Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

குச்சிப் பிடி விருந்து!

குச்சிப் பிடி விருந்து!

குச்சிப் பிடி விருந்து!

தைவானிலிருந்து விழித்தெழு! நிருபர்

அந்தச் சிறுமி மகிழ்ச்சி எனும் விமானத்தில் பறந்துகொண்டிருந்ததை அவள் முகமே சொல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தது. அவளுடைய இடது கையில் ஒரு கிண்ணம் செல்லமாக இடம்பிடித்திருந்தது. அதில் சாதமும் காய்கறிகளின் சிறிய துண்டுகளும் மீனும் நிரம்பி வழிந்துகொண்டிருந்தன. சிறுமியின் வலதுகையில் இருந்த இரண்டு சிறிய மூங்கில் குச்சிகள் அதைப் பார்த்து புன்னகைத்தபோது அந்த அருஞ்சுவை விருந்து ஆரம்பித்தது. அவளது சின்ன விரல்கள் அந்த குச்சிகளோடு “விளையாடின.” கிண்ணத்திலிருந்த ருசியான பதார்த்தத்தை குச்சிகளில் எடுத்தாள், வாய்க்கு அழகாக வழியனுப்பினாள், ருசித்து மகிழ்ந்தாள். சில சமயம் அந்தக் கிண்ணத்தை வாய்க்கு அருகில் எடுத்துச் சென்றாள், கடகடவென அந்தக் குச்சிகளை அசைக்கிறாள், சில வினாடிகளில் கிண்ணத்திலிருந்த சாதம் பறந்துவிட்டது​—⁠அவள் வாய்க்குள். இத்தனைக்கும் எந்த சிரமமும் இல்லாமல் ஈஸியாக, கீழே மேலே சிந்தாமல் சாப்பிட்டாள்!

அந்தச் சிறுமியின் கையில் இருந்ததுதான் என்னவென்று நீங்கள் கேட்பது புரிகிறது! அவை வேறொன்றுமில்லை, புகழ்பெற்ற ‘சாப்ஸ்டிக்குகள்தான்.’ சீன மொழியில் இதற்கு க்வைய்ட்சு என்று பெயர்; அதற்கு “வேகமானவை” என்று அர்த்தம். “சாப்ஸ்டிக்” என்ற ஆங்கில வார்த்தை, “வேகம்” என்று அர்த்தமுடைய பேச்சு வழக்கிலுள்ள சாப் என்ற வார்த்தையிலிருந்து வந்தது என்று சொல்லப்படுகிறது. தென்கிழக்கு ஆசியாவில் இவை இல்லாத வீடே இல்லை என்று சொல்லலாம். நீங்களும்கூட ஒருவேளை சைனீஸ் உணவகத்திற்கு சென்றிருந்தால், அங்கு இவற்றை பார்த்திருப்பீர்கள், பயன்படுத்த முயற்சித்திருப்பீர்கள். ஆனால் சாப்ஸ்டிக்குகளை பயன்படுத்தும் இந்த ஐடியா எங்கிருந்து வந்தது என்று உங்களுக்கு தெரியுமா? அவை எங்கே, எப்போது முதலில் பயன்படுத்தப்பட்டன? அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்றும் நீங்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? தெரிந்துகொள்ள வாருங்கள்.

“வேகமானவை”

இந்த சாப்ஸ்டிக்குகள், 20-25 சென்டிமீட்டர் நீளமுள்ள மெல்லிய குச்சிகளே. அந்த குச்சியின் மேற்பகுதி பெரும்பாலும் சதுர வடிவில் இருக்கும். அந்த குச்சியை உறுதியாக பிடித்துக்கொள்ளவும், டேபிளிலிருந்து உருண்டு ஓடிவிடாமல் இருக்கவும் இது வசதியாக இருக்கிறது. அதன் கீழ் பாகம் கிட்டத்தட்ட உருளை வடிவில் உள்ளது. பெரும்பாலும் ஜப்பானிய சாப்ஸ்டிக்குகள் சீனா நாட்டு சாப்ஸ்டிக்குகளைவிட சிறியதாகவும், கீழ்முனை கூர்மையாகவும் இருக்கும்.

