Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஸோவாகீம் பரான்ட் அளித்த “அரிய பரிசு”

ஸோவாகீம் பரான்ட் அளித்த “அரிய பரிசு”

ஸோவாகீம் பரான்ட் அளித்த “அரிய பரிசு”

செக் குடியரசிலிருந்து விழித்தெழு! நிருபர்

“மதிப்பிலா அரிய பரிசையே மிஞ்சியது! செக் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்ட மிக உயரிய படைப்பு!” பத்திரிகை எழுத்தாளர் ஒருவர் உதிர்த்த வார்த்தைகள் இவை. 19-⁠ம் நூற்றாண்டின் புகழ்பெற்ற புதைப்படிவ ஆய்வாளர் ஸோவாகீம் பரான்ட், செக் தேசிய அருங்காட்சியகத்திற்கு அளித்த வெகுமதியைத்தான் இப்படி போற்றிப் புகழ்ந்தார். 1,200-⁠க்கும் அதிகமான பெட்டிகள் முழுக்க முக்கியமான புதைப்படிவங்கள் அடங்கியவையே செக் மக்களுக்கு பரான்ட் வழங்கிய “மதிப்பிலா அரிய பரிசு.” இவற்றை சேகரிக்கவும் ஆராயவும் வகைப்படுத்தவும் அவர் செலவிட்டதோ பல வருடங்கள். இத்தகைய பழைய புதைப்படிவங்களின் சேகரிப்பு ஒருவேளை உங்களுடைய ஆர்வத்தை அந்தளவு தூண்டாதிருக்கலாம். ஆனால், புதைப்படிவ ஆய்வாளர்களுக்கு பரான்டின் வெகுமதி, அரிய புதையலைவிட மதிப்புமிக்கது!

பல மில்லியன் ஆண்டுகளுக்குமுன் (ஜியாலஜிக் காலத்தில்) இருந்ததாக சொல்லப்படும் உயிரினங்களைப் பற்றிய புதைப்படிவங்களை ஆய்வு செய்பவர்களை பேலியன்டாலஜிஸ்ட் (paleontologist) என்றழைக்கின்றனர். இது சமீப ஆண்டுகளில் வளர்ச்சியடைந்த அறிவியல் துறை. கி.பி. 500 முதல் சுமார் 1500 வரையான வரலாற்று காலத்தின்போது, இந்த புதைப்படிவங்கள் “இயற்கையின் விபத்துக்கள்” என புறக்கணிக்கப்பட்டன அல்லது டிராகன்களின் சிதைவுகளில் எஞ்சியவை என கருதப்பட்டன. ஆனால், 18-⁠ம் நூற்றாண்டிற்குள், செல்வசீமான்கள் புதைப்படிவங்களை ஆர்வத்தோடு சேகரிக்கத் துவங்கினர். புதைப்படிவங்களை ஆய்வு செய்வதில் பல நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகளும் ஆர்வம் காட்டினர். அவர்களில் ஒருவரே ஸோவாகீம் பரான்ட். பரான்டைப் பற்றி நமக்கு என்ன தெரியும், புதைப்படிவ ஆய்வுத்துறைக்கு (paleontology) அவர் ஆற்றிய தொண்டு என்ன? சார்ல்ஸ் டார்வினின் காலத்தை சேர்ந்தவர் இவர். எனவே, டார்வினின் பரிணாமக் கொள்கைப் பற்றி பரான்டின் கருத்து என்ன?

பரான்டின் வாழ்க்கைப்பணியில் மாற்றம்

தென் பிரான்சில் உள்ள சோகா எனும் சிறிய பட்டணத்தில், 1799-⁠ல் ஸோவாகீம் பரான்ட் பிறந்தார். பாரிஸில் பொறியியல் பயின்றார். சாலை மற்றும் பாலம் கட்டுவதில் தேர்ச்சி பெற்றார். அதேசமயம், பொது அறிவியலும் பயின்றார். அவர் இயற்கையிலேயே இத்துறையில் அதிமேதையாக திகழ்ந்தார் என்பது விரைவில் தெரியவந்தது. படிப்பை முடித்ததும், ஒரு பொறியியலாளராக பரான்ட் வேலை செய்ய ஆரம்பித்தார். அந்த சமயத்தில்தான் அவருடைய திறமைகள், பிரெஞ்சு அரச குடும்பத்தின் கண்களில்பட்டது. எனவே, அரசர் பத்தாம் சார்லஸின் பேரனுக்கு ஆசானாக இருக்க அழைக்கப்பட்டார். பொது அறிவியலே அவர் சொல்லிக்கொடுத்த பாடம். 1830-⁠ல், பிரான்சில் புரட்சி ஏற்பட்டது. அதன்காரணமாக, அரச குடும்பத்தார் போஹிமியாவிற்கு நாடுகடத்தப்பட்டனர். பிறகு, பரான்டும் அங்கு சென்று அவர்களோடு சேர்ந்து கொண்டார். போஹிமியாவின் தலைநகர் ப்ராக்கில் பரான்ட் மறுபடியும் பொறியியலாளராக வேலை செய்தார்.

