Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

புது மொழி பயில ஆசையா?

புது மொழி பயில ஆசையா?

புது மொழி பயில ஆசையா?

பிரிட்டனிலுள்ள விழித்தெழு! நிருபர்

“சொல்றது ஈஸி, செய்றதுதான் கஷ்டம்!” புதிய மொழியை கற்க முயற்சித்த பலரின் ஒருமித்த கருத்தே இது. புது மொழியைக் கற்றுக்கொள்வது ஒரு சவால் என்பதென்னவோ உண்மை. ஆனால் இதில் வெற்றி பெற்றவர்களைக் கேட்டால் செய்யும் முயற்சி ‘திருவினையாகும்’ என்றே சொல்வார்கள்.

புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. உதாரணமாக ஆண்ட்ரு விடுமுறைக்கு பிரான்சுக்கு செல்ல திட்டமிட்டார். ஆகவே அங்குள்ள மக்களிடம் அவர்களுடைய சொந்த மொழியில் பேச விரும்பினார். குவிடோ இங்கிலாந்தில் பிறந்தவர், ஆனால் அவருடைய குடும்பத்தினர் இத்தாலியர்கள். “எனக்கு கொச்சையாகத்தான் பேச வரும். ஆகவே இத்தாலிய மொழியில் சரியாக பேச கற்றுக்கொள்ள ஆசைப்பட்டேன்.” ஜோனத்தானின் தம்பி அண்மையில் மேல் நாட்டுக்குச் சென்று அங்கே ஒரு ஸ்பானிய நாட்டு பெண்ணை மணம் முடித்திருந்தார். “தம்பியை பார்ப்பதற்காக சென்றபோது எனது புதிய உறவினர்களுடன் அவர்களுடைய சொந்த மொழியில் பேச எனக்கு ஆசையாக இருந்தது” என்று ஜோனத்தான் சொல்கிறார்.

ஆனால் வேறொரு மொழியை கற்றுக்கொண்டால் மற்ற நன்மைகளும் இருக்கும். “மற்றவர்களுடைய இடத்தில் என்னை வைத்துப்பார்ப்பதற்கு இது எனக்கு கற்றுக்கொடுத்தது. வித்தியாசமான மொழிபேசும் ஒரு நாட்டுக்கு அயல்நாட்டவர் வரும்போது அவர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை இப்போது என்னால் புரிந்துகொள்ள முடிகிறது” என்பதாக லூசி சொல்கிறாள். பமீலாவுக்கோ தனிப்பட்ட முறையில் இது பிரயோஜனமாக இருந்தது. இங்கிலாந்தில் வளர்ந்து வந்த அவளுக்கு அவளுடைய குடும்பத்தினர் பேசிய சீன மொழி அவ்வளவு நன்றாக தெரியாது. அதனால் பமீலாவுக்கும் அவளுடைய அம்மாவுக்கும் ஒட்டுதலே இல்லாமல் இருந்தது. “எங்களுக்கு நடுவில் அதிகம் பேச்சு வார்த்தை இல்லாமலிருந்து, ஆனால் இப்போது என்னால் சீன மொழியை பேச முடிவதால் நாங்கள் நெருக்கமாக இருக்கிறோம், எங்களுடைய உறவும் வளர்ந்திருக்கிறது” என்று பமீலா சொல்கிறாள்.

வெற்றிக்கு சில டிப்ஸ்

வேறொரு மொழியைக் கற்றுக்கொள்வதில் வெற்றிபெற உங்களுக்கு என்ன அவசியம்? வெற்றிகண்டவர்கள் உதிர்த்த முத்துக்கள்.

• தூண்டுதல். கற்றுக்கொள்வதற்கு ஒரு காரணம் அல்லது தூண்டுதல் இருக்கவேண்டும். அப்படிப்பட்ட மாணவர்கள் பொதுவாக மிகச் சிறந்து விளங்குகிறார்கள்.

