Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இரத்தமேற்றுதல்—சர்ச்சைக்குரிய நீண்ட வரலாறு

இரத்தமேற்றுதல்—சர்ச்சைக்குரிய நீண்ட வரலாறு

இரத்தமேற்றுதல்—சர்ச்சைக்குரிய நீண்ட வரலாறு

“ரெட் செல்களை இன்று ஒரு புதிய மருந்தாக உபயோகிக்க வேண்டும் என்று லைசென்ஸ் கேட்டால் அது கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.”​—⁠டாக்டர் ஜெஃப்ரி மெகல்லோ.

பிரான்சு நாட்டு அரசர் பதினான்காம் லூயிக்கு ஜீன் பாப்டிஸ்ட் டனி என்ற பிரபல மருத்துவர் ஒருவர் இருந்தார். 1667-ஆம் ஆண்டில், யாருக்கும் அடங்காத ஒரு பைத்தியக்காரனை இவரிடம் அழைத்துவந்தார்கள். இவன் பெயர் ஆன்ட்வான் மோர்வா. மோர்வாவின் பைத்தியத்துக்கு சரியான “நிவாரணம்” தன்னிடம் இருந்ததாக டனி நினைத்தார். அதாவது கன்றுக்குட்டியின் இரத்தத்தை செலுத்தினால் பைத்தியக்காரன் அடங்கிவிடுவான் என்று நினைத்தார். ஆனால் பைத்தியம் தெளிந்தபாடில்லை. இரண்டாவது முறை இந்த இரத்தத்தை ஏற்றியபோது அவனுடைய கண்டிஷனில் சிறிது முன்னேற்றம். இருந்தாலும் இது நீடிக்கவில்லை. மறுபடியும் பைத்தியம் முத்திப்போய், சீக்கிரத்தில் அவன் செத்தேவிட்டான்.

அவன் சாவுக்கு உண்மையான காரணம் ஆர்செனிக் விஷம் என்பது பின்னால் தெரியவந்தது. இருந்தாலும் விலங்குகளின் இரத்தத்தை வைத்து டனி செய்த சோதனைகளுக்கு பிரான்சில் பயங்கரமான எதிர்ப்பு கிளம்பியது. கடைசியாக 1670-⁠ல் அது தடைசெய்யப்பட்டது. அதற்குப்பின் இதை இங்கிலாந்து நாட்டு பார்லிமென்ட்டும் போப்பும்கூட தடைசெய்தார்கள். அடுத்த 150 ஆண்டுகளுக்கு இரத்தமேற்றுதலைப் பற்றி பேச்சே இல்லை.

ஆரம்பகால இடையூறுகள்

19-ஆம் நூற்றாண்டில் மறுபடியுமாக இரத்தமேற்றுதல் தலைதூக்க ஆரம்பித்தது. இதற்குக் காரணமாக இருந்தவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜேம்ஸ் பிளண்டல் என்ற மகப்பேறு மருத்துவர். மனித இரத்தம் மாத்திரமே பயன்படுத்தவேண்டும் என்று இவர் வலியுறுத்தினார். மேம்பட்ட உத்திகளையும் நவீன கருவிகளையும் பயன்படுத்தி, இரத்தமேற்றுதலுக்கு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

ஆனால் 1873-⁠ல் போலந்து நாட்டு டாக்டர் எஃப். கெசிலஸ் என்பவர், இரத்தமேற்றிக் கொண்டவர்களில் பாதிக்கும் அதிகமானோர் இறந்துவிட்டனர் என்பதை கண்டுபிடித்தபோது பீதி உண்டானது. அதன் பிறகு பிரபல மருத்துவர்களும் இரத்தமேற்றுதலை வெளிப்படையாக கண்டனம் செய்ய ஆரம்பித்தனர். மீண்டும் இரத்தமேற்றுதலுக்கு மவுசு குறைந்தது.

