Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

குவிட்சல்—ஜொலிக்கும் பறவை!

குவிட்சல்—ஜொலிக்கும் பறவை!

குவிட்சல்—ஜொலிக்கும் பறவை!

கோஸ்டா ரிகாவிலிருந்து விழித்தெழு! நிருபர்

பூமி வீட்டில் 0.03 சதவீதத்துக்கும் குறைவான இடவசதியுடைய அறையிலேயே குடியிருக்கிறது கோஸ்டா ரிகா. ஆனால் 875 பறவை இனங்களுக்கு தஞ்சமளிக்கிறது. வண்ண வண்ண உடைகளை சிறகுகளாக உடுத்திக் கொண்டு கனடாவிலும் ஐக்கிய மாகாணங்களிலும் உலவும் பல்வகை பறவைகளைக் காட்டிலும் இந்த எண்ணிக்கை அதிகமே என்று சொல்கிறது ஓர் ஏடு. பறவை காதலர்கள் ஏன் கோஸ்டா ரிகாவுக்குப் படையெடுக்கிறார்கள் என்பது இப்போது நமக்குப் புரிகிறது. இந்தப் பறவைகளில் ஒன்றை​—⁠ஜொலிக்கும் குவிட்சல் பறவையை​—⁠தரிசிப்பதில் நீங்களும் எங்களுடன் சேர்ந்துகொள்கிறீர்களா?

1500-களின் ஆரம்பத்தில் ஸ்பானிய வீரன் எர்னன் கோர்டஸ் மெக்ஸிகோவுக்கு விஜயம் செய்தார். அங்கிருந்த அஸ்டெக் பழங்குடியினர், குவிட்சல் பறவையின் இறகுகளால் செய்யப்பட்ட ஒரு ‘கிரீடத்தை’ அன்பளிப்பாக அவருக்கு வழங்கினர். உயர் மதிப்புள்ள இந்த அலங்கார ‘கிரீடத்தை’ அஸ்டெக் இனத்து அரச குலத்தவர்கள் மாத்திரமே அணிவது வழக்கம். மரகதத்தைப் போல ஜொலிக்கும் இதன் பச்சை வண்ண இறகுகள் ஒருவேளை தங்கத்தைவிட உயர்வாக மதிக்கப்பட்டிருக்கலாம்.

“தேவலோக” அழகுடைய இந்தப் பறவை இன்று மெக்ஸிகோ முதல் பனாமா வரை பரந்த பிராந்தியத்தை சொந்தம் கொண்டாடுகிறது. இயற்கை எழில் கொஞ்சும் மலைகள் சூழ்ந்த மேக காடுகளில் 1,200 மீட்டர் முதல் 3,000 மீட்டர் உயரத்தில் இப்பறவையை தரிசிக்கலாம். இந்தக் காடுகளில் மேகங்கள் எப்படி உருவாகிறது என்று தெரியுமா? மேலெழும் வெப்ப காற்று சீக்கிரத்தில் குளிர்ந்துவிடுவதாலேயே. காலமெல்லாம் இங்குள்ள தாவரங்களின் மேனி பச்சை பசேலென்று பசுமை மாறாமல் இருப்பதையும் பனி மூட்டத்துக்குள் முப்பது மீட்டருக்கும் மேல் வானளாவ உயர்ந்து நிற்கும் கம்பீரமான மரங்களையும் கண் குளிர காணலாம்.

சான் ஜோஸுக்கு வடக்கே சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் சான்டா அலனா வனத்துறை​—⁠இயற்கை சூழலில் குவிட்சலை கண்களால் படம் பிடிப்பதற்கு இனிய சூழல். ஜொலிக்கும் இந்தப் பறவையைக் காணத் துடிக்கும் நம் கண்களுக்கு விருந்தளிக்க இதோ நாம் புறப்படலாம்​—⁠ஒரு கைடின் துணையுடன். இந்தப் பறவையின் மரகதப் பச்சை நிறம் காட்டின் இலைகளோடு இழைந்திருப்பதால் இதனை கண்ணில் “சுடுவது” சற்று கஷ்டம்தான். மென்மையும், இனிமையும் குழைந்த அதன் குரலை ‘மிமிக்’ செய்கிறார் நம் கைடு. நாய்க்குட்டி சிணுங்குவது போல இருக்கிறது. சும்மா இருக்குமா குவிட்சல்? இதற்கு பதில் குரல் கொடுக்கிறது! ஏதோ ஒரு நாய்க்குட்டிதான் காட்டுக்குள் வந்து மாட்டிக்கொண்டு கத்துகிறது என்று நினைத்து ஏமாந்துபோகிறாள் நம்மோடு வந்திருக்கும் ஒரு பெண்மணி!

