Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பொய் சொல்லுதல்—எப்போதாவது நியாயமாகுமா?

பொய் சொல்லுதல்—எப்போதாவது நியாயமாகுமா?

பைபிளின் கருத்து

பொய் சொல்லுதல்—எப்போதாவது நியாயமாகுமா?

“சின்ன பொய் சொன்னா போதும், எக்கச்சக்கமா மாட்டிக்க வேண்டியதில்லை.”

பொய் சொல்லுவதைக் குறித்து பலர் இப்படித்தான் நினைக்கிறார்கள். யாருக்கும் கெடுதியில்லையென்றால் பொய் சொல்லுவதில் தவறில்லை என்பதே அவர்கள் அதற்கு தரும் விளக்கம். இதற்கு சூழ்நிலைக்கு ஏற்ற பண்பாடு (situation ethics) என்ற பட்டப்பெயர் வேறு. அன்பின் சட்டம் என்றழைக்கப்படும் அந்தச் சட்டத்தை மட்டும் நீங்கள் கடைப்பிடித்தால் போதும் என்பதாக அது சொல்கிறது. வேறு வார்த்தையில் கூறினால், “எந்த ஒரு கெட்ட எண்ணமும் இல்லாமல் ஏதோ நல்ல காரியத்துக்காக பொய் சொல்கிறீர்களென்றால் . . . அதைப்பற்றி கவலைபடத் தேவையில்லை” என்பதாக எழுத்தாளர் டையன் காம்ப் கூறுகிறார்.

இந்தக் கருத்து இன்றைய உலகில் சர்வசாதாரணம். அரசியலில் இருக்கும் பெரும்புள்ளிகளும் மற்ற உலக தலைவர்களும் பொய்களைச் சொல்லி செய்திருக்கும் முறைகேடுகள் சமுதாயத்தை அதிர்ச்சி அடையச் செய்திருக்கிறது. இதைப் பார்க்கும் அநேக ஆட்கள் பொய் பேசினால் பரவாயில்லை என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டிருக்கிறார்கள். ஒரு சில இடங்களில் பொய் பேசுவதை கொள்கையாகவே வைத்திருக்கிறார்கள். “பொய் சொல்லுவதற்குத்தான் எனக்கு சம்பளம் தருகிறார்கள். அதிகமாக விற்பனைச் செய்து பரிசுகளை தட்டிச்செல்கிறேன், நான் பொய் சொன்னால் விற்பனை தொடர்பான வருடாந்தர கூட்டத்தில் எனக்கு பஞ்சமில்லாமல் பாராட்டு கிடைக்கிறது. . . . சில்லறை விற்பனை ட்ரேய்னிங்கில் எல்லா இடங்களிலும் இதுவே முக்கியம் என்பது போல தோன்றுகிறது” என்று குறைபட்டுக்கொள்கிறார் ஒரு சேல்ஸ் கிளார்க். யாரையும் பாதிக்காத பொய்களைச் சொல்வதில் தவறு இல்லை என்றே அநேகர் நினைக்கின்றனர். இது உண்மையா? கிறிஸ்தவர்கள் பொய் சொல்லுவதை நியாயமென கருதும் சந்தர்ப்பங்கள் இருக்கின்றனவா?

பைபிளின் மிக உயர்ந்த தராதரம்

எல்லா வகையான பொய்களையும் பைபிள் மிகவும் வன்மையாக கண்டிக்கிறது. “பொய் பேசுகிறவர்களை [கடவுள்] அழி”ப்பார் என்று சங்கீதக்காரன் சொல்கிறார். (சங்கீதம் 5:6; வெளிப்படுத்துதல் 22:15-ஐ காண்க.) நீதிமொழிகள் 6:16-19-⁠ல் யெகோவா வெறுக்கும் ஏழு காரியங்களை பைபிள் வரிசைப்படுத்திக் காண்பிக்கிறது. இந்தப் பட்டியலில் “பொய் நாவு” மற்றும் “அபத்தம் பேசும் பொய்ச்சாட்சி” ஆகியவை முக்கியமாக சேர்க்கப்பட்டுள்ளன. ஏன்? பொய்யினால் ஏற்படும் தீங்கை யெகோவா வெறுக்கிறார். சாத்தானை பொய்யன் என்றும் மனுஷகொலைபாதகன் என்றும் இயேசு அழைத்ததற்கு இது ஒரு காரணமாகும். அவனுடைய பொய்களே மனித குலத்தை வேதனைக்குள்ளும் மரணத்துக்குள்ளும் பிடித்துத் தள்ளிவிட்டிருக்கிறது.​—ஆதியாகமம் 3:4, 5; யோவான் 8:44; ரோமர் 5:⁠12.

