Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வானத்திற்கு படிக்கட்டு

வானத்திற்கு படிக்கட்டு

வானத்திற்கு படிக்கட்டு

பிலிப்பீன்ஸிலிருந்து விழித்தெழு! நிருபர்

இதன் மொத்த நீளம் சீனப் பெருஞ்சுவரைப் போல பத்துமடங்கு நீளமானது. துண்டு துண்டாக இருக்கும் இதன் வரப்புகளை ஒன்றாக இணைத்தால் இதன் நீளம் 20,000 கிலோமீட்டரை எட்டும் என்று சிலர் சொல்கின்றனர். அதாவது உலகத்தின் சுற்றளவில் பாதி! சிலர் இதை எட்டாவது உலக அதிசயம் என்றும் அழைக்கின்றனர். இது இவ்வளவு அதிசயமானதாக இருந்தபோதிலும் அநேகர் இதைப் பற்றி கேள்விப்பட்டதே இல்லை. இது பிலிப்பீன்ஸில் உள்ளது. இது என்னவென்று உங்களுக்கு தெரியுமா? இது மத்திய கார்டிலேராவிலுள்ள படிக்கட்டுகளைப்போன்று தோற்றமளிக்கும் பயிர்நிலங்களே. இவற்றில் அரிசி பயிர்செய்யப்படுகிறது. உயரமான லியூசோன் மலையில் ஒளிந்திருக்கும் இது, அழகிற்கும் கலைநுட்பத்திற்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

இவை ஏன் கட்டப்பட்டன? இந்த கார்டிலேரா பகுதியில் இருக்கும் மலைகள் எல்லாம் அதிக செங்குத்தாக இருப்பதால், சாதாரணமாக இங்கே விவசாயம் செய்ய முடியாது. சில பகுதிகள் 50 சதவீதத்திற்கும் அதிகமாக செங்குத்தாக இருக்கின்றன. ஆனால் அக்காலத்து விவசாயிகள் இவற்றை எல்லாம் பார்த்து தயங்கிவிடவில்லை. பச்சைப் பசேலென்று செழிப்பாக இருக்கிற இந்த மலைகளில், 1,200 மீட்டருக்கும் மேலே ஆயிரக்கணக்கான படிக்கட்டுகளைப் போன்று பயிர்நிலங்களை செதுக்கிக் கட்டினார்கள். சிலசமயம் 25, 30 அல்லது அதற்கும் அதிகமான படிக்கட்டுகள் வரிசையாக ஒன்றன்மேல் ஒன்றாக கட்டப்பட்டிருப்பதால், ஏதோ வானத்திற்கு போவதற்கான வழியைப் போன்று காட்சியளிக்கின்றன. இந்த படிக்கட்டுகள் ஒவ்வொன்றும் நீர்த்தேங்கியிருக்கும் நிலங்களாகும். இந்நிலங்களைச் சுற்றி மண் அணைக்கட்டுகள் கட்டப்படுகின்றன; அத்துடன் பாதுகாப்பிற்காக கற்களால் சுவர்களும் கட்டப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலும் அரிசி பயிர்செய்யப்படுகிறது. மலைகள் எவ்வாறு வளைந்துநெளிந்து செல்கிறதோ அதேபோன்று இந்நிலங்களும் இருக்கின்றன; சில மலைச்சரிவுகள் உட்குழிஉருவாகவும், சிலவை புறக்குவிஉருவாகவும் காணப்படுகின்றன.

பிலிப்பீன்ஸில் உள்ளவர்களுக்கு இப்படிப்பட்ட படிக்கட்டுகளில் விவசாயம்செய்வது ஒன்றும் புதிய அல்லது அதிசயமான ஒன்றல்ல. இப்படிப்பட்ட படிக்கட்டு நிலங்கள் மற்ற சில நாடுகளிலும் காணப்படுகின்றன. குறிப்பாக தென்கிழக்கு ஆசியா, தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் இவை காணப்படுகின்றன. இருப்பினும், பிலிப்பீன்ஸிலுள்ள அரிசி பயிர்செய்யப்படும் இந்த படிக்கட்டுகள் உண்மையில் அநேக விஷயங்களில் தனித்தன்மை வாய்ந்தவை. சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த மரியோ மோவில்யோன் விழித்தெழு! நிருபரிடம் இவ்வாறு சொன்னார்: “மற்ற நாடுகளில் இருக்கும் படிக்கட்டு பயிர்நிலங்களைவிட பிலிப்பீன்ஸின் அரிசி படிக்கட்டுகளில் பெரிய அளவில் விவசாயம் செய்யப்படுகிறது. கார்டிலேராவிலுள்ள மலைகளின் பெரும்பகுதி இவற்றிற்காக பயன்படுத்தப்படுகிறது.” குறிப்பாக இவற்றின் பெரும்பகுதி இப்ஃயூகாவு மாகாணத்தில் உள்ளன. அங்குள்ள எண்ணிலடங்கா அழகிய படிக்கட்டுகளைப் பார்த்து மயங்காதவர் ஒருவரும் இருக்க முடியாது. கம்பீரமாக நின்றுகொண்டிருக்கும் மலைகளில் செதுக்கப்பட்டிருக்கும் அழகு, அழகிற்கு அழகு சேர்க்கிறது.

