Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இயற்கையை பார்த்து பாடம் பயில்தல்

இயற்கையை பார்த்து பாடம் பயில்தல்

இயற்கையை பார்த்து பாடம் பயில்தல்

“நமது தலைசிறந்த கண்டுபிடிப்புகள் உண்மையில் இயற்கையைப் பார்த்து உருவாக்கப்பட்டவையே.”—ஃபில் கேட்ஸ், வைல்ட் டெக்னாலஜி.

இயற்கையைப் பார்த்துப் பின்பற்றி, அதிக சிக்கல்வாய்ந்த பொருட்களையும் இயந்திரங்களையும் தயாரிக்க முயல்கிறது பையோமிமெடிக்ஸ் அறிவியல். இதைத்தான் முந்தைய கட்டுரையில் சிந்தித்தோம். இயற்கையோ எவ்வித தூய்மைக்கேடும் உண்டாக்காமல், தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும் தன்மையுடைய, எடை குறைந்த பொருட்களை உற்பத்தி செய்கிறது. அதேசமயம் இப்பொருட்கள் பலமோ பலம் படைத்தவை!

உதாரணத்திற்கு, ஸ்டீலைவிட எலும்பு பலமானது. அந்த பலத்தின் இரகசியம் என்ன? அதன் அருமையான வடிவமைப்பு என்று சொல்லலாம். ஆனால் இதைவிட முக்கியமான காரணங்களும் இருக்கின்றன. இன்னும் நுட்பமாய் ஆராய்கையில், அதாவது மூலக்கூறுகளை ஆராய்கையில் இவை தெரியவருகின்றன. “உயிரினங்கள் அற்புதமாய் செயல்படுவதற்குக் காரணம், அவற்றின் மிகச் சிறிய கூறுகளின் வடிவமும் ஒருங்கமைப்புமே” என கேட்ஸ் விளக்குகிறார். இந்த மிகச் சிறிய கூறுகளை விஞ்ஞானிகள் ஆராய்ந்ததில், எலும்பிலிருந்து பட்டு இழை வரை அனைத்து இயற்கை பொருட்களும் எடை குறைந்து பலம் நிறைந்து அதிசயிக்க வைப்பதற்கு எது காரணம் என்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள். காரணம், அவற்றிலுள்ள பல்வேறு இயற்கைக் கூட்டுப் பொருட்களே.

அதிசய கூட்டுப் பொருட்கள்

இரண்டு அல்லது இன்னும் அதிகமான பொருட்களைக் கலப்பதால் உருவாகும் புதிய பொருளே கூட்டுப் பொருள். இது மூலப்பொருட்களைவிட சிறந்த பண்புகளைப் பெற்றது. இதற்கு உதாரணமாக கண்ணாடி இழையை (fibreglass) சொல்லலாம் a இந்த வேதியியல் கூட்டுப்பொருள் படகு, தூண்டில், வில், அம்பு, விளையாட்டு சாதனம் போன்றவற்றிற்கு பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. கண்ணாடியை சன்னமான இழைகளாக்கி ஒரு திரவத்தில் அல்லது ஜெல்லிபோன்ற ப்ளாஸ்டிக்கில் (பாலிமர் [polymer] என அழைக்கப்படுகிறது) செட் செய்து உருவாக்கப்படுவதே கண்ணாடி இழை. பாலிமர் கெட்டியானவுடன் அல்லது செட் ஆனவுடன் கிடைக்கும் கூட்டுப்பொருள் கனமில்லாமல் அதேசமயம் உறுதியாகவும் நெகிழும் தன்மையோடும் இருக்கும். பாலிமருக்கு பதிலாக வேறு பொருட்களை வெவ்வேறு இழைகளோடு சேர்த்து ஏராள ஏராளமான பொருட்களை தயாரிக்கலாம். ஆனாலும் மனிதன் உண்டாக்கும் கூட்டுப்பொருட்கள், மனிதர்களிலும் மிருகங்களிலும் தாவரங்களிலும் காணப்படும் இயற்கை கூட்டுப்பொருட்களுக்குப் பக்கத்தில் தரம் குறைந்தே இருக்கின்றன.