சாலை, பாலம் கட்டுவதில் தேர்ச்சி பெற்றவராக விளங்கினார். எனவே, குதிரைகளால் இழுக்கப்படும் இருப்புப்பாதையை அமைப்பதற்காக ப்ராக்கை சுற்றியுள்ள கிராமங்களை சர்வே செய்யும்படி பரான்ட் நியமிக்கப்பட்டார். அவ்வாறு சர்வே செய்யும்போது, அந்தப் பகுதியில் மிகுதியான புதைப்படிவங்கள் இருப்பதை பரான்ட் கவனித்தார். அவற்றை கூர்ந்து பார்த்தபோது, போஹிமியாவில் உள்ள படிவங்களுக்கும் பிரிட்டனிலுள்ள படிவங்களுக்கும் இடையே இருந்த ஒற்றுமைகள் அவரை ஆச்சரியத்தில் மூழ்கடித்தன. அறிவியலுக்கான அவரது ஆர்வத்தை அது மறுபடியும் கிளறியது. எனவே, பரான்ட் பொறியியலுக்கு ஒரு முழுக்கு போட்டுவிட்டு, அடுத்த 44 வருடங்கள், மண்ணியல் மற்றும் புதைப்படிவ ஆய்விற்கு தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார்.

புதைப்படிவங்கள் ஏராளமாக இருக்கும் மத்திய போஹிமியாவின் கிராமப்புறங்கள்தான் பரான்டின் வகுப்பறை. ஒவ்வொரு நாளும், கண்ணைக்கவரும் அழகிய, பலவகையான படிவங்கள் புதிது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டன. 1846-⁠ல், அவருடைய ஆராய்ச்சியின் ஆரம்பக்கட்ட முடிவுகளை பிரசுரிக்க தயாராய் இருந்தார். முன்னொரு காலத்தில், கடலின் அடிப்பரப்பில் வாழ்ந்த ட்ரைலோபைட் என்னும் உயிரினங்களின் புதிய வகைகளை இந்த ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிட்டு, விளக்கினார்.

புதைப்படிவங்களை சேகரிப்பதிலும் ஆராய்வதிலும் பரான்ட் தொடர்ந்து ஈடுபட்டார். பிறகு, 1852-⁠ல், தி சைலுரியன் சிஸ்டம் ஆஃப் சென்ட்ரல் போஹிமியா  a என்று தலைப்பிடப்பட்ட, ஆய்வுக் கட்டுரையின் முதல் தொகுப்பை வெளியிட்டார். ட்ரைலோபைட்டுகளைப் பற்றி முதல் தொகுப்பு விவரித்தது. நண்டு மற்றும் இரால் வகைகள், சுறா மற்றும் திருக்கை இனம், கனவா, சிப்பியினம் மற்றும் பல புதைப்படிவ உயிரினங்களைப் பற்றி இதைத் தொடர்ந்துவந்த தொகுப்புகள் விவரித்தன. பரான்ட் தன் வாழ்நாளில் 22 தொகுப்புகளை வெளியிட்டார். அவற்றில் 3,500-⁠க்கும் மேலான உயிரினங்களைப் பற்றி விவரமாக விளக்கினார். புதைப்படிவத் துறையில் பிரசுரிக்கப்பட்ட மிகப்பெரிய ஆய்வுக்கட்டுரைகளில் இதுவும் ஒன்று.

