Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இயற்கையை காப்பியடித்து

இயற்கையை காப்பியடித்து

இயற்கையை காப்பியடித்து

தத்தித்தத்திச் செல்லும் குழந்தைகள் தடுமாறி விழுந்து மண்டையை இடித்துக்கொள்கின்றன. மரங்களில் ஏறி சேஷ்டை செய்யும் வாண்டுகள் தொப்பென்று கீழே விழுகின்றனர், சைக்கிளிலிருந்தும் குப்புறடித்து விழுகின்றனர். அங்கும் இங்கும் ஓடி விளையாடும் வீரர்கள் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொள்கின்றனர். வாகனங்களில் செல்வோரும் பலமுறை விபத்துக்களில் சிக்கிக்கொள்கின்றனர். ஆனால் ஆச்சரியம் என்ன தெரியுமா? இப்படி விழுந்தாலும் இடித்துக்கொண்டாலும் மோதிக்கொண்டாலும் நாம் பெரும்பாலும் பலத்த காயமின்றி தப்பித்துக்கொள்கிறோம். அப்படியென்றால் நம் உடலுக்கு எவ்வளவு பலம் இருக்க வேண்டும்! அதுமட்டுமல்ல, அது தன்னைத்தானே குணமாக்கியும் கொள்கிறது. உடலின் இந்தத் திறன்களை நாம் சிலசமயம் ஒரு பொருட்டாகவே நினைத்துப் பார்ப்பதில்லை. ஆனால் நம் உடலின் ஒவ்வொரு உறுப்பும், எலும்பானாலும் சரி தோலானாலும் சரி மிக அருமையாய் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இது விஞ்ஞானிகளுக்கு இப்போது அதிகமதிகமாய் புலனாகி வருகிறது.

இலேசான ஒரு பொருளுக்கு மகா பலம் இருப்பது என்னே ஆச்சரியமான கலவை! இருப்பினும் இப்படிப்பட்ட பொருட்கள் இயற்கையில் மலிந்துகிடக்கின்றன. இளஞ்செடிகள் கான்க்ரீட் அல்லது பாறையைக்கூட சர்வ சாதாரணமாக ஊடுருவிச் செல்வதைப் பார்த்திருப்பீர்கள். அது செழுமையாய் வளரவளர பிளவுகள் இன்னும் வாயைப் பிளக்கின்றன. மரங்களை எடுத்துக்கொள்ளுங்கள். மின்சார கம்பங்களையும் வீடுகளையும் அப்பளமாக நொறுங்கச்செய்யும் காற்றுகளுக்கே இவை மசிவதில்லை. சின்னஞ்சிறிய மரங்கொத்திப் பறவைகளும் சளைத்தவை அல்ல. அவை மரங்களை குத்தும் வேகமிருக்கிறதே, சாதாரண மூளையாக இருந்தால் அதிர்வில் கூழாகியேவிடும். முதலைகளின் தோலைப் பார்த்திருக்கிறீர்களா? ஈட்டிகளும் அம்புகளும் குண்டுகளும்கூட இதனிடம் தோற்றுப்போகின்றன. (யோபு 41:1, 26-ஐ ஒப்பிடுக.) ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் மனிதன் இவற்றைக் கண்டு மலைத்துப் போயிருக்கிறான், இவற்றை விளக்க முடியாது திணறிப்போயிருக்கிறான்.

கடந்த 40 வருடங்களாக தொழில்நுட்பத்தில் அநேக புரட்சிகள் ஏற்பட்டுள்ளன. இதன் பயனாக திறம்பட்ட புதிய கருவிகள் விஞ்ஞானிகளுக்கு கிடைத்திடவே, உயிரினங்களின் அருமையான வடிவமைப்பிற்கு பின்னிருக்கும் ரகசியத்தை எளிதாக கண்டறிய முடிந்திருக்கிறது. பெரும்பாலும் இந்த ரகசியம், உயிரணுவை ஆழமாய் ஆராய்வதால் வெளிப்படுகிறது. அப்படி ஆராய்கையில், உயிர் மிக மிக சிக்கலாய் வடிவமைக்கப்பட்டிருப்பதைக் கண்டு ஸ்தம்பித்துப்போகிறோம். ஆனாலும் அறிவியலின் குறிக்கோள், இயற்கை அற்புதங்களின் ரகசியத்தைக் கண்டறிவது மட்டுமல்ல, அவற்றின் சாயலில் செயற்கை அற்புதங்களை உருவாக்குவதும்தான். அச்சு அசல் அப்படியே இல்லாவிட்டாலும் ஓரளவாவது அதன் சாயலில் உருவாக்க முயல்வதே அதன் குறிக்கோள். இந்த ஆராய்ச்சி பெருமளவு வெற்றிபெறுமென எதிர்பார்க்கப்படுவதால், பையோமிமெடிக்ஸ் (கிரேக்கில், பையாஸ் + மிமெஸிஸ்) என்ற புதிய அறிவியல் துறையாகவே மலர்ந்திருக்கிறது. பையாஸ் என்பதன் அர்த்தம் “உயிர்,” மிமெஸிஸ் என்றால் “காப்பியடித்தல்.”

உலகை உயர்த்த உறுதி

“பையோமிமெடிக்ஸ் என்பது உயிரிகளின் வடிவமைப்புகளையும் அவற்றின் பணிகளையும் பற்றிய ஆராய்ச்சி” என விளக்குகிறது, பையோமிமெடிக்ஸ்: வடிவமைப்பும் பொருட்களின் உற்பத்தியும் என்ற ஆங்கில புத்தகம். ‘உயிரினங்களை ஆராய்கையில் புதுப் புது ஐடியாக்கள் உதிக்கும். ஐடியாக்களுக்கு “உரு” கொடுத்து, இயற்கையைப் போலவே செயற்கையாக உருவாக்க வேண்டும்’ என்பதே இந்த ஆராய்ச்சியின் குறிக்கோள் என்றும் அப்புத்தகம் சொல்கிறது.

“பையோமிமெடிக்ஸ், மூலக்கூறு அறிவியலையே விழுங்கிவிட்டு, 21-⁠ம் நூற்றாண்டின் மிக முக்கிய, சவால்மிக்க உயிரியலாக அதன் இடத்தை எடுத்துக்கொள்ளும்” என ஸ்டீவன் வெயின்ரைட் என்ற விஞ்ஞானி சொல்கிறார். “இரும்பு யுகத்திற்கும் தொழில் புரட்சிக்கும் சமமான பொருள் புரட்சியின் வாயிலில் நாம் இருக்கிறோம். திடீரென பொருட்களின் ஒரு புதிய சகாப்தத்திற்குள் காலடி வைக்கப்போகிறோம். அடுத்த நூற்றாண்டிற்குள், பையோமிமெடிக்ஸ் குறிப்பிடத்தக்க விதத்தில் நம் வாழ்க்கையை மாற்றும்” என சொல்கிறார் மெமெட் சரிகாயா என்ற பேராசிரியர்.

சொல்லப்போனால் இப்போதே அது நம் உலகை மாற்ற ஆரம்பித்துவிட்டது. இதை சிந்திப்பதற்கு முன், விஞ்ஞானிகள் மும்முரமாக ஆராய்ந்துவந்தாலும் இன்னும் புரியாப் புதிராகவே இருக்கும் சில அற்புதங்களை சற்று சுருக்கமாக கவனிக்கலாம். “வடிவமைப்பு” என்ற வார்த்தையின் ஆழமான அர்த்தத்தையும், அதற்கும் இந்த அதிசய உலகிற்கும் உள்ள சம்பந்தத்தையும் பார்க்கலாம்.