Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

ஏமாற்றமடைந்த ஜெஸ்யூட்டுகள்

சுதந்திர மத அமைப்பாக செயல்பட வேண்டும் என்ற ஆசையால் இயேசுநாதர் சங்கம் என்ற அமைப்பு அரசு அங்கீகாரத்திற்காக மனு தாக்கல் செய்தது. ஆனால், ரஷ்யாவின் நீதித்துறையோ சிகப்பு கொடி காட்டிவிட்டது என்கிறது நேஷனல் கேத்தலிக் ரிப்போர்ட்டர். ஜெஸ்யூட்ஸ் என்று அழைக்கப்படும் இந்த இயேசுநாதர் சங்கம் 1540-⁠ல் நிறுவப்பட்டது. ரஷ்யாவின் புதிய மத சட்டத்தின் அடிப்படையில், சட்டப்படி அங்கீகாரம் பெற ஏறக்குறைய எல்லா மத அமைப்புகளும் மீண்டும் பதிவு செய்யவேண்டியிருந்தது. அங்கீகரிக்கப்படாத அமைப்புகள் எதுவும் தங்களுடைய பிரசுரங்களை அச்சிடவோ விநியோகிக்கவோ முடியாது; மத வேலைகளுக்காக வெளிநாட்டு பிரஜைகளை அழைக்க முடியாது, அல்லது அவர்களுடைய கல்வித் திட்டத்திற்கென்று எந்த கட்டிடத்தையும் கட்டமுடியாது. அங்கு ஒரு மத அமைப்பாக யெகோவாவின் சாட்சிகள் தேசிய அளவில் ஏப்ரல் 29, 1999 அன்று மீண்டும் பதிவு செய்துகொண்டனர்.

ஜப்பானை பயமுறுத்தும் தற்கொலை

ஜப்பானில் முன்பு எந்த வருடத்தையும்விட, 1998-⁠ல் எக்கச்சக்கமானோர் தற்கொலை செய்துகொண்டனர் என்று அறிக்கை செய்கிறது த டெய்லி யோமியூரி என்ற செய்தித்தாள். ஜப்பான் தேசிய காவல்துறை அறிக்கையின்படி 1998-⁠ல் 32,863 பேர் தங்களைத் தாங்களே மாய்த்துக்கொண்டனர்; ஜப்பானில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது இது மூன்றுமடங்கு அதிகம். இதற்கான காரணம், சமீபத்தில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியே; இதனால் அந்த நாடே கதி கலங்கியிருக்கிறது. வேலையில்லா திண்டாட்டத்தினால் பணப்பிரச்சினை அனைவர் முன்னும் மலைபோல நின்றது. ஜப்பானின் மரணத்திற்கான காரண பட்டியலில் இந்தத் தற்கொலை இப்போது ஆறாம் இடத்தை கைப்பற்றியிருக்கிறது.

காற்றிலே கலப்படம்!

“ஐரோப்பாவை மாசுபடுத்துவதில் வேகமாக செயல்பட்டுவருவது சாலை போக்குவரத்தே. சில நாடுகளில் சாலை விபத்தில் உயிரிழப்பவர்களைவிட காற்றில் ஏற்படும் அசுத்தத்தால் அதிகமானோர் உயிரிழக்கின்றனர்” என்று அறிவிக்கிறது ராய்ட்டர்ஸ் செய்திச் சேவை. உலக சுகாதார அமைப்பின் ஓர் ஆய்வுப்படி, ஆஸ்திரியா, பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து போன்ற இடங்களில் ஒவ்வொரு வருடமும் 21,000 பேர் காற்று அசுத்தத்தினால் ஏற்படும் சுவாசக்கோளாறு அல்லது இருதயக்கோளாறினால் அற்ப ஆயுசில் இறக்கின்றனர். மற்றொரு அறிக்கை சொல்வதை கவனியுங்கள், 36 இந்திய நகரங்களில், இந்த காற்று அசுத்தத்தால் ஒவ்வொரு நாளும் 110 பேர் அற்ப ஆயுசில் இறந்துவிடுகின்றனர்.

