Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சித்திரவதை அனுபவித்தவர்களுக்கு உதவி

சித்திரவதை அனுபவித்தவர்களுக்கு உதவி

சித்திரவதை அனுபவித்தவர்களுக்கு உதவி

டென்மார்க்கிலிருந்து விழித்தெழு! நிருபர்

“உடைந்த எலும்பைக்கூட குணமாக்கிவிடலாம், ஆனால் உடைந்த மனதை குணமாக்குவது கடினம்.”—டாக்டர் இன்னி ஜெனிஃபிக்.

ஐரோப்பிய நகரம். ஆரவாரமில்லாத தெருவழியாக ஒரு இளைஞன் காலார நடந்து செல்கிறான். ஒரு கடையின் முகப்பில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ள ஏதோ ஒரு பொருளைப் பார்ப்பதற்காக நிற்கிறான். திடீரென்று அவன் கை கால்கள் உதறுகின்றன. யாரோ கழுத்தை நெறிப்பதுபோல் தொண்டையை பிடித்துக்கொள்கிறான். அப்படி என்ன பார்த்துவிட்டான்? சீருடையில் இருந்த இரண்டு போலீஸ்காரர்களை கண்ணாடியில் பார்த்துவிட்டான். அந்த இளைஞன் இப்படி பயப்படும் அளவுக்கு எந்தத் தப்புத்தண்டாவும் செய்யவில்லை. இருந்தாலும் எவரையாவது சீருடையில் பார்த்துவிட்டால் போதும், ஆயிரக்கணக்கான மைலுக்கு அப்பால் பல வருடங்களுக்கு முன் சித்திரவதை செய்யப்பட்ட அந்தச் சம்பவம் அப்படியே அவன் கண்முன் வந்துவிடும்.

இது ஆண்களுக்கு, பெண்களுக்கு, பிள்ளைகளுக்கு என்று யாருக்கு வேண்டுமென்றாலும் சம்பவிக்கலாம். உங்களுக்கு தெரிந்த யாருக்காவதுகூட இது சம்பவித்திருக்கலாம். கொடூரமாக நடத்தப்பட்டவர் ஒரு அகதியாக அல்லது உங்கள் நாட்டுக்கு வந்து குடியேறியவராக இருக்கலாம். அவர் ஒருவேளை உங்கள் வீட்டின் அருகில் இருக்கலாம். அவருடைய பிள்ளைகள் உங்கள் பிள்ளைகள் படிக்கும் அதே பள்ளியில் படிக்கலாம். அவர் அமைதியானவர், மரியாதையுடன் நடந்துகொள்பவர், ஒதுங்கி வாழ்பவர் என்பதாக மட்டுமே உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால் வெளித்தோற்றங்கள் நம்மை ஏமாற்றிவிடலாம்; அவர் கடந்த கால சரீர வேதனைகளையும் மன வேதனைகளையும் நினைவில் சுமந்துகொண்டு தன் உள்ளக்குமுறலை மறைத்து வைத்திருக்கலாம். ஏதாவது ஒரு காட்சியைப் பார்த்தால் அல்லது ஒரு சப்தத்தைக் கேட்டால் போதும், கடந்த கால பயங்கரங்கள் அவர் மனத்திரையிலே ஓட ஆரம்பித்துவிடும். இப்படியொரு அனுபவத்தைப் பெற்றிருந்த ஒருவர் இவ்வாறு விளக்குகிறார்: “ஒரு குழந்தையின் அழுகையை கேட்கும்போதெல்லாம் சிறையில் அழுதுகொண்டிருந்த ஆட்களின் நினைவு எனக்கு வந்துவிடும். காற்றை கிழித்துக்கொண்டு வரும் எந்தச் சத்தத்தைக் கேட்டாலும், எனக்கு விழுந்த அந்தப் பிரம்படிதான் ஞாபகத்துக்கு வரும்.”

