உலகை கவனித்தல்
உலகை கவனித்தல்
குண்டாயிருப்பதால் ஆபத்து
“ஐரோப்பா முழுவதிலும் கொள்ளைநோயாக பரவிவரும் உடல் பரும”னால் சர்க்கரை வியாதியும் இருதய நோயும் இன்னும் மற்ற நோய்களும் வேகமாக அதிகரிக்கும் என முன்னறிவிக்கப்படுவதாய் லண்டனில் வெளியாகும் தி இன்டிப்பென்டன்ட் அறிவிக்கிறது. இத்தாலியிலுள்ள மிலன் என்ற இடத்தில் 26 நாடுகளிலிருந்து வந்திருந்த மருத்துவ வல்லுநர்களின் ஒரு கூட்டத்தில் பேசுகையில் இன்டர்நேஷனல் ஒபிசிட்டி டாஸ்க் ஃபோர்சின் அக்கிராசினர் இவ்வாறு கூறினார்: “இது உலகெங்கிலும் காணப்படும் ஆபத்தான நிலை, பயங்கரமாக பரவும் இந்த மோசமான கொள்ளை நோயையும் இதன் விளைவாக ஏற்படும் செலவையும் தடுப்பதற்காக அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும். நாம் செயல்படாவிட்டால் உடல்நல பேரழிவை திடீரென்று சந்திப்போம்.” இதில் எல்லா ஐரோப்பிய நாடுகளும் அடங்கும், ஒரு சில இடங்களில் 40-50 சதவீத மக்களுக்கு இந்தப் பிரச்சினை உள்ளது. இங்கிலாந்தில் 1980 முதற்கொண்டு உடல் பருமன் பெண்களுக்கு 8-லிருந்து 20 சதவீதமாகவும் ஆண்களுக்கு 6-லிருந்து 17 சதவீதமாகவும் அதிகரித்திருக்கிறது. ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதும் அதிக கொழுப்பு சத்துள்ள உணவு சாப்பிடுவதும் இதற்கு காரணங்களாக சொல்லப்படுகின்றன. இரண்டுக்குமே பொருளாதார செழுமைதான் காரணம். அதைவிட கவலைக்குரிய விஷயம், அளவுக்கு அதிகமான எடையுள்ள பிள்ளைகள் அதிகரித்து வருவதுதான். உடல் பருமன் ஆய்வுக்கான ஐரோப்பிய சங்க தலைவர் பேராசிரியர் யாப் ஸிடல் என்பவரின் கருத்துபடி, “அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலானோர் சின்ன வயதிலேயே அதிக குண்டாக இருப்பார்கள் என்று தெரிகிறது.”
உலகமயமாதலின் கீழ்நோக்கிய போக்கு
உலகமயமான பொருளாதாரம் ஒரு உலக சந்தையை உருவாக்கிக்கொண்டிருக்கிறது, இது அநேகருக்கு அதிக வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தாலும் இது ஆபத்துக்களையும் அதிகரிக்கப் பண்ணுவதாக பிரிட்டிஷ் செய்தித்தாள் த கார்டியன் அறிவிக்கிறது. உலகின் புதிய பொருளாதார கொள்கையில் தேசங்கள் ஒன்றை ஒன்று வெகுவாக சார்ந்திருக்கின்றன, இதனால் ஓரிடத்தில் நிகழும் நிகழ்ச்சி உலகம் முழுவதையும் பாதிக்கிறது. உதாரணமாக 1997-ல் தாய்லாந்து நாட்டுப் பணத்தின் மதிப்பு குறைந்தபோது பொருளாதாரத்தைப் பற்றிய அச்சத்தை அது உலகம் முழுவதிலும் தோற்றுவித்தது. “முப்பது வருடங்களுக்கு முன்பாக, உலகில் ஐந்தில் ஒரு பாகமாக இருந்த மகா செல்வந்தர்களுக்கும் பரம ஏழைகளுக்கும் இடையே வித்தியாசம் 30-க்கு 1 என்ற விகிதத்தில் இருந்தது” என்பதாக த கார்டியன் கூறுகிறது. ஆனால் 1990-ல் அது 60-க்கு 1 என்ற விகிதத்திலும் இன்று 74-க்கு 1 என்ற விகிதத்திலும் இருக்கிறது. . . . உலகமயமாதலில் அதிகமாக நன்மை அடைகிறவர்கள் குற்றவாளிகள்தான். ஏனெனில் இவர்களால் உலக சந்தையிலிருந்து போதை மருந்து, ஆயுதங்கள், மற்றும் விலைமாதர்களை பெற்றுக்கொள்ள முடியும்.”
ஜலதோஷத்தை தவிர்க்க முடியுமா?