மனிதர்களிலும் மிருகங்களிலும் கண்ணாடி இழைகள் அல்லது கார்பன் இழைகளுக்குப் பதிலாக கொலாஜன் என்ற புரோட்டீன் இழைகள் உள்ளன. இவற்றால் ஆன கூட்டுப்பொருட்களே சருமம், குடல், குருத்தெலும்பு, நாண், எலும்பு, பல் (எனாமல் தவிர்த்து) போன்றவற்றிற்கு பலம் சேர்க்கின்றன b கொலாஜன் சேர்ந்த கூட்டுப்பொருட்கள் “இதுவரை அறியப்பட்டுள்ள மற்ற எந்த கூட்டுப் பொருளையும்விட மிக உயர்தரமானவை” என ஒரு புத்தகம் சொல்கிறது.

எலும்பை தசையோடு இணைக்கும் நாண்களை (tendons) உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளுங்கள். இவற்றின் சிறப்பிற்கு காரணம், இவற்றிலுள்ள கொலாஜன்-சார்ந்த நார்களின் உறுதி மட்டுமல்ல இந்த நார்கள் ஒன்றோடொன்று மிக அருமையாய் பின்னப்பட்டிருக்கும் விதமும்தான். பையோமிமிக்ரி என்ற புத்தகத்தில் ஜனின் பின்யஸ் இப்படிச் சொல்கிறார்: நாண்களின் நார்களை பிரித்தெடுத்துப் பார்த்தால் அதன் “துல்லியம் மலைக்கவைக்கிறது. உங்கள் முழங்கையிலுள்ள நாணில், ஒரு கொத்து கேபிள்கள் ஒன்றாக முறுக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் கேபிள்கள் தொங்கு பாலத்தில் இருப்பதைப் போன்றவை. ஒவ்வொரு கேபிளையும் எடுத்துக்கொண்டால், அது இன்னும் சன்னமான கேபிள்களால் முறுக்கப்பட்டிருக்கிறது. இந்த சன்னமான கேபிள்கள் ஒவ்வொன்றும் மூலக்கூறுகளால் முறுக்கப்பட்டிருக்கிறது, மூலக்கூறுகள் ஒவ்வொன்றும் அணுக்களால் முறுக்கப்பட்டிருக்கிறது. இப்படி இம்மியும் பிசகாத துல்லியம் மீண்டும் மீண்டும் அழகு காட்டுகிறது.” இதை “திறமையான கட்டுமானம்” என்றும் அழைக்கிறார் ஜனின். இயற்கை வடிவமைப்புகள் தங்கள் சிந்தையைத் தூண்டுவதாய் விஞ்ஞானிகள் சொல்வது ஆச்சரியமல்லவே!​—யோபு 40:15, 17-ஐ ஒப்பிடுக.

முன்னர் சொன்னபடி, மனிதன் உண்டாக்கும் கூட்டுப்பொருட்கள் இயற்கை கூட்டுப்பொருட்களின் பக்கத்தில் தரம் குறைந்தே இருக்கின்றன. இருந்தாலும் இவை மெச்சத்தக்கவையே. சொல்லப்போனால், கடந்த 25 ஆண்டுகளில் நிகழ்ந்த தலைசிறந்த பத்து பொறியியல் சாதனைகளில் இவை குறிப்பிடப்படுகின்றன. உதாரணத்திற்கு கிராஃபைட் அல்லது கார்பன் நார்கள் கொண்ட கூட்டுப்பொருட்களை எடுத்துக்கொள்ளலாம். இன்னும் தரம்வாய்ந்த விமான பாகங்கள், விண்வெளி கலங்களின் பாகங்கள், விளையாட்டு சாதனங்கள், ரேஸ் கார்கள், பந்தயப் படகுகள், குறைந்த எடையுள்ள செயற்கை கைகால்கள் போன்றவற்றின் உற்பத்திக்கு இவை வழிவகுத்திருக்கின்றன. இந்தப் பட்டியல் நாளுக்கு நாள் வேகமாக நீண்டுகொண்டே போகிறது.

