பிராடிஸ்லாவா—நதியோர குடியிருப்பிலிருந்து நவீன தலைநகரமாக
பிராடிஸ்லாவா—நதியோர குடியிருப்பிலிருந்து நவீன தலைநகரமாக
ஸ்லோவாகியாவிலிருந்து விழித்தெழு! நிருபர்
நீங்கள் 1741-ம் வருடத்தில் இருப்பதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். எங்கும் பரபரப்பு; மக்கள் எதையோ எதிர்பார்த்து ஆவலோடு காத்திருக்கின்றனர். ஜனங்கள் குதூகலமாக காணப்பட்டனர். தெருக்கள் அனைத்தும் விழாக்கோலம் பூண்டிருந்தன. ஊர்வலத்தை குளோசப்பில் பார்க்க, ஜனங்கள் ஒருவரையொருவர் முட்டி மோதிக்கொண்டு முன்னே சென்றனர். இருப்பதிலேயே அழகான உடை உடுத்திய விவசாயிகளும், நாகரீக உடையில் நடுத்தரவர்க்கத்தினரும் பகட்டாக காணப்பட்டனர். ஊர்வலத்தை பார்க்கவும் தங்களை மற்றவர்கள் பார்க்கவும் அங்கு கூடியிருந்தனர் பல உயர்குடிமக்கள். இளம் சீமாட்டியின் உருவம் பொறிக்கப்பட்ட தங்கம், வெள்ளிக் காசுகளை அரச தூதுவர் விநியோகிக்க, மக்கள் கரகோஷம் எழுப்புகின்றனர். ஏன் இந்த ஆரவாரமும் ஆர்ப்பாட்டமும்? ஆஸ்திரிய பேரரசரின் மனைவி, மரியா தெரஸா, ஹங்கேரியின் புதிய ராணியாக முடிசூட தலைநகரை நோக்கி செல்வதே இதற்கு காரணம்.
கனவுலகில் இருந்து மீண்டு, பழையபடி நனவுலகிற்கு வாருங்கள். முக்கியமான இந்த முடிசூட்டு விழா நடந்த இடத்தைப் பார்க்க நீங்கள் விரும்பினால், எங்கு செல்லவேண்டும்? இன்று சுற்றுலாப் பயணிகள் அநேகர் சென்று பார்க்கும் மரியா தெரஸாவின் அரண்மனை இருக்கும் வியன்னாவிற்கும் அல்ல; நவீன ஹங்கேரியின் தலைநகராகிய புடாபெஸ்டுக்கும் அல்ல. நீங்கள் போக வேண்டிய இடம் பிராடிஸ்லாவா. வியன்னாவிற்கு கிழக்கே, சுமார் 56 கிலோமீட்டர் தூரத்திலுள்ள டான்யூப் நதிக்கரையில் அமைந்துள்ள நகரம் இது.
இன்று பிராடிஸ்லாவாவின் மக்கள் தொகை சுமார் ஐந்து லட்சம். இயற்கை எழில்கொஞ்சும் ஸ்லோவாகியாவின் தலைநகரம் இது. புடாபெஸ்ட், வியன்னா, ப்ராக் போன்ற அருகில் இருக்கும் பல தலைநகரங்களோடு ஒப்பிட, பிராடிஸ்லாவா மிகச் சிறிய நகரமே. இருப்பினும், இரு நூற்றாண்டுகளுக்கும் மேலாக, ஹங்கேரியின் தலைநகரமாக விளங்கியது. அதற்கேற்ற அந்தஸ்தையும் புகழையும் பெற்று திகழ்ந்தது. 11 ஹங்கேரிய அரசர்களின் முடிசூட்டு விழா நடந்த நகரம் இதுவே. ஆனால், அதை சிறப்பாக்கியது எது?
