Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பூச்சிகளின் விந்தை உலகம்

பூச்சிகளின் விந்தை உலகம்

பூச்சிகளின் விந்தை உலகம்

ஸ்பெயினிலிருந்து விழித்தெழு! நிருபர்

பூச்சிகள் என்றாலே உங்கள் முகம் அஷ்டகோணலாகிறதா? எரிச்சலூட்டும் இந்த ஜீவன்கள் இல்லாவிட்டால் உலகம் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா? சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அடித்து, மிதித்து அல்லது பூச்சிக்கொல்லிகளைத் தெளித்து அவற்றை கொன்றுவிடுகிறீர்களா? கண்ணில் படும்போதெல்லாம் சாகடிப்பதற்கு பதில் பூச்சிகளின் உலகத்தைப்பற்றி ஏன் கொஞ்சம் தெரிந்துகொள்ளக் கூடாது? 1 மனிதனுக்கு சுமார் 20,00,00,000 பூச்சிகள் என்ற கணக்கில் இருக்கும் இந்த ஜீவராசிகள் நம்மோடுதான் இருக்கும் என்பதில் உங்களுக்கு சந்தேகம் வேண்டாம்.

வியப்பூட்டும் இந்த உயிரிகள் சிலவற்றை பற்றி கொஞ்ச நேரம் சிந்திக்கலாம், பிறகு அவற்றின் மதிப்பை நீங்களே புரிந்துகொள்வீர்கள்.

பறப்பதில் சூரன், பார்ப்பதில் கில்லாடி

அனேக பூச்சிகளுக்கு பறப்பது கைவந்த கலை. சில உதாரணங்களைப் பாருங்கள். கொசு தலைகீழாகவும் பறக்கும் திறமை கொண்டது. சில கொசுக்களால் மழை பெய்துகொண்டிருக்கும் போது மழைத்துளிகளை டபாய்த்துவிட்டு நனையாமல் பறந்து செல்ல முடிகிறது. வெப்பமண்டலத்தில் வாழும் சில குளவிகளும் தேனீக்களும் மெல்லிய இரைச்சலோடு மணிக்கு 72 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கின்றன. வட அமெரிக்காவிலுள்ள ஒரு பெரிய வண்ணத்துப்பூச்சி (monarch butterfly) இடபெயர்ச்சிக்காக 3,010 கிலோமீட்டர் பறந்து செல்கிறது. ஹோவர் ஃபிளைஸ் (hover flies) என்ற சிறு ஈக்கள் ஹம்மிங் பறவைகளைவிட வேகமாக விநாடிக்கு ஆயிரம் தடவை சிறகை அடித்துக்கொள்கின்றன. தும்பிகள் பின்னோக்கிப் பறக்கின்றன. இது ஆய்வாளர்களின் ஆர்வத்தைத் தூண்ட, அவர்கள் இதை மிகவும் உன்னிப்பாக ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.

ஒரு ஈயை அடிக்க முயன்ற அனுபவம் இருந்தால் உங்களுக்கே தெரியும், அவை ‘மைக்ரோஸ்கோப்’ பார்வை கொண்டவை என்பது. இவற்றின் ரிஃப்லக்ஸ் நம்முடையதைவிட பத்து மடங்கு கூடுதல் வேகமுடையது. மற்றொரு சுவாரசியமான விஷயம், ஈக்களின் கூட்டுக் கண்ணில் (compound eye) ஆயிரக்கணக்கான ஆறு பக்க லென்சுகள் உள்ளன, அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தியங்கும் திறன் உண்டு. அப்படியென்றால் ஈயின் பார்வை சிறு சிறு துணுக்குகளாக பிரிந்திருக்கின்றன.

மனிதனால் பார்க்க முடியாத புறஊதா ஒளியை சில பூச்சிகளால் பார்க்க முடிகிறது. ஆகவே நம்முடைய கண்ணுக்கு மங்கின வெள்ளை நிறமுடையதாய் தெரியும் ஒரு வண்ணத்துப்பூச்சி ஆண் வண்ணத்துப்பூச்சியின் கண்ணுக்கு அப்படி இல்லை. புறஊதா ஒளியில் பார்க்கும்போது அழகிய வடிவங்கள் கொண்ட ஆடை அணிந்தாற்போல் தோன்றும் பெண் வண்ணத்துப்பூச்சியின் கவர்ச்சியில் ஆண் வண்ணத்துப்பூச்சி அப்படியே சொக்கிப்போகிறது.