பல்வகை பணிபுரியும் அற்புத கொழுப்பு

திமிங்கிலங்களும் டால்பின்களும் இதை அறியா. இருந்தாலும் இவற்றின் உடலிலேதான் இந்த அற்புதம் குடிகொண்டுள்ளது. நாங்கள் சொல்ல வருவது, ப்ளப்பர் (blubber) எனப்படும் ஒருவகை கொழுப்பைப் பற்றிதான். “திமிங்கில கொழுப்பைப் போல் பல்வகை பணிபுரியும் பொருள் வேறெதுவும் இல்லை” என சொல்கிறது பையோமிமெடிக்ஸ்: வடிவமைப்பும் பொருட்களின் உற்பத்தியும் என்ற புத்தகம். அது ஏன் என்றும் அப்புத்தகம் சொல்கிறது: ப்ளப்பருக்கு மிதப்பாற்றல் மிக அதிகம் என்பதால் திமிங்கிலங்கள் காற்றுக்காக கடலின் மேற்பரப்பிற்கு வர முடிகிறது. இந்த வெப்ப-ரத்த பாலூட்டிகள் கடலின் குளிரில் உறைந்துவிடாமலிருக்க உறுதியான கவசமாகவும் சேவிக்கிறது. அதுமட்டுமல்ல, இடப்பெயர்ச்சியின்போது ஆயிரக்கணக்கான மைல்கள் ஆகாரமின்றி நீந்திச்செல்லும் சமயத்தில் ஆற்றலை அள்ளி வழங்குகிறது. சொல்லப்போனால், கொழுப்பானது புரதத்தையும் சர்க்கரையையும்விட இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிக ஆற்றலளிக்கிறது.

“ப்ளப்பர், ரப்பர் பந்து போன்றது” என்றும் அப்புத்தகம் சொல்கிறது. “ஒவ்வொரு முறை வாலை அடித்து நீந்தும்போதும் எலாஸ்டிக் போன்று ப்ளப்பர் நீண்டு சுருங்குவதால் உந்துதல் ஏற்படுகிறது. இதன் காரணமாய், மணிக்கணக்காய் நீந்துவதற்கு செலவாகும் ஆற்றலில் 20% மிச்சமாகிறது.”

ப்ளப்பரை பல நூற்றாண்டுகளாய் மனிதன் வேட்டையாடியிருக்கிறான். இருந்தாலும் இந்த ப்ளப்பரைப் பற்றிய ஓர் உண்மையை சமீபத்தில்தான் கண்டறிந்திருக்கிறான். அதாவது ப்ளப்பரில் சுமார் பாதியளவு, கொலாஜன் நார்களின் சிக்கலான வலைப்பின்னலால் ஆனது என்பதை கண்டறிந்திருக்கிறான். கொழுப்பு-சார்ந்த இந்தக் கூட்டுப்பொருளின் செயல்பாடுகளை புரிந்துகொள்ள விஞ்ஞானிகள் இன்னும் முயன்றுவருகிறார்கள். இன்னொரு அற்புதமான பொருளை கண்டுபிடித்துவிட்டதாக சொல்லும் இவர்கள், இதை செயற்கையாக தயாரித்தால் எவ்வளவோ விதங்களில் உபயோகிக்கலாம் என நம்புகிறார்கள்.

