Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பிளாக் டெத்—ஐரோப்பிய இடைக்கால கொள்ளைநோய்

பிளாக் டெத்—ஐரோப்பிய இடைக்கால கொள்ளைநோய்

பிளாக் டெத்—ஐரோப்பிய இடைக்கால கொள்ளைநோய்

பிரான்ஸிலுள்ள விழித்தெழு! நிருபர்

வருடம் 1347. தொலைதூர கிழக்கு நாடுகளை பிளாக் டெத் அல்லது பிளேக் என்ற கொள்ளை நோய் ஏற்கெனவே நாசப்படுத்திவிட்டது. இப்போது ஐரோப்பாவின் கிழக்குப்பகுதியின் நகர்புறத்துக்கும் பரவிவிட்டது.

அப்போது, மங்கோலிய இனத்தவர் அரண் சூழப்பட்ட கஃபியாவின் ஜெனோஸ் நகரை முற்றுகையிட்டிருந்தார்கள். கிரிமியாவிலுள்ள அந்நகர் இன்று ஃபியோடோசியா என்று அழைக்கப்படுகிறது. இது வணிகத்திற்கு பேர்போன இடம். மங்கோலியர்கள் இந்த மர்மமான நோயினால் தாக்கப்பட்டு அதிகளவில் இறந்ததால் தாக்குதலை விட்டுவிட்டு பின்வாங்கினர். ஆனால் பின்வாங்கும்போது கடைசியாக பின்வரும் பயங்கர தாக்குதலை செய்தனர். இராட்சத கவண்களை பயன்படுத்தி, அப்போதுதான் கொள்ளை நோயினால் மரித்தவர்களின் உடல்களை நகரின் மதில்களுக்குள் வீசினர். இந்த நோயிலிருந்து தப்பிக்க ஜெனோஸ் பட்டணத்து எல்லை பாதுகாவலர்கள் கப்பலேறி சென்றபோது எல்லா துறைமுகங்களிலும் இந்நோய் பரவிவிட்டது.

ஒரு சில மாதங்களுக்குள் ஐரோப்பா முழுவதிலும் இந்த நோயால் மக்கள் மாண்டுகொண்டே இருந்தனர். வேகமாக அது வட ஆப்பிரிக்கா, இத்தாலி, ஸ்பெய்ன், இங்கிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரியா, ஹங்கேரி, ஸ்விட்ஸர்லாந்து, ஜெர்மனி, ஸ்காண்டிநேவியா, பால்டிக் ஆகிய நாடுகளுக்கும் பரவியது. இந்நோய் பரவி இரண்டு வருடங்கள் ஆனதும், ஐரோப்பா மக்கள் தொகையில் கால்வாசி அதாவது, சுமார் 2.5 கோடி மக்கள் பலியானார்கள். “இதுவரை மனிதர்களை தாக்கிய நோய்களில் புள்ளிவிவரத்தோடு அறியப்பட்ட மிகவும் கொடுமையான நோய்” இந்த பிளாக் டெத் a

அழிவுக்கு வித்திட்டது

இவ்வாறு ஏராளமான உயிர்கள் பலியானதற்கு பிளாக் டெத் என்ற நோய் மட்டும் காரணம் அல்ல. எத்தனையோ காரணங்களில் மத நம்பிக்கையும் ஒன்று. உதாரணத்திற்கு, சொர்கத்திற்கோ, நரகத்திற்கோ போகாத இறந்தவர்கள் உத்தரிக்கும் ஸ்லத்திற்கு போவதாக மக்கள் நம்பினார்கள். “13-வது நூற்றாண்டுக்குள் உத்தரிக்கும் ஸ்தலத்தில் நம்பிக்கை எல்லா இடங்களிலும் பரவியிருந்தது” என்று பிரெஞ்சு வரலாற்றாசிரியர் ஸாக் லி காஃப் கூறுகிறார். 14-வது நூற்றாண்டின் ஆரம்பத்தில் தாந்தே எழுதிய த டிவைன் காமடியில் நரகத்தையும் உத்தரிக்கும் ஸ்தலத்தையும் தெளிவாக வருணித்திருந்தார். ஆகவே மக்கள் இந்நோயை கடவுளிடமிருந்து வந்த ஒரு தண்டனையாக கருதி, பணிவோடு அதை ஏற்றுக்கொண்டுவிட்டனர். இந்த மனப்பான்மையே, நோய் காட்டுத் தீ போல பரவ காரணம் என்பதை நாம் இக்கட்டுரையில் பார்க்கலாம். மக்களின் இந்த மனப்பான்மை “கொள்ளைநோய் பரவுவதற்கு நல்ல சூழலை அமைத்துக்கொடுத்தது” என்பதாக த பிளாக் டெத் புத்தகத்தில் ஃபிலிப் ஸீக்ளர் குறிப்பிடுகிறார்.