மாயமாகும் தகவல்கள்

பேப்பர்களில் தகவல்களை எழுதி பாதுகாப்பது தலைவலி பிடித்த வேலை, ஆனால் டிஜிட்டலில் பதிவு செய்துவிட்டால் போதும் அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதே இல்லை, காலங்காலத்துக்கு அப்படியே இருக்கும் என்றெல்லாம் அநேக ஆண்டுகளாக கம்ப்யூட்டர் விஞ்ஞானிகள் மார்தட்டிக்கொண்டனர். ஆனால் நிலைமை இப்போது அப்படியே தலைகீழாக மாறுகிறது; ஏனென்றால் நூலகர்களும் பழங்காலத்து சுவடுகளை பாதுகாப்பவர்களும் வித்தியாசமான கருத்தை தெரிவிக்கின்றனர். “விஞ்ஞானம் மற்றும் வரலாறு சம்பந்தப்பட்ட முக்கியமான தகவல்கள் பதிவுசெய்யப்பட்டுள்ள டிஜிட்டல் கருவிகள் சேதமடைவதாலும் அந்த மாடல் பழையதாகிவிடுவதாலும் பெருவாரியான தகவல்கள் அழிந்துபோகின்றன” என்கிறது நியூஸ் வீக் பத்திரிகை. டிஸ்க் டிரைவ் போன்ற டிஜிட்டல் முறையில் பதிவுசெய்யக்கூடிய சில கருவிகள் வெப்பம், ஈரம், வேதியியல் மாற்றம் மற்றும் காந்தப்புலங்களில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவற்றால் எளிதில் சேதமடையக்கூடியவையே. டிஜிட்டல் மூலம் பதிவுசெய்யப்பட்ட தகவல்கள் அடங்கிய காந்த சக்தியுள்ள அந்த டேப்கள், வைக்கப்படும் இடத்தையும் பொருத்து ஒருவேளை சுமார் பத்தாண்டுகள் மட்டுமே நன்றாக வேலை செய்யக்கூடும் என்று அந்தப் பத்திரிகை சொல்கிறது. டிஜிட்டல் தகவல்களை பாதுகாக்க முயற்சிப்பவர்கள் எதிர்படும் மற்றொரு சவால், இப்போது மாறிக்கொண்டே இருக்கும் தொழில்நுட்பம். இவ்வாறு தகவல்கள் பதிவுசெய்யப்படும் கருவிகள் நவீனமயமாகிக் கொண்டே இருப்பதால் ஏற்கெனவே பதிவுசெய்யப்பட்ட கருவிகள் விரைவிலேயே பழையதாகிவிடுகின்றன. “எல்லா மாடல் டேப் பிளேயர்களையும் கம்ப்யூட்டர்களையும் ஒரு அருங்காட்சியகத்தில் பாதுகாத்து வைத்தாலொழிய இந்த தகவல்களை பாதுகாக்க முடியாது. அது ரொம்ப கஷ்டம்,” என்று புலம்புகிறார் நூலகம் மற்றும் தகவல் துறையின் மன்ற உறுப்பினர் எபி ஸ்மித்.

கோடிகளில் சதம் போடும் இந்தியா

ஆகஸ்ட் 1999-⁠ல் இந்தியாவின் ஜனத்தொகை 100 கோடியை தாண்டிவிட்டது என்று அறிவிக்கிறது ஐக்கிய நாட்டின் ஜனத்தொகை பிரிவு. இந்த ஜனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கே சுமார் 50 வருடங்களுக்கு முன்பிருந்த இந்தியாவின் ஜனத்தொகை. இந்த அதிகரிப்பின் தற்போதைய வேகம் என்ன தெரியுமா, ஒரு வருடத்திற்கு 1.6 சதவீதம். இதே வேகத்தில் இந்த வண்டி ஓடிக்கொண்டிருந்தால் சுமார் நாற்பதே வருடங்களில் உலகத்திலேயே அதிக ஜனத்தொகையுள்ள நாடு என்ற கிரீடத்தை சீனாவிடமிருந்து தட்டிப்பறித்துவிடும். “உலக ஜனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் இந்திய மற்றும் சீன மக்களே” என்று அறிக்கை செய்கிறது த நியூ யார்க் டைம்ஸ். கடந்த சுமார் ஐம்பது வருடங்களுக்குள், இந்தியாவில் வாழ்நாட்கால எதிர்பார்ப்பு 39-லிருந்து 63-ஆக உயர்ந்துள்ளது.