1878-⁠ல், ஜார்ஜஸ் ஏயம் என்ற பிரெஞ்சு மருத்துவர் இரத்தத்திற்கு பதிலாக பயன்படுத்துவதற்கு ஒரு உப்பு கரைசலை தயாரித்தார். இரத்தம் போல இந்த உப்பு கரைசலுக்கு பக்க பாதிப்புகள் இல்லை, இது உறைந்துபோவதில்லை, ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்து செல்வதும் எளிது. ஆக, இந்த உப்பு கரைசலை அனைவரும் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். ஆனால் விநோதமாக, இரத்தம்தான் நல்லது என்ற அபிப்பிராயம் கொஞ்ச காலத்தில் மறுபடியும் தலைதூக்க ஆரம்பித்தது. ஏன்?

1900-⁠ல் ஆஸ்திரியாவைச் சேர்ந்த நோய் நிர்ணய வல்லுநர் கார்ல் லான்ட்ஸ்டீனர், இரத்தத்தில் பல வகை இருப்பதையும், ஒரு வகை இரத்தம் மற்றொரு வகை இரத்தத்தோடு எப்போதும் பொருந்துவதில்லை என்பதையும் கண்டுபிடித்தார். இரத்தமேற்றியதால் கடந்த காலங்களில் அநேகர் ஏன் சாவைத் தழுவினார்கள் என்று அப்போதுதான் புரிந்தது! இந்நிலையை இப்போது மாற்றிவிட முடியும். இரத்த தானம் செய்பவரின் இரத்தவகை அதை ஏற்றிக்கொள்பவரின் இரத்தவகையோடு பொருத்தமாயிருக்கிறதா என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ள முடியும். இதை அறிந்துகொண்ட மருத்துவர்களுக்கு இரத்தமேற்றுவதில் திரும்பவும் நம்பிக்கை வந்தது, அது முதல் உலக யுத்தத்திற்கு மிகவும் பிரயோஜனமாக இருந்தது.

இரத்தமேற்றுதலும் போரும்

முதல் உலக யுத்தத்தின்போது காயமடைந்த வீரர்களுக்கு பாட்டில் பாட்டிலாக இரத்தம் ஏற்றப்பட்டது. இரத்தம் சீக்கிரமாக உறைந்துவிடுவதால் அதை போர் களத்துக்கு கொண்டுசெல்வது முன்பெல்லாம் முடியாத காரியமாக இருந்திருக்கும். ஆனால் 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நியூ யார்க் நகரிலுள்ள மெளன்ட் சைனாய் ஹாஸ்பிட்டலைச் சேர்ந்த டாக்டர் ரிச்சர்டு லூயிசன் என்பவர் இரத்தம் உறைவதைத் தடுக்கும் சோடியம் சிட்ரேட் என்ற ஒரு பொருளை வைத்து சோதனை நடத்தி வெற்றி கண்டார். தடையைத் தகர்த்த, மெய்சிலிர்க்க வைக்கும் இந்த கண்டுபிடிப்பை ஒரு அற்புதம் என்பதாக சில டாக்டர்கள் நினைத்தார்கள். “சூரியனை நில் என்று சொல்ல அது நின்றது போலவே இருந்தது” என்று அந்நாளைய பிரபல டாக்டர் பெர்ட்ராம் எம். பெர்ன்ஹெம் எழுதினார்.

இரண்டாம் உலக போர் வந்தபோது இரத்தம் இன்னும் அதிகம் தேவைப்பட்டது. எந்தப் பக்கம் திரும்பினாலும், “இப்போதே இரத்த தானம் செய்யுங்கள்,” “உங்கள் இரத்தம் ஒரு உயிரைக் காப்பாற்றலாம்,” “அவர் இரத்த தானம் செய்துவிட்டார், நீங்கள் எப்போது செய்ய போகிறீர்கள்?” போன்ற சுலோகன்கள் காணப்பட்டன. இரத்த தானம் செய்ய அநேகர் முன்வந்தனர். இரண்டாம் உலக போரின்போது ஐக்கிய மாகாணங்களில் சுமார் 1,30,00,000 யூனிட் இரத்தம் தானமாக கிடைத்தது. லண்டனில் 2,60,000 லிட்டர் இரத்தம் சேகரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இரத்தமேற்றுதலால் உடலுக்கு பல ஆபத்துக்கள் உண்டு என்பது விரைவில் தெரியவந்தது.