ஐரோப்பாவில் அந்தச் சமயத்தில் பிரச்சினைகளுக்கு குறைவில்லை. விளைச்சலே இல்லை. இதன்விளைவாக இந்தக் கண்டத்தில் வாழ்ந்துவந்த மக்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்கவில்லை, அதனால் நோய்களை எதிர்க்கவும் அவர்களுக்கு சக்தி இல்லை.

கொள்ளைநோய் பரவுகிறது

போப் ஆறாவது கிளெமன்ட் என்பவரின் தனி மருத்துவர் கி டி ஷால்யாக்கின் கருத்துபடி ஐரோப்பாவில் இரண்டு விதமான கொள்ளை நோய்கள் பரவியிருந்தன: நியுமோனிக், ப்யூபானிக். இந்த நோய்களை அவர் தெளிவாக விவரித்து இவ்வாறு எழுதுகிறார்: “நியூமானிக் கொள்ளை நோய் இரண்டு மாதங்கள் நீடித்தது. இடைவிடாமல் ஜுரம் இருக்கும். துப்பினால் இரத்தம் வரும், மூன்றே நாட்களில் நோயாளி இறந்துவிடுவார். ப்யூபானிக் கொள்ளை நோய் அந்தக் காலப்பகுதி முழுவதிலும் இருந்தது. இதற்கும் இடைவிடாத ஜுரம் இருக்கும், உடலுக்கு வெளியே முக்கியமாக அக்குள், தொடை சேருமிடம் ஆகிய இடங்களில் சீழ்கட்டிகளும் பருக்களும் உண்டாகும். இது வந்தால் ஒருவர் ஐந்து நாளில் இறந்துவிடுவார்.” கொள்ளைநோய் பரவுவதை டாக்டர்களால் தடுக்க முடியவில்லை.

திகிலடைந்த அநேகர் ஓட்டம் பிடித்தனர், நோய் தொற்றி ஆயிரக்கணக்கானவர்களோ அங்கேயே தங்கிவிட வேண்டிய கட்டாயம். படித்த பணக்காரர்களும் தொழில் அதிபதிகளும் முதலாவது ஓட்டம்பிடித்தனர். திருச்சபை குருமார்களில் சிலரும் தப்பி ஓடினர். பலர் நோய் தங்களைத் தொற்றிக் கொள்ளாது என்ற நம்பிக்கையில் தங்கள் கோயில் மடங்களில் ஒளிந்துகொண்டனர்.

இந்தக் குழப்பங்களின் மத்தியிலும் போப் 1350-வது ஆண்டை பரிசுத்த ஆண்டு என அறிவித்தார். ரோமுக்கு புனித யாத்திரை மேற்கொள்பவர்கள் உத்திரிக்கும் ஸ்தலத்தை கடந்து செல்லாமலே நேரடியாக பரதீஸுக்குள் சென்றுவிடுவர் என்று சொல்லப்பட்டது! இந்த அழைப்பை ஏற்று லட்சக்கணக்கானோர் புனித யாத்திரை மேற்கொண்டார்கள். இவர்கள் பயணப்பட்ட இடங்களிலெல்லாம் இந்தக் கொள்ளை நோயைப் பரப்பிக்கொண்டே சென்றனர்.

வீண் முயற்சிகள்

பிளாக் டெத் நோய் எவ்வாறு கடத்தப்பட்டது என்பது யாருக்கும் தெரியாத காரணத்தால் இதைக் கட்டுப்படுத்த செய்த முயற்சிகள் தோல்வியடைந்தன. நோயால் தாக்கப்பட்டவரையோ அல்லது அவரின் உடைகளையோ தொடுவதுகூட ஆபத்தானது என்பதை அநேகர் புரிந்துகொண்டனர். இந்நோய் கண்டவர் முறைத்து பார்த்தால்கூட சிலர் அஞ்சி நடுங்கினர்! ஆனால் இத்தாலியில் பிளாரன்ஸில் வாழ்ந்துவந்த மக்கள் பூனைகளாலும் நாய்களாலுமே இந்நோய் வந்தது என்றனர். ஆகவே இந்த விலங்குகளை கொன்று குவித்தனர். ஆனால் அப்படி செய்யும்போது உண்மையில் இந்த நோய் பரவுவதற்கு காரணமான எலிகள் சுதந்திரமாக திரிவதற்கு வாய்ப்பளித்ததை துளிக்கூட உணரவில்லை.