பொய் சொல்லுவதை யெகோவா எந்தளவுக்கு பாவமாக கருதுகிறார் என்பதை அனனியாவுக்கும் சப்பீராளுக்கும் நடந்த காரியத்திலிருந்து தெளிவாக தெரிந்துகொள்ள முடிகிறது. இவ்விருவரும் அப்போஸ்தலருக்கு முன்பாக மிகவும் தாராள குணமுள்ளவர்கள் போல தோன்றுவதற்காக முயற்சிசெய்து வேண்டுமென்றே பொய் பேசினார்கள். அவர்கள் மனதார இதை அறிந்தே செய்தார்கள், இதை முன்கூட்டியே திட்டமிட்டு செய்தார்கள். இதன் காரணமாக பேதுரு அப்போஸ்தலன் அவர்களிடம் இவ்வாறு கூறினார்: “நீ மனுஷரிடத்தில் அல்ல, தேவனிடத்தில் பொய்சொன்னாய்.” இதற்காக கடவுளால் தண்டிக்கப்பட்டு இறந்தார்கள்.​—அப்போஸ்தலர் 5:1-10.

பல வருடங்கள் உருண்டோடின, அப்போஸ்தலன் பவுல் கிறிஸ்தவர்களுக்கு இவ்வாறு புத்தி சொன்னார்: “ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்.” (கொலோசெயர் 3:9) இந்த அறிவுரை கிறிஸ்தவ சபைக்கு மிகவும் முக்கியமான அறிவுரையாகும். நியமத்தை அடிப்படையாகக் கொண்ட அன்பு அவரை உண்மையாய் பின்பற்றுகிறவர்களின் அடையாள குறியாக இருக்கும் என்று இயேசு சொன்னார். (யோவான் 13:34, 35) எங்கே நேர்மையும் நம்பிக்கையும் முழுமையாக இருக்கிறதோ அங்குதான் இப்படிப்பட்ட மாய்மாலமற்ற அன்பு செழித்துவளரும். ஒருவர் எப்போதும் நம்மிடம் உண்மையே பேசுவார் என்ற நம்பிக்கை இல்லாவிட்டால் அவர்மீது அன்புசெலுத்துவது கடினமாக இருக்கும்.

எல்லா பொய்யும் அருவருப்பானதாக இருந்தபோதிலும் சில பொய்கள் மற்றவற்றைவிட மிகவும் கொடியவை. உதாரணமாக ஒருவர் சங்கடமாக இருப்பதால் அல்லது பயத்தின் காரணமாக பொய் சொல்லிவிடலாம். மற்றொருவர் யாருக்காவது தீங்கு செய்ய வேண்டும் அல்லது காயப்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு பழக்கமாக பொய் சொல்லிக்கொண்டிருக்கலாம். அவருடைய கெட்ட உள்நோக்கத்தின் காரணமாக வேண்டுமென்றே பொய் சொல்லுபவர் மற்றவர்களுக்கு ஆபத்தானவர். ஆகவே அவர் திருந்தாவிட்டால் சபைநீக்கம் செய்யப்படுவார். எல்லா பொய்களும் கெட்ட உள்நோக்கத்தோடு சொல்லப்படுவதில்லை. ஆகவே தேவையில்லாமல் அவசரப்பட்டு ஒருவர்மீது குற்றம் சுமத்தக்கூடாது. ஏன், எதற்கு என எல்லா விஷயங்களையும் அலசி ஆராய்ந்த பிறகே நடவடிக்கை எடுக்க வேண்டும்.​—யாக்கோபு 2:⁠13.