எட்டுக்கால் என்ஜினியர்

சமீப சில ஆண்டுகளாய் விஞ்ஞானிகளின் கவனம் சிலந்திப்பூச்சியின் பக்கம் திரும்பியிருக்கிறது. முக்கியமாக கூடுகட்டுவதற்கு அது எவ்வாறு நூலைத் தயாரிக்கிறது என்பதை அறிய ஆவலாய் இருக்கிறார்கள். ஏனெனில் சிலந்தி நூலும் ஒரு கூட்டுப்பொருளே. மற்ற அநேக பூச்சிகளும் இப்படி வலை பின்னுவது உண்மைதான். ஆனால் சிலந்தி வலை விசேஷமானது. உலகிலுள்ள மிக உறுதியான பொருட்களில் ஒன்றான இதை “அசத்திவிடும் அரும்பொருள்” என அழைத்தார் அறிவியல் எழுத்தாளர் ஒருவர். சிலந்தி நூலின் அதிசயிக்கத்தக்க பண்புகளை எடுத்துச்சொன்னால் மலைக்காதோர் எவரும் இருக்க முடியாது.

சிலந்தி நூலை விஞ்ஞானிகள் ஆகா ஓகோ என புகழ்ந்து தள்ளுவது ஏன்? ஒன்று, இது ஸ்டீலைவிட ஐந்து மடங்கு உறுதியானது, அதோடு எலாஸ்டிக் தன்மையும் இதற்கு மிக அதிகமுண்டு. என்னே விநோதமான கலவை! அதிகப்படியான எலாஸ்டிக் தன்மைகொண்ட நைலானைவிட சிலந்தி நூல் 30 சதவீதம் அதிகமாய் நீளுகிறது. இருந்தாலும் பூச்சி அதில் மோதும்போது, பந்துபோல் மோதிய வேகத்தில் திரும்பிச் செல்வதில்லை, ஆனால் மாட்டிக்கொள்கிறது. “மனித அளவுப்படி சொல்ல வேண்டுமானால், மீன்பிடிக்கும் வலை ஒரு விமானத்தையே பிடித்துவிடுவதைப் போன்றது” என சொல்கிறது சைன்ஸ் நியூஸ் பத்திரிகை.

இரண்டே வகை சிலந்திப்பூச்சிகள் ஏழு வகை நூல்களை உண்டாக்குகின்றன. ஆக, சிலந்திப்பூச்சியின் வேதியியல் நிபுணத்துவத்தை காப்பியடித்தால் என்னென்னவெல்லாம் செய்யலாம் என கற்பனை செய்து பாருங்கள்! பெருமளவு தரம் உயர்த்தப்பட்ட சீட் பெல்ட்டுகள், அறுவை சிகிச்சை தையல்கள், செயற்கை தசைநார்கள் (ligaments), கனமற்ற கயிறுகள், கேபிள்கள், குண்டுதுளைக்காத உடைகள் என அடுக்கிக்கொண்டே போகலாம். விஞ்ஞானிகள் இன்னொன்றையும் தெரிந்துகொள்ள துடிக்கிறார்கள். அதாவது, சிலந்திப்பூச்சி எப்படி இவ்வளவு திறமையாக​—⁠நச்சுத் தன்மைகொண்ட எவ்வித ரசாயனங்களையும் உபயோகிக்காமல்​—⁠நூலைத் தயாரிக்கிறது என்பதை புரிந்துகொள்ள முயல்கிறார்கள்.