ஜலதோஷத்தை முற்றிலுமாக தவிர்க்க முடியாவிட்டாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்கிறது த நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகை. மிக முக்கியமாக: ஜனநெருக்கடி உள்ள இடங்களை முடிந்தவரை தவிருங்கள், ஜலதோஷம் உள்ளவர்களிடம் கைக்குலுக்காதீர்கள். உங்கள் கண்களையும் மூக்கையும் அடிக்கடி தேய்க்காதீர்கள், அடிக்கடி கைகளைக் கழுவுங்கள். இப்படி எச்சரிக்கையாயிருப்பது நல்லது. ஏனென்றால் பொதுவாக கைகள்தான் ஜலதோஷத்தை உண்டுபண்ணும் வைரஸை மென்மையான கண், மூக்கு சவ்வுகளுக்கு கடத்துகின்றன. பொருட்களின் மேல் அல்லது கைகளின்மீது இருக்கும் ஜலதோஷ வைரஸ் பல மணிநேரத்திற்கு சுறுசுறுப்பாக செயலாற்றிக் கொண்டிருக்கும். ஜலதோஷ அறிகுறிகள் வெளிப்படையாக தெரிய ஆரம்பிப்பதற்கு சற்று முன்னரும் பின்னரும்கூட அது அடுத்தவரை தொற்றிக்கொள்ளும். சமச்சீர் உணவை உண்பதும், முக்கியமாக பிள்ளைகள் இருக்கையில் அதிக கவனமாக இருப்பதும் அவசியமாகும். ஏன்? ஏனென்றால் பிள்ளைகளுக்கு வருடத்துக்கு ஐந்து முதல் எட்டு தடவையாவது ஜலதோஷம் பிடிக்கும்!
ஆப்பிரிக்காவில் மன நலம்
“ஆப்பிரிக்காவின் 60 கோடி மக்கள் தொகையில் சகாராவுக்கு தெற்கு பகுதியில் வாழும் பத்து கோடி ஆட்கள் மனநல கோளாறினால் அவதிப்படுகிறார்கள்” என்று தென் ஆப்பிரிக்க செய்தித்தாள் த ஸ்டார் குறிப்பிடுகிறது. இத்தனை அனேகர் பாதிக்கப்படுவதற்கு போரும் வறுமையுமே முக்கிய காரணம் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. கூட்டுக் குடும்பத்திற்கு ஆதரவு குறைந்துவருவது இன்னுமொரு காரணமாகும். நைஜீரியாவைச் சேர்ந்த பேராசிரியர் மைக்கேல் ஓலட்டவுரா என்பவரின் கருத்துப்படி, “பாரம்பரிய கூட்டுக் குடும்பம் என்ற பாதுகாப்பை” மேற்கத்திய கலாச்சாரமும், போதைப்பொருளின் துர்ப்பிரயோகமும், உள்நாட்டு வன்முறையும் சேர்ந்து மெல்ல மெல்ல அழித்துவருகின்றன. மேலுமாக குடும்ப அங்கத்தினர்களும் வேலை தேடி தொலை தூரங்களுக்குச் சென்றுவிடுகின்றனர். “ஆரோக்கியத்தைக் காத்துக்கொள்ள நடவடிக்கை எடுப்பதற்கு முட்டுக்கட்டையாக இருப்பது ஆப்பிரிக்க அரசாங்கங்களின் பொருளாதார பிரச்சினைகளே” என்று பேராசிரியர் ஓலட்டவுரா கூறுகிறார்.
