Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இதோ, வடிவமைப்பாளர்!

இதோ, வடிவமைப்பாளர்!

இதோ, வடிவமைப்பாளர்!

வடிவமைப்பாளர் அல்லது படைப்பாளர் இருக்கிறார் என்றே இயற்கை பறைசாற்றுகிறது என்பதை நியாயமாக சிந்திக்கும் எவரும் சொல்வர். இதை அநேக விஞ்ஞானிகளே ஒப்புக்கொள்கிறார்கள். வெகு காலத்திற்கு முன்பே அப்போஸ்தலன் பவுல் இப்படி எழுதினார்: கடவுளுடைய “கண்ணுக்குப் புலப்படா . . . பண்புகள்—அதாவது, என்றும் நிலைக்கும் அவரது வல்லமையும் கடவுள் தன்மையும்​—⁠உலகப் படைப்பு முதல் அவருடைய செயல்களில் மனக்கண்களுக்கு தெளிவாய்த் தெரிகின்றன.” (ரோமர் 1:20, பொது மொழிபெயர்ப்பு) ஆனால் இயற்கை, கடவுளையும் அவரது எண்ணங்களையும் முழுமையாய் வெளிப்படுத்துவதில்லை. உதாரணத்திற்கு வாழ்க்கையின் அர்த்தத்தை பற்றி அது நமக்கு சொல்வதில்லை. ஆகவேதான் படைப்பாளரே ஒரு புத்தகம் எழுதி, அதில் தம்மைப் பற்றி சொல்லியிருக்கிறார். இப்புத்தகமே பைபிள்.​—2 தீமோத்தேயு 3:⁠16.

பைபிள் ஓர் அறிவியல் புத்தகமல்ல. இருந்தாலும் இயற்கை பதிலளிக்காத எல்லா முக்கிய கேள்விகளுக்கும் பைபிள் பதிலளிக்கிறது. அருமையான படைப்பைப் பார்க்கும் எவரும் கேட்கும் முதல் கேள்வி, ‘இதை யார் செய்தது?’ என்பதே. இக்கேள்விக்கும் பைபிள் பதில் தருகிறது. “எங்கள் கடவுளாகிய யெகோவாவே, நீர் மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற தகுந்தவர். ஏனெனில் அனைத்தையும் படைத்தவர் நீரே. உமது சித்தத்தின்படியே அவை உண்டாயின, படைக்கப்பட்டன” என வெளிப்படுத்துதல் 4:11 (NW) சொல்கிறது. ஆக மகத்தான படைப்பாளரின் பெயர் யெகோவா. இப்பெயர் பைபிளின் மூல கையெழுத்துப் பிரதிகளில் கிட்டத்தட்ட 7,000 முறை வருகிறது.

நமது அறிவியல் யுகத்திற்கு சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் யோபு. இவர் ஒரு சிந்தனாவாதி, இயற்கையை கூர்ந்து கவனித்துவிட்டு இப்படிச் சொன்னார்: “நீ மிருகங்களைக் கேட்டுப்பார், அவைகள் உனக்குப் போதிக்கும். ஆகாயத்துப் பறவைகளைக் கேள், அவைகள் உனக்கு அறிவிக்கும். அல்லது பூமியை விசாரித்துக் கேள், அது உனக்கு உபதேசிக்கும்; சமுத்திரத்தின் மச்சங்களைக் கேள், அவைகள் உனக்கு விவரிக்கும்.” இவையெல்லாம் படைப்பைப் பற்றி எதை போதிக்கின்றன? கேள்வி பாணியில் பதிலளிக்கிறார் யோபு: “யெகோவாவின் கரம் இதைச் செய்தது என இவை எல்லாவற்றினாலும் அறியாதவன் யார்?”​—யோபு 12:7-9, NW.

மனிதருக்கான யெகோவாவின் நோக்கம்

மனிதருக்காக யெகோவா மனதில் வகுத்திருக்கும் எதிர்காலத்தைப் பற்றியும் பைபிள் சொல்கிறது. அது என்ன? இதே பூமி பூங்காவனம் போல் மாறி, நீதியுள்ள மனிதர்கள் அதில் என்றென்றும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதே அவரது எண்ணம். “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்” என சங்கீதம் 37:29 சொல்கிறது. அதேவிதமாய் இயேசுவும், “சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்” என்றார்.​—மத்தேயு 5:⁠5.

