Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

‘மம்மி’ பட்டாளம்

“குறைந்தபட்சம் 200 மம்மிக்களை எகிப்தின் மேற்கு பாலைவனத்திலுள்ள ஒரு பெரிய கல்லறையிலிருந்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்துள்ளதாக அறிவிக்கின்றனர்; அவற்றுள் சில, தங்க முகமூடிகளை அணிந்திருந்தன” என்கிறது பிபிசி செய்தி அறிக்கை. கெய்ரோவிலிருந்து தென்மேற்கே சுமார் 300 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் பாவிடி நகரத்திலுள்ள ஒரு பாலைவனச்சோலைக்கு அருகில் இந்த கல்லறை இருக்கிறது. இதில் 10,000-⁠க்கும் அதிகமான மம்மிக்கள் இருக்கலாம் என்று எகிப்தின் மத்திய கிழக்கு செய்தி நிறுவனம் அறிவிக்கிறது. அந்த இடத்திற்கு மம்மிக்களின் பள்ளத்தாக்கு என்ற புதிய பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. பத்து கிலோமீட்டர் நீளமுள்ள அந்த கல்லறை, கிரேக்க-ரோம காலத்திலிருந்தே, அதாவது 2,000 வருடங்களுக்கு முன்பே இருந்திருக்கிறது. இதுவரையிலும் கண்டெடுக்கப்பட்டுள்ள மம்மிக்கள் துணியால் சுற்றப்பட்டிருந்தன, அல்லது மாவுக்கட்டு போடப்பட்டிருந்தன; அவற்றுள் சில, தங்க முகமூடிகளை அணிந்திருந்ததோடு, “பண்டைய எகிப்திய கடவுட்களின் உருவங்கள் அழகாக சித்தரிக்கப்பட்டிருந்த சின்னங்களும் அவற்றின் மார்பில் இருந்தன” என்கிறார் பழமை சின்னங்களின் இயக்குநர் ஜிஹி ஹாவெஸ்.

கொள்ளையடிக்கும் கொள்ளைநோய்

இரண்டாயிரமாவது ஆண்டின் முடிவிற்குள் ஆப்பிரிக்காவில் போலியோவை இருந்த இடம்தெரியாமல் அழித்துவிடலாம் என்று உலக சுகாதார நிறுவனம் எடுத்த எல்லா முயற்சிகளும் அட்ரஸ் இல்லாமல் போனது என்று அறிவிக்கிறது கேப் டைம்ஸ். இந்தப் போலியோ அந்நாட்டிலுள்ள பெரும்பகுதியான ஆட்களிடம் அடைக்கலம் புகுந்துகொள்ள அங்கோலாவில் நடந்த போர் உதவியிருக்கிறது. அங்கோலாவில் போலியோவை வேரோடு அழிக்க இன்னும் குறைந்தபட்சம் பத்து வருடங்களாவது ஆகும் என்கிறார் தென் ஆப்பிரிக்க சுகாதாரத் துறையிலுள்ள தொற்றுநோய் தடுப்பு பிரிவின் இயக்குநரான நீல் கேமெரென். கூடுதலாக, அங்கோலாவின் அண்டை நாடுகளும் இதுபோன்றுதான் அவதிப்படுகின்றன. உதாரணமாக, நமிபியா நாடு திடீரென தோன்றி வேகமாக பரவிவரும் இபோலா போன்ற டெங்கு காய்ச்சலுக்கும், காங்கோ ஜனநாயக குடியரசு நெறிகட்டு வியாதிக்கும் எதிராக போராடிக்கொண்டிருக்கின்றன. காங்கோ, எத்தியோப்பியா, மொஸாம்பிக், நைஜர் மற்றும் நைஜீரியா போன்ற நாடுகளில் இன்னமும் தொழுநோய் ஒரு பெரிய பிரச்சினையாக இருந்துவருகிறது. ஏறக்குறைய அந்த கண்டம் முழுவதிலுமே அதி வேகமாக பரவிவரும் மலேரியா உட்பட இவை எல்லாமே கவலைக்குரியதே; கேமெரென் சொல்லும்விதமாக, “ஒரு நாட்டின் எல்லையோ வேலியோ வியாதியை தடுத்து நிறுத்த முடியாது.”