கொஞ்ச நேரத்துக்குள், சுமார் 15 மீட்டர் உயரத்தில் ஓர் ஆண் பறவை வெட்கம் வழிய கிளையில் வந்து அமர்கிறது, விருந்தினரை விசாரிக்க நினைத்ததோ என்னமோ? உடனே பைனாக்குலரை எடுக்கிறோம். அட, வானவில்லா மரத்தில் வந்து அமர்ந்திருக்கிறது என ஒருகணம் புரியவில்லை. நம் பார்வை அதன் கிட்டே நெருங்க நெருங்க, அந்த நிறங்கள் நான் நீ என போட்டி போட்டுக்கொண்டு நம் கண்ணைப் பறிக்க பார்க்கின்றன. பைனாகுலரை ‘சூம் இன்’ செய்கிறோம், அதன் மார்பு கருஞ்சிகப்பு. இறகுகள் மரகதப் பச்சை. வால் இறகுகளோ பால்போன்ற வெண்மை. அழகுக்கு அழகு சேர்ப்பதுபோல் இன்னும் இரு பச்சை நிற வால் இறகுகள் பளபளக்கின்றன. ஸ்டீமர் என்ற இந்த இறகுகளின் நீளம் சுமார் 60 சென்டிமீட்டர். இப்போது ‘சூம் அவுட்.’ குவிட்சல் ஒயிலாக கிளையில் ஊஞ்சலாட, அதன் நீண்ட தோகை தாவணிபோல் காற்றில் பறக்க, அடடா, இதுவல்லவா அழகு!

குவிட்சலின் அழகை விழிகளில் பருகுவதே ஒரு தனி அனுபவம்தான். இவை அத்தனை எளிதில் பார்வையாளர்களின் விழி வலையில் விழுந்துவிடுவதில்லை. அதனால் அநேகர் பலமுறை விஜயம் செய்த பின்னரே பார்க்க முடிகிறது என நமது கைடு கூறுகிறார். இந்தப் பறவைகள் தங்கள் வீ(கூ)ட்டை கட்டும் காலம் மார்ச் முதல் ஜூன் வரை. இதுவே இப்பறவையை தரிசிக்க தகுந்த தருணம். இந்தப் பருவத்தில் ‘சிறுகுடும்பம் சீரான குடும்பம்’ என்ற சுலோகத்திற்கு இசைவாக இவை இரண்டு முட்டைகள் வீதம் இரண்டு முறை அடைகாத்து குஞ்சு பொறித்துவிடும்.

வனத்துறை அலுவலகத்திற்கு மனமில்லாமல் திரும்புகிறோம். திடீரென ஏதோ சத்தம். சாட்சாத் குவிட்சல் பறவையேதான் நம்மை அழைக்கிறது. நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. பச்சைநிற தோகையை நளினமாக ஆட்டிக்கொண்டு காற்றில் மிதந்துவருகிறது. இப்போது, நாம் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து ஐந்தே மீட்டர் தூரத்திலுள்ள ஒரு மரக்கிளையில்! நம்மைத் தேடி வரவில்லை, காணாமல்போன அதன் “குழந்தையை” தேடி வந்திருக்கிறது என்று பறவையின் பாஷையை மொழிபெயர்த்து சொன்னார் கைடு. அப்பா பறவையும் “என் குழந்தையை பார்த்தீங்களா, என் குழந்தையை பார்த்தீங்களா” என கேட்டுக்கொண்டே மரம் மரமாய் அலைகிறது. சுமார் 25 சதவீத முட்டைகள்தான் நல்லபடியாக பிறந்து வளருமாம். மற்றவற்றை அணில்கள், டோகானெட், பிரவுன் ஜே, வீசல், டையாரா போன்ற பறவைகளும் விலங்குகளும் “ஆம்லேட்” போட்டு சாப்பிட்டு விடுமாம். பெற்ற பிள்ளைகளை பறிகொடுக்கும் சோகத்தோடு கட்டின வீட்டை பறிகொடுக்க வேண்டிய சோகம் வேறு! மூன்று முதல் இருபது மீட்டர் உயரத்தில் உளுத்துப்போன பழைய மரத்தில்தான் இதற்கு வீடு. மரங்கொத்தி வீட்டைப் போலவே இருக்கும். பலத்த மழை பெய்யும்போது துளைகளில் வெள்ளம் புகுந்துவிடுகிறது அல்லது கிளை முறிந்துவிடுகிறது.