திருமணம்—⁠அவுட் ஆஃப் பேஷன்

அமெரிக்காவில் நடக்கும் திருமணங்களின் எண்ணிக்கை அதன் சரித்திரத்திலேயே இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது என்பதை ரெட்கெர்ஸ் பல்கழைக்கழகத்தின் தேசிய திருமண திட்டம் நடத்திய ஆய்வில் தெரிந்துள்ளதாக வெப் சைட்டில் அறிக்கை செய்கிறது த வாஷிங்டன் போஸ்ட். இரண்டாம் உலக யுத்தத்தை தொடர்ந்து, அந்நாட்டின் 80 சதவீத பிள்ளைகள் தங்களை பெற்ற தாய் தகப்பன் இருவராலும் வளர்க்கப்பட்டனர் என்று அந்த ஆய்வு காண்பித்தது. ஆனால் இன்று அந்த எண்ணிக்கை 60 சதவீதமாக குறைந்துவிட்டது. “கல்யாணம் செய்துகொள்ளாமலேயே குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்பது ‘வாழ்க்கையில செய்ற ஒரு நல்ல காரியம்’ என்று சொன்ன இளம் பெண்களின் எண்ணிக்கையும்கூட மளமளவென அதிகரித்துவிட்டது; கடந்த இருபது ஆண்டுகளுக்குள்ளாக அவ்வாறு சொல்பவர்களின் எண்ணிக்கை 33 சதவீதத்திலிருந்து 53 சதவீதமாக உயர்ந்துள்ளது” என்று அந்த அறிக்கை சொல்கிறது. “இப்போது திருமணமே அபாயத்தில் உள்ளது” என்ற அந்த அறிக்கையின் வார்த்தைகள் வேடிக்கையாக இருக்கின்றன!

ஆப்பிரிக்காவில் கல்வி படும்பாடு

சப்-சஹாரன் ஆப்பிரிக்காவில், புத்தகங்களுடன் பள்ளிக்கு செல்ல வேண்டிய 4 கோடிக்கும் அதிகமான பிள்ளைகள் பள்ளிப்பக்கம் தலைவைத்துக்கூட படுப்பதில்லை என்று அறிக்கை செய்கிறது அனைத்து ஆப்பிரிக்கச் செய்தி நிறுவனம். எண்ணிலடங்கா பிரச்சினைகள் இந்தப் பகுதிகளிலுள்ள கல்வி நிறுவனங்களை தாக்கி கல்வியையே சூனியமாக்கிவிட்டது. உதாரணத்திற்கு, பொருளாதார பிரச்சினை; இதன் விளைவால், அநேக பள்ளிகளில் தண்ணீர் வசதியோ கழிப்பறை வசதியோ இல்லை. அங்கு பாடபுத்தகங்களுக்கும், நன்கு பயிற்சியளிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கும் தட்டுப்பாடு. இதைத்தவிர மற்றொரு பிரச்சினையும் அந்த இடத்தை ஆட்டிப்படைக்கிறது, அது சிறுவயது பெண்கள் கருத்தரிப்பது. இதுவே மாணாக்கர்களின் எண்ணிக்கை இந்தளவுக்கு குறைவதற்கான ஒரு முக்கியமான காரணம். பள்ளி செல்லும் பிள்ளைகளை எய்ட்ஸ் தன் கைக்குள் போட்டுக்கொண்டுள்ளது. “பருவ வயதினர் மத்தியில் பாலுறவு நடவடிக்கைகள் அதிகளவில் இருந்துவருவதால், அநேக பருவவயதினரை எய்ட்ஸ் தொற்றிக்கொண்டுள்ளது” என்கிறது ஆப்பிரிக்கச் செய்தி. சில சமயம் எய்ட்ஸால் பாதிக்கப்படாத பெண்கள், அந்த நோய்க்கு ஆளாகியிருக்கும் உறவினர்களை வீட்டிலிருந்து கவனித்துக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கின்றனர். ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞானம் மற்றும் சமுதாய அமைப்புகளுக்கான ஆரம்ப கல்வி நிபுணர் டாக்டர் எட்வர்ட் ஃபிஸ்க் சொல்கிறார்: “பள்ளிகள் ஏதுமில்லாமல், சப்-சஹாரன் ஆப்பிரிக்காவிலுள்ள அநேக நாடுகளின் எதிர்காலம் இப்போது ஊசலாடிக்கொண்டிருக்கிறது.”