“உயிருக்கு உயிர் . . . ”

“நம் உடல் பெரும்பாலும் திரவத்தாலானதால், நம் உயிருக்கு தண்ணீர் மிக மிக முக்கியமான ஒன்று” என்று டோரன்டோ ஸ்டார் செய்தித்தாள் அறிவிக்கிறது. “நம் உடலில் 20 சதவீத தண்ணீர் குறைந்தால்கூட உயிருக்கே ஆபத்துவரலாம்.” தண்ணீர் நம் உடலின் வெப்பத்தை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், “உடல் அமைப்புகளுக்குள் உள்ள இரத்த ஓட்டத்தின் மூலம் தண்ணீர், உடல் உறுப்புகளுக்கு ஊட்டத்தை கொண்டு செல்வதோடு கழிவு பொருட்களையும் அகற்றுகிறது. அது கணுக்களிலும் பெருங்குடலிலும் உராய்வுகளை தவிர்க்கிறது, அதோடு மலச்சிக்கலையும் தவிர்க்கிறது.” சராசரி மனிதருக்கு ஒரு நாளைக்கு இரண்டிலிருந்து மூன்று லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. காபி, பாப் மற்றும் மதுபானம் போன்றவை நீரிழப்பை ஏற்படுத்துவதால் இவற்றை பருகும்போது உடலுக்கு இன்னுமதிக தண்ணீர் தேவைப்படுகிறது. உணவுமுறை வல்லுநர் ஒருவர் சொல்கிறார், உங்களுக்கு தாகம் எடுப்பது நீங்கள் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை நினைவுபடுத்துவதற்காக அல்ல, அந்த அளவிற்கும் இருக்கக்கூடாது. ஏனென்றால் தாகம் எடுக்கிறதென்றாலே நீங்கள் அதிகளவான நீரை இழந்துவிட்டிருக்கலாம் என அர்த்தம். “ஒருவர், பகலில் மணிக்கு ஒரு கிளாஸ் என்ற கணக்கில் தண்ணீர் குடித்தால், அவருடைய உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் கிடைக்கும்” என்கிறது அந்த செய்தித்தாள்.

வேலை நேரத்தில் குட்டித்தூக்கம்

“வேலை சமயத்தில் குட்டித்தூக்கம் போடுவதால் வரும் அநேக நன்மைகளை, இதுவரை அறியாமல் தூங்கிக்கொண்டிருந்த கனடா நாட்டு தொழில் நிறுவனங்கள் இப்போது கண் விழித்துப் பார்க்கின்றன” என்கிறது டோரன்டோ ஸ்டார் செய்தித்தாள். முதலாளிகள், இரவு நேரங்களில் வேலை செய்வோருக்காக “சுறுசுறுப்பை மீட்டுத்தரும் அறை”களை ஏற்பாடு செய்கின்றனர். “அந்த அறைகள் மங்கலான வெளிச்சத்துடன், குளிர்ச்சியான, அமைதியான சூழலில் தூங்கிவழிவது மட்டுமல்லாமல், அங்கு அலாரமுள்ள கெடிகாரங்கள், படுக்கைகள் அல்லது சாய்வு நாற்காலிகளும் உள்ளன” என்கிறது ஸ்டார். எனினும் “பழைய முறைகள் எளிதில் மாறிவிடுவதில்லை. அதனால் அந்த நிறுவனங்கள் அப்படிப்பட்ட இடம் ஒன்று இருப்பதை தம்பட்டம் அடித்துக் கொள்வதில்லை.” ராயல் ஒட்டோவா தூக்கக்கோளாறு மைய மருத்துவமனையின் தூக்கக்கோளாறு மருத்துவர் மேரி பெரூஜினி சொல்கிறார்: “நாம் அநேக மணிநேரங்கள் வேலை செய்வதால், அழுத்தங்கள் அதிகமாகின்றன, இவை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே போகின்றன. ஆகவே வேலை நேரத்தில் ஒவ்வொரு நாளும் 20 நிமிடங்கள் தூங்குவது நல்லது. அவ்வாறு செய்வது நிச்சயமாகவே புத்துணர்வை தரும் (அதோடு) நம்முடைய அழுத்தத்தின் அளவையும் குறைக்கும்.”