‘சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்கள்’

உண்மை பேசுகிறவர்களாய் இருக்கவேண்டும் என்றால் நமக்குத் தெரிந்திருக்கும் எல்லா தகவலையும் அதைக் கேட்கிற எல்லாரிடமும் நாம் சொல்லிவிட வேண்டும் என்று அர்த்தமில்லை. “பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதேயுங்கள்; உங்கள் முத்துகளைப் பன்றிகள்முன் போடாதேயுங்கள்; போட்டால் தங்கள் கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும்” என்பதாக இயேசு மத்தேயு 7:6-⁠ல் எச்சரித்திருக்கிறார். உதாரணமாக பொல்லாத உள்நோக்கமுள்ள சிலருக்கு ஒருசில காரியங்களைத் தெரிந்துகொள்ள உரிமை கிடையாது. பகைமை நிறைந்த ஒரு உலகில் வாழ்ந்துகொண்டிருப்பதை கிறிஸ்தவர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள். இதன் காரணமாகவே “சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடற்றவர்களுமாய் இருங்கள்என்று இயேசு தம்முடைய சீஷர்களுக்கு அறிவுரை கூறினார். (மத்தேயு 10:16; யோவான் 15:19) இயேசு எப்போதுமே எல்லா உண்மைகளையும் சொல்லிவிடவில்லை, குறிப்பாக அப்படி எல்லா உண்மைகளையும் சொல்லிவிடுவது அவருக்கோ அவருடைய சீஷர்களுக்கோ அனாவசியமாக தீங்கை கொண்டுவரும் என்பதால் அவர் அவ்விதமாக செய்யவில்லை. இருந்தபோதிலும் அந்தச் சமயங்களிலும்கூட அவர் பொய் பேசவில்லை. அதற்கு பதிலாக அந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் அவர் மௌனமாக இருந்தார் அல்லது பேச்சை வேறுபக்கமாக திருப்பிவிட்டார்.​—மத்தேயு 15:1-6; 21:23-27; யோவான் 7:3-10.

ஆபிரகாம், ஈசாக்கு, ராகாப், தாவீது போன்ற பைபிளில் குறிப்பிடப்பட்டிருக்கும் உண்மையுள்ள ஆண்களும் பெண்களும் அதேவிதமாகவே எதிரிகளோடு பேசுகையில் விவேகமாயும் ஜாக்கிரதையாயும் இருந்தனர். (ஆதியாகமம் 20:11-13; 26:9; யோசுவா 2:1-6; 1 சாமுவேல் 21:10-14) இவர்களை உண்மையுள்ள வணக்கத்தார் என்றும் இவர்கள் எப்போதும் கீழ்ப்படிதலுள்ளவர்களாய் இருந்தார்கள் என்றும் பைபிள் பேசுகிறது. ஆகவே இவர்கள் மாதிரியை நாம் பின்பற்றலாம்.​—ரோமர் 15:4; எபிரெயர் 11:8-10, 20, 31, 32-39.

பொய் சொல்லிவிட்டால் எளிதில் தப்பித்துக்கொள்ள முடியும் என்ற சூழ்நிலைமைகள் வரலாம். ஆனால் கிறிஸ்தவர்களோ குறிப்பாக மிகவும் கடினமாக இருக்கும் சூழ்நிலைமைகளில் இயேசுவின் மாதிரியையும் பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட அவர்களுடைய மனசாட்சியையும் பின்பற்ற வேண்டும்.​—எபிரெயர் 5:⁠14.

உண்மை பேசும்படியும் நேர்மையாக இருக்கும்படியும் பைபிள் நம்மை உற்சாகப்படுத்துகிறது. பொய் சொல்லுவது தவறு. நாம் பைபிளின் பின்வரும் புத்திமதியைப் பின்பற்ற வேண்டும்: “அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன்.” (எபேசியர் 4:25) அப்படி செய்தால் நமக்கு சுத்தமான மனசாட்சி இருக்கும், சபையில் சமாதானமும் அன்பும் பெருகும், ‘சத்தியபரராகிய கர்த்தரை’ நாம் தொடர்ந்து கௌரவிப்போம்.​—சங்கீதம் 31:5; எபிரெயர் 13:⁠18.

[பக்கம் 20-ன் படம்]

பொய், அனனியா, சப்பீராள் உயிருக்கே உலை வைத்தது