‘மம்மி’யில் செயற்கை விரல்

“பதனம் செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சடலம் ஒன்றில் செயற்கை கால்விரல் பொருத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மனிதர் செத்து சுமார் 2,500 வருடங்களுக்கு மேலாகிறது, ஆனால் அவர் உயிரோடிருக்கும்போது இந்த கால்விரல் அவரால் பயன்படுத்தப்பட்டிருக்கிறது” என்று அறிவிக்கிறது லண்டனின் செய்தித்தாள் த சன்டே டைம்ஸ். லினன் துணி, மிருக பசை மற்றும் பிளாஸ்டர் ஆஃப் பேரிஸைக் கொண்டு செய்யப்பட்டிருக்கும் இந்த செயற்கை கால்விரலைப் பற்றி டாக்டர் நிகோலாஸ் ரீவ்ஸ் விவரிக்கிறார், “இது மிகவும் நுணுக்கமான முறையில் செய்யப்பட்டிருக்கிறது, அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது, திறமையாகவும் உறுதியாகவும் செய்யப்பட்டிருக்கிறது; அதுமட்டுமின்றி இது ஒரு விசேஷ ஆர்டரின் பேரில் தயாரிக்கப்பட்ட பொருள் என்பதும் தெளிவாக இருக்கிறது.” இந்தக் கால்விரலில் நகமும் காணப்படுகிறது, அந்த நகமும் தசைபோன்ற அதே நிறத்தால் பூசப்பட்டிருக்கிறது. அந்த விரலை பொருத்துவதற்காக அதில் வரிசையாக எட்டு துளைகள் போடப்பட்டிருக்கின்றன. செருப்பின் வார் வரும் இடத்தில் இந்த துளைகள் போடப்பட்டிருப்பதால் செருப்பு போடும்போது துளைகள் தெரியாமல் மறைத்துவிடுகிறது.

‘பெய்ன்கில்லரா!’ வேண்டவே வேண்டாம்

ஒருவர் தலைவலி தலைவலி என்று சொல்லி ஒரு வாரத்தில் மூன்றுமுறை அல்லது அதற்கும் அதிகமான தடவை மருந்துகளை சாப்பிடுகிறார் என்றால் ஒருவேளை அவருக்கு தவறான மருத்துவத்தால் ஏற்படும் தலைவலியாக (MMH) இருக்கலாம். 50 பேரில் ஒருவரை பாதிக்கும் இந்த வியாதி, நாம் சாதாரணமாக நினைக்கும் ஆஸ்பிரின் அல்லது அதுபோன்ற பெய்ன்கில்லர்களாலேயே வருகிறது. இப்படிப்பட்ட மாத்திரையை சாப்பிடும்போது அந்த வலி குறையலாம், அதன்பின் அந்த மாத்திரையே தலைவலியை உண்டுபண்ணுகிறது; இந்த தலைவலியை அந்த நபர் சாதாரண தலைவலிதான் அல்லது ஒற்றைத் தலைவலிதான் என்று சாதாரணமாக நினைத்துவிடக்கூடும். அதற்காக இன்னும் அதிகமான மாத்திரைகளை அல்லது பெய்ன்கில்லர்களை சாப்பிடுகிறார், இது அப்படியே தொடர்கதையாகிறது. லண்டனின் இம்பீரியல் கல்லூரி டாக்டர் டிம் ஸ்ட்ரீனர் விளக்குகிறார்: “ஒருவருக்கு நீண்ட காலமாக தினமும் தலைவலி வருகிறது என்றால் அவருக்கு MMH இருக்கிறது என்று நினைத்துக்கொள்ளலாம்.” இது சில வருடங்களுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டிருந்த போதிலும் அநேக குடும்ப டாக்டர்களுக்கு இது பற்றி தெரிவதில்லை, அவர்கள் வெறுமென இன்னும் ஸ்ட்ராங்கான பெய்ன்கில்லர்களையே எழுதிக்கொடுக்கிறார்கள். ஆனால் அந்த நபர் செய்யவேண்டியதெல்லாம் அப்படிப்பட்ட மாத்திரைகளை முதலில் தூக்கி எறிந்துவிட வேண்டும், என்கிறது லண்டனின் செய்தித்தாள் த சன்டே டெலிகிராஃப்.

