Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆகாய வரைபடம்—அன்றும் இன்றும்

ஆகாய வரைபடம்—அன்றும் இன்றும்

ஆகாய வரைபடம்—அன்றும் இன்றும்

நெதர்லாந்திலிருந்து விழித்தெழு! நிருபர்

பட்டுக் கம்பளம் விரித்ததுபோன்ற கரிய வானில், பூக்களை அள்ளித் தெளித்ததுபோல் நட்சத்திரங்கள் சிதறிக்கிடந்தன. மனதை மயக்கும் இந்தக் காட்சியைப் பார்த்து பார்த்து மனிதன் மலைத்திருக்கிறான். என்ன விலை கொடுத்தாலும் வாங்கமுடியாத இந்த அழகை படைத்த படைப்பாளரை வியந்து பாராட்டுவதைவிட மனிதன் வேறு என்ன செய்யமுடியும்? அதைத்தான் சரித்திரம் முழுவதிலும் காண்கிறோம். நீண்ட காலத்திற்குமுன், ஒரு கவிஞன் பாடினான்: “வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது.” (சங்கீதம் 19:1) எனினும், பூர்வ காலத்தில், இரவுநேர ஆகாயத்தை உற்றுநோக்கியவர்கள் வெறுமனே அதன் அழகை மட்டும் ரசிக்கவில்லை. அதற்கும் மேலாக முக்கியமான ஒரு விஷயத்தை புரிந்துகொண்டனர்.

ஆகாயத்தின் ஆபரணங்களை அடையாளம் காட்டுதல்

நட்சத்திரக் கூட்டங்கள் முழுவதும் அப்படியே சீராக நகருவதாக பூர்வ கால வான் ஆராய்ச்சியாளர்கள் கவனித்தனர். பூமியிலிருந்து பார்க்கும்போது நட்சத்திரங்கள் ஆகாயத்தில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி நகருவது போல் தோன்றுகின்றன. ஆனால் உண்மை என்னவென்றால், நட்சத்திரங்கள் ஒவ்வொன்றும் அவற்றின் நிலையில் இருந்து மாறுவதில்லை a இன்னொரு வார்த்தையில் சொல்லப்போனால், ஒவ்வொரு இரவிலும் அதே நட்சத்திரக் கூட்டங்களை காணமுடிகிறது. கணக்கிலடங்கா இந்த நட்சத்திரக் கூட்டங்களை சீரான முறையில் குறிப்பிட விரும்பினான் மனிதன். அதனால், கொஞ்சம் கற்பனையையும் சேர்த்து, நட்சத்திரங்களை தொகுதி தொகுதிகளாக பிரித்தான். மிருகங்கள், மக்கள் அல்லது சடப்பொருள்கள் போன்ற தோற்றத்தையுடையவை என அந்தத் தொகுதிகள் பிரிக்கப்பட்டன. இப்படியாக, ஒரேவிதமான உருவமைப்பை உடைய நட்சத்திரங்களை விண்மீன் குழுக்களாக பிரிக்கும் பழக்கம் ஆரம்பித்தது.

இன்று நாம் அறிந்துள்ள விண்மீன் குழுக்களில் சில முதன்முதலில் பூர்வ பாபிலோனியரால் விவரிக்கப்பட்டவை. இவற்றில், இராசிமண்டலத்தைக் குறிக்கும் 12 விண்மீன் குழுக்கள் இருக்கின்றன. மனிதனுடைய வாழ்க்கையை நட்சத்திரங்கள் பாதிக்கின்றன எனும் நம்பிக்கையில் தோற்றுவிக்கப்பட்ட குறிசொல்லுதல், அதாவது ஜோதிடக் கலையில் இந்த நட்சத்திரங்கள் அன்றும்சரி இன்றும்சரி முக்கிய பாகம் வகிக்கின்றன. நட்சத்திரங்களை பார்த்து சகுனம் சொல்வதை பைபிள் கண்டனம் செய்கிறது. (உபாகமம் 18:10-12) இருப்பினும், இந்த விண்மீன் குழுக்கள் இருப்பதை யெகோவாவின் வணக்கத்தார் அறிந்தே இருந்தனர். உதாரணமாக, பைபிள் புத்தகமாகிய யோபு, யெகோவாவை “வடமீன் குழுவையும், மிருகசீரிடத்தையும், கார்த்திகை விண்மீன்களையும், தென்திசை விண்மீன் குழுக்களையும் அமைத்தவர்” என குறிப்பிடுகிறது.​—யோபு 9:⁠9, பொது மொழிபெயர்ப்பு.