அரசியல் தீவிரவாதிகளும், பயங்கரவாத இயக்கங்களைச் சேர்ந்தவர்களும்தான் சித்திரவதை செய்வார்கள் என்று நினைக்க வேண்டாம். அநேக நாடுகளில் இராணுவ வீரர்களும், போலீஸ்காரர்களும்கூட சித்திரவதை செய்கிறார்கள். ஏன்? ஏனெனில் உடனுக்குடன் பலன் கிடைத்துவிடுகிறது. தகவலை கக்க வைப்பதற்கு, குற்றத்தை ஒப்புக்கொள்ள வைப்பதற்கு, பொய் வாக்குமூலத்தை எழுதி வாங்குவதற்கு, பழிவாங்குவதற்கு என எல்லாவற்றிற்கும் இது சிறந்த வழியாய் தெரிகிறது. ஒரு சில அரசாங்கங்கள் “பதவிக்கு வரவும் அதைக் காத்துக்கொள்ளவும் சித்திரவதை செய்யும் பழக்கத்தைக் கையாண்டிருக்கின்றன” என்கிறார் டென்மார்க்கைச் சேர்ந்த டாக்டர் இன்னி ஜெனிஃபிக். இவர், சித்திரவதை என்ற சப்ஜெக்டில் முன்னிலையில் இருக்கும் வல்லுநர். சித்திரவதை செய்யப்பட்ட ஒருவர் இவ்வாறு கூறுகிறார்: “அரசாங்கத்தைக் குறைகூறினால் என்ன கதி ஏற்படும் என்பதை என்னை வைத்து மற்றவர்களுக்கு பாடம் புகட்ட விரும்பி, என்னை நிலைகுலைய வைக்க முயன்றார்கள்.”

அநேகருக்கு உடன் மானிடரை சித்திரவதை செய்வது என்றாலே வரலாற்றின் இருண்ட காலம்தான் நினைவுக்கு வரும். 1948-⁠ல் ஐக்கிய நாடுகள் அறிவித்த, மனித உரிமைகளுக்கான அனைத்துலக அறிக்கை இவ்வாறு கூறுகிறது: “யாருமே சித்திரவதை செய்யப்படவோ கொடூரமாக நடத்தப்படவோ கூடாது, மனிதாபிமானமற்ற அல்லது கீழ்த்தரமான முறையில் நடத்தப்படவோ தண்டிக்கப்படவோ கூடாது.” (சட்டப் பிரிவு 5) உலகிலுள்ள அகதிகளில் 35 சதவீதத்தினர் வரை சித்திரவதை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று சில வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். சித்திரவதை ஏன் பரவலாக காணப்படுகிறது? இதற்கு பலியாகிறவர்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள், அவர்களுக்கு உதவ என்ன செய்யலாம்?

பின்விளைவு

சித்திரவதை செய்யப்படுகிறவர்களில் அநேகர் தங்கள் தாய் நாட்டைவிட்டு வேறு எங்காவது தப்பி ஓடி புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க நினைக்கிறார்கள். ஆனால் இடம் மாறினாலும், சரீர வேதனையும் மனவேதனையும் அவர்களை நிழல்போல தொடர்கின்றன. உதாரணமாக, நண்பர்கள் அல்லது உறவினர்கள் மோசமாக நடத்தப்படுகையில் கையாலாகாதவன் போலிருந்தேனே என்ற குற்றவுணர்வு அவரை வாட்டிக்கொண்டே இருக்கலாம். ஒருவரையும் நம்பமாட்டார். யாரைப் பார்த்தாலும் தன்னைக் காட்டிக்கொடுக்க வந்திருக்கிறாரோ என்ற பயம்தான் வரும். “சித்திரவதைக்கு பலியானவர் எப்போதும் ஒரு அந்நியராக ஒதுங்கியே இருப்பார். அவருக்கு உலகத்தின்மீதுள்ள நம்பிக்கை ஒரேடியாக போய்விடும்” என்கிறார் எழுத்தாளர் கார்ஸ்டன் ஜென்சன்.

