, சான் பிரான்ஸிஸ்கோ ஹார்ட் இன்ஸ்டிட்யூட்டில் கார்டியாக் சர்ஜரியின் இயக்குநர்.

“என்னைப் பொறுத்தவரைக்கும், எந்த நார்மல் பேஷன்டுக்கும் அடிவயிறு ஆபரேஷனுக்காக இரத்தமேற்றுவது அவசியமாகவே தெரியவில்லை.”​—⁠டாக்டர் ஜோஹன்ஸ் ஷேல், அறுவை சிகிச்சை பேராசிரியர், ஜினா, ஜெர்மனி.

[படங்கள்]

டாக்டர் டெரன்ஸ் ஜே. சாக்கி

டாக்டர் யோயாகிம் போல்ட்

[பக்கம் -ன் பெட்டி/படம்8, 9]

இரத்தமில்லா சிகிச்சை

சில முறைகள்

திரவங்கள்: இரத்தத்தின் அளவு குறையாமல் இருக்கவும் அதனால் ஏற்படும் சோர்வை (hypovolemic shock) தவிர்க்கவும் ரிங்கர்ஸ் லேக்டேட் கரைசல், டெக்ஸ்ட்ரான், ஹைட்ராக்ஸியெதில் ஸ்டார்ச் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. இப்போது பரிசோதனை செய்யப்பட்டுவரும் சில திரவங்களால் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல முடிகிறது.

மருந்துகள்: மரபியல் பொறியியல் நுட்பத்தால் (genetically engineered) உருவாக்கப்படும் புரதங்கள், சிவப்பு இரத்த அணுக்கள் (எரித்ரோப்பாய்டீன்), இரத்த ப்ளேட்லெட்டுகள் (இன்டர்லூக்கின்), பல்வகையான வெள்ளை இரத்த அணுக்கள் (GM-CSF, G-CSF) ஆகியவற்றின் உற்பத்தியை தூண்டும். மற்ற மருந்துகள் அறுவை சிகிச்சையின்போது ஏற்படும் இரத்த இழப்பைக் கட்டுப்படுத்துகின்றன (அப்ரோட்டினின், ஆன்டிஃபைபிரினோலிட்டிக்ஸ்) அல்லது கடுமையான இரத்தப்போக்கை குறைப்பதற்கு உதவுகின்றன (டெஸ்மாப்ரிஸின்).

பையலாஜிக்கல் ஹெமோஸ்டாட்: காலஜின் மற்றும் செலுலோஸால் பின்னப்பட்ட காப்புறைகளை நேரடியாக பயன்படுத்துவதன் மூலம் இரத்தப்போக்கு நிறுத்தப்படுகிறது. பல்வேறு பசைகள் (Fibrin glues, sealants) வெட்டுக் காயங்களையும் இரத்தம் கசியும் திசுக்களையும் அடைத்துவிடுகின்றன.

இரத்த சுத்திகரிப்பு: அறுவை சிகிச்சையின்போது இழக்கப்படும் இரத்தத்தை மிஷின்கள் சேகரிக்கின்றன. இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு அது திரும்பவுமாக வெளியே எடுக்கப்படாமலே நோயாளியின் உடம்புக்குள் செலுத்தப்படுகிறது. சில சமயங்களில் இம்முறையை பயன்படுத்தி லிட்டர் கணக்கில் இரத்தத்தை திரும்பப் பெறலாம்.

அறுவை சிகிச்சை கருவிகள்: ஒரு சில கருவிகளால் இரத்த குழாய்களை அறுக்கவும் அதே சமயத்தில் அதை மூடிவிடவும் முடியும். மற்ற கருவிகளால் திசுவில் ஏற்படும் பெருமளவு இரத்தக்கசிவை நிறுத்த முடியும். லேப்ராஸ்கோப் மற்றும் சிறிய கருவிகளை உபயோகித்து உடலை அதிகம் அறுக்காமல் இரத்தக்கசிவை குறைக்கலாம்.