பனிப்பாறை மிரட்டல்

துருவப் பகுதிகளை தவிர மற்ற இடங்களில் உள்ள உலகத்திலேயே மிக பிரம்மாண்டமான ஐஸ் கட்டிகள், இப்போது உருகும் வேகத்திலேயே தொடர்ந்து உருகினால் 40 வருடத்திற்குள்ளாக அவை இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும், பிறகு தேடினாலும் கிடைக்காது, என்று சொல்லி உருகுகிறது லண்டனின் செய்தித்தாளான த சன்டே டெலிகிராஃப். இமயமலை குறைவான அட்சரேகையில் இருப்பதாலும் பூகோள உஷ்ணம் தொடர்ந்து அதிகரித்து வருவதாலும் அங்குள்ள 15,000 பனிப்பாறைகள் இப்போது ஆபத்தில் உள்ளன. கங்கை நதியின் பிறப்பிடங்களில் ஒன்றாகிய கங்கோத்ரி பனிப்பாறை கடந்த 50 ஆண்டுகளில் அதன் நீளத்தில் மூன்றில் ஒரு பங்கு உருகிவிட்டது. இப்போது இவை உருகிக்கொண்டிருக்கும் இதே வேகத்தில் தொடர்ந்து உருகினால், “70 முதல் 80 சதவீத தண்ணீரை இந்த பனிமழையாலும் பனிப்பாறைகள் உருகுவதாலும் பெற்றுக்கொள்ளும் கங்கை, சிந்து, பிரம்மபுத்திரா போன்ற நதிகள் கொஞ்ச காலத்தில் காய்ந்து வெட்டாந்தரையாகிவிடும்” என்று எச்சரிக்கிறார் பனிப்பாறைகளை கண்காணிக்கும் விஞ்ஞானியாகிய சையத் ஹஸ்னேய்ன். அதன் விளைவு “ஓர் சூழலியல் பேரழிவாக” இருக்கலாம் என அவர் எச்சரிக்கிறார். ஆனால், அதற்கு முன்பே வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பனிப்பாறைகள் உருகும்போது, வலுவற்ற ஐஸ், பாறை, மணல் போன்றவற்றாலான சுவர்களால் சூழப்படும் ஏரிகள் உருவாகின்றன. அவை தொடர்ந்து உருகும்போது, அந்தச் சுவர் வெடித்துச் சிதறி, கீழே இருக்கும் பள்ளத்தாக்குகளை நாசப்படுத்தும்படி வெள்ளத்தை வழியனுப்பி வைக்கின்றன.

புகை பிள்ளைக்கு பகை

உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) கணக்குப்படி, உலகிலுள்ள பிள்ளைகளில் 50 சதவீதத்தினர் புகையிலையால் ஏதாவது ஒரு வகையில் ஆபத்தில் இருக்கின்றனர் என்று சொல்கிறது லண்டனின் செய்தித்தாளான கார்டியன். மற்றவர் புகைப்பதால் அருகிலிருப்பவருக்கு வரும் கொடிய நோய்களில் ஆஸ்துமா, மற்ற சுவாசக்கோளாறுகள், குழந்தைகளின் திடீர் மரண நோய், நடுக்காது வியாதி, புற்றுநோய் போன்றவையும் அடங்கும். புகைப்போருடைய பிள்ளைகளின் படிப்பு பாதிக்கப்படுவதோடு அவர்களின் வாழ்க்கை போக்கிலும் கோளாறுகள் ஏற்படுகிறது என்பதை ஆராய்ச்சிகள் காண்பிக்கின்றன. குடும்பத்தில் பெற்றோர் இருவருக்கும் புகைக்கும் பழக்கம் இருந்தால், அவர்களுடைய பிள்ளைகளுக்கு உடல் நலக்கோளாறுகள் ஏற்பட 70 சதவீத வாய்ப்பு இருக்கிறது; ஒருவேளை பெற்றோரில் ஒருவருக்கு அந்த பழக்கம் இருந்தாலும் அவ்வாறு ஏற்பட 30 சதவீத வாய்ப்பு இருக்கிறது. புகைபிடிக்கும் பழக்கம் குடும்பத்துக்கு எவ்வளவு பெரிய ஆபத்தைக் கொண்டுவரக்கூடும் என்பதை பெற்றோர் உணர அவர்களுக்கு பயிற்சி அளிப்பதை WHO ஊக்குவிக்கிறது. அதோடு பள்ளிகளிலும் பிள்ளைகள் செல்லும் மற்ற இடங்களிலும் புகைபிடிக்க தடைவிதிக்க வேண்டும் என்றும் WHO வற்புறுத்துகிறது.

