Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இருதலைக்கொள்ளி எறும்புகளாக தவிக்கும் தாய்மார்கள்

இருதலைக்கொள்ளி எறும்புகளாக தவிக்கும் தாய்மார்கள்

இருதலைக்கொள்ளி எறும்புகளாக தவிக்கும் தாய்மார்கள்

வெஸ்ட் இன்டீஸில் வாழும் சிந்தியாவுக்கு  a ஒரே குழப்பம். தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதா புட்டிப்பால் கொடுப்பதா என்று. இதில் குழம்புவதற்கு என்ன இருக்கிறது, யாரைக் கேட்டாலும் டக்கென்று சொல்லி விடுவார்களே என தோன்றலாம். “தாய்ப்பாலே மிகச்சிறந்த ஆரோக்கியமான உணவு” என்று பல ஆண்டுகளாக சுகாதார வல்லுநர்கள் ஊரெங்கும் விளம்பரம் செய்து வருகிறார்கள். அது மட்டுமா, வயிற்றுப்போக்கால் இறந்துவிடும் வாய்ப்பு, தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளைவிட புட்டிப் பால் குடிக்கும் ஏழை குழந்தைகளுக்கே சுமார் 15 மடங்கு அதிகமிருக்கிறது. புட்டிப்பால் வகைகளால் ஏற்படும் ஆபத்துக்களின் காரணமாக சுமார் 4,000 குழந்தைகள் ஒவ்வொரு நாளும் இறந்துபோகின்றனர் என்று ஐநா குழந்தைகள் நல அமைப்பு (UNICEF) அறிக்கை செய்கிறது.

ஆனால் சிந்தியாவின் விஷயமே வேறு. அவளுடைய கணவனிடமிருந்து எய்ட்ஸ் நோயை உண்டுபண்ணும் HIV வைரஸ் அவளுக்கு தொற்றியிருந்தது. HIV, தாய்ப்பாலின் மூலமாக குழந்தையை தொற்றும் வாய்ப்பு 7-⁠ல் 1 என்பதை அறிந்துகொண்டாள் b இப்போது, எய்ட்ஸ் வந்தாலும் பரவாயில்லை என்று தாய்ப்பால் ஊட்டுவதா அல்லது பவுடர் பாலினால் ஆபத்து வந்தாலும் பரவாயில்லை என்று அதைக் கொடுப்பதா என புரியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாய் தவித்தாள்.

எய்ட்ஸ் நோய் மிக அதிகமாக தாக்கியுள்ள உலகின் சில பாகங்களில் 10 கர்ப்பிணிகளில் 2 அல்லது 3 பேர் HIV பாசிட்டிவ்வாக இருக்கின்றனர். ஒரு தேசத்தில் எல்லா கர்ப்பிணி பெண்களையும் பரிசோதனை செய்தபோது அவர்களில் பாதிக்கும் அதிகமானவர்களுக்கு இந்த வைரஸ் தொற்றியிருந்தது. “திகிலூட்டும் இந்த எண்ணிக்கைகளைப் பார்க்கும் விஞ்ஞானிகள் இதற்கு மருந்து கண்டுபிடிப்பதற்கு தீவிர முயற்சியில் இறங்கியிருக்கின்றனர்” என்பதாக ஐநா வானொலி அறிவிக்கிறது. இந்த ஆபத்தைக் குறைக்கும் பொருட்டு ஐநாவின் ஆறு அமைப்புகள் தங்கள் அனுபவம், திறமை, பணம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து HIV/எய்ட்ஸ் ஜாய்ன்ட் யூனைட்டெட் நேஷன்ஸ் புரோகிராம் என்ற ஒன்றை ஆரம்பித்திருக்கிறார்கள். இது UNAIDS என்றழைக்கப்படுகிறது c ஆனால் எய்ட்ஸ் பயங்கரத்துக்கு மருந்து கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமில்லை என்பதைத்தான் UNAIDS கண்டுபிடித்திருக்கிறது.

சிம்பிளான பரிகாரம் Vs சிக்கலான முட்டுக்கட்டைகள்

தாய்ப்பாலூட்டுதல், தாயிடமிருந்து HIV சேய்க்கு கடத்தப்படுதல் ஆகியவற்றில் வல்லுநரான ஈடித் வைட் சொல்கிறார்: தொழில்மயமாக்கப்பட்ட நாடுகளில், சுகாதார பணியாளர்கள் HIV பாசிட்டிவ் தாய்மார்களிடம் குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்ட வேண்டாம் என எச்சரிக்கிறார்கள். ஏனெனில் அது குழந்தையை பாதிக்கும் ஆபத்தை இரண்டு மடங்காக்கிவிடும் என்கிறார்கள். அப்படியென்றால் சிம்பிளாக பவுடர் பாலே சிறந்தது என்று சொல்லிவிடலாம். ஆனால் வளர்ந்துவரும் நாடுகளில் இந்த எளிய பரிகாரத்தை செயல்படுத்துவது அத்தனை சுலபமல்ல.