மிக உன்னிப்புடனும் கட்டுப்பாடுடனும்

பரான்ட் மேற்கொண்ட முறைகளே அவரை மற்ற ஆராய்ச்சியாளர்களிடமிருந்து தனித்து காட்டியது. தன்னுடைய அறிவியலாளர் வேலையில் பொறியியலாளரின் நுணுக்கங்களையும் இணைத்தார். வடிவமைப்பாளராக, பிழைகள் நிறைந்த படங்களையோ அல்லது தவறான கணக்கீடுகளையோ அவர் பொறுத்துக்கொள்ளவில்லை. புதைப்படிவ ஆய்வாளராக, மிகத் துல்லியமான படங்களை தருவதில் அவர் பெரும்முயற்சி எடுத்தார். படங்கள் முற்றிலும் திருத்தமாக இருப்பதற்காக, மிக நுண்ணிய விவரங்களையும் துல்லியமாக தந்தார். அவருடைய ஆய்வுக்கட்டுரையில் சேர்த்திருந்த படங்கள் தேர்ச்சிபெற்ற ஓர் ஓவியரால் வரையப்பட்டன. என்றபோதிலும் அவற்றில் பலவற்றை அவர் மறுபடியும் திருத்தினார்.

எனினும், படங்களை வரைவதில் மட்டுமே பரான்ட் மிக உன்னிப்புடன் இருக்கவில்லை. அவருடைய ஆய்வுக் கட்டுரையின் ஒவ்வொரு தொகுப்பும் அச்சில் கோர்க்கப்பட்டபின், பிழைகளின்றி இருக்கின்றனவா என அவரே சரிபார்த்தார். அப்படி ஏதும் பிழைகள் இருப்பின், அந்தப் பகுதிகளை மறுபடியும் திருத்தி அச்சில்கோர்ப்பதற்காக அனுப்பினார். அவர் வெளியிட்ட எல்லா கட்டுரைகளும் முடிந்தளவு திருத்தமாக இருக்கவேண்டும் என்பதே பரான்டின் குறிக்கோள். இந்த குறிக்கோளில் அவர் மெச்சத்தக்க வகையில் வெற்றியும் கண்டார். இன்று, கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்கு பிறகும்கூட, சைலுரியன் சிஸ்டம் என்ற அவருடைய தொகுப்புகளை ஆராய்ச்சியாளர்கள் ஆதாரமாக பயன்படுத்துகின்றனர்.

பரிணாமத்தைப் பற்றியதென்ன?

சார்ல்ஸ் டார்வினின் உயிரின் தோற்றம் என்ற ஆங்கில புத்தகம் 1859-⁠ல் பிரசுரிக்கப்பட்டது. அப்போது, பரிணாமக் கொள்கையே எங்கும் பிரபலமாக இருந்தது. எனவே அதை அநேக விஞ்ஞானிகள் உடனடியாக ஆதரித்தனர். எனினும், பரான்ட் அதை ஆதரிக்கவில்லை. ஆரம்பத்தில் இருந்தே, பரிணாமக் கொள்கையை அவர் ஏற்கவில்லை. ஏனென்றால், அந்தக் கொள்கை உண்மையென நிரூபிக்கும் சான்றுகள் எதையும் அவர் புதைப்படிவ பதிவுகளில் காணவில்லை. “நிலையற்ற கொள்கைகளை உருவாக்குவதல்ல, மெய்ம்மையை கண்டுபிடிப்பதே” தன் ஆய்வுக்கட்டுரைகளின் நோக்கம் என பரான்ட் சொன்னார். (நேரெழுத்துக்கள் எங்களுடையவை.) சைலுரியன் சிஸ்டம் தொகுப்புகளின் தலைப்பு பக்கம் ஒவ்வொன்றிலும் பின்வரும் வாசகத்தை பதிவுசெய்தார்: “சே ஸ்கா ஸே வூ” (இதுதான் நான் பார்த்தது).

பல மிருகங்களின் உடல்கள் வித்தியாசமான வளர்ச்சி நிலைகளில் இருந்ததை பரான்ட் கவனித்தார். எனினும், அவை பல்வேறு வகையான வளர்ச்சி நிலைகளில் உள்ள ஒரே வகை உயிரினத்தின் உடல்களே என சரியாக தீர்மானித்தார். ஒருவகை உயிரினத்தில் இருந்து மற்றொரு வகை உயிரினம் தோன்றியதற்கான எந்தவித ஆதாரத்தையும் அவர் காணவில்லை. பரான்டின் தத்துவத்தை தொகுத்து, உயிரற்ற உலகம் (ஆங்கிலம்) என்ற புத்தகம் இப்படியாக குறிப்பிடுகிறது: “பரான்டின் எல்லா ஆய்வுக்கட்டுரைகளுமே . . . அத்தாட்சிகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை, இதுவே அதன் சிறப்பு அம்சம். ஆராய்ச்சியின் இந்த ஆரம்பக்கட்டத்தில், கற்பனைக்கோ அல்லது ஊகத்திற்கோ அல்லது பொதுப்படையான கொள்கைகளுக்கோ இடமில்லை.”