இன்று நாம் அறிந்திருக்கும் பெரும்பாலான விண்மீன் குழுக்களின் பெயர்கள் கிரேக்க புராணங்களிலிருந்து வந்தவையே. சீஃபீயஸ், கஸீயாஃபீ, அன்ட்ராமிடா, ஹெர்குலீஸ் போன்ற பெயர்களை நவீன நட்சத்திர விளக்கப் படங்களிலும் காணலாம்.

பூர்வ நட்சத்திர விளக்கப்படங்கள்

சுமார் பொ.ச. 150-⁠ல், வானவியல் சம்பந்தமாக அவருடைய காலத்தில் தெரிந்திருந்தவற்றை ஒரு தொகுப்பாக எழுதினார் கிரேக்க வானவியல் ஆய்வாளர் டாலமி. அல்மாகெஸ்ட் என தலைப்பிடப்பட்ட இந்தத் தொகுப்பு, 48 விண்மீன் குழுக்களைக் குறிப்பிடுகிறது. டாலமிக்கு பல நூற்றாண்டுகளுக்குபின் தயாரிக்கப்பட்ட ஆகாய விளக்கப் படங்களிலும் அட்லஸ்களிலும் அவர் குறிப்பிட்ட அதே 48 விண்மீன் குழுக்களே குறிப்பிடப்பட்டிருக்கின்றன. 16-⁠ம் நூற்றாண்டு வரை, இந்த விண்மீன் குழுக்களின் எண்ணிக்கையில் எந்தவித மாற்றமுமில்லை b பின்னர், இன்னும் 40 விண்மீன் குழுக்கள் சேர்க்கப்பட்டன. 1922-⁠ல், சர்வதேச வானவியல் ஒன்றியம், இந்த 88 விண்மீன் குழுக்களின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது.

விண்மீன் குழுக்களைத்தவிர, ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களின் பட்டியல் டாலமி பிரசுரித்த தொகுப்பில் இடம்பெற்றிருந்தது. இந்த நட்சத்திரங்களின் இடம், பிரகாசம் போன்ற தகவல்களையும் அதில் கொடுத்துள்ளார். ஆகாய தீர்க்கரேகை, அட்சரேகையின்படி நட்சத்திரங்களின் இடத்தை சொல்வது மட்டுமல்லாமல், இன்னும் பல தகவல்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார். உதாரணமாக, கிரேட் பியர் (Great Bear) அல்லது வடதிசை விண்மீன் குழுவில் (Ursa Major) உள்ள ஒரு நட்சத்திரம் “வால்போன்ற பகுதியின் ஆரம்பத்தில் உள்ள நட்சத்திரம்” என வர்ணிக்கப்படுகிறது. மேலும், வால்நட்சத்திரம் ஒன்றின் இருப்பிடத்தை “அன்ட்ராமீடாவின் வலது முழங்காலுக்கு இடதுபுறத்தில்” என குறிப்பிடுகிறது. எனவே, “திறமைமிக்க வானவியல் ஆய்வாளர் ஒவ்வொருவரும் அவருடைய ஆகாய உடற்கூறு பற்றி தெரிந்திருக்க வேண்டும்” என ஒரு புத்தகம் சுட்டிக்காட்டுகிறது.