உலக அதிசயமா?

இவற்றை நாம் எட்டாவது உலக அதிசயம் என்று சொல்லக்கூடுமா? அல்லது ஒருவேளை அவ்வாறு சொன்னால் அதை மிகைப்படுத்துவது போன்றிருக்குமா? சரி, இந்த உண்மையை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்: “மனித வரலாற்றிலேயே இது ஒன்றுதான் மிகப்பெரிய விவசாய திட்டமாக இருக்கக்கூடும். டிசம்பர் 1995-⁠ல் இந்த இப்ஃயூகாவு அரிசி படிக்கட்டுகளை ஐக்கிய நாட்டுக் கல்வி, விஞ்ஞானம், கலாச்சார நிறுவனம் அதனுடைய உலக சொத்து என்ற பட்டியலில் சேர்க்க தீர்மானித்தது. அதன் விளைவாக, இந்தியாவின் தாஜ்மஹால், ஈக்வடாரின் கேலாபேகோஸ் தீவுகள், சீனப் பெருஞ்சுவர், கம்போடியாவின் அன்ங்கோர் வாட் போன்றவை எவ்வாறு வரலாற்றிலும் கலாச்சாரத்திலும் பெரும் மதிப்புடையதாக கருதப்படுகின்றனவோ, அவற்றிற்கு இணையாக இந்த படிக்கட்டுகளும் கருதப்படுகின்றன. எகிப்தின் பிரமிடுகளைப்போன்ற முற்காலத்தில் கட்டப்பட்ட கட்டிட அமைப்புகள் அடிமைகளைக்கொண்டு கட்டப்பட்டவை; ஆனால், இவை சமுதாயத்தின் கூட்டுமுயற்சியால் கட்டப்பட்டவை. இவை இன்று பயனற்ற நினைவுச்சின்னங்கள் அல்ல ஆனால் இன்றும் இப்ஃயூகாவு மக்கள் இவற்றில் விவசாயம் செய்கிறார்கள்.

அந்த படிக்கட்டுகளை நீங்கள் சென்று பார்த்தால் அதன் அழகு நீங்கள் ஏதோ வேறொரு உலகத்தில் இருப்பதுபோன்ற உணர்வை ஏற்படுத்தும். அங்கு மக்கள் சந்தோஷமாக வேலை செய்துகொண்டிருப்பதை காண்பீர்கள். அவர்கள் வேலை செய்யும் நிலங்களின் அளவு ஒருசில சதுர மீட்டரிலிருந்து 10,000 சதுர மீட்டர் வரை வேறுபடுகின்றன. தண்ணீர் நிலத்தில் ஊறிச்செல்வதற்காக சில வேலையாட்கள் தங்கள் கையிலுள்ள குச்சியால் தரையை குத்திக்கொண்டிருக்கின்றனர். வேலை சமயத்தில் அவர்கள் கைகள் மட்டுமல்ல குரலும் வேலை செய்கிறது; ஒரு இனிய கானத்துடன் சுறுசுறுப்பாக தங்கள் வேலையை செய்கின்றனர். மற்றவர்கள், பயிரிடுகிறார்கள், சிலர் நாற்றுகளை மாற்றி நடுகிறார்கள் அல்லது பயிர்களை அறுவடை செய்கிறார்கள். இளம் கதிர்கள் உற்சாகமாக வளர்ந்துவரும் சமயத்தில் அங்கு சென்றால், நீங்கள் இமைக்க மறந்துவிடுவீர்கள்; அந்த படிக்கட்டுகள் விதவிதமான பச்சை நிறங்களில் உங்கள் கண்களுக்கு விருந்தாகின்றன.