இரத்தத்தினால் கடத்தப்பட்ட நோய்

இரண்டாம் உலகப் போருக்குப்பின், மருத்துவத்தில் பெரும் முன்னேற்றங்கள் ஏற்பட்டன. இதனால் இதற்கு முன் கற்பனை செய்துகூட பார்க்க முடியாத அறுவை சிகிச்சைகளை இப்போது செய்ய முடிந்தது. இதன் விளைவாக இரத்தம் சப்ளை செய்வது பல கோடி பெருமானமுள்ள ஒரு தொழிலாக உருவானது; மருத்துவர்கள் அறுவை சிகிச்சை என்றாலே வழக்கமாக இரத்தமேற்ற ஆரம்பித்தனர்.

ஆனால் சீக்கிரத்திலேயே, இரத்தமேற்றுவதால் வரும் நோய் குறித்த கவலை அதிகரித்தது. உதாரணமாக, கொரியாவில் நடந்த போரில் ப்ளாஸ்மா ஏற்றிக்கொண்ட சுமார் 22 சதவீதத்தினருக்கு ஹெபடைடிஸ் (கல்லீரல் அழற்சி) ஏற்பட்டது, இரண்டாம் உலகப் போரில் ஏற்பட்டதைவிட ஏறக்குறைய மூன்று மடங்கு அதிகம். 1970-களுக்குள், இரத்தமேற்றுதலினால் ஹெபடைடிஸ் ஏற்பட்டு மாண்டவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 3,500 என்று ஐ.மா. நோய் கட்டுப்பாட்டுக்கான மையங்கள் மதிப்பிட்டது. மற்றவர்களின் கணக்குப்படி, அந்த எண்ணிக்கை இதைவிட இன்னும் பத்து மடங்கு அதிகமாக இருந்தது.

இரத்தத்தில் நோய் இருப்பதை கவனமாக பரிசோதிக்க முடிந்ததாலும், இரத்த தானம் செய்பவர்களை கவனமாக தேர்ந்தெடுக்க முடிந்ததாலும் ஹெபடைடிஸ் B குறைந்தது உண்மைதான். ஆனால் அதைவிட மிகவும் கொடிய ஒரு வைரஸ்​—⁠ஹெபடைடிஸ் C​—⁠இன்னும் அதிகமான உயிர்களை பறித்துக்கொண்டது. நாற்பது லட்சம் அமெரிக்கர்களை இந்த வைரஸ் தொற்றிக்கொண்டது, இவர்களில் லட்சக்கணக்கானோருக்கு இரத்தமேற்றுதலினால் இது தொற்றிக்கொண்டது என்று சொல்லப்பட்டது. நுட்பமான பரிசோதனைகள் மூலம் இறுதியாக ஹெபடைடிஸ் C குறைந்தது. இருந்தாலும், இப்படி புதுப் புது ஆபத்துக்கள் வந்துகொண்டே இருக்கும், இவற்றை காலம் கடந்தே புரிந்துகொள்வோம் என்ற பயம் சிலரை கவ்வியிருக்கிறது.

மற்றொரு மோசடி: HIV-கலப்பட இரத்தம்

1980-களில், எய்ட்ஸ்-⁠க்கு காரணமான HIV வைரஸ் இரத்தத்தில் இருக்க வாய்ப்புண்டு என்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இரத்த வங்கிகளுக்கு தங்களிடம் இருக்கும் இரத்தத்தில் இந்த வைரஸ் இருக்கலாம் என்பதைக் குறித்து சிந்திக்கவே விருப்பமில்லை. சொல்லப்போனால் HIV ஆபத்தை ஆரம்பத்தில் அநேகர் பொருட்படுத்தவே இல்லை. “பாலைவனத்தில் அலைந்து திரிந்த எவரோ ஒருவர் வந்து ‘விண்வெளியிலிருந்து வந்த ஒருவரைப் பார்த்தேன்’ என்று சொல்வது போல அவர்களுக்கு இருந்தது. அவர்கள் கேட்டார்கள், ஆனால் அதை நம்பத் தயாராக இல்லை” என்கிறார் டாக்டர் பூருஸ் ஈவட்.