பல பூச்சிகளின் கண்கள் திசைக்காட்டியின் வேலையைச் செய்கின்றன. உதாரணமாக தேனீக்களாலும் குளவிகளாலும் ஒளிக்கதிரின் திசையை உணர்ந்துகொள்ள முடியும், ஆகவே சூரியன் மேகங்களுக்குப்பின் ஒளிந்துகொண்டாலும் இவற்றால் அதன் இடத்தை நிர்ணயிக்க முடியும். இந்தத் திறமை இவற்றிற்கு இருப்பதால்தான் இரை தேடி வெகு தூரம் சென்றாலும் வழி தவறாமல் கூட்டுக்கு திரும்பி வர முடிகிறது.

காதல் வானில்

பூச்சிகள் துணை தேடுவது ஒலிகளையும் வாசனைகளையும் வைத்துத்தான். இது பெரிய சாதனை என்றே சொல்ல வேண்டும், ஏனென்றால் அவை உயிர் வாழ்வதோ சில வாரங்கள்தான், அவை தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய துணைகளின் எண்ணிக்கையும் மிகக் குறைவே.

பெண் அந்துப்பூச்சி தன் உடலில் இருந்து சக்திவாய்ந்த ‘செண்ட்டை’ கசியச்செய்து சுமார் 11 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் ஆணுக்கு ‘தூண்டில்’ போடுகிறது. ஆணுக்கு இருக்கும் துல்லிய நுகரும் சக்தியினால் அந்த வாசனையைச் சட்டென்று பிடித்துவிட முடியும்.

சிள் வண்டுகளும் வெட்டுக்கிளிகளும் சுவர்க்கோழிகளும் ரீங்கார ‘சங்கீதங்களால்’ கவனத்தை ஈர்க்கின்றன. இனச்சேர்க்கைக்காக சுவர்க்கோழி தன் உடல் முழுவதையும் அசைத்து வாய்கிழிய கத்துவதை மனிதர்களாகிய நம்மால்கூட கேட்கமுடியும். இந்தச் சுவர்க்கோழிகள் கூட்டமாக கத்தினால் காதே செவிடாகிவிடும் அளவுக்கு இரைச்சல் உண்டாகலாம்! இதற்கு நேர் எதிர்மாறாக பெண் சுவர்க்கோழிகள் ‘கப்சிப்’ என்று இருக்கும்.

காலை எழுந்ததும் கதகதப்பு

குளிர் பிரதேசங்களில் வசிக்கும் மனிதர்கள் தங்களை கதகதப்பாக வைத்துக்கொள்வது முக்கியம். பூச்சிகளின் உலகிலும் அப்படியே. குளிரினால் விறைத்துப்போய் ஒவ்வொரு காலையும் கண்விழிக்கும் பூச்சிகளுக்கு கதிரவனே ‘ஹீட்டராக’ கைகொடுக்கிறது.

அதிகாலை வேளைகளில் ஈசல்களும் வண்டுகளும், சூரிய குளியல் செய்யும் மலர்கள் அல்லது இலைகளிடமாக கவர்ந்திழுக்கப்படுகின்றன. சில வண்டுகள் தண்ணீரில் வளரும் அல்லி மலர்கள்மீது அடிக்கடி போய் அமர்ந்துகொள்கின்றன. இது தாவர ஹீட்டராக வேலை செய்கிறது. சுற்றுப்புறத்திலுள்ள வெப்பத்தைவிட 20 டிகிரி செல்சியஸ் வெப்பம் இதில் கூடுதலாக கிடைக்கிறது. இதற்கு நேர் எதிர்மாறாக வண்ணத்துப்பூச்சிகளுக்கு சூடுண்டாக்கும் ஒரு அமைப்பு உடலிலேயே இருக்கிறது. கொஞ்சம் கதகதப்பு வேண்டுமென்றால் தன் சிறகுகளை விரித்துக்கொள்ள, அது சூரிய ஒளிவரும் திசையில் சோலார் பானல்களைப் போல சேவிக்கிறது.