ஈரத்தன்மையில் வளரும் அரிசி வகைகள் உயிர்வாழ பெருமளவு தண்ணீர் தேவை. அதனால் நுட்பம்வாய்ந்த நீர்த்தேக்க முறைகள் பயன்படுத்தப்படுகிறது. மலைகளிலிருந்து வரும் நீரோடைகளை மடக்கி, வளைந்துநெளிந்து செல்லும் கால்வாய் மூலமாகவும், மூங்கில் குழாய்கள் மூலமாகவும் தண்ணீர் கொடுத்து அந்த படிக்கட்டுகளின் தாகத்தை தீர்க்கிறார்கள். அத்துடன் புவிஈர்ப்பு சக்தியால், கணிசமான அளவு தண்ணீர் ஒரு படிக்கட்டிலிருந்து மற்ற படிக்கட்டிற்கு ஓடிவிடுகிறது. இதனால் எல்லா படிக்கட்டுகளிலிருக்கும் கதிர்களும் எப்போதும் புன்னகையுடன் காணப்படுகின்றன. இந்த படிக்கட்டு பயிர்நிலங்கள் எப்போதோ இறந்துபோன நினைவுச்சின்னமாக இல்லாமல் இன்றும் புகழ்பெற்று உயிருடன் செழிக்கும் அதிசயமாக இருக்கின்றன!

இவற்றை யார் கட்டியது?

கண்ணைக் கவரும் இந்த பிரமாண்டமான, தொழில்நுட்பம் மிக்க ஆயிரக்கணக்கான படிக்கட்டுகளை ஒரே இரவில் அல்லது குறுகிய காலத்தில் கட்டியிருக்க முடியாது என்பது, சொல்லாமலேயே புரிந்திருக்கும். அதிலும், இவை எந்தவித நவீன இயந்திரங்களோ கருவிகளோ ஏதுமின்றி கட்டப்பட்டது நம்மை வியக்க வைக்கிறது. ஆகையால் இந்த படிக்கட்டுகளை கட்டும்பணி குறைந்தபட்சம் சில நூற்றாண்டுகளுக்கு முன்பே தொடங்கியிருக்க வேண்டும் என கருதப்படுகிறது.

இந்த வேலை அநேக நூற்றாண்டுகளுக்கு முன்பு துவங்கியது அதாவது 2,000-⁠ம் வருடத்திற்கு முன்பே தொடங்கியது என சில தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இதைக் கட்டியவர்கள் வடக்கு இந்தோசீனாவிலிருந்து அல்லது இந்தோனேசியாவிலிருந்து இடம்பெயர்ந்து வந்து லூஜானில் குடியேறினார்கள் என்று மனிதவியல் நிபுணர்கள் எண்ணுகின்றனர். அவர்கள் வரும்போது படிக்கட்டுகளில் பயிர்செய்யும் தங்களுடைய வழக்கத்தையும் கூடவே கூட்டிவந்தனர். ஒரு படிக்கட்டை கட்டிய பிறகு மற்றொன்று கட்டப்பட்டது, இவ்வாறு அநேக படிக்கட்டுகள் கட்டப்பட்டன.

இவற்றை எவ்வாறு அனுபவிப்பது

இப்போது நாம் அந்த படிக்கட்டுகளை கொஞ்சம் சுற்றிப்பார்க்கப் போவதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். முதலில் நாம் மணிலாவிலிருந்து பனேவா என்ற நகரத்திலுள்ள இப்ஃயூகாவு என்ற இடத்திற்கு ஒரு சொகுசு பஸ்ஸை பிடித்து செல்கிறோம். ஒன்பது மணிநேர பிரயாணத்திற்கு பின்பு அங்கு போய் சேர்கிறோம். இப்போது நாம் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம். நமக்கு பிடித்தமான இடத்திற்கு இப்போது எதில் செல்வது? ஒருவேளை நடந்துசெல்லலாம், ட்ரைசைக்கிளில் (சைடுகார் பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்) செல்லலாம், அல்லது ஜீப்னியிலும் செல்லலாம். ஒருவேளை நமக்கு விருப்பமும், உடலில் தெம்பும் இருந்தால், மலைப்பகுதிகளுக்குள் செல்லும் ஒரு ஒத்தயடி பாதையில் நடந்து போகலாம். அந்தப் பாதையில் போனால் விழிகளுக்கு விருந்துபடைக்கும் அந்த அழகிய படிக்கட்டுகளின் அணிவகுப்பைக் காணலாம். இந்த அதிசயத்தின் பிரமாண்டம் மனிதனால் உருவாக்கப்பட்டது என்ற உண்மை பார்வையாளர்களை திணறடிக்கிறது.