இயற்கை கியர்பாக்ஸுகளும் ஜெட் என்ஜின்களும்

இன்று உலகெங்கும் பயணங்கள் முடிவற்று நடப்பதற்குக் காரணம் கியர்பாக்ஸுகளும் ஜெட் என்ஜின்களும்தான். ஆனால் இந்த விஷயத்திலும் இயற்கை நம்மை முந்திக்கொண்டது, தெரியுமா? கியர்பாக்ஸுகளை முதலில் எடுத்துக்கொள்ளலாம். இவை, வாகனத்தில் கியர்களை மாற்றிப் போட்டு மோட்டாரை நன்கு பயன்படுத்த உதவுகின்றன. இயற்கை கியர்பாக்ஸும் இதைத்தான் செய்கிறது. ஆனால் என்ஜினை சக்கரங்களோடு இணைப்பதற்குப் பதிலாக இறகுகளை இறகுகளோடு இணைக்கிறது! இப்படிப்பட்ட ஒரு கியர்பாக்ஸ் எங்கிருக்கிறது? ஈக்களில். இவற்றின் இறகுகளில் த்ரீ-⁠ஸ்பீட் கியர்கள் உள்ளன. இவை கியர்களை மாற்றிப்போட்டு தங்கள் “வண்டிகளை” ஓட்டுகின்றன!

இப்போது ஜெட் என்ஜின்களை எடுத்துக்கொள்ளலாம். தண்ணீரை பின்புறமாக பீச்சியடித்து முன்புறமாக செல்லும் நியமத்தின் அடிப்படையில் (jet propulsion) இவை செயல்படுகின்றன. கணவாய் மீன், ஆக்டோபஸ், நாடிலஸ் ஆகிய அனைத்தும் இப்படித்தான் நீந்துகின்றன. இந்த “ஜெட்டு”களைப் பார்த்து விஞ்ஞானிகளால் பொறாமைப்படாமல் இருக்க முடியவில்லை. ஏன்? ஏனெனில் இவை மிருதுவான பொருட்களால் ஆனவை. மென்மையானவை என்றாலும் உடையாதவை, எவ்வளவு ஆழத்திற்கும் சென்று, சத்தமில்லாமல் ஸ்மூத்தாக செல்லும் திறம்பெற்றவை. கணவாய் மீன், எதிரி துரத்தும்போது மணிக்கு 32 கிலோமீட்டர் வேகத்தில்கூட செல்லும். இவ்வளவு ஏன், “சிலசமயம் தண்ணீரை விட்டு வெளியே தாவி கப்பல் தளங்களுக்குள்ளேயே குதிக்கும்” என்கிறது வைல்ட் டெக்னாலஜி என்ற புத்தகம்.

இயற்கை உலகினிலே சில நிமிடம் உலாவந்தாலும் ஆச்சரியத்தில் மூழ்கிப்போகிறோம் அல்லவா? மனம் போற்றுதலால் நிரம்பி வழிகிறதல்லவா? இயற்கை என்ற “உயிருள்ள புதிர்” இப்படி பல கேள்விகளை எழுப்புகிறது: மின்மினிப் பூச்சிகளும் சில பாசிகளும் இருளில் பிரகாசமாய் மின்னக் காரணமான வேதியியல் நிகழ்ச்சி என்ன? குளிர்காலத்தில் விறைத்துப்போகும் வடதுருவத்து மீன்களும் தவளைகளும் மீண்டும் வெதுவெதுப்பாகி துள்ளித் திரிவது எப்படி? திமிங்கிலங்களும் சீல்களும் எவ்வித சுவாசிக்கும் கருவியும் இல்லாமல் வெகு நேரம் தண்ணீருக்குள் இருப்பது எப்படி? வெகு ஆழத்திற்குள் மீண்டும் மீண்டும் மூழ்கினாலும் அழுத்தத்தால் அவற்றிற்கு ஏதும் நடப்பதில்லையே, ஏன்? பச்சோந்திகளும் கட்டில்ஃபிஷ்களும் சுற்றுப்புறத்திற்கு ஏற்ப நிறம் மாறுவது எப்படி? மூன்றே மூன்று கிராம் எரிபொருளை வைத்துக்கொண்டு தேன்சிட்டுக்கள் மெக்ஸிகோ வளைகுடாவைக் கடப்பது எப்படி? இப்படி கேள்விகளுக்கு மேல் கேள்விகளாக கேட்டுக்கொண்டே போகலாம்.