பூர்வ குடியிருப்பு
ஐரோப்பாவின் நீளமான நதிகளில் இரண்டாவதாக திகழ்வது டான்யூப். அதன் நதிக்கரையில் கம்பீரமாக வீற்றிருக்கும் பெருமை பிராடிஸ்லாவாவைச் சேரும். பூர்வ காலங்களில், இந்நகரத்திற்கு
அருகில் டான்யூப் நதியின் வேகமும் கம்மி, ஆழமும் கம்மி. இயற்கையாகவே, நதியை கடப்பதற்கான ஓர் இடமாக அது விளங்கியது. பாலங்கள் இதன் இருகரைகளையும் இணைப்பதற்கு வெகுகாலத்திற்கு முன்பே, மனிதர்கள் தங்களுடைய மிருகங்களோடும் மாட்டுவண்டிகளோடும் இந்த நதியை எளிதாக கடந்தனர். எனவே, பிராடிஸ்லாவா என இப்போது அறியப்படும் இந்த நகரத்திற்கு அருகிலுள்ள பகுதி, பூர்வ காலங்களில் இருந்தே நதியைக் கடக்கும் இடமாக பிஸியாக இருந்திருக்கிறது. பொ.ச.மு. 1500-லேயே, வட மற்றும் தென் ஐரோப்பாவை இணைக்கும் வணிக மார்க்கங்கள் பல இருந்தன. அவற்றுள் முக்கியமான ஒன்று அம்பர் மார்க்கம். அது இந்த நகரம் வழியே சென்றது. பின்னர், இந்தப் பகுதியில் நதியைக் கடக்கும் போக்குவரத்தை கட்டுப்படுத்த பக்கத்தில் உள்ள குன்றின்மீது ஓர் அரண் அமைக்கப்பட்டது. அந்த இடத்தில்தான் இன்று பிராடிஸ்லாவா மாளிகை மிடுக்காக நிற்கிறது.காலத்தின் ஓட்டத்தில் பின்னோக்கி செல்வீர்களேயானால், இந்தப் பகுதியில் யாரை நீங்கள் சந்திப்பீர்கள்? பொ.ச.மு. சுமார் நான்காம் நூற்றாண்டில் இருக்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள். இந்தப் பகுதியை தங்கள் கலாச்சாரத்தின் மையமாக ஆக்கிக்கொண்ட கெல்டிய இனத்தவரே உங்களை வரவேற்பார்கள். அருகில் இருந்த குன்றே உள்ளூர் கெல்டிய சமுதாயத்தினருக்கு அரணாக விளங்கியது. இந்த இனத்தவரின் தொழில் பானை செய்தல், காசுகளை பொறித்தல்.
பொது சகாப்தத்தின் ஆரம்பத்தில் நீங்கள் அப்பகுதிக்கு சென்றிருந்தால்? உங்களுக்கு லத்தீன் தெரிந்திருந்தால், உள்ளூர் மக்களோடு நீங்கள் பேசியிருக்க முடியும். ஏனென்றால், அப்போது ரோமர்கள் தங்கள் வடக்கு எல்லைகளை டான்யூப் நதிவரையாக விஸ்தரித்திருந்தனர். அதேசமயம், மேற்கிலிருந்து வந்த ஜெர்மானிய மக்களையும் நீங்கள் அங்கே சந்தித்திருக்கலாம்.
உதாரணமாக, உங்களுடைய சந்திப்பு, இடைநிலைக்காலத்தின்போது, அதாவது எட்டாம் நூற்றாண்டில் இருந்திருந்தால், இனக்கலவரத்தால் தூண்டப்பட்ட கொந்தளிப்பையே நீங்கள் பார்த்திருப்பீர்கள். மாபெரும் இடப்பெயர்ச்சி என்றழைக்கப்பட்ட குடியேற்றம் இந்த காலப்பகுதிக்குள் நிகழ்ந்தது. கிழக்கிலிருந்து ஸ்லாவிய மக்கள் இந்தப் பகுதியில் குடியேற ஆரம்பித்தனர். தென்பகுதியில் ஹங்கேரியர்களும் தங்கள் குடியிருப்பை ஏற்படுத்தினர். பிராடிஸ்லாவா பகுதியிலும் குடியேற ஆரம்பித்தனர். ஆனால், எப்படியோ ஸ்லாவிய செல்வாக்கே நிலைபெற்றது. அந்தப் பகுதியில் கட்டப்பட்ட முதல் அரண் போன்ற மாளிகையின் ஸ்லாவியப் பெயரே இதற்கு ஒரு சான்று. பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இது, ப்ரெஸலாவ்ஸ்புர்ட்ஸ் என அறியப்படலாயிற்று. “ப்ரேஸ்லாவ் மாளிகை” என்பதே அதன் அர்த்தம். உயர் பதவியில் இருந்த ராணுவ அதிகாரி ஒருவரின் பெயரால் இப்படி அழைக்கப்பட்டது என நம்பப்படுகிறது. இதிலிருந்துதான், ஸ்லோவாக்கிய பெயராகிய பிராடிஸ்லாவா வந்தது.