பூச்சிகளின் சாகசங்கள்!

ஒவ்வொரு பூச்சியினத்துக்கும் வித்தியாசமான பணிகள் உண்டு. நம்பமுடியாத சில பணிகளை ஒரு சில பூச்சிகள் செய்கின்றன. உதாரணமாக சில அந்துப்பூச்சிகள் எருமை மாடுகளின் கண்ணீரை உறிஞ்சி உயிர்ப்பூட்டும் உப்பு சத்தையும் ஈரத்தையும் பெற்றுக்கொள்கின்றன. சில பூச்சிகள் உறைநிலைக்கு எதிரான தடுப்பு சக்தியை இயல்பாய் பெற்றிருக்கின்றன. இவை கடும்குளிருள்ள மலை உச்சிகளில் வாசம் செய்து, உறைந்துபோன பூச்சிகளை உண்டு வாழ்கின்றன.

ஞானவான் சாலொமோன் அரசன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் குறிப்பிட்ட விதமாக எறும்பு மிகவும் கடினமாக உழைக்கிறது. சாலொமோன் இவ்வாறு எழுதினார்: “சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில் போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள். அதற்குப் பிரபுவும் தலைவனும் அதிகாரியும் இல்லாதிருந்தும், கோடைகாலத்தில் தனக்கு ஆகாரத்தைச் சம்பாதித்து, அறுப்புக்காலத்தில் தனக்குத் தானியத்தைச் சேர்த்துவைக்கும்.” (நீதிமொழிகள் 6:6-8) சிலசமயம் இரண்டு கோடிக்கும் அதிகமான எறும்புகள் ஒரே “கூரையின்கீழ்” வாழ்கின்றன. ஆனாலும் அதிகாரி என்று எவரும் இல்லாதது என்னே ஆச்சரியம்! கூட்டத்திலுள்ள ஒவ்வொரு எறும்பும் அதனதன் வேலையை செய்ய, முழு கூட்டத்துக்கும் உணவும் பாதுகாப்பும் இருப்பிடமும் கிடைக்கிறது. இவ்வாறு இந்தப் பூச்சி “நகரம்” சீராக இயங்குகிறது.

பூச்சிகளின் வீடுகளிலேயே மிகவும் குறிப்பிடத்தக்கது கறையான் புற்றாகும். இந்த புற்றுகளில் சில 7.5 மீட்டர் உயரமுள்ளவை a இந்த அதிசயமான கட்டுமானங்களில் குளிர் கட்டுப்பாட்டு அமைப்பும் நிலத்தடி காளான் தோட்டங்களும் காணப்படுகின்றன. இந்த ஆச்சரியத்தைக் கேளுங்கள், உயர்ந்து நிற்கும் இந்த பிரமிட்டுகளைக் கட்டும் கறையானுக்கு கண் பார்வை கிடையாது!

பூச்சிகள் ஏன் தேவை

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பூச்சிகளுக்கு முக்கியமான ஒரு பங்குண்டு. தேனீக்கள்​—⁠பெரும்பாலும் காட்டுத் தேனீக்கள்​—⁠உண்டுபண்ணும் மகரந்த சேர்க்கையினாலேயே நாம் உண்ணும் சுமார் 30 சதவீத உணவுப்பொருட்கள் கிடைக்கின்றன. ஆனால் மகரந்த சேர்க்கை என்பது பூச்சிகள் செய்யும் உபயோகமான பல வேலைகளில் ஒன்றே. உயிரற்ற தாவரங்களையும் விலங்குகளையும் உண்டு மறுசுழற்சி செய்வதன் மூலம் அவை பூமியை சுத்தமாக வைத்திருக்கின்றன. இதன் மூலமாக மண் வளம்பெறுகிறது, இதிலிருந்து கிடைக்கும் ஊட்டச்சத்தினால் செடிகள் வளருகின்றன. “இந்தப் பூச்சிகள் மட்டும் இல்லையென்றால் உயிரற்ற தாவரங்களும் விலங்குகளும்தான் எங்கும் குவிந்துகிடக்கும்” என்பதாக பூச்சியியல் வல்லுநரான கிறிஸ்டோஃபர் ஓட்டூல் என்பவர் ஏலியன் எம்ப்பயர் என்ற தன் புத்தகத்தில் எழுதுகிறார்.

