இன்டர்நெட் அபாயத்தை நான் எவ்வாறு தவிர்ப்பது?
இளைஞர் கேட்கின்றனர் . . .
இன்டர்நெட் அபாயத்தை நான் எவ்வாறு தவிர்ப்பது?
உலகத்திலேயே மிகப் பெரிய நூலகத்தில் நீங்கள் நின்றுகொண்டிருப்பதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். ஏறக்குறைய எல்லா துறைகளையும் பற்றிய, எல்லா வகையான புத்தகங்களும், செய்தித்தாள்களும், பட்டியல்களும், புகைப்படங்களும் உங்கள் முன் இருக்கின்றன. இப்போதைய சூடான தகவல்களானாலும் சரி, பழங்காலத்து இலக்கியங்களானாலும் சரி உங்கள் கை எட்டும் தூரத்தில்.
இன்டர்நெட்தான் அந்த நூலகம்; நீங்கள் கை அசைத்தால்போதும் கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லா தகவல்களையும் உங்கள்முன் கொண்டு வந்து வைத்துவிடும். ஒருவர் தன்னுடைய கம்ப்யூட்டர்முன் உட்கார்ந்துகொண்டே உலகத்தின் வேறு பகுதிகளில் இருக்கும் மற்ற கம்ப்யூட்டர்களுடனோ கம்ப்யூட்டரை பயன்படுத்துபவர்களுடனோ தகவல்களை பரிமாறிக்கொள்ள இது உதவி செய்கிறது. a பொருட்களை வாங்கவேண்டுமா? விற்கவேண்டுமா? பேங்கில் பணம் போட அல்லது எடுக்க வேண்டுமா? நண்பர்கள், உறவினர்களுடன் உடனடியாக உரையாட வேண்டுமா? லேட்டஸ்ட் மியூசிக் கேட்க வேண்டுமா? கவலையே வேண்டாம். இத்தனையும் உங்கள் வீட்டில் உட்கார்ந்த இடத்திலிருந்தே சாதிக்கலாம், இந்த இன்டர்நெட் வசதி மட்டும் உங்கள்வசம் இருந்தால்போதும்.
இந்த வருடம் முடிவதற்குள் 32 கோடி பேருக்கும் அதிகமானோர் இன்டர்நெட்டை பயன்படுத்துவார்கள் என சில வல்லுநர்கள் சொல்வதில் ஆச்சரியம் ஏதுமில்லை. இப்போது உலகத்தின் பல பகுதிகளில் இன்டர்நெட் உபயோகிப்பது சர்வ சாதாரணமாகிவருகிறது. பள்ளிகளும் நூலகங்களும் இந்த இன்டர்நெட்டின் புகழை உச்சத்தொனியில் பாடிவருவதால் இன்று கோடிக்கணக்கான இளைஞர்கள் அதை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். ஐக்கிய மாகாணங்களில், 12-லிருந்து 19 வயது வரையுள்ள இளைஞர்களில் சுமார் 65 சதவீதத்தினர் இதைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர் அல்லது இதற்காக சந்தா செய்தும் உள்ளனர்.
இன்டர்நெட்டை சரியாக பயன்படுத்தினால், அது வானிலை, பயணம் மற்றும் இதர நல்ல விஷயங்களை அள்ளிவழங்கும் ஓர் நூலகமாக இருக்கும். அதன் உதவியுடன் நீங்கள் புத்தகங்களை, காரின் உதிரிபாகங்களை அல்லது மற்ற பொருட்களைக்கூட வாங்க முடியும். அநேகர் அதை பள்ளி படிப்பிற்காகவும் பயன்படுத்துகின்றனர்.
இன்டர்நெட் ஒருபக்கம் அநேக நன்மைகளை கொண்டுவந்தாலும், மறுபக்கம் அது கண்காணிப்பாளரோ அல்லது மற்ற எந்த பார்வையாளரோ இல்லாத நூலகம் போன்றது. தன்னைச் சுற்றி யாருமே இல்லை என்ற தப்பான எண்ணத்தில் ஒருவர் அதில் நுழையலாம். ஆனால் இன்டர்நெட்டை பயன்படுத்துவதில் மறைந்திருக்கும் பயங்கரமான ஆபத்துகளுள் இதுவும் ஒன்று. ஏன்? ஏனென்றால், அநேக வெப்ஸைட்டுகளில் ஒழுக்கங்கெட்ட விஷயங்களும் ஆவிக்குரிய தன்மையை சீரழிக்கும் விஷயங்களுமே காணப்படுகின்றன. இதனால் இந்த இன்டர்நெட் கிறிஸ்தவ இளைஞர்களை சோதனைகளில் சிக்கிக்கொள்ள வழிநடத்தும். இயல்பாகவே மனிதர்கள் துருவித்துருவிப் பார்க்கும் எண்ணமுடையவர்கள். எனவே இந்த குணத்தை சாத்தான் வெகுகாலமாக தவறாக பயன்படுத்திவருகிறான். முதலில் சாத்தான் ஏவாளிடமிருந்த இந்த குணத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி ‘தன்னுடைய தந்திரத்தினாலே அவளை வஞ்சித்தான்.’—2 கொரிந்தியர் 11:3.