அவொகெடொ கனியென்றால் இதற்கு உயிர். பக்கத்தில் எங்காவது அவொகெடொ தொங்கிக்கொண்டிருந்தால் போதும், வாயில் எச்சில் ஊற அதிலேயே கண்ணாய் இருக்கும். எத்தனை நேரம்தான் அதுவும் தாக்குப்பிடிக்கும், திடுதிப்பென புயல் வேகத்தில் கிளம்பி அதை லபக்கென்று பறித்துக்கொண்டு அதே வேகத்தில் திரும்பிவிடும். கொஞ்ச கொஞ்சமாய் சாப்பிடக்கூட பொறுமை இருக்காது, முழு பழத்தையும் அப்படியே விழுங்கிவிடும். 20-லிருந்து 30 நிமிடங்கள் கழித்து அதனுடைய பெரிய விதையை மீண்டும் வாய்க்கு கொண்டுவந்து “அசைபோடும்.”

இந்தப் பறவைகள் காட்டு அவொகெடொ மரத்தைத் தேடி பல்வேறு மலைச்சரிவுகளுக்கு இடம்பெயர்ந்து செல்கின்றன. உதாரணமாக, ஜூலை முதல் செப்டம்பர் வரை அவை பசிபிக் சரிவில் காலத்தை கழித்துவிட்டு பிறகு அக்டோபர் மாதத்தில் கரிபியன் பக்கமாக புதிதாக விளைந்திருக்கும் அவொகெடொவைத் தேடி பறந்துபோகின்றன.

தரைமட்டத்திலிருந்து சுமார் 30 மீட்டர் உயரம் இருந்த தொங்கு பாலத்தை நாம் கடக்கிறோம். குவிட்சல் நம்மீது உரசுவதுபோல சய். . .ங் என்று பறந்து வருகிறது! அது மதிய உணவைத் தேடிக்கொண்டிருந்தபோது நாம் அதன் பாதையில் குறுக்காக வந்துவிட்டோம் போலிக்கிறது. பெண் பறவை நமக்கு மேலே உட்கார்ந்துகொண்டு குறுக்கே வந்துவிட்ட கடுப்பில் ஒரு முறை முறைக்கிறது.

முட்புதர்களில் வளரும் கருப்பு பெர்ரி இதற்குப் பிடித்த இன்னொரு பழவகை. பழத்தை பறிப்பதற்காக இந்தப் பறவை வேகமாக பாய்ந்து வரும்போது சில சமயம் அதன் அழகிய தோகை முட்புதர்களில் சிக்கிக்கொள்ள அவற்றை இழந்துவிடுகிறது. ஆனால் மறுபடியும் அவை முளைத்துவிடுகின்றன.

இப்படியாக இந்தப் பறவை அதன் பெயருக்கு பொருத்தமாக வாழ்கிறது. “குவிட்சல்” என்பது அஸ்டெக் வார்த்தையான “குவிட்சாலி” என்பதிலிருந்து வருகிறது. இதன் பொருள் “மதிப்புள்ளது” அல்லது “அழகானது” என்பதாகும். இந்தப் பறவையின் அழகே இதற்கு ஆபத்தாக இருப்பது வருத்தமான விஷயம். ஆபத்தில் இருக்கும் பறவை இனங்களின் பட்டியலில் குவிட்சல் பெயரும் அடிபடுகிறது. அதன் தோலுக்காக அதை வேட்டையாடுகிறார்கள், இதை நினைவுப் பொருளாக விற்பனை செய்கிறார்கள். சில பறவைகளை உயிரோடு பிடித்து செல்லப் பறவையாக வளர்ப்பதற்கு விற்றுவிடுகிறார்கள். ஆனால் இப்போது சட்டம் குவிட்சலுக்கு சாதகமாக இருப்பதாக நமது கைடு கூறுகிறார்.

காடுகள் அழிக்கப்படுவதால் இவற்றிற்கு வாழிடங்கள் இல்லாமல் போகிறது, இது மற்றொரு ஆபத்தாகும். ஜொலிக்கும் இந்தப் பறவையையும் மற்ற வனவாழ் உயிரினங்களையும் பாதுகாக்க கோஸ்டா ரிகா சுமார் 27 சதவீத இடத்தை இதற்கு ஒதுக்கியுள்ளது.

இந்த அழகிய பறவையை நேருக்கு நேர் பார்க்க நாம் எடுத்த பிரயாசம் வீண்போகவில்லை. எர்னன் கோர்டஸுக்கு கொடுக்கப்பட்ட குவிட்சல் இறகுகளால் செய்யப்பட்ட “கிரீடத்தை” லண்டனிலுள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் கண்களால் சூடிக்கொள்ளலாம். ஆனாலும் இந்த இறகுகளை போர்த்திக்கொண்டு குவிட்சல் உல்லாசமாக சிறகடித்துப் பறந்து திரியும்போது அதை பார்ப்பது தனி அழகுதான்! இப்போதைக்கு, மத்திய அமெரிக்க மேக காடுகளில் ஓரளவு சுதந்திரத்தோடும் பாதுகாப்போடும் குவிட்சலைப் பார்ப்பது மனதுக்கு திருப்தி.