நாம் பாடாட் கிராமத்திற்கு ஒரு ஜீப்னியை பிடித்துச் செல்ல தீர்மானிக்கிறோம். 12 கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் அந்த இடத்தை அடைய அறுபது நிமிடங்களுக்கும் அதிகமாக எடுக்கிறது. குண்டும் குழியுமாக இருந்த அந்தச் சாலை, வண்டியை தாலாட்டி தாலாட்டி வரவேற்றது. ஒருவழியாக வரவேண்டிய இடத்திற்கு வந்து சேர்கிறோம், இனி நடராஜா சர்வீஸ்தான். ஆங்காங்கே ஜம்பமாக நின்றுகொண்டிருக்கும் மலைகளுக்கு நடுவே நம்மை அழைத்துச்செல்லும் அந்த ஒத்தையடிப் பாதை இரண்டு உயரமான குன்றுகளுக்கு நடுவே இருக்கும் ஒரு மலை உச்சிக்கு நம்மை கொண்டுபோய் விடுகிறது. அந்த வழியே செல்லும்போது மலைகளில் வளரும் பல்வகை தாவரங்களை பார்க்க முடியும். (இங்கு வருவதற்கு ஒரு குறுக்குப்பாதையும் இருக்கிறது, ஆனால் அது அதிக சரிவானது. மலைஏறுவதில் பழக்கமில்லாதவர்கள் அதில் செல்வது ஆபத்தானது.) அந்த உச்சியிலிருந்து பாடாடிற்கு செல்லும் ஒரு குறுகிய பாதையில் மெதுவாக கவனமாக இறங்குகிறோம்.

தென்றலுடன் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டே வந்ததில் ஒருசில மணிநேரத்தில், நாம் வரவேண்டிய இடத்தை வந்துசேர்ந்துவிட்டோம். இங்கே ஒய்யாரமாய் நின்றுகொண்டிருக்கும் படிக்கட்டுகள் நம் கண்களுக்கு விருந்தாகின்றன. பாடாட், உட்குழிஉருவான ஒரு மலைச்சரிவுக்கு எதிரே அமைந்திருப்பதால், அந்த படிக்கட்டுகள், வட்ட வடிவிலுள்ள ஒரு பிரமாண்டமான அரங்கத்தைப் போல காட்சியளிக்கிறது. ஒரு படியின்மீது மற்றொன்று அமைந்து நேர்த்தியாக வகிடெடுத்ததுபோல் தென்படுகிறது, வானத்திற்கு போவதற்கான படிக்கட்டுகளைப் போல அமைந்துள்ளன. நாம் அந்த கிராமத்தை நெருங்குகையில், அக்காலத்து ஸ்டைலில் கட்டப்பட்ட இப்ஃயூகாவூ வீடுகளை பார்க்கிறோம். காளான்களை நெடுநெடுவென வளர்ந்த புல்கள் மறைத்திருப்பதுபோன்று அந்த கிராமம் காட்சியளிக்கிறது.

அந்த ஊர் மக்கள் படிக்கட்டுகளில் வேலைசெய்யும்போது அவர்களை கடந்துசெல்கிறோம். நம்மை பார்த்தவுடன் அவர்கள் முகத்தில் புன்னகை தவழ்கிறது, வாழ்த்துதலுடன் நம்மை வரவேற்கின்றனர். ஒரு விஷயத்தைக்கண்டு நீங்கள் நிச்சயம் ஆச்சரியப்படுவீர்கள், அந்த ஊர் மக்கள் இந்தகோடியிலிருந்து அந்தகோடிக்கு போவதற்கு என்ன வழியை பயன்படுத்துகிறார்கள் தெரியுமா? அந்த கல்லால் கட்டப்பட்ட படிக்கட்டுச் சுவர்கள்தான். அவர்கள் அவற்றில் எந்த தயக்கமோ பயமோயின்றி வேகமாக நடந்துசெல்கின்றனர். மற்றவர்கள் ஒருபடியிலிருந்து அடுத்த படிக்கு ஏறும்போது மலை ஆடுகளைப்போல தங்கள் பாதங்களை சரியான இடத்தில் தடுமாறாதபடி உறுதியாக வைத்து நடக்கின்றனர். இதற்காக ஆங்காங்கே சரியாக பாறைகளை வைத்திருக்கின்றனர், அதுதான் அவர்களுடைய படிக்கட்டு. இன்னும் சொல்லப்போனால் அவர்கள் எல்லோரும் அந்த கரடுமுரடான பாதையில் வெறும்காலில்தான் நடக்கிறார்கள். இவர்களைச் சுற்றியே இந்த மலைப் படிக்கட்டுகளின் அற்புத கண்காட்சி அமைந்துள்ளது. மனிதனுடைய கட்டுமானப்பணி சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதத்திலும் அதற்கு அழகுசேர்க்கும் விதத்திலும் அமைந்துள்ள ஓர் அரிய படைப்பு.