அதேபோல, ஒரு இளைஞர் தன்னுடைய ஆவிக்குரிய தன்மையை காத்துக்கொள்ள தீர்மானமாய் இல்லையென்றால், அவர் தவறான விஷயங்களால் எளிதில் வஞ்சிக்கப்படக்கூடும் அல்லது ஏமாற்றப்படக்கூடும். சிறந்த வீடுகளும் தோட்டங்களும் என்ற பத்திரிகையில் வந்த ஒரு கட்டுரை பின்வருமாறு விளக்கியது: “இன்டர்நெட் என்பது பல்வேறு விதமான விஷயங்களை வியாபாரம் செய்யும் அநேக வியாபாரிகளுள்ள ஒரு பிஸியான சந்தையைப் போன்றது. ஆனால், குழந்தை துஷ்பிரயோகம் செய்யும்
காமக்கொடூரர்கள், மோசடிக்காரர்கள், குருட்டுப் பிடிவாதமுடையவர்கள் மற்றும் வேறு மோசமான ஆட்களும்கூட சில வெப்ஸைட்டுகளை நடத்திவருகிறார்கள்.”ஹாவியார் b என்ற ஒரு இளைஞன் சொல்கிறான்: “சில வெப்ஸைட்ஸ் ரொம்ப மோசம். அது திடீர்னு நம்ம கம்ப்யூட்டர்ல வந்துடும்.” தொடர்ந்து சொல்கிறான்: “உங்கள ஏமாத்தி அதுல இழுக்கறதுக்கு அது முயற்சி செய்யுது. அதுல உங்க ஆர்வத்த தூண்டி, சிக்கவெச்சி உங்களோட பணத்த பறிக்க பாக்குது.” ஜான் என்ற ஒரு இளம் கிறிஸ்தவர் இவ்வாறு ஒத்துக்கொள்கிறார்: “தவறான விஷயத்த நீங்க பாக்க ஆரம்பிச்சிட்டீங்கன்னா, அத நிறுத்துறது ரொம்ப கஷ்டம்—அதுக்கு நீங்க அடிமையாயிடுவீங்க.” இந்த வலையில் சிக்கிக்கொண்ட சில இளம் கிறிஸ்தவர்கள் அப்படிப்பட்ட தவறான வெப்ஸைட்டுகளை அடிக்கடி சந்தித்திருக்கின்றனர், அதன் விளைவாக அவர்கள் மிக மோசமான பிரச்சினைகளில் மாட்டிக்கொண்டனர். இது யெகோவாவுடன் அவர்கள் கொண்டிருந்த உறவை பாதிக்கும் அளவிற்கு சிலரை வழிநடத்தியிருக்கிறது. இதை எவ்வாறு தவிர்ப்பது?
“பிரயோஜனமற்றவைகளைக் குறித்து ஜாக்கிரதை”
சில சமயம் அதில் தவிர்க்கப்பட வேண்டியவை இருக்கிறது என்பதை அந்த வெப்ஸைட்டின் விலாசமே தெளிவாக சுட்டிக்காட்டும். c “விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்; பேதைகள் நெடுகப் போய் தண்டிக்கப்படுகிறார்கள்.” என்று எச்சரிக்கிறது நீதிமொழிகள் 22:3.
இருப்பினும் பெரும்பாலும் பிரச்சினை என்னவென்றால் அநேகர் அவ்வாறு தவிர்க்கப்பட வேண்டிய ஸைட்டுகளில் அசம்பாவிதமாக நுழைந்துவிடுகின்றனர். சிலவற்றின் ஹோம் பேஜில் சில தெளிவற்ற படங்கள் காணப்படும். d இவை அந்த ஸைட்டில் நீங்கள் மீண்டும் மீண்டும் நுழைந்து அதை ஆராய உங்கள் ஆர்வத்தை தூண்டும் விதத்தில் கவனமாக வடிவமைக்கப்பட்டவை.