இடைநிலைக்கால நகரம்
காலப்போக்கில், இப்போது ஸ்லோவாக்கியா என்றழைக்கப்படும் நாடு ஹங்கேரியின் பாகமாகியது. பொ.ச. 1211-ன் சரித்திரப் பதிவு ஒன்று, பிராடிஸ்லாவா மாளிகையை ஹங்கேரியின் மிகப் பாதுகாப்பான அரண் என்பதாக குறிப்பிடுகிறது. முப்பது வருடங்களுக்குப் பிறகு, இந்த மாளிகை ரஷ்யாவின் டாடர் குடியரசின் தாக்குதலுக்கு ஈடுகொடுத்தபோது இந்தக் கூற்று சரியென நிரூபிக்கப்பட்டது. மாளிகையை சுற்றி குடியிருப்புகள் வளர இந்த வெற்றி வழிவகுத்தது. 1291-ல், ஹங்கேரிய அரசன் மூன்றாம் ஆன்ட்ரே, முனிசிபாலிடிக்குரிய அந்தஸ்தை இதற்கு வழங்கினார். இதனால், தங்களுக்கு மேயரை தேர்ந்தெடுக்கும் உரிமையையும், டான்யூப் நதிமூலம் பொருட்களை கொண்டுசெல்லும் உரிமையையும், “நிலம் மற்றும் நீர்” மார்க்கமாய் சுதந்திரமாக வணிகத்தை மேற்கொள்ளும் உரிமையையும் இதன் குடிமக்கள் பெற்றனர். கதிரவன் பிரகாசிக்கும் நகரத்தின் மேட்டுநிலப் பகுதிகளில் திராட்சைத் தோட்டங்கள் செழித்தோங்கின. எனவே, வீடுகளில் தயாரிக்கப்பட்ட திராட்சை ரசத்தை விற்கும் குடிமக்கள் உரிமையை அவர்கள் வெகுவாக வரவேற்றனர்.
பின்னர், ஹங்கேரிய அரசர்கள் இன்னும் கூடுதலான சலுகைகளை அந்த நகரத்திற்கு அளித்தனர். இது அந்த நகரம் விரைவாக வளர்ச்சியடைவதற்கு வழிவகுத்தது. 1526-ல், பிராடிஸ்லாவா ஹங்கேரியின் தலைநகராகியது. 1784 வரை இந்த உரிமையைக் கட்டிக்காத்தது. இதற்கிடையே, பிராடிஸ்லாவாவில் பல இனத்தவர் குடியேறினர். இருந்தபோதிலும்,
ஸ்லாவிய மற்றும் ஹங்கேரிய மக்களே பெரும்பான்மையினராக இருந்தனர். ஜெர்மானிய, யூத மக்களும் இவர்களோடு சேர்ந்து, பிராடிஸ்லாவாவில் இருந்த இனத்தவரின் எண்ணிக்கையை இன்னும் கூட்டினர். 17-ம் நூற்றாண்டில், துருக்கிய ஆதிக்கம் மேற்கிலும் வடக்கிலும் விஸ்தரித்தது. எனவே, குரோஷிய இனத்தவர் பலர் பிராடிஸ்லாவாவின் பகுதிகளில் அடைக்கலம் புகுந்தனர். அதே சமயம் மேற்கு ஐரோப்பாவில், கத்தோலிக்கர்களுக்கும் புராட்டஸ்டண்டினருக்கும் இடையே நிகழ்ந்த முப்பதுவருட போரின்போது செக் மக்கள் இப்பகுதிக்கு வந்து அடைக்கலம் புகுந்தனர்.இருபதாம் நூற்றாண்டில் பிராடிஸ்லாவா