போர் ஜமக்காளங்கள்
ஆப்கானிஸ்தானில் போரின் கொடுமைகளெல்லாம் புதுமையான கலைவடிவில் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன என்பதாக மெக்ஸிகோ நாட்டு செய்தித்தாளான த நியூஸ் அறிவித்தது. கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் நாட்டு கைவினைஞர்கள் அவர்களுடைய பிரபலமான ஜமக்காளங்களில் போர் கருவிகளின் வடிவங்களை நெய்துவருகிறார்கள். பறவைகள், மசூதிகள், மலர்கள் ஆகிய பாரம்பரியமான வடிவங்களோடுகூட இயந்திர துப்பாக்கிகள், கையெறிகுண்டுகள், டாங்குகள் ஆகியவற்றின் வடிவங்களும் இடம்பெற்றிருக்கின்றன. பார்த்தவுடன் இந்த வடிவங்களை உடனடியாக கண்டுபிடிக்க முடியாவிட்டாலும் “AK-47 துப்பாக்கியை AK-74 துப்பாக்கியிலிருந்து வித்தியாசம் கண்டுகொள்ளும் அளவிற்கு
துல்லியமாக இருக்கின்றன” என்று ஜமக்காள வல்லுநர் பேரி ஓக்கானல் என்பவர் கூறுகிறார். இந்த ஜமக்காளங்களை நெய்பவர்களில் பெரும்பாலோர் போரில் பாதிக்கப்பட்ட பெண்களே. விசேஷமான ஜமக்காளங்களை நெய்யும் இந்தப் பெண்களுக்கு இது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கான மறைமுக வழி.விஷ மழை
ஐரோப்பாவில் பூச்சிக்கொல்லிகள் அதிகமான அளவில் மழைநீரில் கரைந்துவிட்டிருப்பதால் இந்தத் தண்ணீர் குடிப்பதற்கு தகுதியற்றதாக ஆகிவிட்டது என்று நியூ சையன்டிஸ்ட் பத்திரிகை அறிவிக்கிறது. புயல்காற்று அடித்தவுடன் பெய்யும் முதல் மழையின் சாம்பிள்களில் அதிகளவான பூச்சிக்கொல்லிகள் இருப்பதை சுவிட்ஸர்லாந்து நாட்டு வேதியல் வல்லுநர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். யூரோப்பியன் யூனியன் அல்லது சுவிட்ஸர்லாந்து ஏற்கத் தகுந்தது என்று கருதும் அளவைவிட இது அதிகமாகும். இதற்கு காரணம் பூச்சிக்கொல்லிகளே, நீண்டகால வறட்சிக்குப்பின் பெய்யும் முதல் மழையில்தான் இந்த விஷத்தன்மையுள்ள இரசாயனங்கள் மிக அதிகமாக காணப்படுகின்றன. இதற்கிடையில், வேகமாக பரவிவரும் ஒரு வகை கான்ஸருக்குக் (non-Hodgkin’s lymphoma) காரணம், பரவலாக பயன்படுத்தப்படும் பல்வேறு பூச்சிக்கொல்லிகளே என்று ஸ்வீடன் நாட்டு ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கூரை மீது தாவரங்கள் வளராமல் இருப்பதற்காக உபயோகிக்கப்படும் இரசாயனங்கள் கட்டடங்களிலிருந்து வழியும் மழைநீரை மாசுபடுத்துகின்றன.
விவசாய மரணங்கள்
பிரிட்டனில் விவசாய பண்ணைகளில் வாரத்துக்கு ஒரு நபருக்கு மேல் கொல்லப்படுகிறார், இதனால் நாட்டில் அதிக ஆபத்தான வேலைகளில் இதுவும் ஒன்றாகிறது என்பதாக லண்டனில் வெளியாகும் த டைம்ஸ் அறிக்கை செய்கிறது. 1998-ல் நான்கே வயதுள்ள ஒரு சிறு பிள்ளை டிராக்டரின் சக்கரத்தில் நசுங்கி பரிதாபமாக செத்துப்போனது, சரிவான பகுதிகளில் டிராக்டர்கள் கவிழ்ந்துவிட்டதால் இன்னும் வேறு ஏழு பேர் உயிரிழந்தனர். ஆபத்தான வேலைகளைச் செய்வதற்கு முன்னால் அதை தீர்க்கமாக யோசித்து செய்யுங்கள், சரிவான பகுதியில் டிராக்டரை மேலே ஓட்டிச்செல்லும்போது அதன் கண்டிஷன் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள் என விவசாயிகளுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டு வருகிறது. உடல்நல மற்றும் பாதுகாப்பு துறையின் முதன்மை வேளாண்மை மேற்பார்வையாளர் டேவிட் மேட்டி இவ்வாறு கூறுகிறார்: “சற்றே நின்று நிதானித்து, செய்ய வேண்டிய வேலையைக் குறித்து கவனமாக யோசித்து, பின்னர் கொஞ்சம் வித்தியாசமான முறையில் அதை செய்திருந்தால் இந்த விபத்துக்களில் பெரும்பாலானவற்றை தவிர்த்திருக்க முடியும்.”
இவற்றிலிருந்தும் மின்சாரமா?
▪ நியூ கலிடோனாவில் யூவா என்ற தீவில் பெட்ரோலியம் கிடையாது, ஆகவே மின்சாரத்தை உற்பத்தி செய்ய இங்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது என்பதாக சயன்ஸ் ய அவெனர் என்ற பத்திரிகை அறிவிக்கிறது. பிரெஞ்சு நாட்டு என்ஜினியர் ஆலன் லயனர் என்பவர் தேங்காய் எண்ணெயில் ஓடும் ஒரு இயந்திரத்தை உருவாக்க 18 ஆண்டுகள் செலவழித்தார். இந்த என்ஜினில் ஓடும் ஜெனரேட்டர், கடல் தண்ணீரை குடிநீராக மாற்றும் இயந்திரத்திற்கு தேவையான மின்சாரத்தை அளிக்கிறது; இதனால் அந்தத் தீவில் வாழும் 235 குடும்பங்கள் பயனடைகின்றன. இவருடைய 165 கிலோவாட் சிஸ்டம், பவர் உற்பத்தியிலும் எரிபொருள் உபயோகிப்பிலும் டீசல் என்ஜின்களுக்கு நிகராக இருப்பதாக லயனர் கூறுகிறார்.