கெவின் தன்னுடைய நண்பனுக்கு என்ன ஆனது என்பதை விவரிக்கிறார்: “செய்றதுக்கு வேலவெட்டி எதுவுமில்லாம வெட்டியா கம்ப்யூட்டர் முன்னாடியே உட்காந்திருப்பான். எல்லாத்தையும் ஆராஞ்சி பாக்குறதுல அவனுக்கு ரொம்ப ஆர்வம். பிறகு ஆபாசமான விஷயங்கள் இருக்குற ஸைட்டுகளை அடிக்கடி விசிட்பண்ண ஆரம்பிச்சான், அதுவே பழக்கமா ஆயிடுச்சி.” ஆனால் ஒருவழியாக இந்த கிறிஸ்தவ இளைஞர் ஒரு மூப்பரை நாடினார், உதவி பெற்றார்.
ஒருவேளை அப்படிப்பட்ட ஸைட்டுகளுக்குள் நீங்கள் தெரியாத்தனமாக நுழைந்துவிட்டால் என்ன செய்வது என்று தீர்மானித்துவிட்டீர்களா? ஒரு கிறிஸ்தவன் என்ன செய்யவேண்டும் என்பது தெளிவாக இருக்கிறது: அந்த ஸைட்டைவிட்டு உடனடியாக வெளியே வரவேண்டும்—அல்லது இன்டர்நெட் பிரௌஸரை உடனடியாக நிறுத்திவிடவேண்டும்! சங்கீதக்காரன் ஜெபம் செய்ததுபோன்று இருங்கள்: “மாயையைப் பாராதபடி நீர் என் கண்களை விலக்கி”யருளும். (சங்கீதம் 119:37; ஒப்பிடுக யோபு 31:1.) ஒருவேளை நாம் மற்ற மனிதர்களால் கவனிக்கப்படாதபோதிலும், எவருமே நம்மை கவனிக்கவில்லை என அர்த்தமாகாது என்பதை நாம் எப்போதும் ஞாபகத்தில் கொள்ள வேண்டும். “சகலமும் அவருடைய கண்களுக்குமுன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்,” என பைபிள் நமக்கு நினைப்பூட்டுகிறது.—எபிரெயர் 4:13.
உங்கள் பெற்றோருடனோ அல்லது மற்ற முதிர்ச்சிவாய்ந்த சகோதரர்களுடனோ இதுபற்றி பேசுவது தவிர்க்கப்படவேண்டிய ஸைட்டுகளில் மீண்டும் நுழையக்கூடாது என்ற உங்கள் தீர்மானத்தை மேலும் உறுதிப்படுத்தும். நீங்கள் ஒரு புதை மணலில் விழுந்துவிட்டீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள், கழுத்துவரை நீங்கள் மூழ்கும்வரை யாருடைய உதவியையும் கேட்காமல் நீங்களே போராடிக்கொண்டிருப்பீர்களா?
ஆன்லைன் உறவைப் பற்றி என்ன?
இன்டர்நெட்டில் ‘உரையாடல்’ என்றொரு அம்சம் இருக்கிறது. உலகம் முழுவதிலும் இருக்கும் அனைத்து இன்டர்நெட் யூசர்களும் ஒருவரோடு ஒருவர் தொடர்புகொண்டு உடனுக்குடன் உரையாட இது உதவி செய்கிறது. வாணிகம் இதை ஆன்லைன் உரையாடலுக்காகவும் வாடிக்கையாளருக்கு உதவி அளிக்கவும் பயன்படுத்துகிறது. சில உரையாடல் அறைகள், வாகன பராமரிப்பு அல்லது கம்ப்யூட்டர் புரோக்ராமிங் போன்ற தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட விஷயங்களை யூசர்கள் பகிர்ந்துகொள்ள உதவி செய்கிறது. சில சமயம் வெகுதூரத்திலுள்ள நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசி அதிக பணத்தை வீணாக்காமல் இருக்க இந்த உரையாடல் உதவி செய்கிறது. இதை பயன்படுத்துபவர்களுக்கு அநேக நன்மைகளை கொண்டுவருவது என்னவோ உண்மைதான், இதனால் ஆபத்துகள் ஏதேனும் இருக்கிறதா என்ன?