• மனத்தாழ்மை. எடுத்தவுடனேயே தப்பில்லாமல் சரளமாக பேச முயலாதீர்கள். ஆரம்பத்தில் தவறுகள் செய்வதைத் தவிர்க்க முடியாது. “மற்றவர்கள் நீங்க பேசறத பார்த்து சிரிப்பாங்க, ஆனால் நகைச்சுவை உணர்வோடு இருங்கள்!” என்று அலிசன் கூறுகிறாள். வேலரியும் இதை ஒப்புக்கொண்டு “நீங்கள் நடை பயிலும் சிறு பிள்ளையைப் போல இருக்கிறீர்கள். அடிக்கடி தடுமாறி விழுந்துவிடுவீர்கள், ஆனால் எழுந்து மறுபடியுமாக நடந்து பார்க்கத்தான் வேண்டும்” என்று சொல்கிறாள்.

• பொறுமை. “முதல் இரண்டு வருடங்கள் மிகவும் கஷ்டமாக இருந்தது, இதோடு போதும் நிறுத்திவிடலாம் என்றுகூட சில சமயம் தோணும்” என்கிறார் டேவிட். “ஆனாலும் கொஞ்ச கொஞ்சமாக ஈஸியாகிவிடும்” என்றும் சொல்கிறார். ஜில்லின் கருத்தும் இதுதான். “ஆரம்பத்தில் எப்படி இருந்தீர்கள் என நினைத்துப் பார்க்கும்போதுதான் எந்தளவு முன்னேறியிருக்கிறீர்கள் என தெரியும்” என்று அவள் சொல்கிறாள்.

• பழக்கம். ஒழுங்காக தினமும் பழகிப்பார்ப்பது புதிய மொழியை சரளமாக பேச உங்களுக்கு உதவிசெய்யும். ஒரு சில நிமிடங்கள் என்றாலும் விடாமல் தினந்தோறும் பழகிப்பாருங்கள். “எப்போதாவது உட்கார்ந்து மொத்தமாக பழகுவதைவிட கொஞ்சமாக அடிக்கடி பழகுவது மேல்” என்று ஒரு புத்தகம் கூறுகிறது.

பயனுள்ள உபகரணங்கள்

வேறு ஒரு மொழியைக் கற்றுக்கொள்ளும் சவாலை சந்திக்க தயாராக இருக்கிறீர்களா? அப்படியென்றால் பின்வரும் உபகரணங்கள் நீங்கள் வேகமாக முன்னேற உங்களுக்கு உதவிசெய்யும்.

• ஃப்ளாஷ் கார்டு. (Flash card) ஒவ்வொரு அட்டையின் முன்பக்கத்திலும் ஒரு வார்த்தை அல்லது சொற்றொடர் இருக்கும், பின்பக்கத்தில் அதன் மொழிபெயர்ப்பு இருக்கும். நீங்கள் இருக்கும் இடத்தில் இது கிடைக்காவிட்டால் சொந்தமாக நீங்களே இவற்றை தயார் செய்துகொள்ளலாம்.

• ஆடியோ வீடியோ கேசட்டுகள். மொழி சரியாக பேச இது கைகொடுக்கும். உதாரணத்திற்கு டேவிட், காரோட்டிச் செல்லும் போதே சுற்றுலா பயணிகளுக்கான சொற்றொடர் புத்தகத்தின் ஆடியோ கேசட்டை போட்டுக் கேட்டு ஜப்பானிய மொழியின் ‘அகரமுதல’ பாடத்தைக் கற்றுக்கொண்டார்.

• கம்ப்யூட்டர் புரோகிராம்கள். உங்கள் சொந்த குரலை ரெக்கார்டு செய்து, அந்த மொழி பேசுகிறவர்களின் உச்சரிப்போடு உங்களுடைய உச்சரிப்பை ஒப்பிட்டுப் பார்க்க சில புரோகிராம்கள் உதவி செய்கின்றன.