ஒருவித விசேஷ அறிவின் காரணமாக இப்பூமியில் சமாதானம் கொழிக்கும். ஏசாயா 11:9 (தி.மொ.) சொல்கிறது: “என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்கு செய்வாருமில்லை, சங்காரம் செய்வாருமில்லை; சமுத்திரத்திலே தண்ணீர் நிறைந்திருப்பதுபோல் பூமியிலே யெகோவாவை அறிகிற அறிவு நிறைந்திருக்கும்.” உண்மையில், ‘யெகோவாவை அறிகிற அறிவே’ முடிவற்ற வாழ்வுக்கும் சமாதானத்திற்கும் சந்தோஷத்திற்கும் வழிவகுக்கும். இதைத்தான் இயேசு இப்படிச் சொன்னார்: “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.”​—யோவான் 17:⁠3.

நித்திய ஜீவனைப் பெறும் மனிதர்கள், கடவுள் ஆரம்பத்தில் விரும்பிய விதத்தில் பூமியில் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். என்றென்றும் வாழ்வது சலிப்புத்தட்டிவிடும் என்று மாத்திரம் நினைத்துவிடாதீர்கள். புதுப் புது கண்டுபிடிப்புகள் மேலும் மேலும் ஆர்வத்தைக் கிளறும், நாளுக்கு நாள் மகிழ்ச்சியில் திளைப்போம்.

சுவாரஸ்யம் துள்ளும் வாழ்வு

பிரசங்கி 3:11 (தி.மொ.) சொல்கிறதாவது: “[கடவுள்] யாவற்றையும் அதினதின் காலத்திலே அழகாகக் செய்திருக்கிறார்; நித்தியகால நினைவையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்; என்றாலும் கடவுள் ஆதிமுதல் அந்தம்மட்டும் செய்துவரும் கிரியையை மனுஷன் கண்டுணரான்.” என்றென்றுமாக ‘நித்தியகாலம்’ வாழ வேண்டும் என்ற நம் இயல்பான ஆசை முழுமையாய் பூர்த்திசெய்யப்படும். அப்போது ‘கடவுள் ஆதிமுதல் அந்தம்மட்டும் செய்துவந்திருக்கிற கிரியையை கண்டுணர’ போதிய காலம் இருக்கும். பூமி என்ற வகுப்பறையில், யெகோவா ஆசிரியராக நமக்குக் கற்பிக்க, புத்தம் புது கண்டுபிடிப்புகளில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டே இருக்கும் வாழ்க்கை. கேட்கவே சுவாரஸ்யமாய் இல்லையா?

இதை மனக்கண்களால் பாருங்கள்: பூங்காவன சூழலில் பரிபூரண உடலுடனும் உள்ளத்துடனும் வாழ்கிறீர்கள். இன்று கனவிலும் சாதிக்க முடியாததை அன்று சாதிக்க முற்படுகிறீர்கள். நூறு வருடம் எடுத்தாலும் சரி ஆயிரம் வருடம் எடுத்தாலும் சரி எப்படியும் சாதித்துவிடலாம் என்பதும் உங்களுக்கு தெரியும். உங்களுக்கிருக்கும் பரிபூரண ஆற்றலையும் திறமையையும் பயன்படுத்தி யெகோவா உருவாக்கிய வடிவங்களைப் போலவே நீங்களும் உருவாக்குகிறீர்கள். ஆனால் இப்போது மனிதன் செய்வதைவிட பல மடங்கு சிறப்பாக, எவ்வித தீங்கோ தூய்மைக்கேடோ ஏற்படாதவாறு உருவாக்குகிறீர்கள். யெகோவாவைப் போலவே எல்லாவற்றையும் அன்பினால் செய்கிறீர்கள்.​—ஆதியாகமம் 1:27; 1 யோவான் 4:⁠8.

ஆசைதீர கற்பனை செய்து பார்ப்பதற்கு மட்டுமே இவற்றை சொல்லவில்லை. இவை உண்மையில் நிகழப்போகின்றன. இதை, யெகோவாவின் இருவித படைப்புகளை வைத்து உறுதியாக சொல்லலாம். ஒன்று, இலக்கிய படைப்பு​—⁠பைபிள். மற்றொன்று இயற்கை படைப்பு. நம் மகத்தான படைப்பாளரால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை என்பதற்கு பைபிளும் இயற்கையும் தெள்ளத்தெளிவான சான்றளிக்கின்றன. அப்படியென்றால் அவரையும் அவரது குமாரன் இயேசு கிறிஸ்துவையும் பற்றி ஏன் அதிகம் தெரிந்துகொள்ளக்கூடாது? இதைவிட ஆர்வத்தைத் தூண்டும், பயன்மிக்க, நம்பிக்கையளிக்கும் ஒன்று வேறேதும் இருக்க முடியாது.

[பக்கம் -ன் படங்கள்10]

பைபிளும் இயற்கையும் படைப்பாளரை பறைசாற்றுகின்றன