பொது உரையாடல் அறையைப் பொறுத்தமட்டில் நாம் அதிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனென்றால் இவை சில ஆபத்துகளில் விளைவடையக்கூடும். லேயா ரூஸென் என்ற எழுத்தாளர் இவ்வாறு சொன்னார்: “இந்த தொழில் நுட்பத்தைப் பற்றி தெரிந்திருக்கும் பருவ வயதினர், அந்த நாட்டின், அல்லது உலகத்தின் வேறொரு பாகத்தில் வாழும் ஊர் பேர் தெரியாத புதியவர்களுடன் மணிக்கணக்காக
அரட்டை அடிக்கின்றனர். ஆனால் அவர்கள் யாருடன் பேசிக்கொண்டிருக்கிறார்களோ அவர் ஒருவேளை சிறுபிள்ளைகளுடன் பாலுறவில் ஈடுபட அலைந்துகொண்டிருக்கும் ஆசாமியாக சில சமயம் இருக்கின்றனர்.” ஆகவே உரையாடல் அறையை பயன்படுத்தும்போது “மிக மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்” என்று பாப்புலர் மெகானிக்ஸ்-ல் வந்த ஒரு கட்டுரை எச்சரித்தது. முன்பின் தெரியாத ஒரு புதியவருக்கு உங்கள் பெயரையும் விலாசத்தையும் கொடுப்பது, பூதாகரமான பிரச்சினைகளை நீங்களே விலைகொடுத்து வாங்குவதுபோல்! ஏன் அப்படிப்பட்ட ஆபத்திற்குள் நீங்கள் மாட்டிக்கொள்கிறீர்கள்?பைபிள் தராதரங்களை மதிக்காத புதிய ஆட்களுடன் தவறான கூட்டுறவை கொண்டிருப்பதிலும் அநேக அபாயங்கள் மறைந்திருக்கின்றன. e உரையாடல் அறையில் அரட்டை அடிக்கும் பெரும்பாலான பருவ வயதினர், பேசுவதெல்லாம் பாலியல் சம்பந்தப்பட்ட விஷயங்களைக் குறித்தே என்று ஆராய்ச்சிகள் காண்பிக்கின்றன. ஆகவே 1 கொரிந்தியர் 15:33-ல் காணப்படும் ஆலோசனை பொருத்தமானதே: “மோசம்போகாதிருங்கள்; ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்.” கம்ப்யூட்டர் மூலமாக தவறான சகவாசத்தை கொண்டிருப்பது ஆபத்தானதே. கடவுள் பயமுள்ள ஒரு இளைஞனோ அல்லது இளம் பெண்ணோ கண்மூடித்தனமாக இப்படிப்பட்ட ஆபத்தில் மாட்டிக்கொள்ள வேண்டுமா?
பாதுகாப்பு நடவடிக்கைகள்
இன்டர்நெட்டில் இவ்வாறு அநேக ஆபத்துகள் இருப்பதால், அதை ஜாக்கிரதையாக பயன்படுத்த வேண்டும். உதாரணமாக சில வீடுகளில் தங்கள் கம்ப்யூட்டரை பொது ஹாலைப் போன்ற எப்போதும் ஆள்நடமாட்டமுள்ள இடத்தில் வைத்திருக்கின்றனர். அத்துடன் வீட்டில் மற்றவர்கள் இருந்தால்மட்டுமே இன்டர்நெட்டை பயன்படுத்தவேண்டும் என்ற சட்டதிட்டத்தையும் வகுக்கலாம். உங்கள் பெற்றோர் அப்படிப்பட்ட சட்டதிட்டத்தை வகுத்தால், அவர்களுடன் ஒத்துழையுங்கள். (நீதிமொழிகள் 1:8) தெளிவான சட்டதிட்டங்கள் அல்லது வழிமுறைகள் அன்பின் ஓர் வெளிக்காட்டு.
உங்கள் பள்ளிப்பாடம் விஷயமாக நீங்கள் இன்டர்நெட்டை பயன்படுத்த வேண்டியிருந்தால், அதில் செலவழிக்கும் நேரத்தை குறித்து நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். எவ்வளவு நேரம் நீங்கள் அதை பயன்படுத்தப்போகிறீர்கள் என்பதை முன்னதாகவே திட்டமிட முயற்சியுங்கள். அந்த குறிப்பிட்ட நேரமானவுடன் உங்களை நினைப்பூட்ட, ஏன் நீங்கள் ஒரு அலாரத்தை பக்கத்தில் வைத்துக்கொள்ளக்கூடாது! டாம் சொல்கிறார்: “முன்னதாகவே திட்டமிடுங்கள், நீங்கள் எதைக்குறித்து பார்க்கப்போகிறீர்கள் என்று சரியாக தெரிந்துகொள்ளுங்கள், மற்ற விஷயங்கள் எவ்வளவு சுவாரஸ்யமாக இருந்தாலும் சரி—உங்களுக்கு தேவையானதை மட்டுமே பாருங்கள்.”