அப்படியானால், பூர்வ விண்மீன் குழுக்கள் எல்லாம் ஏன் வடதிசை ஆகாயத்தில் இருப்பதாக குறிக்கப்பட்டுள்ளது? குறிப்பிட்ட நட்சத்திரத் தொகுதிகளை விண்மீன் குழுக்களாக பிரிக்கும் பழக்கம் மத்திய தரைக்கடல் பகுதியில்தான் ஆரம்பமானது. இங்கு வடதிசை ஆகாயம் தெளிவாக தென்பட்டதே இதற்கு காரணம் என ஆகாய வரைபடக்கலை நிபுணர் ஒருவர் விளக்குகிறார். தென்திசை ஆகாயத்தை மனிதன் ஆய்வு செய்ய துவங்கிய பின்னரே, இன்னும் புதிய விண்மீன் குழுக்கள் பல அடையாளம் கண்டுகொள்ளப்பட்டன. சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த விண்மீன் குழுக்கள் கெமிக்கல் ஃபர்னஸ், பென்டுலம் கிளாக், மைக்ரோஸ்கோப், டெலஸ்கோப் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன.

“கிறிஸ்தவ நட்சத்திர ஆகாயம்”

1627-⁠ல், காய்லும் ஸ்டெலாடும் க்ரிஸ்ட்யானும் (கிறிஸ்தவ நட்சத்திர ஆகாயம்) என தலைப்பிடப்பட்ட நட்சத்திர அட்லஸ் ஒன்றை ஜெர்மானிய கல்விமான் யூலியஸ் ஷில்லர் பிரசுரித்தார். பொய்மத ஆகாயத்தை மாற்றுவதற்கான நேரம் அதுவே என அவர் நினைத்தார். எனவே, பொய் மதத்தைச் சார்ந்த வடிவங்களுக்கு பைபிள் சார்ந்த வடிவங்களைக் கொடுத்தார். “வடதிசை ஆகாயத்தை புதிய ஏற்பாட்டிற்காகவும் தென்திசை ஆகாயத்தை பழைய ஏற்பாட்டிற்காகவும்” அவர் ஒதுக்கினார் என த மேப்பிங் ஆஃப் த ஹெவன்ஸ் என்ற புத்தகம் விளக்குகிறது. “ஷில்லரின் தென்திசை அரைக்கோளம், பழைய ஏற்பாட்டு பெயர்களின் அணிவகுப்பாக மாறியது. அதாவது, இந்தியன் மற்றும் த பீகாக் (மயில்) என்பதற்கு பதிலாக யோபு என்பதாகவும் சென்டார் என்ற பெயர் ஆபிரகாம், ஈசாக்கு எனவும் மாற்றப்பட்டது.” வடதிசை அரைக்கோளத்தில், “கஸீயாஃபீ என்பது மேரி மகதலேனா, பெர்சஸ் என்பது (புனித) பவுல் எனவும், 12 விண்மீன் குழுக்களைக் கொண்ட இராசி மண்டலம் பன்னிரண்டு அப்போஸ்தலர்கள் எனவும் சுலபமாக மாற்றப்பட்டுள்ளது.”

இந்தப் பெயர் மாற்றத்திலிருந்து தப்பித்தது ஒரேயொரு சின்ன விண்மீன் குழுவே. கலம்பா (புறா) எனும் விண்மீன் குழுவே அது. நீர் வற்றிவிட்டதா என பார்க்க நோவா அனுப்பிய புறாவை அது பிரதிநிதித்துவம் செய்வதாக நம்பப்பட்டதே அதற்கு காரணம்.