மனிதனால் பார்த்துப் பிரமித்துப்போகத்தான் முடியும். விஞ்ஞானிகள் இயற்கையை ஆராய்கையில் “சிலையாகிப்போகிறார்கள்” என பையோமிமிக்ரி புத்தகம் சொல்கிறது.

வடிவமைப்பை வடித்தவர்!

உயிரணுவின்பேரில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளுக்குப் பிறகு, “அது ‘வடிவமைக்கப்பட்டதே!’ என எவ்வித சந்தேகமுமின்றி ஓங்கிச் சொல்லலாம், அடித்துச் சொல்லலாம்” என்கிறார் உயிர்வேதியியலின் துணைப் பேராசிரியர் மைக்கேல் பிஹி. இந்த ஆராய்ச்சியின் முடிவு, “எவ்வித குழப்பத்திற்கோ சந்தேகத்திற்கோ இடமளிக்காத மிகத் தெளிவான ஒன்று, மிக முக்கியமானதும்கூட. ஆகவே சரித்திரத்தில் முத்திரை பதித்த அறிவியல் சாதனைகளில் இதைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது” என்றும் அவர் சொல்கிறார்.

வடிவமைப்பாளர் இருக்கிறார் என்ற உண்மை, பரிணாமவாதிகளை தர்மசங்கடத்திற்கு ஆளாக்கும் என்பதை எதிர்பார்க்க வேண்டியதுதான். ஏனெனில் உயிரினங்களில், குறிப்பாக மூலக்கூறுகளிலும் உயிரணுக்களிலும் காணப்படும் சிக்கலான வடிவமைப்பிற்கு பரிணாமம் விளக்கமளிக்க முடிவதில்லை. “உயிர் பற்றிய டார்வினின் விளக்கம் குழப்பமான ஒன்றாகத்தான் எப்போதும் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை” என்கிறார் பிஹி.

டார்வின் காலத்தில், உயிருக்கு அடிப்படையான உயிரணு மிக எளிமையான ஒன்றாய் நினைக்கப்பட்டது. அப்படிப்பட்ட அறியாமையின் காலத்தில் பரிணாமக் கொள்கை உருவானது. இப்போது அந்தக் காலம் மலையேறிவிட்டது. மூலக்கூறு உயிரியலும் பையோமிமெடிக்ஸும் இந்த உண்மையை பிட்டு வைத்துவிட்டன: உயிரணு மிக மிக சிக்கல்வாய்ந்த அமைப்பு; எவ்வித குறைபாடும் இல்லாத மிக நேர்த்தியான வடிவமைப்புகள் அதில் நிரம்பியுள்ளன; மனிதன் உண்டாக்கியிருக்கும் அதிநவீன சாதனங்களும் இயந்திரங்களும்கூட இவற்றிற்குப் பக்கத்தில் வெறும் விளையாட்டுப் பொம்மைகளைப் போலத்தான் இருக்கும்.

அருமையான வடிவமைப்பு ஓர் உண்மையை நமக்கு உணர்த்துகிறது. அதாவது, “உயிர், புத்திக்கூர்மையுள்ள ஒருவரால் வடிவமைக்கப்பட்டது” என்ற நியாயமான முடிவுக்கு வர உதவுகிறது என்கிறார் பிஹி. இவர் ஒரு நோக்கத்தோடுதான் வடிவமைத்தார் என்று நம்புவதும் நியாயமல்லவா? அவரது நோக்கம் என்ன? அவரைப் பற்றி நாம் அதிகம் கற்றுக்கொள்ள முடியுமா? இந்த முக்கிய கேள்விகளை அடுத்த கட்டுரை அலசி ஆராயும்.