ஈ-மெயிலை பயன்படுத்தும் விஷயத்திலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஆனால் வதவதவென குவிந்துகிடக்கும் அந்த ஈ-மெயில்களை அதிலும் குறிப்பாக தேவையில்லாத பொய்யான தகவல்களையுடைய ஈ-மெயில்கள் எல்லாவற்றையும் வாசிப்பதில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க கிறிஸ்தவ இளைஞர்கள் கவனமாக இருக்கின்றனர். ஈ-மெயிலை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் அது பள்ளிப்பாடம் மற்றும் ஆவிக்குரிய நடவடிக்கைகளுக்கு தேவைப்படும் உங்கள் பொன்னான நேரத்தையெல்லாம் விழுங்கி ஏப்பம் விட்டுவிடும். “அநேகம் புஸ்தகங்களை உண்டுபண்ணுகிறதற்கு முடிவில்லை; அதிக படிப்பு உடலுக்கு இளைப்பு” என்றார் அரசனாகிய சாலெமோன். (பிரசங்கி 12:12) அந்த வார்த்தைகள் சரியாகவே இன்டர்நெட்டுக்கும் பொருந்தும். உண்மைகளையும் புள்ளிவிவரங்களையும் பற்றி சற்று தேடிப்பார்ப்பதில் தவறேதுமில்லை, ஆனால் உங்கள் தனிப்பட்ட பைபிள் படிப்பு மற்றும் கிறிஸ்தவ ஊழியத்தை அலட்சியம் செய்யும் அளவிற்கு அதில் மூழ்கிவிடாதீர்கள். (மத்தேயு 24:14; யோவான் 17:3; எபேசியர் 5:15, 16) கம்ப்யூட்டர் மூலமாக ஒருவருடன் தொடர்புகொள்வது ஒருபக்கம் இருந்தபோதிலும், உடன் கிறிஸ்தவரை நேரடியாக சந்தித்து பேசுவதற்கு வேறெதுவும் ஈடாகாது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். ஆக நீங்கள் உண்மையில் இன்டர்நெட்டை பயன்படுத்த வேண்டியிருந்தால், அதை ஞானமாக பயன்படுத்துவேன் என்று உறுதியாக தீர்மானித்துக்கொள்ளுங்கள். தவிர்க்க வேண்டிய வெப்ஸைட்டுகளுக்கு ஒரு கும்பிடு போட்டுவிடுங்கள், ஆன்லைனில் அதிக நேரத்தை செலவழிக்காதீர்கள். உங்கள் “இருதயத்தைக் காத்துக்கொள்”ளுங்கள், ஒருபோதும் இன்டர்நெட்டிற்கு அடிமையாகிவிடாதீர்கள்.—நீதிமொழிகள் 4:23.
[அடிக்குறிப்புகள்]
a விழித்தெழு! ஜூலை 22, 1997-ல் காணப்படும் “இன்டர்நெட்—உங்களுக்கு தேவையா?” என்ற தொடர்கட்டுரையை பார்க்கவும்
b சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
c வெப்ஸைட் விலாசம் என்பது வெப்ஸைட்டை பயன்படுத்துவதற்குரிய சில கோர்வையான எழுத்துகள். சில சமயம் அந்த விலாசங்கள் அதன் நோக்கத்தை அல்லது அதில் அடங்கியுள்ளதை வெளிப்படுத்தும்.
d ஹோம் பேஜ் என்பது ஒரு மின்னணு சேமிப்பு விண்டோ போன்றது. அந்த ஸைட்டில் என்ன இருக்கிறது, யார் உருவாக்கியது போன்ற மற்ற விஷயங்களை அது விளக்கும்.
e ஆவிக்குரிய விஷயங்களைக் குறித்து உரையாடும் நோக்கத்துடன் நல்லெண்ணமுடைய கிறிஸ்தவர்களால் நிறுவப்படும் பொது உரையாடல் அறைகளிலும் இந்த ஆபத்துகள் இருக்கக்கூடும். சில சமயம் நேர்மையற்றவர்களும் விசுவாச துரோகிகளும்கூட இந்த உரையாடலில் கலந்துகொண்டு அவர்களுடைய வேதபூர்வமற்ற கருத்துகளை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள அல்லது நம்பவைக்க முயற்சித்திருக்கின்றனர்.
[பக்கம் 20-ன் சிறு குறிப்பு]
“சில வெப்ஸைட்ஸ் ரொம்ப மோசம். அது திடீர்னு நம்ம கம்ப்யூட்டர்ல வந்துடும்”
[பக்கம் 21-ன் படம்]
சில வீடுகளில் தங்கள் கம்ப்யூட்டரை ஆள்நடமாட்டமுள்ள இடத்தில் வைத்திருக்கின்றனர்