உடலும் மனமும் ரணமாகியிருப்பதால் பலியானவரும் அவருக்கு உதவி செய்ய முயற்சி செய்கிறவரும் திணறிப்போகின்றனர். உடலின் ரணத்திற்கு வேண்டுமென்றால் எளிதில் சிகிச்சை அளித்திடலாம் ஆனால் மனப் புண்ணுக்கு மருந்து கிடைப்பது இல்லை. “ ‘அவர்களுடைய காயங்களுக்கு கட்டுப்போட்டு அனுப்பலாம், அப்போது சரியாகிவிடுவார்கள்’ என்று நாங்கள் முதலில் நினைத்தோம். ஆனால் மனவேதனைதான் அவர்களை உண்மையில் உருக்கிக்கொண்டிருக்கிறது என்பதை விரைவில் தெரிந்துகொண்டோம்” என்று டாக்டர் ஜெனிஃபிக் கூறுகிறார். அதேசமயம், “அநேக வருடங்கள் கடந்துவிட்டாலும் சித்திரவதைக்கு பலியானவர்களுடைய பாரத்தைக் குறைத்து அவர்களுக்கு உதவிசெய்ய முடியும் என்று அறிந்துகொண்டபோது ஆச்சரியமாக இருந்தது” என்றும் சொல்கிறார்.

1982-⁠ல் கோபன்ஹாகன் நேஷனல் ஹாஸ்பிட்டலில் டாக்டர் ஜெனிஃபிக்கும் மற்ற டென்மார்க் நாட்டு மருத்துவர்களும் சேர்ந்து, சித்திரவதை செய்யப்பட்ட அகதிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கென்று ஒரு சிறிய யூனிட்டை ஏற்படுத்தினார்கள். இந்தச் சிறிய யூனிட்தான் சித்திரவதை செய்யப்பட்டவர்களுக்கான சர்வதேச மறுவாழ்வு கவுன்சில் (IRCT) என்ற உலகளாவிய அமைப்பாக உருவானது. இதன் தலைமைக்காரியாலயம் கோபன்ஹாகனில் உள்ளது. உலகெங்கும் 100-⁠க்கும் மேற்பட்ட மையங்களின் மூலமாக இந்தக் கவுன்சில் நிவாரணப் பணியை செயல்படுத்தி வருகிறது. இவ்வளவு ஆண்டுகளாக, சித்திரவதை செய்யப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதைக் குறித்து கவுன்சில் அதிகத்தைக் கற்றுக்கொண்டுள்ளது.

எவ்வாறு ஆதரவு கொடுப்பது

அனுபவித்த சித்திரவதையை மனம் திறந்து சொல்லிவிடுவது பிரயோஜனமாக இருக்கும். “சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னால் சித்திரவதைக்கு ஆளானவர்கள் இரண்டு விதத்தில் வேதனை அனுபவித்தார்கள். உடல்/மனம் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டது ஒரு வேதனை, அதைப்பற்றி மற்றவர்களிடம் பேச முடியாமல் இருந்தது இரண்டாவது வேதனை” என்பதாக IRCT கொடுத்த தகவல் கூறுகிறது.

சித்திரவதை போன்ற பயங்கரமான ஒரு விஷயத்தைப் பற்றி பேசுவது இன்பமாயிருப்பதில்லை என்பது உண்மைதான். ஆனால் நண்பரிடம் மனதிலிருப்பதைக் கொட்டித்தீர்த்துவிட விரும்புகையில், நண்பர் கேட்க மறுத்துவிட்டால் வேதனையில் இருப்பவர் இன்னுமதிக விரக்தியடையலாம். ஆகவே கரிசனை காட்ட ஆட்கள் இருக்கிறார்கள் என்று அவருக்கு உறுதியளிப்பது முக்கியம். அதேசமயம் ஒருவரும் அவரது தனிப்பட்ட விஷயங்களில் மூக்கை நுழைக்கக் கூடாது. சித்திரவதையை அனுபவித்தவர்தானே எப்போது, யாரிடம் மனம் திறந்து பேச விரும்புகிறார் என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.​—நீதிமொழிகள் 17:17; 1 தெசலோனிக்கேயர் 5:⁠14.