மரணங்கள் அதிகமாகிக்கொண்டே சென்றபோது சிலர் கடவுளிடம் சரணடைந்தார்கள். ஆண்களும் பெண்களும் கடவுள் தங்களை இந்த நோயிலிருந்து காப்பாற்றட்டும், அல்லது செத்த பிறகு பரலோக வாழ்க்கையாவது கிட்டும்படி செய்யட்டும் என்ற நம்பிக்கையில் தங்களிடமிருந்த எல்லாவற்றையும் சர்ச்சுக்கு கொடுத்துவிட்டனர். இதனால் சர்ச்சில் செல்வம் குவிந்தது. அதிர்ஷ்ட தாயத்துகளையும் கிறிஸ்துவின் உருவச்சிலைகளையும் மக்கள் மருந்தாக கருதி விரும்பி வாங்கினர். மற்றவர்கள் மூடநம்பிக்கை, மாய மந்திரம், போலி மருந்துகள் ஆகியவற்றால் குணம்பெற நாடினர். நறுமணத் தைலங்களும் வினிகரும் விசேஷமான சில மருந்துகளும் நோயை விரட்டி அடித்துவிடும் என்று சொல்லப்பட்டது. மருத்துவ முறைப்படி இரத்தத்தை வடியவிட்டால் நோய் நீங்கும் என்று நம்பினவர்களும் இருந்தார்கள். நன்கு கற்றறிந்த நிபுணர்கள் அடங்கிய பாரீஸ் பல்கலைக்கழக மருத்துவ துறை, கிரகங்களின் அப்போதைய நிலையே இதற்கு காரணம் என்றது! போலியான விளக்கங்களாலும் “நோய் நீக்க மருந்துகளாலும்” இந்த நோய் பரவுவதை குறைக்க முடியவில்லை.

நீடித்த பாதிப்புகள்

ஐந்து வருடங்களுக்குப்பின் பிளாக் டெத்திலிருந்து கடைசியாக விடுதலை கிடைத்தது. ஆனால் அந்த நூற்றாண்டின் முடிவுக்குள் அது திரும்பவும் குறைந்தபட்சம் நான்கு தடவையாவது வந்துவிடும். பிளாக் டெத்தின் பின்விளைவுகள் முதல் உலகப்போரின் பின்விளைவுகளுக்கு இணையாக இருக்கும் என்று கருதப்பட்டது. “இந்தக் கொள்ளை நோய் 1348-⁠க்குப் பின் பொருளாதாரத்தையும் சமுதாயத்தையும் வெகுவாக பாதித்துவிட்டது என்பதை அனைத்து நவீன வரலாற்றாசிரியர்களும் ஒட்டுமொத்தமாக ஏற்றுக்கொள்கின்றனர்” என்பதாக த பிளாக் டெத் இன் இங்லண்ட் என்ற 1996-⁠ம் வருட புத்தகம் கூறுகிறது. மக்கள் தொகையில் பெரும்பகுதி இதனால் அழிக்கப்பட்டது, பல நூற்றாண்டுகள் கழிந்தபின்தான் சில இடங்களில் மக்கள் திரும்ப குடியேற ஆரம்பித்தனர். வேலை செய்வதற்கு ஆட்கள் இல்லை என்பதால் அதிகமாக கூலி கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒரு சமயம் பணக்காரராய் இருந்த நிலச் சொந்தக்காரர்கள் நொடித்து போனார்கள், இடைக்காலத்தின் முத்திரையாக இருந்த நிலமானிய முறை நொறுங்கிவிட்டது.

ஆகவே இந்தக் கொள்ளைநோய் அரசியல், சமய, சமூக மாற்றங்களுக்கு தூண்டுகோலாக இருந்தது. இது ஏற்படுவதற்கு முன்பாக இங்கிலாந்தில் கல்வி அறிவு பெற்றிருந்தவர்கள் பிரெஞ்சு மொழியே பேசினர். பிரெஞ்சு மொழி ஆசிரியர்கள் பலர் இறந்துபோனதால் பிரிட்டனில் அதற்குப்பின் ஆங்கில மொழியே ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது. மதத்திலும் மாற்றங்கள் நிகழ்ந்தன. திருச்சபையில் மத குருக்களின் வேலைக்கு ஆட்கள் குறைந்துவிட்டதால் “சர்ச் வேறு வழியில்லாமல் படிப்பறியாதவர்களையும் இந்த வேலையில் ஈடுபாடில்லாதவர்களையும் சேர்த்துக்கொண்டது” என்பதாக பிரெஞ்சு வரலாற்றாசிரியர் ஜெக்குலின் பிராசோல் கூறுகிறார். “படிப்புக்கும் விசுவாசத்துக்கும் மையங்களாக இருந்த சர்ச் நலிவடைந்ததே சீர்திருத்த இயக்கம் தோன்றுவதற்கு ஒரு காரணமாக இருந்தது” என்று பிராசோல் உறுதியாக கூறுகிறார்.