[அடிக்குறிப்புகள்]

a சரியாகச் சொன்னால், கண்ணாடி இழைகள் என்பது கூட்டுப்பொருளிலுள்ள கண்ணாடியாலான இழைகளைக் குறிக்கும். ஆனால் இப்பதம் பொதுவாக, ப்ளாஸ்டிக்காலும் கண்ணாடி இழைகளாலும் ஆன அந்த மொத்த கூட்டுப்பொருளையே குறிப்பிட பயன்படுத்தப்படுகிறது.

b தாவர கூட்டுப்பொருட்களில் கொலாஜனுக்குப் பதிலாக செல்லுலோஸ் உள்ளது. கட்டுமானத்திற்கு ஏற்ற கச்சிதத்தை மரம் பெற்றிருப்பதற்குக் காரணம் இந்த செல்லுலோஸே. இது, “இழுதிறனை பொறுத்தவரை நிகரற்றது” என சொல்லப்படுகிறது.

[பக்கம் -ன் பெட்டி5]

ஈயடிச்சான் காப்பி

நியூ ஸைன்டிஸ்ட் பத்திரிகையில் வெளிவந்த அறிக்கை இது: மியூசியத்திற்கு சென்றிருந்தாராம் ஒரு விஞ்ஞானி. அழிந்துபோயிருந்த ஒரு வகை ஈ காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. அந்த ஈயின் கண்களில் நிறைய நேர்க்கோடுகள் இருப்பதைப் பார்த்தார். அதிக வெளிச்சத்தை ஈர்க்க, முக்கியமாய் மிகச் சாய்வான கோணங்களில் வெளிச்சத்தை ஈர்க்க அந்தக் கோடுகள் உதவியிருக்கலாம் என ஊகித்தார். அவரும் மற்ற ஆராய்ச்சியாளர்களும் சோதனைகள் நடத்தி, அந்த ஊகம் உண்மை என நிரூபித்தனர்.

சோலார் பானலிலுள்ள (சூரிய ஒளியிலிருந்து ஆற்றல் எடுக்கும் கருவி) கண்ணாடியிலும் இதே விதமான நேர்க்கோடுகளை அமைக்க விஞ்ஞானிகள் திட்டமிட்டனர். இவ்வாறு சோலார் பானல்களின் ஆற்றலை அதிகரிக்கலாம் என்பது அவர்கள் நம்பிக்கை. சூரியன் எத்திசையில் நகர்ந்தாலும் அதன் ஒளியை ஈர்க்கும் விதமாய் சோலார் பானல்களை அமைப்பதற்கு இப்போது ஆகும் செலவும் மிச்சமாகும். சோலார் பானல்கள் அதிக ஆற்றல் வழங்கினால் நிலத்தடி எரிபொருள்களுக்கு வேலை குறைவு, இதனால் தூய்மைக்கேட்டையும் குறைக்கலாம். அப்படியென்றால் இது பயன்மிக்க ஆராய்ச்சிதான். இத்தகைய கண்டுபிடிப்புகள், அருமையான வடிவங்களை அள்ளி வழங்கும் இயற்கையை மேலும் மேலும் போற்ற வைக்கின்றன. என்னைப் பார், புரிந்துகொள், பின்பற்று என சொல்வதுபோல் இவ்வடிவங்கள் எங்கும் எதிலும் நிறைந்திருக்கின்றன.

[பக்கம் -ன் பெட்டி6]

உரியவருக்கு பாராட்டு

ஜார்ஜ் டெ மெஸ்ட்ரல் என்பவர் ஸ்விட்ஸர்லாந்தைச் சேர்ந்த என்ஜினியர். 1957-⁠ல் எதேச்சையாக அவர் உடையில் ஒட்டிக்கொண்டிருந்த காட்டுச் செடியின் காய்களில் கொக்கிகள் இருப்பதைக் கண்டார். இந்தக் காய்களையும் அவற்றின் கொக்கிகளையும் ஆராய்ந்தார். புது ஐடியா மூளையில் உதித்தது. அடுத்த எட்டு ஆண்டுகளாய் அதைக் காப்பியடிக்க முயற்சித்தார். முயற்சி திருவினையாக, அவரது படைப்பு பாரெங்கும் பிரபலமானது. கையில் எடுக்கும் பொருட்களில் எல்லாம் நாம் காணும் வெல்க்ரோ டேப்தான் அது.