அறுவை சிகிச்சை உத்திகள்: ஆபரேஷனைப் பற்றி நன்கு திட்டமிட்டு, அனுபவமுள்ள மருத்துவர்களோடும் கலந்து பேசினால் சிக்கலான கோளாறுகளை தவிர்க்கலாம். இரத்தம் கசியும்போது உடனடியாக அதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பது மிகவும் அவசியம். 24 மணிநேரத்துக்கு மேல் தாமதம் ஏற்பட்டால் நோயாளியின் உயிருக்கு ஆபத்து. பெரிய ஆபரேஷனாக ஒரு முறை செய்வதற்கு பதில் சிறிய சிறிய ஆபரேஷன்களாக பல முறை செய்தால் மொத்த இரத்த இழப்பு மிகவும் குறைவாக இருக்கும்.

[பக்கம் -ன் பெட்டி/படம்10]

இரத்தமில்லா சிகிச்சை—புதிய “மருத்துவ நியதியா”?

இரத்தமில்லாமல் மருத்துவமும் ஆபரேஷனும் செய்வது பற்றி இந்தத் துறையில் வல்லுநர்களாயிருக்கும் நான்கு டாக்டர்களிடம் விழித்தெழு! கலந்து பேசியது.

மத சம்பந்தப்பட்ட காரணங்களுக்காக இரத்தமேற்றிக் கொள்ள மறுக்கும் நோயாளிகளைத் தவிர வேறு யாருக்காவது இரத்தமில்லா மருத்துவத்தில் ஆர்வம் உண்டா?

டாக்டர் ஷிப்பான்: நன்கு விவரமறிந்த ஆட்கள்தான் இரத்தமில்லாமல் சிகிச்சை செய்யுமாறு கேட்டு வருகிறார்கள்.

டாக்டர் ஷேண்டர்: 1998-⁠ல் மத சம்பந்தமான காரணங்களுக்காக இரத்தமேற்றிக்கொள்ள மறுத்த நோயாளிகளைவிட மற்ற காரணங்களுக்காக இரத்தம் வேண்டாம் என கூறினவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

டாக்டர் பாயிட்: புற்று நோயுள்ளவர்களை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்ளுங்கள். இரத்தம் கொடுக்காதபோதே இவர்கள் சீக்கிரமாய் குணமாகிறார்கள், திரும்பத் திரும்ப இந்நோய் அவர்களைத் தாக்குவதும் இல்லை. அநேக சமயங்களில் இதைப் பார்த்துவிட்டோம்.

டாக்டர் ஷிப்பான்: நாங்கள் பொதுவாக பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கும் அவர்களுடைய குடும்பங்களுக்கும் இரத்தம் இல்லாமல் சிகிச்சை அளிக்கிறோம். சர்ஜன்களும்கூட இரத்தமேற்ற வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறார்கள்! ஒரு சர்ஜன் அவர் மனைவியை ஆபரேஷனுக்காக எங்களிடம் அழைத்துவந்தபோது, “ஒரு முக்கியமான விஷயம், இரத்தம் மட்டும் ஏற்றிவிடாதீர்கள்!” என்றார்.

டாக்டர் ஷேண்டர்: என்னுடைய மயக்க மருந்து இலாகாவிலுள்ள உறுப்பினர்கள் சொன்னார்கள்: ‘இரத்தம் எடுத்துக்கொள்ளாத நோயாளிகள் நன்றாகவே இருக்கிறார்கள், ஏற்றிக்கொண்டவர்களைவிட நன்றாக இருக்கிறார்கள் என்றுகூட சொல்லலாம். அப்படியென்றால் நாம் ஏன் இரண்டு வித்தியாசமான தராதரங்களை வைத்திருக்க வேண்டும்? இதுதான் சிறந்தது என்றால் எல்லாருக்கும் இப்படியே செய்யலாமே.’ ஆகவே இப்போது தரமான சிகிச்சைக்காக இரத்தமில்லாத மருத்துவத்தையே ஆய்வு செய்யப்போகிறோம்.