சுற்றுலா துறையில் வெற்றிமழை

உலக சுற்றுலா திட்ட அமைப்பினுடைய (WTO) முன்னறிவிப்பின்படி, “சர்வதேச சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வருடத்திற்கு 62.5 கோடி என்ற இப்போதைய எண்ணிக்கையிலிருந்து 2020-⁠ல் 160 கோடியாக உயர்ந்துவிடும்” என்று அறிக்கை செய்கிறது தி யுனெஸ்கோ குரியர். “டூரிஸமே உலகத்தின் மிகப் பெரிய வாணிகமாக” ஆகும் அளவிற்கு, இந்த சுற்றுலா பயணிகள் 2 லட்ச கோடி ரூபாய்களை செலவு செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை, ஐரோப்பாவே இதற்குரிய புகழ்பெற்ற இலக்காக இருந்திருக்கிறது. ஏனெனில் பிரான்ஸே அநேக சுற்றுலா பயணிகள் சென்றுள்ள இடமாக திகழ்ந்துள்ளது; 1998-⁠ல் 7 கோடி பேர் அங்கு சென்றுள்ளனர். இருப்பினும், 2020-⁠ல் சீனா அந்த முதல் இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் சர்வதேச சுற்றுலா, கொடுத்துவைத்த சில பணக்காரர்களுக்கு மட்டுமே உரியதாக இருக்கிறது. 1996-⁠ல் உலக மக்கள் தொகையில் வெறும் 3.5 சதவீதத்தினரே வெளிநாடுகள் சென்றுள்ளனர். ஆனால் இது 2020-⁠ல் 7 சதவீதத்தை எட்டிவிடும் என WTO முன்னறிவிக்கிறது.

குட்டி லீவு ஆபத்து

வார இறுதி நாட்களில் அல்லது குட்டி லீவில் பல இடங்களுக்கு சுற்றுலா செல்வது நம்முடைய அன்றாட வாழ்க்கையின் அழுத்தங்களிலிருந்து ரிலாக்ஸ் ஆவதற்கான ஒரு குறுகிய கால எளிய வழி என்று சமீபத்தில் ஐரோப்பிய பயண வாணிகம் சொன்னது; ஆனால் அது “நன்மையைவிட அதிக தீங்கையே கொண்டுவரக்கூடும்” என லண்டனின் செய்தித்தாளான கார்டியன் சொல்கிறது. உலக சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த இதய நோய் மருத்துவர் வால்ட்டர் பேசீனி சொல்வதை கவனியுங்கள்: பேக் பண்ணுவது, விமான நிலையத்துக்கு அடித்துபிடித்து ஓடுவது, விமானத்தில் போவது, அதோடு சீதோஷண நிலை, சாப்பாடு, நேர மண்டலங்கள் போன்றவற்றில் ஏற்படும் மாற்றமெல்லாம் சேர்ந்து உங்களை சோர்வடையச் செய்துவிடும்; அதுமட்டுமல்லாமல் உங்களுக்கு ஆபத்தையும் விளைவிக்கக்கூடும். ரிலாக்ஸ் ஆவதற்கு, வித்தியாசமான அந்த சீதோஷண நிலை மற்றும் வாழ்க்கை முறைக்கு செட் ஆவதற்கு நம் உடல் கொஞ்ச நாட்களாவது எடுக்கும், ஆனால் அவ்வாறு நடக்காதபோது அல்லது போதிய சமயம் இல்லாதபோது இரத்த ஓட்டமும் தூக்கமும் பாதிக்கப்படுகிறது. டாக்டர் பேசீனியின் ஆய்வுப்படி “ஒரு வாரம் அல்லது அதற்கு அதிகமான நாட்கள் விடுமுறையில் சென்றவர்களைவிட, ஒரு சில நாட்களே சென்றவர்களில் 17 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெரும்பாலும் மாரடைப்பால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதேபோல 12 சதவீதத்திற்கும் அதிகமானோர் கார் விபத்தில் சிக்கியிருக்கின்றனர்” என்கிறது அந்த செய்தித்தாள். “நான் சொல்ல வருவதெல்லாம், குறுகிய கால விடுமுறையே ஆபத்தானது என்பது அல்ல, ஆனால் செல்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் அதற்காக நன்கு திட்டமிட வேண்டும் என்பதே” என்ற டாக்டர் பேசீனியின் வார்த்தைகள் லண்டனின் செய்தித்தாளான டெய்லி டெலிகிராஃப்-⁠ல் இடம்பெற்றிருந்தன. “ஜனங்கள் இப்போதெல்லாம் வெகு குறுகிய கால விடுமுறையில் செல்கின்றனர், ஒரு சில நாட்களுக்குள்ளாக அநேக இடங்களுக்கு செல்ல திட்டமிடுகின்றனர்; ஆனால் ரிலாக்ஸ் செய்வதற்கு அது சரியான வழியே அல்ல. இன்னும் சொல்லப்போனால், அது இன்னும் அதிக அழுத்தத்தையே கொடுக்கும்.”