பல தேசங்களில் உள்ள இரத்த வங்கிகளில் HIV வைரஸ் உள்ள இரத்தம் இருப்பதாக முதலில் வதந்தி கிளம்பி பிறகு உண்மை என்று கண்டுபிடிக்கப்பட்டது. பிரான்சில் 1982-⁠க்கும் 1985-⁠க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில், இரத்தம் ஏற்றப்பட்டதால் 6,000 முதல் 8,000 பேருக்கு HIV தொற்றிக்கொண்டதாய் மதிப்பிடப்பட்டிருக்கிறது. ஆப்பிரிக்கா முழுவதிலும் 10 சதவீதத்தினருக்கு HIV தொற்றிக்கொண்டிருப்பதற்கும் பாகிஸ்தானில் 40 சதவீதத்தினருக்கு எய்ட்ஸ் இருப்பதற்கும் காரணம் இரத்தமேற்றுதலே. நுட்பமான இரத்தப் பரிசோதனை செய்யும் வசதிபடைத்த வளர்ச்சியடைந்த நாடுகளில், இரத்தமேற்றுதலால் HIV பரவுவது என்பது அபூர்வமே. ஆனால் அதற்கான வசதியில்லாத வளரும் நாடுகளில் HIV தொற்றும் பிரச்சினை தொடர்ந்து இருந்துவருகிறது.

இதனால்தான் அண்மை காலங்களில் இரத்தமில்லாமல் சிகிச்சை செய்துகொள்வதையே மக்கள் விரும்புகின்றனர். ஆனால் இது பாதுகாப்பானதா?

[பக்கம் -ன் பெட்டி6]

இரத்தமேற்றுதல்—மருத்துவ நியதி இல்லை

ஒவ்வொரு ஆண்டும் ஐக்கிய மாகாணங்களில் மாத்திரமே, 1,10,00,000-⁠ம் அதிக யூனிட் இரத்தம் 30 லட்சம் நோயாளிகளுக்கு ஏற்றப்படுகிறது. இந்தப் பெரிய எண்ணிக்கையை பார்த்தவுடன் இரத்தம் ஏற்றுவது என்பது மருத்துவர்கள் மத்தியில் கண்டிப்பான ஒரு நியதியாக இருக்கவேண்டும் என நினைக்கத் தோன்றலாம். ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் “இரத்தமேற்றுவதால் நன்மையா தீமையா என்பதை முடிவுசெய்ய உதவும்” தகவல்கள் வெகு குறைவே என்று த நியூ இங்லண்ட் ஜர்னல் ஆஃப் மெடிசன் குறிப்பிடுகிறது. என்ன ஏற்றப்படுகிறது, எவ்வளவு ஏற்றப்படுகிறது என்பதில் மட்டுமல்லாமல் இரத்தம் ஏற்றப்படுகிறதா என்ற விஷயத்தில்கூட டாக்டருக்கு டாக்டர் வித்தியாசம் உண்டு. “இரத்தம் ஏற்றப்படுவது நோயாளியை பொருத்து இல்லை மருத்துவரை பொருத்தே இருக்கிறது” என்பதாக மருத்துவ பத்திரிகை ஆக்டா அனஸ்தீஸியாலஜிகா பெல்ஜிகா குறிப்பிடுகிறது. இதுவரை நாம் சிந்தித்ததை வைத்துப் பார்த்தால், த நியூ இங்லண்ட் ஜர்னல் ஆஃப் மெடிசன்-⁠ல் வெளியாகியிருந்த ஆய்வின் இந்த முடிவைக் குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை: “66 சதவீதத்தினருக்கு தேவையில்லாமல் இரத்தமேற்றப்படுகிறது.”

[பக்கம் -ன் படங்கள்5]

இரண்டாம் உலகப் போரின் போது இரத்தத்திற்கு ஏகப்பட்ட கிராக்கி ஏற்பட்டது

[படத்திற்கான நன்றி]

Imperial War Museum, London

U.S. National Archives photos