பணிவான மனிதன் அளிக்கும் “மதிப்பிலா அரிய பரிசு”

சாதனைகள் பல படைத்து வெற்றிச்சிகரத்தின் கொடுமுடியில் சிறகடித்தார் பரான்ட். என்றபோதிலும், பெருமை அல்லது கபடம் எனும் படுகுழியில் அவர் விழவில்லை. ஐரோப்பாவின் மேதைகளோடு தாராளமாக பழகினார். பல மொழிகளை பேசினார். என்றாலும், சாதாரண மக்களோடும் சரிசமமாக நடந்தார். ஜனங்களோடு நெருக்கமாக பழகுவதற்காக செக் மொழியை கற்றார். இது அவருடைய வேலையில் பெரிதும் உதவியது. கல்வெட்டும் தொழிலாளிகளோடு பேசுவதற்கு இது அவருக்கு உதவியது. புது படிவங்களை அவர் சேகரிக்க அத்தொழிலாளிகள் உதவினர்.

பரான்ட் மதப்பற்றுள்ளவர். இயற்கையில் அவர் கண்டவை கடவுளில் அவருடைய நம்பிக்கையை பலப்படுத்தியது. “முதல் சிருஷ்டிப்புகளின் அரிய பதக்கங்கள்” என புதைப்படிவங்களை அவர் அழைத்தார். மேலும், ஆராய்ச்சியைத் தொடருவதற்கு உதவிய உணர்ச்சியைப் பற்றி அவருடைய ஆய்வுக் கட்டுரையின் முகவுரையில் இப்படியாக குறிப்பிட்டுள்ளார்: “படைப்பாளரின் படைப்புகளில் ஒருசிலவற்றை கூர்ந்து ஆராயும் அல்லது அவற்றை கண்டுபிடிக்கும் ஒருவரை அவை ஆட்கொண்டுவிடுகின்றன, வயப்படுத்துகின்றன; அதோடு அவரை ஆச்சரியமும் ஆவலும் கவர்ச்சியும் திருப்தியும் கலந்த உணர்ச்சியே மேற்கொள்கிறது.”

1883-⁠ல் ஸோவாகீம் இறந்தார். விலைமதிப்பிலா அரிய விஞ்ஞான ஆய்வுக்கட்டுரைகளை விட்டுச் சென்றார். அவர் மிக உன்னிப்புடன் தன் வேலையை நிறைவேற்றியதை உலகிலுள்ள விஞ்ஞானிகள் எல்லாருமே பாராட்டுகின்றனர். உத்தேசமாக கணிப்பதை தவிர்த்து, மெய்ம்மையை நிரூபிக்கும் விதத்திலும் காரியங்களை அவர் கையாண்டார். அவருடைய கண்டுபிடிப்புகளை மிக கவனமாக பதிவுசெய்தார். அதனால்தான் இன்றும் ஸோவாகீம் பரான்டின் படைப்புகள் ஆராய்ச்சியாளர்களுக்கு பெரிதும் உதவுகின்றன. விஞ்ஞானப்பூர்வ கருத்தில் பார்த்தால், பரான்டின் வெகுமதியை “மதிப்பிலா அரிய பரிசையே மிஞ்சியது” என விவரித்த வார்த்தைகள் மிகையல்ல.

[அடிக்குறிப்பு]

a நம் கிரகத்தில் மிக மிகப் பழமையான, ஜியாலஜிக் காலப்பகுதிகளில் ஒன்றாக கருதப்படுவதே “சைலுரியன்.”

[பக்கம் 12, 13-ன் படங்கள்]

1852-ம் ஆண்டில், பரான்ட் வரைந்த ட்ரைலோபைட்டுகளின் படங்கள்

[படத்திற்கான நன்றி]

Sketches: S laskavým svolením Národní knihovny v Praze

[பக்கம் 12-ன் படத்திற்கான நன்றி]

Portrait: Z knihy Vývoj české přírodovědy, 1931