பூச்சிகள் இல்லையென்றால்தான் அவை செய்யும் வேலையின் அருமை தெரியும். லட்சக்கணக்கான கால்நடைகள் இருக்கும் ஆஸ்திரேலியாவில் என்ன நடந்தது என்பதை கவனியுங்கள். இந்தக் கால்நடைகளால் எல்லா இடங்களிலும் சாணி மயம். பார்ப்பதற்கு இது அருவருப்பாக இருந்ததோடு புஷ் ஈ என்ற ஒரு பூச்சி பெருகிற்று. இதனால் மனிதருக்கும் கால்நடைகளுக்கும் நோய் பரவியது. ஆகவே இந்த சாணத்தைத் தின்னும் வண்டுகள் ஐரோப்பாவிலிருந்தும் ஆப்பிரிக்காவிலிருந்தும் கொண்டுவரப்பட்டன. அதன்பின்பே தீர்ந்தது பிரச்சினை.

நண்பர்களா, பகைவர்களா?

ஒரு சில பூச்சிகள் பயிர்களை தின்று நோய்களை உண்டுபண்ணுவது என்னவோ உண்மைதான். ஆனால் உலகிலுள்ள பூச்சிகளில் 1 சதவீதம் மட்டுமே நாசம் செய்பவை. அதுவும் இவை அதிகமாக நாசம் செய்வதற்கு காரணம் மனிதன் சுற்றுச்சூழலை கெடுத்திருப்பதே. உதாரணத்திற்கு, மலேரியாவை உண்டுபண்ணும் கொசு, நிலநடுக்கோட்டுக்கு அருகே காட்டுப்பகுதியில் வாழும் பழங்குடியினரை தொந்தரவு செய்வதே கிடையாது. ஆனால் காட்டுப்பகுதியின் ஓரத்தில் இருக்கும் நகரங்களில் பேரழிவை ஏற்படுத்துகிறது, ஏனெனில் அங்கு தண்ணீர் அதிகமாய் தேங்கிக் கிடக்கிறது.

வித்தியாசமான பயிர்களை மாற்றி மாற்றி பயிர் செய்தால் அல்லது இந்த பூச்சிகளைத் தின்னும் மற்ற பூச்சிகளை வளர்த்தால் அல்லது பெருகச் செய்தால் பூச்சித் தொல்லையை தவிர்க்க முடியும். சாதாரண லேடிபக்ஸும் (ladybugs) லேஸ்விங்ஸும் (lacewings), செடிகளுக்கு வில்லனான அஃபிட்ஸ் (aphids) பூச்சியை ஒழித்துக்கட்டிவிடும். தும்பியின் முட்டை புழு ஓரிரண்டு இருந்தால் போதும் தண்ணீர் சேமிப்புத் தொட்டியில் கொசுக்கள் பெருகாமல் பாதுகாத்திடும் என்பதை தென்கிழக்கு ஆசியாவில் சுகாதார பணியாட்கள் கண்டுபிடித்தார்கள்.

அப்படியென்றால் ஒரு சில தீமைகள் பூச்சியினால் ஏற்பட்டாலும் நாம் வாழும் இந்த இயற்கை உலகின் இன்றியமையாத பாகமாக இந்தப் பூச்சிகள் இருக்கின்றன. கிறிஸ்டோஃபர் ஓட்டூல் சொல்வதுபோல், நாம் இல்லாவிட்டாலும் பூச்சிகளால் உயிர்வாழ முடியும், ஆனால் “அவை இல்லாமல் நாமிருக்க முடியாது.”

[அடிக்குறிப்புகள்]

a இதை மனிதர்களின் கட்டிடத்தோடு ஒப்பிட்டால் அது 9 கிலோமீட்டருக்கும் உயரமுள்ள விண்ணைத்தொடும் ஒரு கட்டிடமாக இருக்கும்.