நா-சுத்தம்

உங்கள் பின்நாக்கில் ஒளிந்திருக்கும் பாக்டீரியாக்கள் ஒருவகை சல்ஃபர் ஆவியை பிறப்பிக்கக்கூடும், இதனால் உங்கள் வாயிலிருந்து வீசும் துர்நாற்றம் எதிரிலுள்ளவரை ‘ஒரு மைல்’ தூரம் ஓடவைத்துவிடும் என்று அறிக்கை செய்கிறது பிரின்ஸ் ஜார்ஜ் சிட்டிசன் எனும் செய்தித்தாள். “பாக்டீரியாக்கள் பெரும்பாலும் உலர்ந்த, ஆக்ஸிஜன் இல்லாத இடங்களில் வேகமாக பெருகுகின்றன. அதனால்தான் நுரையீரலுக்கு அனுப்பப்படும் காற்றிலிருந்து விலகி, வெடிப்பு அல்லது குழி போன்ற இடங்களில் மறைந்துகொள்கின்றன” என்றும் சொல்கிறது அந்த அறிக்கை. இவற்றை பல் துலக்குவது அல்லது ஃபிளாஸ் செய்வதன் மூலம் அகற்ற முடியும், ஆனால் அவற்றால் வெறும் 25 சதவீத பாக்டீரியாக்களே நீக்கப்படுகின்றன. “இப்படி துர்நாற்றம் வீசுவதை தடுக்க நீங்கள் செய்யக்கூடிய ஒரே முக்கியமான வழி நாக்கு வழிப்பது” என்று பல் மருத்துவர் ஆலன் ஃக்ரோவ் நம்புகிறார்; இந்தப் பழக்கம் அந்தக் காலத்திலிருந்தே ஐரோப்பாவில் செய்துவரப்படுகிறது. “நாக்கை சுத்தமாகவும் இளஞ்சிவப்பு நிறத்திலும் வைத்துக்கொள்ள டூத்பிரெஷ்ஷைவிட” ஒரு பிளாஸ்டிக் நாக்கு வழிப்பானை பயன்படுத்துவது ரொம்ப நல்லது என்கிறது சிட்டிசன்.

அண்டத்தை நோக்க இன்னொரு கண்

ஜூன் 1999-⁠ல், ஹவாயிலுள்ள மௌனா கியா என்ற இடத்தில் ஜெமினி வடக்கு என்ற தொலைநோக்கி முதன்முதலாக இந்த அண்டத்தை கண் திறந்து பார்க்கத் துவங்கியது. அதின் 26.5 அடி விட்ட அளவுள்ள ஒளி-வாங்கும் கண்ணாடி, எல்லையற்ற விண்வெளியின் வெகுதொலைவுகளிலுள்ள இதுவரை கண்ணில் தெரியாத விஷயங்களையும் காண்பதற்கு வானவியல் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவி செய்யும் என்கிறது இன்டிபென்டன்ட் என்ற லண்டன் செய்தித்தாள். இந்த ஜெமினி வடக்கு மற்றும் ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி இரண்டும் சேர்ந்து முற்காலத்தில் நடந்த சம்பவங்களை பார்க்க விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு உதவுகின்றன. இந்த ஹபிள் தொலைநோக்கியில் ஒரு சிறந்த அம்சம் என்னவெனில் இது வானிலேயே தவழ்ந்துகொண்டிருக்கிறது. ஜெமினி பூமியிலேயே கால்பதித்திருந்த போதிலும், வளிமண்டலத்தில் ஏற்படும் பிரச்சினைகளால் உண்டாகும் உருவச் சிதைவுகளை தவிர்க்க இது பொரும்பாலும் கம்ப்யூட்டர்களையே சார்ந்துள்ளது. இது அதிக உதவியாக இல்லாதபோதிலும் ஹபிளைப் போன்று சிறந்த படங்களை நமக்கு அளிக்கிறது.