பிளாக் டெத், கலையையும் விட்டுவைக்கவில்லை. மரணத்தை சித்தரிக்கும் கலை வடிவங்கள் பிரபலமாயின. இதில் குறிப்பிடத்தக்கது மரண நடனம் என்னும் பிரபல சித்திரம். மண்டையோடுகளும் சடலங்களும் வண்ணங்களாக தீட்டப்பட்ட இச்சித்திரம், மரணத்தின் கொடூரத்திற்கு சின்னமாக ஆனது. பிளாக் டெத்தில் உயிர் பிழைத்தவர்களுக்கு எதிர்காலம் சூனியமாக தோன்றியது. இவர்கள் ஒழுக்க கட்டுப்பாடுகள் அனைத்தையும் தூக்கியெறிந்துவிட்டு வாழ ஆரம்பித்தனர். ஒழுக்கங்களை குழிதோண்டி புதைத்தாகிவிட்டது. பிளாக் டெத்தை தடுக்கமுடியாத சர்ச் “தன்னை ஏமாற்றிவிட்டது என்று இடைக்கால மனிதன் நினைத்தான்.” (த பிளாக் டெத்) இந்தக் கொள்ளை நோயிக்குப் பின் ஏற்பட்ட சமூக மாற்றங்கள்தான் தனி மனித உரிமையையும் முயற்சியையும் ஆதரித்து வளர்த்து, சமூகமும் பொருளாதாரமும் முன்னேற வாய்ப்பை அளித்தன. இவை முதலாளித்துவம் தோன்ற காரணமாக இருந்தன.

பிளாக் டெத், சுகாதார மேம்பாட்டு திட்டங்களை நிலைநாட்ட அரசாங்கங்களைத் தூண்டியது. கொள்ளை நோய் ஒரு வழியாக மறைந்தபோது வெனீஸ் நகரத்தின் தெருக்கள் சுத்தம் செய்யப்பட்டன. பிரான்சு நாட்டின் இரண்டாம் அரசர் ஜான் என்பவரும் கொள்ளைநோய் வராதிருக்க தெருக்கள் சுத்தமாக வைக்கப்பட வேண்டும் என்று ஆணைப்பிறப்பித்தார். பண்டைய கிரேக்க மருத்துவர் ஒருவர் தெருக்களை சுத்தம் செய்து கழுவி இந்நோய் வராமல் தடுத்தார் என்பதை கேள்விப்பட்ட போது ராஜா இந்த நடவடிக்கையை எடுத்தார். இடைக்காலத்தில் இருந்த தெருக்களில் திறந்த சாக்கடைகள்தான் இருந்தன; அவை கடைசியாக சுத்தம் செய்யப்பட்டன.

கடந்தகால நிகழ்ச்சியா?

1894-⁠ல்தான் பிரெஞ்சு பாக்டீரியாலஜிஸ்ட் அலெக்ஸாண்டிரி எர்சின் என்பவர் பிளாக் டெத்துக்கு காரணமாயிருந்த நோய் கிருமியைக் கண்டுபிடித்தார். அவருடைய பெயரைத் தழுவி இதற்கு எர்சினியா பெஸ்டிஸ் என்ற பெயர் கொடுக்கப்பட்டது. நான்கு வருடங்கள் கழித்து மற்றொரு பிரான்சு நாட்டுக்காரர் பால் லூயி செமான் என்பவர் இந்த நோயை (எலிகள் போன்ற விலங்குகளில் இருக்கும்) உண்ணிகள் எவ்வாறு கடத்துகின்றன என்பதை கண்டுபிடித்தார். தடுப்பூசி ஒன்று சீக்கிரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் இந்நோயை ஓரளவு கட்டுப்படுத்தவும் முடிந்தது.