[பக்கம் -ன் பெட்டி/படம்16, 17]

மெட்டமார்ஃபஸிஸ்—தோற்றம் புதிது, வாழும் முறையும் புதிது

சில பூச்சிகள் மெட்டமார்ஃபஸிஸ் என்ற வளர்ச்சியால் தோற்றத்தை முழுமையாய் மாற்றிக்கொள்கின்றன. சொல்லர்த்தமாக அவ்வார்த்தையின் அர்த்தமும், “தோற்றத்தில் மாற்றம்” என்பதே. வியப்பூட்டும் மாற்றங்களாக இவை இருக்கலாம். முட்டை புழு ஈக்களாகவும், கம்பளிப்பூச்சி வண்ணத்துப்பூச்சியாகவும், தண்ணீரில் காணப்படும் புழு வானில் பறக்கும் தும்பியாகவும் மாறிவிடுகிறது. லட்சக்கணக்கான பூச்சிகள் இவ்வாறு உருமாற்றம் அடைகின்றன.

இரயில் வண்டியை விமானமாக மாற்றுவதற்கு ஒப்பான இந்த உருமாற்றம் நிகழ்வதற்கு பூச்சியின் உடலுக்குள் பெரிய மாற்றங்கள் நிகழவேண்டும். உதாரணமாக வண்ணத்துப்பூச்சியை எடுத்துக்கொள்ளுங்கள். கம்பளிப்பூச்சி, கூட்டுப்புழு பருவத்தில் உறங்கிக்கொண்டிருக்கையில் அதனுடைய பெரும்பாலான திசுக்களும் உடல் உறுப்புக்களும் சிதைந்துவிடுகின்றன, அதன் பின்பு இறகுகள், கண்கள், உணர் கொம்புகள் என்று புதிய உறுப்புக்கள் உருவாகின்றன.

தோற்றம் மாறுகையில் பெரும்பாலும் வாழ்க்கை முறையும் மாறுகிறது. உதாரணமாக தும்பிகள், முட்டைப்புழு பருவத்தில் சிறிய மீன்களை அல்லது தலைப்பிரட்டைகளை பிடித்து உண்கின்றன, ஆனால் முழு வளர்ச்சியடைந்து பறக்க ஆரம்பிக்கையில் பூச்சிகளைப் பிடித்து தின்கின்றன. ஒரு மனிதன், முதல் 20 வருடங்கள் கடலில் நீந்திவிட்டு, பின்னர் பறவையைப் போல பறந்து வாழ்வதற்கு இது ஒப்பாயிருக்கிறது.

இந்த வியத்தகு மாற்றங்களுக்கு பரிணாமம் காரணமாக இருக்க முடியுமா? வண்ணத்துப்பூச்சியாக மாறும் திறம்படைத்த ஒரு கம்பளிப்பூச்சி எவ்விதமாக திடீரென்று தோன்றியிருக்க முடியும்? எது முதலில் வந்தது, கம்பளிப்பூச்சியா வண்ணத்துப்பூச்சியா? ஒன்று மற்றொன்றில்லாமல் வரமுடியாது, ஏனென்றால் வண்ணத்துப்பூச்சிதான் இனப்பெருக்கம் செய்து முட்டையிடுகிறது.

மெட்டமார்ஃபஸிஸ் என்ற வளர் உருமாற்றம் நிச்சயமாகவே கைதேர்ந்த ஒரு வடிவமைப்பாளர் இருப்பதற்கு சாட்சி பகருகிறது. இவரே எல்லாவற்றையும் படைத்த சர்வ வல்லமையுள்ள கடவுள் என்று பைபிள் காட்டுகிறது.​—⁠சங்கீதம் 104:24; வெளிப்படுத்துதல் 4:⁠11.

[படங்கள்]

துயிற்கூட்டிலிருந்து வெளிவரும் இந்த ஸ்வாலோடெய்ல் இறகுகளை விரிக்கிறது

[பக்கம் -ன் படங்கள்18]

மேலே: மகரந்தத்தை உண்ணும் வண்டு

மேலே வலது: பனிமூடிய இலை வண்டு கதகதப்பாகிறது

தொலை வலது: காண்டா மிருக வண்டு

[பக்கம் -ன் படங்கள்18]

ஆப்பிரிக்க குட்டைக்கொம்பு வெட்டுக்கிளி

[பக்கம் -ன் படங்கள்18]

மாட்டு ஈ