மாறிக்கொண்டிருக்கும் வரைபடங்கள்

காலப்போக்கில், நட்சத்திர விளக்கப்படங்களில் இன்னும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. 17-⁠ம் நூற்றாண்டில், தொலைநோக்கி கண்டுபிடிக்கப்பட்டதற்கு பிறகு, நட்சத்திரங்களின் இருப்பிடத்தைத் துல்லியமாக காட்டும் விளக்கப்படங்கள் தேவைப்பட்டன. கூடுதலாக, பழைய விளக்கப்படங்களில் கொசகொசவென இருந்த மிகுதியான ஜோடனைகள் மெல்ல மெல்ல மதிப்பிழந்து, கடைசியில் மறைந்தன. இன்றோ, இரவுநேர ஆகாயத்தை உற்றுநோக்குபவர்களின் ஆர்வத்தை தூண்டும் நட்சத்திரங்கள், நட்சத்திரக் கூட்டங்கள், நெபுல்லாக்கள், பால்மண்டலங்கள், மற்ற பொருட்கள் போன்றவை மாத்திரமே பெரும்பாலான நட்சத்திர அட்லஸ்களில் உள்ளன.

19-⁠ம் நூற்றாண்டின் மத்தியில், விரிவான நட்சத்திர பட்டியல்களை தயாரிக்க ஆரம்பித்தனர். இந்தத் துறையில் முன்னோடியாக விளங்கியவர்களுள் ஜெர்மானிய வானவியல் ஆய்வாளர் ஃப்ரெட்ரிக் வில்ஹெல்ம் ஆர்கலான்டர் என்பவரும் ஒருவர். பல உதவியாளர்களின் துணையோடு, வடதிசை ஆகாயத்தில் காணப்படும் நட்சத்திரங்களின் பட்டியலை உருவாக்கும் மாபெரும் வேலையை ஆரம்பித்தார். தொலைநோக்கியின் உதவியால் சுமார் 3,25,000 நட்சத்திரங்களை அவர்கள் பார்த்தனர். அதோடு, ஒவ்வொரு நட்சத்திரத்தின் இருப்பிடத்தையும் அவற்றின் பிரகாசத்தையும் அளந்தனர். அவர்கள் பணிபுரிந்த வானிலை ஆய்வுக்கூடம் பான் எனும் ஜெர்மானிய நகரத்தில் இருந்தது. எனவே, அவர்கள் தயாரித்த பட்டியல் பான்னர் டுர்க்முஸ்டருங் (பான் ஒட்டுமொத்த சுற்றாய்வு) என அறியப்பட்டது. 1863-⁠ல் அது பிரசுரிக்கப்பட்டது. ஆர்கலான்டரின் மரணத்திற்கு பிறகு, அவருடைய உதவியாளர்களில் ஒருவர் அந்த வேலையை தொடர்ந்தார். தென்திசை ஆகாயத்தில் காணப்படும் நட்சத்திரங்களின் வரைபடத்தை தயாரித்தார். ஸுயட்லிக் பான்னர் டுர்க்முஸ்டருங் (தென்திசைக்குரிய பான் ஒட்டுமொத்த சுற்றாய்வு) என்ற பெயரில் வெளியிட்டார். 1930-⁠ல், இறுதி சுற்றாய்வு பிரசுரிக்கப்பட்டது. அர்ஜன்டினாவில் உள்ள கோர்டோபாவில் இது வெளியிடப்பட்டது. இன்றும் இந்தப் பட்டியல்கள் மதிப்பு வாய்ந்தவையாய் இருக்கின்றன.

இப்போதும் எதிர்காலத்திலும்

ஆர்கலான்டர் மற்றும் அவருடைய உதவியாளர்களின் பட்டியலைத் தொடர்ந்து மற்ற நல்ல பட்டியல்கள் பல தயாரிக்கப்பட்டன. எனினும், சமீப ஆண்டுகளில், விண்வெளி தொலைநோக்கிகளின் வருகைக்கு பிறகு, அதுவரை கேள்விப்பட்டிராத அரும்பெரும் சாதனைகள் வரைபடக் கலையில் படைக்கப்பட்டன. ஹபிள் விண்வெளி தொலைநோக்கியின் உதவியோடு, ஏறக்குறைய 1.5 கோடி நட்சத்திரங்களை உடைய ஒரு பட்டியலை இப்போது விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தொகுத்திருக்கின்றனர்!