உடல், மனம் ஆகிய இரண்டிற்கும் சிகிச்சை அளிப்பதையே பெரும்பாலான வல்லுநர்கள் பரிந்துரை செய்கிறார்கள். சிலருடைய மறுவாழ்வுக்கு நிபுணர்களின் உதவி தேவையாக இருக்கும். சிகிச்சையில் சுவாசப் பயிற்சி பேச்சுப் பயிற்சி ஆகிய இரண்டும் தேவை a முதலில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் அவமான உணர்வாகும். திரும்பத் திரும்ப கற்பழிக்கப்பட்டு அடிக்கப்பட்ட ஒரு பெண்ணிற்கு சிகிச்சையளித்த டாக்டர் அவளிடம் சொன்னதாவது: “உங்களுக்கு ஏற்படும் அவமான உணர்வு இயல்பானது, அதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் உண்மையில் அவமானப்பட வேண்டியது நீங்கள் அல்ல. இதை உங்களுக்குச் செய்தவர்கள்தான் அவமானப்பட வேண்டும்.”

சித்திரவதை முகாமிலிருந்து உயிர்தப்பியவர்கள்

இரண்டாம் உலகப் போரின்போது கோடிக்கணக்கான ஆட்கள் ஹிட்லரின் சித்திரவதை முகாம்களில் மிகவும் கீழ்த்தரமாக நடத்தப்பட்டார்கள். தங்கள் மத நம்பிக்கைகளை மறுதலிக்க மறுத்த ஆயிரக்கணக்கான யெகோவாவின் சாட்சிகள் அந்த முகாமில் இருந்தார்கள். அவர்களுக்கிருந்த விசுவாசம்தான் இப்படிப்பட்ட கஷ்டமான சூழ்நிலைமைகளை சகித்திருக்க உதவிசெய்தது என்பதை மறுக்க முடியாது. அது எவ்வாறு உதவியது?

சிறையில் போடப்படுவதற்கு முன்பாக இந்தக் கிறிஸ்தவர்கள் கடவுளுடைய வார்த்தையை தவறாமல் கவனமாக படித்துவந்தனர். ஆகவே சோதனைகள் வந்தபோது அவர்கள் அதிர்ச்சியடையவில்லை, உடனடியாக விடிவு வராதபோதும் கடவுளை குற்றம்சாட்டவில்லை. அக்கிரமத்தைக் கடவுள் ஏன் அனுமதிக்கிறார், சரியான சமயத்தில் அதற்கு எவ்வாறு ஒரு முடிவைக் கொண்டுவருவார் என்பதையெல்லாம் பைபிளிலிருந்து அவர்கள் ஏற்கெனவே கற்றிருந்தார்கள். யெகோவா “நியாயத்தை விரும்புகிறவர்,” மனிதர்கள் சக மனிதரை தவறாக நடத்தும்போது அவர் மிகவும் கோபங்கொள்கிறார் என்பதை பைபிள் படிப்பு அவர்களுக்கு போதித்திருக்கிறது.​—சங்கீதம் 37:28; சகரியா 2:8, 9.

இந்த சித்திரவதை முகாம்களில் உயிர்தப்பியவர்களில் அநேகர் சித்திரவதையின் வேதனைமிக்க பின்விளைவுகளை சமாளிக்க வேண்டியிருந்திருக்கிறது. அவ்வாறு சமாளிக்கையில் அப்போஸ்தலன் பவுலின் புத்திமதியால் மிகவும் பலப்படுத்தப்பட்டனர். பவுல் ரோமாபுரி சிறையில் காலம் கழித்தபோது ஆழ்ந்த கவலையில் இருந்திருக்க வேண்டும். அச்சமயத்திலும் உடன்விசுவாசிகளுக்கு இவ்வாறு எழுதினார்: “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள், அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.”​—பிலிப்பியர் 1:13; 4:6, 7.