இப்பொழுதெல்லாம் சாப்ஸ்டிக்குகள் வதவதவென தயாரிக்கப்படுவதால், அநேக உணவகங்கள், பேக் செய்யப்பட்ட சாப்ஸ்டிக்குகளை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கின்றன. இந்த சாப்ஸ்டிக்குகளின் இரண்டு மேல் முனைகளும் இணைக்கப்பட்டிருக்கும். உணவை உண்பவர் இந்த சாப்ஸ்டிக்குகளை பயன்படுத்துவதற்கு முன் அவ்விரண்டையும் பிரித்துவிட வேண்டும். இவை ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கியெறியக்கூடியவை, இப்படிப்பட்ட சாப்ஸ்டிக்குகள் மரம் அல்லது மூங்கிலால் செய்யப்படுகின்றன. இவை பெரும்பாலும் அலங்கரிக்கப்படுவதில்லை. அழகான, பளபளக்கும் மூங்கில், வார்னிஷ் செய்யப்பட்ட மரம், பிளாஸ்டிக், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், வெள்ளி அல்லது தந்தம் போன்றவற்றால் செய்யப்பட்ட சாப்ஸ்டிக்குகளே பணக்கார ஸ்தாபனங்களிலும் வீடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. சில சமயம் அவற்றில் கவிதைகள் பொறிக்கப்பட்டிருக்கின்றன அல்லது அவை சித்திரங்களால் அழகுபடுத்தப்பட்டிருக்கின்றன.

சாப்ஸ்டிக்குகளை எவ்வாறு பயன்படுத்துவது

சீனா அல்லது ஜப்பான் போன்ற கீழை நாடுகளை விஜயம் செய்யும் அநேகர் ஒரு விஷயத்தை குறித்து மலைத்துபோகின்றனர். ஏறக்குறைய இரண்டு அல்லது மூன்று வயது சிறுபிள்ளைகள்கூட அவர்களுடைய சைஸுக்கு பொருந்தாத பெரிய சாப்ஸ்டிக்குகளைக் கொண்டு சாப்பிடுகிறார்கள். கண்மூடி கண்திறப்பதற்குள் அந்த கோப்பையிலுள்ள உணவு துண்டுகள், அவர்களுடைய வாய்க்குள் குடிபுகுந்துவிடுகின்றன. அதை பார்க்கும்போது இந்த சாப்ஸ்டிக்குகளை பயன்படுத்துவது கஷ்டமே இல்லை, ரொம்ப ஈஸி என்று தோன்றுகிறது.

இந்த “வேகமானவை”யை பயன்படுத்திப் பார்க்க உங்களுக்கும் ஆசையாக இருக்கிறதா? அவற்றை பயன்படுத்தும்போது முதலில் கஷ்டமாகத்தான் இருக்கும், நீங்கள் அந்த சாப்ஸ்டிக்குகளை ஒருபக்கம் கொண்டுசெல்ல அவையோ வேறுபக்கம் போகும். ஆனால் கொஞ்சம் பிராக்டிஸ் செய்தால், அது ரொம்ப ஈஸியாகிவிடும்; உங்கள் கையே நீண்டுவிட்டது போன்றிருக்கும்.

சாப்ஸ்டிக்குகள் ஒரு கையிலேயே, பெரும்பாலும் வலது கையிலேயே பிடிக்கப்படுகின்றன. (பக்கம் 15-⁠ல் உள்ள விளக்கப் படங்களைக் காண்க.) முதலில், உங்கள் கட்டைவிரலைத் தவிர மற்ற நான்கு விரல்களையும் மடக்கி வைத்துக்கொள்ளுங்கள். ஒரு சாப்ஸ்டிக்கை கட்டைவிரலுக்கும் மற்ற விரல்களுக்கும் இடையில் வைத்துக்கொள்ளுங்கள், உங்கள் ஆள்காட்டி விரலின் அடிப்பகுதியாலும் மோதிர விரலின் நுனிப்பகுதியாலும் அதை பிடித்துக்கொள்ளுங்கள். அடுத்த சாப்ஸ்டிக்கையும் அதற்கு இணையாக வைக்க வேண்டும், இதை பேனா பிடிப்பது போலவே பிடிக்க வேண்டும்; கட்டைவிரல், ஆள்காட்டிவிரல், மற்றும் நடுவிரலால் அதை பிடித்துக்கொள்ள வேண்டும். அவ்விரண்டின் முனைகளையும் டேபிளில் தட்டி சமமாக வைத்துக்கொள்ளுங்கள். இப்போது கீழிருக்கும் சாப்ஸ்டிக்கை அசைக்காமல் வைத்துக்கொண்டு, மேலுள்ள சாப்ஸ்டிக்கை பிடித்திருக்கும் ஆள்காட்டிவிரல் மற்றும் நடுவிரலை அப்படி இப்படி அசையுங்கள். அவ்விரண்டு சாப்ஸ்டிக்குகளின் முனைகளையும் ஈஸியாக சேர்க்க வரும்வரையில் தொடர்ந்து செய்துபாருங்கள். அப்படிச்செய்ய வந்துவிட்டால்போதும் அநேக வித்தைகளைச் செய்யும் இந்த கருவிகளை பயன்படுத்தி வித்தைகாட்ட நீங்களும் ரெடி. இதைக்கொண்டு நீங்கள் சீனாவின் சுவைமிக்க உணவிலிருந்து ஒரு சிறிய பருக்கையும் எடுக்கலாம், கவுதாரியின் பெரிய முட்டையையும் எடுக்கலாம்! சீன உணவு பெரும்பாலும் சிறிய சிறிய துண்டுகளாக பரிமாறப்படுவதால் அவற்றை இந்த சாப்ஸ்டிக்குகளில் சாப்பிடுவது ஒரு தனி ருசிதான்.