டாக்டர் எர்ன்ஷா: இரத்தமில்லாத அறுவை சிகிச்சை குறிப்பாக யெகோவாவின் சாட்சிகளுக்கு பொருத்தமானது என்பது உண்மைதான். ஆனால் எல்லாருக்கும் இப்படித்தான் சிகிச்சை அளிக்க நாங்கள் விரும்புகிறோம்.

இரத்தம் பயன்படுத்தாதிருந்தால் செலவு அதிகமாகுமா அல்லது குறைவாகுமா?

டாக்டர் எர்ன்ஷா: இதில் செலவு மிகவும் குறைவு.

டாக்டர் ஷேண்டர்: இரத்தமில்லாமல் அளிக்கும் சிகிச்சைக்கு 25 சதவீத செலவு குறைவு.

டாக்டர் பாயிட்: அந்த ஒரே காரணத்துக்காககூட நாம் அதை பயன்படுத்தலாம்.

இரத்தமில்லாமல் செய்யும் மருத்துவத்தில் நாம் எவ்வளவு தூரம் முன்னேறி இருக்கிறோம்?

டாக்டர் பாயிட்: நாம் நன்றாகவே முன்னேறி இருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன். ஆனால் இன்னும் முன்னேறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. இரத்தத்தை பயன்படுத்தாதிருப்பதே சிறந்தது என்பதற்கு நல்ல நல்ல காரணங்களை கண்டுபிடித்துக்கொண்டே இருக்கிறோம்.

[படங்கள்]

திரு. பீட்டர் எர்ன்ஷோ, FRCS, கன்ஸல்டன்ட் ஆர்த்தோபீடிக் சர்ஜன், லண்டன், இங்கிலாந்து

டாக்டர் டோனட் ஆர். ஷிப்பான் மயக்கமருந்தியல் பேராசிரியர், சூரிச், ஸ்விட்ஸர்லாந்து

டாக்டர் ஆரியா ஷேண்டர் மயக்கமருந்தியல் துணைப் பேராசிரியர், ஐக்கிய மாகாணங்கள்

டாக்டர் மார்க் ஈ. பாயிட் மகப்பேறு மருத்துவம், பெண் பாலுறுப்பியல் பேராசிரியர், கனடா

[பக்கம் -ன் பெட்டி11]

நோயாளி செய்ய வேண்டியது

▪ சிகிச்சை பெறுவதற்கான தேவை ஏற்படுவதற்கு முன்பே இரத்தமில்லாத மாற்றுவகை சிகிச்சை முறைகளைக் குறித்து உங்கள் டாக்டரிடம் பேசுங்கள். கருவுற்ற பெண்கள், சிறு பிள்ளைகளையுடைய பெற்றோர், வயதானோர் ஆகியவர்களுக்கு இது மிகவும் முக்கியம்.

▪ உங்கள் விருப்பத்தை எழுதிக்கொடுங்கள், சட்டப்படி செல்லும் ஒரு ஆவணம் இதற்காக இருக்குமென்றால் அதில் எழுதிக் கொடுங்கள்.

▪ உங்கள் மருத்துவர் இரத்தமில்லாமல் உங்களுக்கு சிகிச்சை அளிக்க மறுத்தால் உங்கள் விருப்பத்துக்கு உடன்படும் ஒரு மருத்துவரிடம் செல்லுங்கள்.

▪ ஆபரேஷன் அவசியமாக இருந்தால் தாமதிக்காமல் டாக்டரிடம் செல்லுங்கள். ஏனென்றால் இரத்தத்துக்கு பதிலாக பயன்படுத்தப்படும் சில மாற்று மருந்துகள் வேலை செய்வதற்கு நேரமெடுக்கும்.