Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

வாஸ்கோடகாமா “வாஸ்கோடகாமாவின் சாதனைபடைத்த கடல் யாத்திரை” (மார்ச் 22, 1999) கட்டுரையை நான் மிகவும் அனுபவித்து வாசித்தேன். அது மிகவும் அழகாக விளக்கப்பட்டிருந்தது, தகவல் நிறைந்ததாக இருந்தது. அவர் தன் பயணத்தின்போது மூன்று சிறிய கப்பல்களை வைத்திருந்தார் என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள், ஆனால் உண்மையில் அவர் நான்கு சிறிய கப்பல்களை வைத்திருந்தார். வாஸ்கோடகாமா லிஸ்பனுக்கு செப்டம்பர் 8, 1499-⁠ல் திரும்பியதாக நீங்கள் கூறியிருக்கிறீர்கள். ஆனால் உண்மையில் அவர் ஆகஸ்ட் மாத முடிவில் வந்துசேர்ந்தார்.

பி. என்., கென்யா

வாஸ்கோடகாமாவின் பயணம் நான்கு கப்பல்களோடு ஆரம்பமானது என்பது உண்மைதான். ஆனால் நான்காவது கப்பல் அழிந்து போனபின் நிகழ்ந்த பயணம்தான் அறிமுகத்தில் வருணிக்கப்பட்டுள்ளது. லிஸ்பனுக்கு அவர் வந்துசேர்ந்த தேதியைப் பற்றி சொல்லவேண்டுமென்றால் பெரும்பாலான ஏடுகள் அவர் செப்டம்பர் மாத துவக்கத்தில் வந்துசேர்ந்தார் என்றே கூறுகின்றன. “போர்ச்சுகலும் கண்டுபிடிப்புகளும்” (ஆங்கிலம்) இவ்வாறு கூறுவது அக்கறைக்குரியதாக உள்ளது: “வாஸ்கோடகாமா ஆகஸ்ட் 29 வாக்கில் வந்திறங்கினார், செப்டம்பர் 8-ஆம் தேதி, அரசர் அவரை சகல மரியாதையோடும் வரவேற்றார்.” ஏன் வித்தியாசம் இருக்கிறது என்பதை இந்தத் தகவல் விளக்குகிறது என்று நம்புகிறோம்.​—⁠ED.

வினாடிவினா ஆங்கில விழித்தெழு!-வில் இடம்பெறும் வினாடிவினாவைப் பற்றி உங்களுக்கு எழுத விரும்புகிறேன். எனக்கு அது ரொம்ப பிடித்திருக்கிறது, ஏனென்றால் என் மூளையைச் சுறுசுறுப்பாக வைக்கிறது, அதுவும் 78 வயதில் மனதை சுறுசுறுப்பாக வைத்திருப்பது அவசியம். பைபிளை வாசிக்கும்போது நம்முடைய மனது பொதுவாக வினாடிவினாவில் காணப்படுவதுபோன்ற நுணுக்கமான விவரங்களை நினைவில் வைப்பது கிடையாது. ஆகவே எல்லா வசனங்களையும் எடுத்துப்பார்க்க நான் நேரமெடுத்துக் கொள்கிறேன். இதற்காக உங்களுக்கு நன்றி.

ஜே. டபிள்யு., ஐக்கிய மாகாணங்கள்

கொமினியஸ் சில முதியோருக்கு நான் வாசிக்க கற்றுக்கொடுக்கிறேன். “கொமினியஸ்​—⁠நவீன கல்வித்திட்டத்தின் தந்தை” (மே 8, 1999) என்ற தலைப்பில் நீங்கள் எழுதியிருந்த மிகச் சிறப்பான கட்டுரை, கற்றுக்கொள்வதில் சிலருக்கு ஏன் பிரச்சினை இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள எனக்கு உதவிசெய்தது. இதோடு வந்த “ஜான் கொமினியஸின் கற்பிக்கும் முறைகளில் சில முத்துச்சிதறல்கள்” என்ற பெட்டி மிகவும் பிரயோஜனமாக இருந்தது.