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திற்குள்ளாக, பல தேசத்தாரும் பல கலாச்சாரத்தை சேர்ந்தவர்களும் கூடிவாழும் இடமாக ஆகியது பிராடிஸ்லாவா. அந்த சமயத்தில், கடைக்கு சென்று உங்களுக்கு தேவையான பொருளை வாங்க வேண்டுமென்றால், ஜெர்மனியிலோ அல்லது ஹங்கேரிய மொழியிலோதான் கேட்க வேண்டும். யூத சமுதாயத்தினர் செல்வாக்கு செலுத்தியது போலவே, செக் மக்களும் நாடோடி இனத்தவரும் (Gypsies) முக்கிய பாகம் வகித்தனர். முதல் உலக யுத்தத்திற்கு முன், மக்கள் தொகையில் சுமார் 15 சதவீதத்தினரே ஸ்லவோனியர். ஆனால், 1921-க்குள், நகரத்தின் மக்கள்தொகையில் பெரும்பாலானோர் ஸ்லவோனியர்.
விரைவில், இரண்டாம் உலக யுத்தம் எனும் மேகம் ஐரோப்பா முழுவதையும் மூடியது. பிராடிஸ்லாவா சரித்திரத்தின் சோகமான அத்தியாயம் துவங்கியது. அங்கு நிலவிய இன ஒற்றுமையை அது கெடுத்துப் போட்டது. முதலாவதாக, செக் மக்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பிறகு, யூத மற்றும் நாடோடி
இனத்தவரும் நாடுகடத்தப்பட்டனர். மேலும், கான்ஸன்ட்ரேஷன் முகாம்களில் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். இரண்டாம் உலக யுத்தம் முடிவடைந்ததும், ஜெர்மானிய மொழி பேசுபவர்களில் பெரும்பாலானோரும் நாடுகடத்தப்பட்டனர். கடைசியில், அந்தந்த இனத்தவர் தங்கள் சொந்த நகரத்திற்கே திரும்பினர். இன்றும் பல இனத்தவர் கூடிவாழ்வது, பிராடிஸ்லாவாவின் தனிச்சிறப்பு.இன்று பிராடிஸ்லாவாவிற்கு ஓர் உலா
இன்றைய பிராடிஸ்லாவாவில் ஒரு சிற்றுலா செல்ல எங்களோடு வாருங்கள். முதலில், புதுப்பித்து கட்டப்பட்ட, அழகிய பிராடிஸ்லாவா மாளிகையை பார்க்கலாம். மாளிகையின் தோட்டத்திலிருந்து, டான்யூப் நதியின் இருபுறங்களிலும் பரந்துவிரிந்து இருக்கும் நகரத்தின் கண்கவர் காட்சியை கண்டு களிக்கலாம்.
குன்றிலிருந்து கீழே இறங்கினால், மாளிகை இருக்கும் பகுதிக்கு நேர் கீழே உள்ள பழைய நகரத்தை அடையலாம். பிராடிஸ்லாவாவின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம் இது. வித்தியாசமான, குறுகலான அதன் தெருக்களில் காலார நடக்கலாம். பல நூற்றாண்டுகளுக்குமுன் சென்றுவிட்டதுபோல் பிரமை தோன்றும். மத்தியவர்க்கத்தினரின் வீடுகள், அரண்மனைகளின் கவர்ச்சிமிக்க, கட்டிடக்கலையை கண்டு வியக்கலாம். பழம்பெரும் சிற்றுண்டிச்சாலையில் ஒரு கப் காபியோ அல்லது டீயோ, வால்நட் அல்லது கசகசா கலந்த பிராடிஸ்லாவாவின் பிரபலமான பண்டங்களில் சிலவற்றையோ ருசிக்க நீங்கள் விரும்பினால், உள்ளே செல்லலாம்.
