Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அப்பா இல்லா குடும்பங்கள்—காலத்தின் அடையாளம்

அப்பா இல்லா குடும்பங்கள்—காலத்தின் அடையாளம்

அப்பா இல்லா குடும்பங்கள்—காலத்தின் அடையாளம்

இன்று முதலாவது கவனிக்கப்பட வேண்டிய சமுதாயப் பிரச்சினை எது? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இதைக் கண்டுபிடிப்பதற்காக ஐக்கிய மாகாணங்களில் வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட சுமார் 80 சதவீத மக்கள், “வீட்டில் அப்பா இல்லாத” குறைதான் மிகப் பெரிய குறை என்று கூறினார்கள். ஐக்கிய மாகாணங்களில் 2.7 கோடிக்கும் அதிகமான பிள்ளைகள் அப்பா இல்லாமல் வாழ்வதாக வாக்கெடுப்பு காண்பிக்கிறது. அதோடு இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்துக்கொண்டே போகிறது. ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதி நிறுவனத்தின் அறிக்கைப்படி, 1980 முதற்கொண்டு ஐக்கிய மாகாணங்களில் பிறந்த வெள்ளை இனத்தவர் பிள்ளைகளில் சுமார் 50 சதவீதமும், கறுப்பு இனத்தவர் பிள்ளைகளில் சுமார் 80 சதவீதமும் “தங்களுடைய பிள்ளைப் பருவத்தில் ஒரு பகுதியை தாயோடு மாத்திரம் செலவிடுகின்றனர்.” இதன் காரணமாகவே “அப்பாக்கள் இல்லா குடும்பங்களின் எண்ணிக்கையில் உலக சாதனைப் படைத்திருப்பது” ஐக்கிய மாகாணங்களே என்று கூறுகிறது யூஎஸ்ஏ டுடே.

“அநேக குடும்பங்கள் பிளவுபடுவது அமெரிக்காவில் மட்டுமல்ல. ஜப்பானிலும், சொல்லப்போனால் வளர்ச்சியடைந்த எல்லா நாடுகளிலும் இதை கண்ணெதிரில் காணமுடிகிறது” என்று தி அட்லான்டிக் மன்திலி குறிப்பிடுகிறது. வளர்ந்துவரும் பல நாடுகளிலும் இதே நிலைதான். ஆனால் இத்தகைய நாடுகளில் புள்ளி விவரங்களைச் சேகரிப்பது கடினமாக உள்ளது. உவர்ல்டு வாட்ச் பத்திரிகையின்படி “பொருளாதார நெருக்கடி அதிகமாவதால் [ஏழை நாடுகளிலுள்ள] ஆண்கள் தங்கள் மனைவிகளையும் பிள்ளைகளையும் கை கழுவிவிட்டு போய்விடுகிறார்கள்.” எட்டு வயது பிள்ளைகளின் அப்பாமார்களில் 22 சதவீதத்தினர் மட்டுமே தங்கள் பிள்ளைகளோடு வாழ்ந்துவந்தனர் என்பதை கரீபியன் நாட்டில் செய்யப்பட்ட சுற்றாய்வு காட்டியது.

அப்பாக்கள் இல்லா பிள்ளைகள் பைபிள் காலங்களிலும்கூட நிறைய பேர் இருந்தார்கள். (உபாகமம் 27:19; சங்கீதம் 94:6; NW) ஆனால் அன்றைக்கோ, அப்பா இறந்துவிட்டதால் பிள்ளைகள் திக்கற்றவர்களானார்கள். “இன்றைக்கோ, அப்பா குடும்பத்தை விட்டுவிட்டு போய்விடுவதால்” பிள்ளைகள் திக்கற்றவர்களாகின்றனர் என்று எழுத்தாளர் டேவிட் பிளான்கென்ஹார்ன் கூறுகிறார். இன்று அநேகர் “சுபாவ அன்பில்லாத”வர்களாய் இருப்பதற்கு அப்பா இல்லா பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதே அத்தாட்சி. பைபிளின் பிரகாரம் நாம் “கடைசி நாட்களில்” வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதற்கான அத்தாட்சிகளில் இதுவும் ஒன்று.​—2 தீமோத்தேயு 3:1-3.

திடீரென்று அப்பா மாயமாகிவிடும்போது சிறு பிள்ளைகள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். வேதனையும் விரக்தியும் மாறிமாறி வரும் ஒரு சுழற்சியை இது ஆரம்பித்து வைக்கிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகள் சீக்கிரத்தில் மறைந்துவிடுவதில்லை. இந்தத் தொடர் கட்டுரைகளில் அந்த சுழற்சியைப் பற்றி நாம் சிந்திப்போம். வாசகருக்கு மனவாட்டத்தை உண்டுபண்ணுவது எமது நோக்கமல்ல. நிலைகுலைய வைக்கும் இந்தப் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க குடும்பங்களுக்கு உதவும் தகவலை அளிப்பதே எமது நோக்கம்.