நீங்கள் என்ன கேட்க வருகிறீர்கள் என்பது புரிகிறது; கோழி, வாத்து, அல்லது பன்றிக்கறி சிறிய துண்டுகளாக வெட்டப்படாமல் அப்படியே பெரிய பெரிய துண்டுகளாக வைக்கப்பட்டால் என்ன செய்வது என்றுதானே கேட்கிறீர்கள்! பெரும்பாலும் இப்படிப்பட்ட இறைச்சி, நாம் சாப்பிடும் அளவிற்கு, சாப்ஸ்டிக்குகளைக் கொண்டே எளிதில் பிய்த்து எடுக்கும் பதத்திற்கு நன்கு வேக வைக்கப்படுகின்றன. பெரும்பாலும் பெரிய துண்டுகளாக பரிமாறப்படும் மீன்களை சாப்பிடும் சமயத்தில், இந்த சாப்ஸ்டிக்குகளைக் கொண்டு புகுந்து விளையாடலாம். கத்தியாலோ முள்கரண்டியாலோ எலும்புகளை பிரிப்பது கொஞ்சம் கஷ்டம், ஆனால் இதில் அந்த தொல்லையே இல்லை.

அதுசரி, சாதம் பரிமாறப்படும்போது என்ன செய்வது என்று கேட்கிறீர்களா? நீங்கள் அழைக்கப்பட்டிருக்கும் அந்த சந்தர்ப்பம் ஒருவேளை சாதாரணமாக அல்லது இன்ஃபார்மலாக இருந்தால், அந்த கிண்ணத்தை உங்கள் இடது கையில் எடுத்து, வாய்க்கு அருகில் வைத்துக்கொள்ளுங்கள்; பிறகு சாப்ஸ்டிக்கைக் கொண்டு சாதத்தை எடுத்து சாப்பிடுங்கள். ஆனால் அது ஒருவேளை முறைப்படியான அல்லது ஃபார்மல் சந்திப்பாக இருந்தால், சாதத்தை கொஞ்சம் கொஞ்சமாக சாப்ஸ்டிக்கால் எடுத்து சாப்பிடுங்கள்.

சீனர்களின் உணவில் ஒன்றாகிய சூப்பைப் பற்றி என்ன, அது எப்போதும் பரிமாறப்படுமே? சாதாரணமாக அந்த சூப்போடு ஒரு பீங்கான் ஸ்பூன் எப்போதும் கொடுக்கப்படும். ஆனால் அந்த சூப்பில் நூடில்ஸ், பனியாரம் போன்றவை, காய்கறி, இறைச்சி, மீன் போன்றவை இருந்தால், அவற்றை எடுக்க உங்கள் வலது கையிலுள்ள சாப்ஸ்டிக்கை பயன்படுத்துங்கள். உங்கள் இடது கையிலுள்ள ஸ்பூனைக்கொண்டு சூப்பை குடியுங்கள்.

சாப்ஸ்டிக்குகளும் இங்கிதங்களும்

ஒரு சீனருடைய வீட்டிற்கு விருந்தினராக அழைக்கப்பட்டிருக்கும் சமயங்களில் சீனர்களின் டேபிள் மேனர்ஸ் அல்லது இங்கிதங்களைப் பற்றி தெரிந்து வைத்திருப்பது நல்லது. முதலில் அநேக பதார்த்தங்கள் டேபிளுக்கு நடுவில் வைக்கப்படுகின்றன. அந்த விருந்தை அளிப்பவர் அல்லது குடும்பத் தலைவர் தன் சாப்ஸ்டிக்குகளை எடுத்து எல்லோரும் சாப்பிடும்படியாக சைகை காட்டும்வரை காத்திருங்கள். இதுவே விருந்தினர் அந்த விருந்தை ஏற்றுக்கொள்கின்றனர் என்பதற்கான ஒரு அடையாளம்; பிறகு சாப்ஸ்டிக்குகளை எடுத்து அந்த விருந்தை ஒருகை பார்த்துவிடலாம்.