ஐரோப்பிய விண்வெளி ஸ்தாபனம் இரண்டு புதிய பட்டியல்களை பிரசுரித்துள்ளது. விண்வெளி வரைபடக் கலையில் சமீபத்திய ஆண்டுகளில் படைக்கப்பட்ட சாதனை இது. ஹிப்பார்கஸ் செயற்கை கோளின் விண்வெளி தொலைநோக்கியின் உதவியால் கவனித்தவற்றின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டவையே இப்பட்டியல்கள். இவற்றின் துல்லியத்தன்மைக்கு ஈடு வேறேதுமில்லை. இந்தப் பட்டியல்களின் அடிப்படையில், புதிய நட்சத்திர அட்லஸ்கள் அச்சிடப்பட்டன. அதில் ஒன்று, மூன்று தொகுப்புகளையுடைய விரிவான ஓர் அட்லஸ். மில்லேனியம் ஸ்டார் அட்லஸ் என இது அழைக்கப்படுகிறது.

பைபிளில் சொல்லப்பட்டுள்ள மில்லேனியம் அல்லது கிறிஸ்துவின் சமாதான ஆயிரவருட ஆட்சியைத்தான் இந்தப் பெயர் பைபிள் வாசகர்களின் நினைவிற்கு கொண்டுவருகிறது. (வெளிப்படுத்துதல் 20:4) இன்றைய மிகப் பெரிய நட்சத்திர அட்லஸ்களும்கூட, பிரமிப்பூட்டும் இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு சிறுபகுதியையே படம்பிடித்துக் காட்டுகின்றன. ஆனால், கிறிஸ்துவின் ஆயிரவருட ஆட்சியின்போதோ, இப்பிரபஞ்சத்தைப் பற்றி இன்னும் நிறைய விஷயங்களை மனிதன் கற்றுக்கொள்வான். இதில் சற்றேனும் ஐயமில்லை.

[அடிக்குறிப்புகள்]

a பூமி தன் அச்சில் சுற்றுவதாலேயே நட்சத்திரங்கள் இப்படி நகருவதுபோல் தோன்றுகின்றன என்பதை பூர்வ மக்கள் அறியவில்லை. இச்சுழற்சியால்தான், சூரிய உதயமும் அஸ்தமனமும் நிகழ்கிறது.

b மெசபடோமியா, மத்திய தரைக்கடல் நாடுகள், ஐரோப்பா ஆகியவற்றில் இந்த 48 விண்மீன் குழுக்களை மக்கள் அறிந்திருந்தனர். பின்னர், வட அமெரிக்காவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் குடியேறியவர்களும் இவற்றை தெரிந்துகொண்டனர். ஆனால், சீனர்கள், வட அமெரிக்க இந்தியர்கள் போன்ற மற்ற மக்கள் இந்த விண்மீன் குழுக்களை வித்தியாசமான விதத்தில் பிரித்தனர்.

[பக்கம் 25-ன் படம்]

1540-⁠ல், தயாரிக்கப்பட்ட ஏபியன் நட்சத்திர விளக்கப்படம்

[படத்திற்கான நன்றி]

By permission of the British Library (Maps C.6.d.5.: Apian’s Star Chart)

[பக்கம் 26-ன் படம்]

19-⁠ம் நூற்றாண்டில் வரையப்பட்ட தென்திசை அரைக்கோளம்

[படத்திற்கான நன்றி]

1998 Visual Language

[பக்கம் 27-ன் படம்]

ஓரியனின் மத்திய பகுதி, நவீன நட்சத்திர விளக்கப்படத்தில் உள்ளபடி

[பக்கம் 27-ன் படத்திற்கான நன்றி]

பக்கம் 25-7-ன் பின்னணி: Courtesy of ROE/Anglo-Australian Observatory, photograph by David Malin