என். ஏ. எஃப்., பிரேஸில்

தகவல் நிறைந்த கட்டுரைக்காக உங்களுக்கு நன்றி. பல்கலைக்கழகத்தில் கொடுக்கப்பட்ட பத்து லெக்சர்களில் நான் கற்றுக்கொண்டதைவிட விழித்தெழு!-வின் நான்கு பக்கங்களிலிருந்து கொமினியஸ் பற்றி அதிகத்தைக் கற்றுக்கொண்டிருக்கிறேன்.

எச். பி., ஜெர்மனி

அமெரிக்க இந்தியர்களின் பைபிள் “அமெரிக்க இந்தியர்களும் பைபிளும்” (மே 8, 1999) கட்டுரையை நான் வாசித்தபோது மாஸசூஸட்ஸ் இந்தியர்களுக்காக ஜான் எலியட் மொழிபெயர்த்த பைபிளைப் பற்றிய உங்கள் குறிப்புகள் என் ஆர்வத்தை வெகுவாக தூண்டின. என் கணவரும் நானும் கலிபோர்னியாவில் சான் மரினோவிலுள்ள ஹன்டிங்டன் நூலகத்தில் அந்தப் பைபிளின் ஒரு பிரதியை பார்த்தோம். அது சங்கீத புத்தகத்துக்கு திருப்பி வைக்கப்பட்டிருந்தது, அதில் யெகோவா என்ற பெயர் திரும்பத் திரும்ப வருவதை நான் பார்த்தேன். இந்த 17-வது நூற்றாண்டு பைபிளில் கடவுளுடைய பெயரைப் பார்ப்பது எத்தனை கிளர்ச்சியூட்டுவதாக இருந்தது!

பி. ஜே., ஐக்கிய மாகாணங்கள்

குழந்தை தொழிலாளிகள் “குழந்தை தொழிலாளிகள்—விடிவு விரைவில்!” (மே 22, 1999) அட்டையை பார்த்தவுடன் எனக்கு ஏற்பட்ட முதல் அபிப்பிராயத்தை மறைக்காமல் சொன்னால், ‘என்னுடைய தேசத்துக்கு இது பொருந்தாது’ என்பதே. ஆனால் வாசிக்க ஆரம்பித்த போது பத்திரிகையை கீழே வைக்க எனக்கு மனமே வரவில்லை. சுருக்கமாகச் சொன்னால் திகிலடைந்தேன். சமீபத்தில் கையால் செய்யப்பட்ட ஒரு கரடி பொம்மையை வாங்கினேன். ஜப்பானில் இதை நான் வாங்கியிருந்தால் அதற்கு மிக அதிகமான விலைகொடுக்க வேண்டியிருந்திருக்கும்; ஆனால் மலிவான விலையில் இதைப் பெற்றுக்கொண்ட நான், இதை தயாரிப்பதற்காக சிறு பிள்ளைகள் எத்தனை கொடுமையாக நடத்தப்பட்டிருக்கலாம் என்பதை எண்ணிப் பார்க்கையில் மனம் வலியால் துடிக்கிறது.

எஸ். ஓ., ஜப்பான்

குண்டாக இருப்பது எனக்கு பத்து வயதாகிறது. “இளைஞர் கேட்கின்றனர் . . . குண்டாகிவிடும் பயத்தை நான் வெல்வது எப்படி?” (மே 22, 1999) கட்டுரைக்காக உங்களுக்கு நன்றி. நான் மிகவும் குண்டாயிருக்கிறேன் என்று எப்போதும் நினைத்துக் கொள்வேன். இந்தக் கட்டுரையை வாசித்தப்பின்தான் ஒரு நபரின் தோற்றம் முக்கியமானதில்லை, ஒரு நபரின் குணங்கள்தான் முக்கியம் என்பதை புரிந்துகொண்டேன்.

எம். எஸ்., ரஷ்யா