மேற்கத்திய வழக்கத்தில் ஒவ்வொரு பதார்த்தமும் டேபிளைச் சுற்றி எல்லோருக்கும் அனுப்பப்படுகிறது. ஆனால் இங்கு அவ்வாறு இல்லை, டேபிளில் உள்ள எல்லோரும் தாங்களே எடுத்துக்கொள்ள வேண்டும். குடும்பமாக உட்கார்ந்து உணவருந்தும் சமயத்தில், எல்லோருக்கும் ஒரே பாத்திரத்தில் உணவு வைக்கப்படுகிறது. அந்த பாத்திரத்திலிருந்து உணவை எடுப்பதற்கும், அவற்றை சாப்பிடுவதற்கும் ஒவ்வொருவரும் அவரவருடைய சாப்ஸ்டிக்குகளையே பயன்படுத்த வேண்டும். சாப்பிடும்போது வாயிலிருந்து சப்தம் வருவது, உங்கள் சாப்ஸ்டிக்குகளின் முனைகளை நக்குவது அல்லது பிடித்தமான ஒரு துண்டிற்காக அந்த பாத்திரத்தில் தேடுவது போன்றவையெல்லாம் அநாகரிகமாக கருதப்படுகின்றன. கிழக்கத்திய நாடுகளின் தாய்மார்கள் சாப்ஸ்டிக்குகளின் முனைகளை கடிக்கக்கூடாது என தங்களுடைய பிள்ளைகளுக்கு சொல்லுவர். ஏனென்றால் அவர்கள் உடல் ஆரோக்கியத்தைப் பற்றியும் கவனமாயிருக்கின்றனர். அதோடு அவ்வாறு செய்வது அந்த சாப்ஸ்டிக்குகளின் அழகையும் கெடுத்துவிடுகிறது.

விருந்தினர் பேரிலுள்ள கரிசனை காரணமாக சிலசமயம், பரிமாறுவதற்கு ஸ்பூன்கள் அல்லது கூடுதல் சாப்ஸ்டிக்குகள் கொடுக்கப்படுகின்றன. நடுவிலுள்ள பொதுவான பாத்திரத்திலிருந்து உணவை எடுத்து மற்ற பாத்திரத்திற்கு அல்லது உங்கள் கிண்ணத்திற்கு வைக்க இவை பயன்படுத்தப்படுகின்றன. விருந்தளிப்பவர் ஒரு நல்ல உணவுத் துண்டை தன்னுடைய சாப்ஸ்டிக்காலேயே எடுத்து உங்கள் கிண்ணத்தில் வைத்தால் சங்கடப்படாதீர்கள் அல்லது தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். எப்படியிருந்தாலும் அவருடைய நோக்கமெல்லாம், தன்னுடைய விருந்தாளி நல்ல உணவுத் துண்டை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே.

கத்தி அல்லது முள்கரண்டி போன்றவற்றால் சுட்டிக்காட்டுவது எவ்வாறு அநாகரிகமாக கருதப்படுகிறதோ அதேபோல இந்த சாப்ஸ்டிக்குகளாலும் சுட்டிக்காட்டுவது அநாகரிகமாக கருதப்படுகிறது. அதேபோன்று உங்கள் கையில் சாப்ஸ்டிக்குகளை வைத்துக்கொண்டே மற்ற பொருளை எடுப்பதும் அநாகரிகமாக கருதப்படுகிறது. ஆகவே நீங்கள் பரிமாறும் ஸ்பூனை, கைக்குட்டையை அல்லது டீ கப்பை எடுக்கும்போது முதலில் உங்கள் சாப்ஸ்டிக்குகளை கீழே வைத்துவிடுங்கள். இதற்காக அநேக சமயங்களில் சிறிய அழகான சாப்ஸ்டிக் ஸ்டாண்டுகள் வைக்கப்படுகின்றன.

நீங்கள் சாப்பிட்டு முடித்த பிறகு, உங்கள் சாப்ஸ்டிக்குகளை வைத்துவிட்டு, ரிலாக்ஸாக உட்கார்ந்து, காத்திருங்கள். எல்லோரும் தங்கள் உணவை முடிப்பதற்கு முன் டேபிளைவிட்டு செல்வது அநாகரிகம். இப்போதும் விருந்து அளித்தவரே அல்லது குடும்பத் தலைவரே முதலில் எழுந்து விருந்தை முடித்துவைக்கிறார்.