பலிவாங்கும் சங்கிலிக்கறுப்பன்

“சங்கிலிக்கறுப்பன் பாம்பு (Rattlesnake) இறந்த பிறகும்கூட உங்களை தாக்கலாம்​—⁠இப்படிப்பட்ட அசாதாரணமான செயல், அதாவது இறந்த பிறகும் பலிவாங்குவது பொதுவாகவே இருந்துவருகிறது” என்று அறிவிக்கிறது நியூ சையண்டிஸ்ட் பத்திரிகை. அ.ஐ.மா.-வில் உள்ள அரிஜோனாவில், சுமார் 11 மாத காலப்பகுதியில் இந்த சங்கிலிக்கறுப்பன் பாம்பு கடித்த 34 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களுள் 5 பேர், அந்த பாம்பு அடித்து கொல்லப்பட்ட பிறகு தாக்கியது என்று சொன்னதாக இதைப் பற்றி ஆய்வு செய்த இரண்டு மருத்துவர்கள் சொன்னார்கள். அந்தத் தாக்குதலில் சிக்கிய ஒருவர் முதலில் பாம்பை துப்பாக்கியால் சுட்டார், பிறகு தலை வேறு உடல் வேறு என வெட்டி எடுத்தார், அதன் அசைவுகளெல்லாம் ஆடி அடங்கும்வரை காத்திருந்தார், அதன் பிறகு அதன் தலையை எடுத்தார். அப்போது அது திடீரென தாவி அவருடைய இரு கைகளையும் கடித்துவிட்டது. முந்தைய ஆராய்ச்சியின் பிரகாரம் துண்டிக்கப்பட்ட சங்கிலிகறுப்பன் பாம்பின் தலைக்கு முன்பாக “எந்த பொருளை அசைத்தாலும் உடனே அதை தாக்க முயற்சிக்கும்; அது இறந்து ஒரு மணிநேரம் வரையிலும் அவ்விதம் செய்யும்” என்று அந்த பத்திரிகை சொல்கிறது. “அந்த பாம்பின் மூக்குக்கும் கண்ணுக்கும் இடையிலுள்ள உடலின் உஷ்ணத்தை கணக்கிடும் ஒரு சிறிய உறுப்புதான் ‘உணர்வு குழி.’ இதிலுள்ள இன்ஃப்ரா ரெட் சென்சார்களால் தூண்டப்படும் ஓர் அனிச்சை செயல்தான் இது” என ஊர்வன நிபுணர்கள் நம்புகின்றனர். துண்டிக்கப்பட்ட அந்த பாம்பின் தலையைக்கூட ஒரு “சின்ன பாம்பு” என்றே கருதவேண்டும் என எச்சரிக்கிறார் டாக்டர் ஜெஃப்ரி சுஸ்ஹர்ட். அவர் தொடர்கிறார்: “நீங்கள் அதை நிச்சயம் தொட்டே ஆகவேண்டும் என்ற நிலை ஏற்பட்டால், ஒரு பெரிய குச்சியை பயன்படுத்துங்கள்.”