முட்டுக்கட்டைகளில் ஒன்று சமுதாயம் சம்பந்தப்பட்டதாகும். தாய்ப்பாலூட்டுவதே பழக்கமாக இருக்கும் நாடுகளில் புட்டிப்பால் ஊட்டினால் தனக்கு HIV இருப்பது எல்லாருக்கும் தெரிந்துவிடுமே என தாய் நினைக்கலாம். நிலைமை என்ன என்பது தெரியவந்தால் தன்னை குற்றப்படுத்துவார்களோ, விரட்டிவிடுவார்களோ, அல்லது அடிப்பார்களோ என்ற பயம்கூட அவளை ஆட்டிப்படைக்கலாம். இப்படிப்பட்ட சில பெண்கள் தங்கள் HIV பாசிட்டிவ் கண்டிஷனை இரகசியமாக வைத்துக்கொள்வதற்கு தாய்ப்பால் ஊட்டுவதைத் தவிர வேறு வழியில்லை என்று நினைக்கலாம்.

மற்ற முட்டுக்கட்டைகளும் உண்டு. 20 வயது மார்கரெட்டை எடுத்துக்கொள்ளுங்கள். உகாந்தாவின் கிராமப்புறங்களில் வாழும் 95 சதவீத பெண்களைப் போலவே இவளும் HIV பரிசோதனை செய்துகொண்டதே இல்லை. ஆனால் தனக்கு இந்த நோய் இருக்குமோ என்று மார்கரெட் கவலைப்படுவதற்கு காரணமிருக்கிறது. அவளுக்கு பிறந்த முதல் குழந்தை இறந்துவிட்டது. இரண்டாவது குழந்தை நோஞ்சானாய் மெலிந்து இருக்கிறது. அவளுக்கு HIV இருக்க வாய்ப்புள்ள போதிலும் மூன்றாவது குழந்தைக்கு தினமும் பத்து முறை தாய்ப்பால் கொடுக்கிறாள். “என்னால் ஒரு நாளும் பவுடர் பால் கொடுக்கமுடியாது” என்று சொல்கிறாள். ஏன் முடியாது? ஒரு குழந்தைக்கு பவுடர் பாலூட்டுவதற்கு ஆகும் செலவு, அவளுடைய கிராமத்தில் வாழும் ஒரு குடும்பத்துக்கு கிடைக்கும் முழு ஆண்டு வருமானத்தைவிட ஒன்றரை மடங்கு அதிகம். இந்தப் பவுடர் பால் இலவசமாக கிடைத்தால்கூட பிரச்சினை தீர்ந்து போகாது, ஏனெனில் அதைக் குழந்தைக்கு கலந்துகொடுப்பதற்கு சுத்தமான குடிநீர் அங்கு கிடையாது.  d

HIV தொற்றியுள்ள தாய்மார்களுக்கு சரியான சுகாதாரம், தாய்ப்பாலுக்கு பதிலாக போதுமான பவுடர் பால், சுத்தமான தண்ணீர் ஆகிய வசதிகளைச் செய்துகொடுத்தால் இந்த முட்டுக்கட்டைகளைக் குறைக்கலாம். அதிக பணம் செலவாகுமா? ஒருவேளை ஆகலாம். ஆனால் பணத்தைவிட அதற்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதிலேயே தீர்வு இருக்கிறது. ஆம், உலகில் மிகவும் ஏழ்மையில் இருக்கும் வளரும் நாடுகள் சுகாதாரத்துக்கும் கல்விக்கும் செலவிடும் பணத்தைவிட இரண்டு மடங்கு அதிகமான பணத்தை இராணுவத்துக்காக செலவு செய்கின்றன என ஐநா அறிவிப்பு செய்கிறது.

எய்ட்ஸ் எதிர்ப்பு மருந்துகளைப் பற்றி என்ன?

அசிடோதைமிடைன் (AZT) என்று அழைக்கப்படும் எளிய, மலிவான ஒரு மருந்து, தாயிடமிருந்து சேய்க்கு HIV தொற்றிக்கொள்வதை கணிசமாக குறைத்துவிடுகிறது என்று ஐநா விஞ்ஞானிகள் அறிவித்திருக்கிறார்கள். UNAIDS-⁠ன் உதவியால் இந்தச் சிகிச்சைக்காகும் செலவு 50 அமெரிக்க டாலராக குறைக்கப்பட்டுள்ளது. HIV தாய்மார்களுக்கும் அவர்களுடைய சிசுக்களுக்கும், 3 அமெரிக்க டாலர் மட்டுமே செலவாகும் நெவ்ரிப்பன் (nevirapine) என்ற மருந்தைக்கொண்டு சிகிச்சை அளித்தால், அது AZT-யைவிட நன்றாக வேலைசெய்கிறது என்பதை ஜூலை 1999-⁠ல் எய்ட்ஸ் ஆய்வாளர்கள் அறிவித்தார்கள். ஆண்டுக்கு 4,00,000 சிசுக்கள் HIV-யால் பாதிக்கப்படுவதை நெவ்ரிப்பன் கொண்டு தடுத்திடலாம் என்பதாக உடல்நல நிபுணர்கள் சொல்கின்றனர்.