இந்த சுற்றுலா உங்களை கிளர்ச்சியூட்டவில்லையா? அப்படியானால், நீங்கள் பிலிப்பீன்ஸிற்கு செல்லும் சந்தர்ப்பம் கிடைத்தால், அங்குள்ள வானத்திற்குரிய படிக்கட்டுகளை மறந்துவிடாதீர்கள். அவற்றை மறக்கவும் முடியாது. காலங்காலத்திற்கு உங்கள் நினைவலைகளை பசுமையாக வைத்துக்கொள்ளும் ஓர் உண்மை அதிசயம்.

[பக்கம் -ன் பெட்டி/படம்18]

படிக்கட்டுகளை பாதுகாத்தல்

இந்த படிக்கட்டுகள் இயற்கை அழகிற்கு அழகு சேர்த்து அங்கு செல்பவர்களை ஆனந்தத்தில் திணறடிப்பது ஒருபக்கம் இருந்தாலும், இப்போது இவற்றிற்கு அடிக்கடி மிரட்டல்கள் வந்துகொண்டிருக்கின்றன. இந்த மலைவாழ் மக்களின் இளைய தலைமுறையினருக்கு விவசாயத்தில் விருப்பமில்லாததால், மற்ற இடங்களுக்கு அல்லது பட்டணங்களுக்கு வேலை தேடி செல்கின்றனர். இதனால் படிக்கட்டுகளை பாதுகாப்பதற்கு தேவையான திறமைவாய்ந்த விவசாயிகள் குறைந்துகொண்டே வருகின்றனர்.

சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்துடன் தொடர்புடைய இப்ஃயூகாவுவைச் சேர்ந்த அரோரா அமாயாவு, நம் விழித்தெழு! நிருபரிடம் மற்றொரு அபாயத்தைப் பற்றியும் சொன்னார்: “இந்த படிக்கட்டுகள் எப்போதும் ஈரத்தன்மையுடன் இருக்க வேண்டும்; ஆனால் இப்போது இங்குள்ள மரங்களெல்லாம் வெட்டப்படுவதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.” இந்த படிக்கட்டுகளுக்கு வரும் நீரோடைகள் எல்லாம் வற்றிவருவதால் இவை அழிந்துவிடும் அபாயம் இருக்கிறது.

இயற்கை சேதங்களும் இவற்றை சில சமயம் துன்புறுத்துகின்றன. 1990-⁠ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் மலைச்சரிவுகள் உடைந்து உருண்டோடின, அப்போது படிக்கட்டுகள் இருந்த பல பகுதிகள் சேதமடைந்தன.

படிக்கட்டுகளை பாதுகாப்பதற்காக அநேக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இப்ஃயூகாவு படிக்கட்டு ஆணையம் ஒன்றை உருவாக்கும்படி 1996-⁠ல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் வேலை என்ன? தண்ணீர் சப்ளை சரியாக வந்துசேர நடவடிக்கை எடுப்பது, படிக்கட்டுகளை பாதுகாப்பது, அப்பகுதியின் கலாச்சாரத்தை பாதுகாப்பது, அதோடு சேதமடைந்த பகுதிகளை எல்லாம் சரிசெய்வது.

ஐக்கிய நாட்டுக் கல்வி, விஞ்ஞானம், கலாச்சார நிறுவனத்தின் (UNESCO) உலக சொத்து என்ற பட்டியலிலும் இந்த படிக்கட்டுகள் இடம்பெற்றிருப்பதால், பிலிப்பீன்ஸ் அரசாங்கமும் இவற்றை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. UNESCO-வின் மணிலா அலுவலகத்தைச் சேர்ந்த செயற்குழு துணை டைரக்டர் ஜீன் ட்வாசான் இவ்வாறு சொல்கிறார், “அரிசி பயிர்செய்யப்படும் இந்த படிக்கட்டுகளை பராமரிக்க அல்லது பாதுகாக்க, UNESCO தொழில்நுட்ப ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் உதவி செய்யும் வாய்ப்பிருக்கிறது.”

[பக்கம் 16-ன் தேசப்படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

மத்திய கார்டிலேரா

[பக்கம் 17-ன் முழுபக்க படம்]