யாருமே வெல்க்ரோ டேப்பை கண்டுபிடிக்கவில்லை, ஆயிரக்கணக்கான விபத்துக்கள் மாறி மாறி ஏற்பட்டதால் அது தானாகவே உருவாகிவிட்டது என சொல்லியிருந்தால் மெஸ்ட்ரலுக்கு எப்படி இருந்திருக்கும்? நியாயப்படி பார்த்தால் உரியவருக்கு பாராட்டு போய் சேர வேண்டும். அதைக் கைநழுவ விடாதிருக்க, மனித படைப்பாளர்கள் காப்புரிமைகூட பெற்றுக்கொள்கிறார்கள். அப்படிப்பட்டவர்களைப் பாராட்டி வெகுமதி அளிக்க வேண்டும், அவர்களது படைப்புகளுக்காக கௌரவிக்கவும் வேண்டும் என்பதை எல்லாரும் ஒத்துக்கொள்வார்கள். இத்தனைக்கும் அவையெல்லாம் இயற்கையிலிருந்து காப்பியடிக்கப்பட்ட இரண்டாம் தரமான பொருட்களே. அப்படியென்றால் முதல் தரமான ஒரிஜினலை உண்டாக்கிய ஞானமுள்ள படைப்பாளரை எந்தளவு போற்ற வேண்டும்!

[பக்கம் 5-ன் படம்]

ஸ்டீலைவிட எலும்பு பலமானது

[படத்திற்கான நன்றி]

Anatomie du gladiateur combattant...., Paris, 1812, Jean-Galbert Salvage

[பக்கம் 7-ன் படம்]

திமிங்கில கொழுப்பு ஆற்றலளிக்கிறது, வெதுவெதுப்பளிக்கிறது, மிதக்கவும் உதவுகிறது

[படத்திற்கான நன்றி]

© Dave B. Fleetham/Visuals Unlimited

[பக்கம் 7-ன் படம்]

முதலைத் தோல்களிடம் ஈட்டிகளும் அம்புகளும் குண்டுகளும்கூட தோற்றுப்போகின்றன

[பக்கம் 7-ன் படம்]

சிலந்தி நூல் ஸ்டீலைவிட ஐந்து மடங்கு உறுதியானது, அதேசமயம் மிக மிக எலாஸ்டிக் தன்மை கொண்டது

[பக்கம் 8-ன் படம்]

மரங்கொத்தியின் மூளை அதிர்வால் குலைந்துபோகாதபடி தடித்த எலும்பால் கவசமிடப்பட்டிருக்கிறது

[பக்கம் 8-ன் படம்]

பச்சோந்திகள் இடத்திற்கு ஏற்ப நிறம் மாறுகின்றன

[பக்கம் 8-ன் படம்]

நாடிலஸுக்கு மிதப்பாற்றல் அளிப்பது, அதன் விசேஷ சேம்பர்

[பக்கம் 9-ன் படம்]

ரூபி-⁠த்ரோடெட் தேன்சிட்டு, மூன்றே மூன்று கிராம் எரிபொருளை வைத்துக்கொண்டு 1,000 கிலோமீட்டர் தூரம் பறக்கிறது

[பக்கம் 9-ன் படம்]

கணவாய் மீனுக்கு “ஜெட் என்ஜின்” உண்டு

[பக்கம் 9-ன் படம்]

அற்புத வேதியியல் நிகழ்ச்சியால் மின்மினிப் பூச்சிகள் இருளில் பிரகாசமாய் மின்னுகின்றன

[படத்திற்கான நன்றி]

© Jeff J. Daly/Visuals Unlimited