இந்த மருந்துகளால் தாயிடமிருந்து சேய்க்கு HIV கடத்தப்படுவதை மாத்திரம்தான் தடுக்கமுடியும், கடைசியாக எய்ட்ஸினால் தாய் சாகத்தான் போகிறாள், அப்போது குழந்தை அனாதையாகிவிடப்போகிறது என்று சொல்லி ஒரு சிலர், இந்த சிகிச்சையை குறித்து அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள். ஆனால், அப்படிச் செய்யாவிட்டால் குழந்தைகளுக்கு HIV தொற்றிக்கொள்ள போகிறது; இந்தப் பழிபாவமறியாத சிசுக்கள் மெதுவாகவும் சோகமாகவும் சாவதை பார்த்துக்கொண்டு நாம் சும்மா இருப்பதா என்று ஐநா கேட்கிறது. HIV தொற்றிய தாய்மார்கள் பல வருடங்களுக்கு உயிர் வாழலாம் என்றும்கூட சொல்கிறது. முன்னால் குறிப்பிடப்பட்ட சிந்தியாவை எடுத்துக்கொள்ளுங்கள். 1985-⁠ல் குழந்தை பிறந்த போது தனக்கு HIV இருப்பதை தெரிந்துகொண்டாள். ஆனால் எட்டு வருடங்களுக்குப் பின்னரே நோயில் படுத்தாள். பிறக்கும்போது அவளுடைய குழந்தைக்கு HIV இருந்தாலும் இரண்டு வயதாகும்போது அது இல்லை.

உண்மையில் பாதுகாப்பான சுற்றுச்சூழலும், எய்ட்ஸ் போன்ற கொள்ளை நோய்களுக்கு நிரந்தரமான தீர்வும் அருகாமையில் இருக்கிறது என்பதே பைபிள் அளிக்கும் ஆறுதலான செய்தியாகும். (வெளிப்படுத்துதல் 21:1-4) யெகோவா தேவன் ஒரு புதிய உலகத்தை கொண்டுவரப் போவதாக வாக்குறுதி அளிக்கிறார். அங்கே “வாழ்பவர் எவரும் ‘நான் நோயாளி’ என்று சொல்லமாட்டார்.” (ஏசாயா 33:24, பொது மொழிபெயர்ப்பு) நிரந்தரமான இந்தப் பரிகாரத்தைப் பற்றி யெகோவாவின் சாட்சிகள் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறார்கள். கூடுதலான தகவலுக்கு இந்தப் பத்திரிகையை பிரசுரிப்போருடன் அல்லது உங்கள் நகரில் உள்ள யெகோவாவின் சாட்சிகளுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

[அடிக்குறிப்புகள்]

a இது அவளுடைய உண்மைப் பெயரல்ல.

b UNICEF-⁠ன் அறிக்கையின்படி நாளொன்றுக்கு சுமார் 500-700 சிசுக்கள் HIV பாசிட்டிவ் தாய்மார்களிடம் தாய்ப்பால் குடிப்பதால் இந்த வைரஸைப் பெறுகின்றனர்.

c இந்த ஆறு அமைப்புகள்: ஐநா குழந்தைகள் நல அமைப்பு; ஐநா வளர்ச்சித் திட்டம்; ஐநா மக்கள்தொகைச் செயல்பாட்டு நிதி அமைப்பு; உலக சுகாதார நிறுவனம்; உலக வங்கி; ஐநா கல்வி, அறிவியல், கலாச்சாரக் கழகம் ஆகியவையே. UNAIDS 1995-⁠ல் ஸ்தாபிக்கப்பட்டது.

d அண்மைக்கால ஆராய்ச்சியின்படி, புட்டிப்பாலையும் தாய்ப்பாலையும் சேர்த்துக் கொடுப்பதால் HIV தொற்றும் ஆபத்து அதிகமாகலாம் என்றும் தாய்ப்பாலில் இந்த வைரஸை செயலற்றதாக ஆக்கும் எதிர்ப்பு ஏஜென்டுகள் இருக்கலாம் என்றும் நினைக்கப்படுகிறது. இது உண்மையாக இருக்குமென்றால் தாய்ப்பால் மட்டும் கொடுப்பதே நல்லதாக இருக்கும்—அதிலும் சில ஆபத்துக்கள் இருந்தாலும். ஆனால் இந்த கண்டுபிடிப்புகள் இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.

[பக்கம் 20-ன் படத்திற்கான நன்றி]

WHO/E. Hooper