இந்த சாப்ஸ்டிக்குகளை எப்படி பயன்படுத்துவது என்று இப்போது நீங்கள் தெரிந்திருப்பீர்கள், நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் சாப்ஸ்டிக்குகளை வாங்கி பிராக்டிஸ் செய்ய வேண்டும். அடுத்தமுறை யாராவது உங்களை சைனீஸ் உணவகத்திற்கு அழைத்தால் அல்லது சீன உணவை அருந்த வீட்டிற்கு அழைத்தால், ஏன் நீங்கள் இந்த “வேகமானவற்றை” அல்லது சாப்ஸ்டிக்குகளை பயன்படுத்தக்கூடாது? அது அந்த உணவை அருஞ்சுவை உணவாக ஆக்கும்!

[பக்கம் 14-ன் பெட்டி/படம்]

சாப்ஸ்டிக்கின் வரலாறு

சாப்ஸ்டிக்குகள் முதலில் சாப்பிடுவதற்காக அல்ல, ஆனால் சமைப்பதற்காகவே பயன்படுத்தப்பட்டன என்று சில சீன கல்விமான்கள் நம்புகின்றனர். சமைக்கப்படாத உணவின் சிறிய துண்டுகள் இலைகளில் சுற்றப்பட்டு, அதில் சூடான கற்களை போட குச்சிகள் பயன்படுத்தப்பட்டன. இதனால் சமைப்பவர் தன்னை சுட்டுக்கொள்ளாமலேயே சமையல் செய்யக்கூடும். பிறகு கொஞ்ச காலம் கழித்து, சமையல் பாத்திரத்திலிருந்து உணவுத் துண்டுகளை வெளியே எடுக்க சாப்ஸ்டிக்குகள் பயன்படுத்தப்பட்டன.

முற்காலத்து சாப்ஸ்டிக்குகள் பெரும்பாலும் சேதமடைந்துவிடக்கூடிய மரத்தால் அல்லது மூங்கிலால் செய்யப்பட்டன.  a இந்த சாப்ஸ்டிக்குகள் முதலில் எப்போது பயன்படுத்தப்பட்டன என்பதை சரியாக சொல்ல முடியாததற்கு இதுவும் ஒரு காரணம். இருப்பினும் இந்த சாப்ஸ்டிக்குகள் முற்காலத்தில் சாங்கு பேரரசின் சமயத்திலேயே பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது (சுமார் பொ.ச.மு. 16 முதல் 11-⁠ம் நூற்றாண்டு வரை). கன்ஃபூசியஸின் காலத்திற்கு (பொ.ச.மு. 551​—⁠479) பிறகு இருந்த ஒரு வரலாற்று ஆவணம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஆவணத்தில் உணவை ‘குத்தி’ சாப்பிட்டதாக சொல்லப்படுகிறது; ஆக அப்போதே ஏதோ ஒருவகை சாப்ஸ்டிக்குகள் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிகிறது.

இருப்பினும் ஆன் பேரரசில் (பொ.ச.மு. 206 முதல் பொ.ச. 220 வரை), எல்லோரும் சாப்ஸ்டிக்கால் சாப்பிடத் துவங்கிவிட்டனர் என்பது தெளிவாக தெரிகிறது. ஹௌனன் மாகாணத்தின் சாங்ஷாவில், அக்காலத்து புதைகுழி ஒன்று தோண்டியெடுக்கப்பட்டது; அதில் ஒரு செட் மெருகூட்டப்பட்ட சாப்பாட்டுப் பாத்திரங்கள் இருந்தது, அந்த செட்டில் சாப்ஸ்டிக்குகளும் இருந்தன.

இந்தச் சீனக் கலாச்சாரம் மூலை முடுக்கெல்லாம் பரவி அனைவரையும் கவர்ந்துவிட்டதால் ஜப்பான், கொரியா, வியட்னாம் போன்ற நாடுகளிலும், மற்ற கீழை நாடுகளிலும் உள்ளவர்கள் சாப்ஸ்டிக்குகளை பயன்படுத்துகிறார்கள்.

[அடிக்குறிப்பு]

a கியுயை சு (வேகமானவை) என்பதற்குரிய முற்காலத்து சீன எழுத்துக்கள் மூங்கிலின் மூல வார்த்தையிலிருந்து வந்தவை; இது முதலில் சாப்ஸ்டிக்குகள் மூங்கிலிலிருந்து செய்யப்பட்டன என்பதை சுட்டிக்காட்டியது.

[பக்கம் -ன் படங்கள்15]

முயற்சி திருவினையாகும்