கடவுள் இந்த பூமியை ஒரு பூங்காவனமாக மாற்றப்போவதாக வாக்குறுதி அளித்திருக்கிறார்; அங்கே சித்திரவதை போன்ற அவமானத்தின் வேதனையான நினைவுகள் மனதிலிருந்து அழிக்கப்படும் என்பதை உத்தமத்தைக் காத்துக்கொண்ட இவர்கள் பைபிள் படிப்பின் மூலமாக கற்றிருக்கிறார்கள்.

பைபிள் அடிப்படையில் அமைந்த இந்த நம்பிக்கையைப் பற்றி யெகோவாவின் சாட்சிகள் 230-⁠க்கும் அதிகமான தேசங்களில் அனைவருக்கும் சொல்லி வருகிறார்கள். கொந்தளித்துக் கொண்டிருக்கும் உலக நிலைமைகளில் மனிதனுக்கு மனிதன் இழைத்த மனிதநேயமற்ற செயல்களால் வேதனைப்பட்டிருக்கும் அநேகரை இவர்கள் சந்திக்கிறார்கள். சித்திரவதை அனுபவித்திருக்கும் நபர்களைச் சந்திக்கும்போது ஒளிமயமான எதிர்காலத்தைப்பற்றி பைபிள் கொடுக்கும் வாக்கை எடுத்துச் சொல்கிறார்கள். சித்திரவதை கடந்த கால சரித்திரமாக இருக்கப்போகும் அந்த எதிர்கால நிலைமை பற்றிய நற்செய்தியைப் பரப்புவதில் அவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கின்றனர்!​—ஏசாயா 65:17; வெளிப்படுத்துதல் 21:⁠4.

[அடிக்குறிப்பு]

a எந்த குறிப்பிட்ட ஒரு சிகிச்சை முறையையும் விழித்தெழு! சிபாரிசு செய்வதில்லை. கிறிஸ்தவர்கள் தாங்கள் ஏற்றுக்கொள்ளும் எந்த சிகிச்சையும் பைபிள் நியமங்களுக்கு முரணாக இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

[பக்கம் 24-ன் சிறு குறிப்பு]

“யாருமே சித்திரவதை செய்யப்படவோ கொடூரமாக நடத்தப்படவோ கூடாது, மனிதாபிமானமற்ற அல்லது கீழ்த்தரமான முறையில் நடத்தப்படவோ தண்டிக்கப்படவோ கூடாது.”—சட்டப் பிரிவு 5, மனித உரிமைகளுக்கான அனைத்துலக அறிக்கை

[பக்கம் 25-ன் பெட்டி]

நீங்கள் எப்படி உதவலாம்

சித்திரவதை ரணத்திலிருந்து குணமாகிவரும் நபர்களுக்கு உதவ:

• அவரிடத்தில் உங்களை வைத்துப்பாருங்கள். “உங்கள் நாட்டில் கலவரங்கள் அதிகமாக இருப்பது எனக்குத் தெரியும். நீங்கள் எப்படி சமாளிக்கிறீர்கள்?” என்று கேட்கலாம்.​—⁠மத்தேயு 7:⁠12; ரோமர் 15:1.

• சொந்த விஷயங்களில் தலையிடாதீர்கள், உதவி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தாதீர்கள். தயவோடும் கரிசனையோடும் இருங்கள். அவர் சொல்வதைக் கேட்க தயாராயிருப்பதை அவருக்குத் தெரியப்படுத்துங்கள்.​—⁠யாக்கோபு 1:⁠19.

• உதவியையே உபத்திரவமாக ஆக்கிவிடாதீர்கள். அவருடைய தனிமை அல்லது சுயமரியாதையை பறித்துக்கொள்ளாதீர்கள். பாரத்தை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதற்காக எல்லாவற்றையும் உங்கள் தலையில் போட்டுக்கொள்ள முயலாதீர்கள்.