• ரேடியோவும் டிவியும். நீங்கள் கற்றுவரும் மொழியில் ரேடியோவிலோ டெலிவிஷனிலோ நிகழ்ச்சிகள் இருந்தால், அதைப் போட்டு உங்களால் எவ்வளவு புரிந்துகொள்ள முடிகிறது என்பதை ஏன் பார்க்கக்கூடாது?

• பிரசுரங்கள். நீங்கள் கற்றுவரும் மொழியில் பிரசுரங்களை வாசிக்க முயற்சி செய்யுங்கள், அவை புரிந்துகொள்வதற்கு மிகவும் கடினமானதாக அல்லது மிகவும் எளிமையானதாக இருக்கக்கூடாது. a

மொழியில் தேர்ச்சி பெற

புதிய மொழியை பேசுகிறவர்களோடு நீங்கள் ஒருநாள் இல்லையேல் இன்னொரு நாள் எப்படியும் பேசியே ஆகவேண்டும். இதற்காக நீங்கள் மிகவும் தொலைவான ஒரு நாட்டுக்கு பயணப்பட்டு போக வேண்டிய அவசியமில்லை. இதற்கு பதிலாக உங்களுடைய தேசத்திலேயே வேறு ஒரு மொழியில் நடக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய சபைக்கு ஒருவேளை நீங்கள் போகலாம்.

உங்கள் தாய் மொழியிலிருந்து வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் வெறுமனே மொழிபெயர்க்காமல் புதிய மொழியில் யோசிக்க கற்றுக்கொள்வது உங்களுடைய குறிக்கோளாக இருக்க வேண்டும். நீங்கள் கற்றுவரும் புதிய மொழியை பேசுகிறவர்களுடைய பழக்க வழக்கங்களைப் பற்றி கொஞ்சம் கற்றுக்கொள்ளவும் உதவியாக இருக்கும். “நீங்கள் கற்றுக்கொள்ளும் மொழி எந்தக் கலாச்சாரத்தின் பாகமாக இருக்கிறதோ அதைப் பற்றி கொஞ்சமாவது புரிந்துகொள்ளாவிட்டால் அம்மொழியை உண்மையில் கற்க முடியாது” என்பதாக மொழி வல்லுநர் ராபர்ட் லேடோ கூறுகிறார்.

கடைசியாக ஒரு வார்த்தை: நீங்கள் ஆமை வேகத்தில் முன்னேறிக்கொண்டிருந்தால் சோர்வடைந்துவிடாதீர்கள். புதிய மொழியைக் கற்றுக்கொள்வதென்பது முடிவில்லாதது. 20 வருடங்களுக்கு முன்னால் சைகை மொழி பேச கற்றுக்கொண்ட ஜில், “நான் இன்னமும் கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன். மொழி எப்போதும் வளர்ச்சி அடைந்துகொண்டே இருக்கிறது” என்கிறார்.

அயல் நாட்டு மொழி ஒன்றை கற்றுக்கொள்ள உங்களுக்கு விருப்பமா? அப்படியென்றால் மிகவும் சவாலான, ஆனாலும் மிகுந்த பலன்தரும் ஒரு முயற்சியில் இறங்க தயாராக இருங்கள்.

[அடிக்குறிப்பு]

a விழித்தெழு! இப்போது 83 மொழிகளிலும் அதன் கூட்டுப் பத்திரிகை காவற்கோபுரம் 132 மொழிகளிலும் கிடைக்கிறது. ஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதில் இந்தப் பத்திரிகைகளிலுள்ள தெளிவான மொழி நடை உதவியாக இருப்பதை அநேகர் கண்டிருக்கிறார்கள்.

[பக்கம் -ன் படங்கள்12, 13]

உங்கள் சொல்வளத்தை பெருக்கிக் கொள்வதற்கான வழி . . .

. . . உங்கள் தாய் மொழியோடு நீங்கள் கற்றுவரும் மொழியினை ஒப்பிடுவதாகும்