▪ இதற்கிடையில் இந்தியாவிலுள்ள குஜராத் மாநிலத்தில் கெல்லேலி என்ற இடத்தில் எருதுகளைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் பரிசோதனை செய்யப்பட்டது. ஒரு விஞ்ஞானியும் அவருடைய உறவுப் பெண்ணும் புதிய முறையில் மின் உற்பத்தி செய்வதை கண்டுபிடித்துள்ளனர் என்பதாக புது தில்லியில் வெளிவரும் டெளண் டு எர்த் என்ற பத்திரிகை அறிவிக்கிறது. ஒரு சிறிய ஜெனரேட்டரை இயக்குவதற்கு ஒரு சுழல்தண்டு (shaft) சுழல வேண்டும்; இது ஒரு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும். நான்கு எருதுகள் அந்த சுழல்தண்டை சுற்ற வைக்கின்றன. ஜெனரேட்டர், பாட்டரிகளோடு இணைக்கப்பட்டுள்ளது. இது ஒரு தண்ணீர் பம்புக்கும் தானியம் அரைக்கும் கிரைண்டருக்கும் வேண்டிய சக்தியை அளிக்கிறது. இதனால் உண்டாகும் சக்திக்கு ஆகும் செலவு ஒரு யூனிட்டுக்கு சுமார் பத்து சென்டுகளே. காற்றாடி இயந்திரத்தை பயன்படுத்தினால் ஒரு யூனிட்டுக்கு 1 டாலர் செலவாகும், சோலார் பேனல்களைப் பயன்படுத்தினால் 24 டாலர் செலவாகும் என்று டெளண் டு எர்த் கூறுகிறது. வயல்வெளிகளில் வருடத்தில் மூன்று மாதங்களுக்கு வேலை செய்வதற்கு கிராமவாசிகளுக்கு எருதுகள் அவசியமாக இருப்பதால், எருதுகள் கிடைக்காத சமயங்களில் சக்தியை சேமித்து வைப்பதற்கென்று திறம்பட்ட வேறு வழிகளை கண்டுபிடிப்பாளர்கள் தேடிக்கொண்டிருக்கின்றனர்.
புத்திசாலித்தனமாக சாப்பிடுதல்
சராசரியாக, பெண்கள் 10 முதல் 14 வயது வரை 25 சென்டிமீட்டர் உயரம் வளர்ந்து, 18-லிருந்து 22 கிலோகிராம் கூடுதல் எடை பெறுகிறார்கள். பையன்களோ 12 முதல் 16 வயதுவரையில் 30 சென்டிமீட்டர் வளர்ந்து 22-லிருந்து 27 கிலோகிராம் கூடுதல் எடை பெறுகிறார்கள். வேகமாக வளரும் இந்தக் காலப்பகுதியில் தங்கள் எடையைக் குறித்து பருவ வயதினர் அசெளகரியமாக உணருவது சர்வ சாதாரணமானதுதான், இவர்களில் அனேகர் தங்கள் எடையை குறைக்க வேண்டுமென கவலைப்படுகிறார்கள். “ஆனால் டயட்டில் இருப்பதும் உணவைக் குறைத்துக்கொள்வதும் இதற்கு ஆரோக்கியமான பரிகாரங்கள் இல்லை, இவை பரிந்துரைக்கப்படுவதும் இல்லை” என்பதாக த டோரன்டோ ஸ்டார்-ல் உணவுமுறை வல்லுநர் லின் ராப்லின் எழுதுகிறார். இப்படிச் செய்தால் உடலுக்கு ஊட்டச்சத்து கிடைக்காமல் போய்விடும் என்று ராப்லின் குறிப்பிடுகிறார். மேலுமாக இளைஞர்கள் இவ்வாறு டயட்டில் இருப்பது “ஆரோக்கிய சீர்குலைவிற்கும் மோசமான பல கோளாறுகளுக்கும் வழிநடத்தலாம்.” பருவ வயதினர் தங்கள் தோற்றத்தைக் குறித்து மிகவும் யதார்த்தமான நோக்குநிலையை கொண்டிருந்து “புத்திசாலித்தனமாக சாப்பிட்டு, சுறுசுறுப்பாக இருந்து, தங்களைப்பற்றி திருப்தியாக உணருவதன்” மூலம் ஆரோக்கியமான எடையை பெற வேண்டும் என்பதாக அவர் குறிப்பிடுகிறார்.