பழைய நகரத்திற்கு பக்கத்தில் செல்லும் டான்யூப் நதியின் கரைகளில் காலார நடப்பதில்தான் சுற்றுலாப் பயணிகளுக்கு என்னே ஆனந்தம்! வருடம் முழுவதும் இவர்களை இங்கே காணலாம். நவீன நாளைய பிராஸ்டிலாவாவின் சின்னமாய் திகழும் புதிய பாலத்தை நீங்கள் பார்க்கலாம். அதன் ஆரம்பத்தில் சாய்வான கோபுரத்தின் மேல்மாடியில் இருக்கும் ரெஸ்டாரண்டும் புகழ்மிக்க சின்னம். நதியின் அக்கரையில் இருக்கும் பெட்ர்ஸால்கா குடியிருப்புப் பகுதிக்கு கூரைபோல் இது அமைந்திருக்கிறது. அப்பகுதி மக்கள் அண்ணாந்து பார்த்தால் முதலில் அவர்கள் கண்களில் படுவது இந்த ரெஸ்டாரண்டே.
பிராடிஸ்லாவாவில் கட்டிடத்திற்கு மேல் கட்டிடமாக கட்டப்படுகிறதாக நீங்கள் நினைக்கிறீர்களா? நீங்கள் நினைப்பது சரியே. பழைய நகரத்தில் பல பகுதிகள், சமீபத்தில் புதுப்பித்துக் கட்டப்பட்டன. அதோடு, ஸ்டீல் ஃபிரேம்களும் கண்ணாடி ஜன்னல்களும் உடைய கட்டிடங்கள் 1990-களின்போது காளான்போல் முளைத்துள்ளன. இதுபோன்ற கட்டிடங்கள் இன்னும் வர உள்ளன. அலுவலகங்கள், வியாபார ஸ்தலங்கள், வங்கிகள் போன்ற இந்தக் கட்டிடங்கள் அந்தப் பழைய நகரத்திற்கு நவீன தோற்றத்தை அளிக்கின்றன.
நீங்கள் பிராடிஸ்லாவாவிற்கு சுற்றுலா சென்றதற்கு ஞாபகார்த்தமாக ஏதாவது ஒரு பொருளை வைத்துக்கொள்ள விரும்புவீர்கள். அழகிய லேஸ் மேசைவிரிப்புகள் அல்லது அந்நாட்டு உடையில் உள்ள பொம்மைகள் போன்ற கைவினைப் பொருட்களை விற்கும் கடைக்கு செல்லலாம். அல்லது நீங்கள் விரும்பினால், திறந்தவெளியில் உள்ள மெயின் ஸ்குவேர் மார்க்கெட்டிற்கு போகலாம். பல நூற்றாண்டுகளாக பிராடிஸ்லாவா மக்கள் செய்வதுபோலவே நீங்களும் ஷாப்பிங் செய்யலாம். இந்த நகரத்தில் இருக்கும் உவாட்ச் டவர் சொஸைட்டியின் கண்ணைக்கவரும் கிளை அலுவலகத்தையும் நீங்கள் பார்வையிடலாம்
பிராடிஸ்லாவாவை போய் பார்க்கும் வாய்ப்பு என்றாவது ஒரு நாள் உங்களுக்கும் கிடைக்கலாம். அப்படி கிடைத்தால், பூர்வ நதியோர குடியிருப்பாக இருந்த இந்நகரம் இன்று வண்ணமிக்க, நவீன தலைநகராக வளர்ந்திருப்பதை நிச்சயம் நீங்கள் கண்டு களிப்பீர்கள்.
[பக்கம் 15-ன் படம்]
மரியா தெரஸா
[படத்திற்கான நன்றி]
North Wind Picture Archives
[பக்கம் 16, 17-ன் படம்]
ஸ்லோவாக் தேசிய அரங்கம்
[பக்கம் 17-ன் படம்]
பழைய நகரத்தின் ஒரு தெரு
[பக்கம் 18-ன் படம்]
புதிய பாலமும் அதன் சாய்வான கோபுரமும்
[பக்கம் 18-ன் படம்]
யெகோவாவின் சாட்சிகளின் ராஜ்ய மன்றமும் கிளை அலுவலகமும்