இந்தக் கொள்ளை நோய் கடந்த காலத்தில் நடந்த ஒரு சம்பவமா? இல்லை. 1910-⁠ல் மன்ச்சூரியாவில் இந்தக் கொள்ளை நோயினால் சுமார் 50,000 பேர் மாண்டனர். ஆண்டுதோறும் புதிதாக ஆயிரக்கணக்கானோருக்கு இது வருவதாக உலக சுகாதார நிறுவனம் பதிவு செய்துவருகிறது​—⁠இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நோயை உண்டுபண்ணும் புதிய நோய் கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன, இவை மருந்தினால் குணமாவதில்லை. ஆம் அடிப்படையான சுகாதார பழக்கங்களைக் கடைப்பிடித்தாலொழிய இந்தக் கொள்ளை நோய் மனிதகுலத்தை அச்சுறுத்திக்கொண்டே தான் இருக்கும். ஜேக்குலின் பிராஸோலெட் மற்றும் அன்ரி மோலாரி தொகுத்த ஏன் இந்த கொள்ளைநோய்? எலி, உண்ணி, ப்யூபோ என்ற பிரெஞ்சு புத்தகம் இவ்வாறு கூறி முடிக்கிறது: “இது இடைக்காலத்தில் பண்டைய ஐரோப்பாவில் வந்த நோய் மட்டுமல்ல. . . . எதிர்காலத்திலும் வரக்கூடிய ஒரு நோய் என்பது வருத்தமான விஷயம்.”

[அடிக்குறிப்பு]

a அந்தச் சமயத்தில் வாழ்ந்துவந்த மக்கள் இதை கொள்ளைநோய் அல்லது தொத்துநோய் என்று அழைத்தனர்.

[பக்கம் 23-ன் சிறு குறிப்பு]

டவுள் தங்களை இந்நோயிலிருந்து காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையில் ஆண்களும் பெண்களும் தங்களிடமிருந்த எல்லாவற்றையும் சர்ச்சுக்கு கொடுத்துவிட்டார்கள்

[பக்கம் 24-ன் பெட்டி/படம்]

கசையடியால் தண்டித்துக்கொள்ளும் பிரிவினர்

இந்தக் கொள்ளை நோய் கடவுளிடமிருந்து வந்த தண்டனை என்று கருதிய சில ஆட்கள் தங்களை கசையால் அடித்து வருத்திக்கொண்டு கடவுளின் கோபத்தைத் தணிக்க முயன்றனர். இந்தச் சகோதரத்துவ இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் 8,00,000 பேர் இருந்ததாக சொல்லப்பட்டது. இவர்கள் இந்த கொள்ளை நோய் இருந்த சமயத்தில் மிகவும் பிரபலமாக இருந்தனர். பெண்களோடு பேசுவது, குளிப்பது அல்லது உடைகளை மாற்றிக்கொள்வது போன்றவை இந்தப் பிரிவினருடைய சட்டங்களில் தடை செய்யப்பட்டிருந்தது. அனைவர் முன்னிலையிலும் ஒரு நாளுக்கு இரண்டு தடவை அவர்கள் தங்களைக் கசையால் அடித்துக்கொண்டார்கள்.

“பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்த மக்கள் தங்கள் பயத்தைப் போக்கிக்கொள்ள இந்தக் கசையடி ஒரு வழியாக இருந்தது” என்பதாக மெடிவல் ஹெரசி என்ற புத்தகம் கூறுகிறது. இப்பிரிவைச் சேர்ந்தவர்களே சர்ச்சின் குரு வர்க்கத்தை வெளிப்படையாக கண்டனம் செய்தனர். இவர்களே, மன்னிப்பு அளித்து பணம் சுரட்டிக்கொண்டிருந்த சர்ச்சின் பழக்கம் ஒழிக்கப்படுவதற்கும் காரணமாக இருந்தனர். ஆகவே 1349-⁠ல் போப் இந்தப் பிரிவை கண்டனம் செய்து ஒதுக்கி வைத்தது ஆச்சரியமாயில்லை. ஆனால் கடைசியில் இந்த இயக்கம் பிளாக் டெத் மறைந்தபோது தானாக மறைந்துபோனது.

[படம்]

கசையடியால் தங்களை வருத்திக்கொண்ட பிரிவினர் கடவுளை சாந்தப்படுத்த முயற்சி செய்தனர்

[படத்திற்கான நன்றி]

© Bibliothèque Royale de Belgique, Bruxelles

[பக்கம் 25-ன் படம்]

பிரான்ஸில் மார்செலிஸ்-⁠ல் கொள்ளைநோய்

[படத்திற்கான நன்றி]

© Cliché Bibliothèque Nationale de France, Paris

[பக்கம் 25-ன் படம்]

அலெக்ஸாண்டிரி எர்சின் என்பவர் இந்தக் கொள்ளை நோய் கிருமியைக் கண்டுபிடித்தார்

[படத்திற்கான நன்றி]

Culver Pictures