Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உடல் வாடினாலும் உள்ளம் வாடவில்லை

உடல் வாடினாலும் உள்ளம் வாடவில்லை

உடல் வாடினாலும் உள்ளம் வாடவில்லை

கென்ஸ்டன்ட்டீன் மெரோஸாஃப் சொன்னது

1936-ம் வருடம் ஜூலை மாதம் இருபதாம் தேதி, வெளி உலகை காண வேண்டுமென்ற ‘ஆவலில்’ அவசர அவசரமாக அரைகுறை உடலுடன் வந்தேன், என் தாயின் ‘மடி’யிலிருந்து. ஆம், நான் பிறக்கும்போது என்னுடைய எடை அரை கிலோதான். ஒரு வடிவமே இல்லாமல் புது ஜீவராசியைப்போல என் உடம்பில் மண்டையோடும் முதுகெலும்பும்தான் இருந்தது, வேறு எலும்புகள் வளர்ச்சியடையாமல் இருந்தன. உறுதியே இல்லாத குறுத்தெலும்புதான் என்னுடைய முழு எலும்புக்கூடும். ஒரு மனிதனின் காதெலும்பு எவ்வளவு உறுதியாக இருக்குமோ அவ்வளவு உறுதியாகத்தான் அது இருந்தது. பலவீனமான இதயத்துடிப்பு, மென்மையான சுவாசம், இலேசான அசைவுகள். இவைகளே எனக்கு உயிர் இருப்பதை உணர்த்திய அடையாளங்கள்.

நவமணிகள் போல ஒன்பது பிள்ளைகளுடைய ஒரு குடும்பத்தில் நான் ஏழாவது பிள்ளை. ரஷ்யாவின் மையப்பகுதியில் இருக்கும் உல்யாநோவாஸ்க் ஓபிளாஸ்ட்டில், செரா என்ற கிராமத்தில் என் குடும்பம் வாழ்ந்து வந்தது. நான் பிறந்து மூன்று வாரங்கள் ஆனபோது பெற்றோர் எனக்கு ஞானஸ்நானம் கொடுப்பதற்காக சர்ச்சுக்கு கொண்டுபோனார்கள். இன்னும் சில மணிநேரங்களில் இவன் இறந்துவிடுவான், சீக்கிரம் வீட்டுக்கு எடுத்துச் சென்றுவிடுங்கள் என்று என் பெற்றோரிடம் சொல்லி, பாதிரியார் அவசர அவசரமாக கொஞ்சம் தண்ணீரை என்மீது தெளித்துவிட்டு அனுப்பிவிட்டார்.

ஜனவரி 1937-⁠ல் என்னுடைய பெற்றோர் என்னை ஸ்பெஷலிஸ்டுகளிடம் காட்டுவதற்காக ரஷ்யன் ரிப்பப்ளிக் ஆப் டாட்டார்ஸ்டானின் தலைநகரமாகிய காசான் நகரத்துக்கு கொண்டுபோனார்கள். இதற்குள் என்னால் “மம்மா” “பப்பா” “பாபுஷா” (பாட்டி) என்றெல்லாம் சொல்ல முடிந்தது. என்னுடைய அண்ணன்களின் பெயர்கள் எனக்கு தெரிந்திருந்தது. என்னை பரிசோதித்துப் பார்த்த டாக்டர்கள் நான் ஓராண்டுக்குள் இறந்துவிடுவேன் என்று என்னுடைய பெற்றோரிடம் சொன்னார்கள். என் உயிரை எடுத்துவிட்டு உடலை ஒரு கண்ணாடி குடுவையில் பாடம்செய்து மருத்துவ மாணவர்களுக்கு பாடம் சொல்லித்தர வைத்துக்கொள்வதாக அவர்கள் என் பெற்றோரிடம் சொன்னார்கள். ஆனால் என் அன்புள்ள பெற்றோரோ மிகவும் திட்டவட்டமாக இதற்கு ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டார்கள். இதற்காக நான் எவ்வளவு நன்றியுள்ளவனாக இருக்கிறேன் தெரியுமா!

வேதனை ‘குளத்தில்’ என் குழந்தைப்பருவம்

எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் எப்போது பார்த்தாலும் வலியினால் துடித்துக் கொண்டிருந்தேன். ஆனாலும் சின்னவயதிலிருந்தே எப்போதும் நம்பிக்கையோடிருக்கவும் அடிக்கடி சிரித்து மகிழவுமே முயன்று வந்திருக்கிறேன். இந்த மனநிலையைத்தான் இப்போதுவரை நான் காத்துவந்திருக்கிறேன். என் எலும்புக்கூடு படிப்படியாக பலம் பெற்றது, நான் இப்போது உட்காரவும் கொஞ்சம் தவழ்ந்து செல்லவும் ஆரம்பித்தேன். வழக்கமாக பிள்ளைகள் வளருவதுபோல நான் வளரவில்லை, ஒரு வடிவமே இல்லாமல் இருந்தேன். ஆனால் எனக்கு கற்றுக்கொள்வதற்கு திறமை இருந்தது. ஐந்து வயதில் என்னால் வாசிக்கவும் எழுதவும் முடிந்தது.

மே 1941-⁠ல் அம்மா என்னை இரண்டாவது முறையாக சர்ச்சுக்கு அழைத்துக்கொண்டு போனார்கள். அங்கே நிறைய பேர் இருந்தார்கள், எல்லாரும் முழங்காலில் இருந்து ஜெபம் செய்துகொண்டிருந்தார்கள். அங்கு வேலை பார்க்கும் பெண் வந்து அம்மாவிடம் ஏன் அவர்கள் முழங்கால் படியிடவில்லை என்று கேட்டார்கள். அம்மா என்னை அவளிடம் காட்டினார், அவள் என்னைப் பார்த்ததும் பாதிரியாரிடம் பேச சென்றுவிட்டாள். கொஞ்ச நேரத்தில் அந்தப் பெண் திரும்பிவந்து, எங்களை வாசலுக்கு அழைத்துச் சென்று பிள்ளையை இங்கேயே விட்டுவிட்டு நீ மட்டும் பாதிரியாரை பார்க்க உள்ளே போ என்றாள். என் பெற்றோர் செய்த பாவத்தால், “தீயோன்” என்னை அவர்களிடம் கொடுத்திருப்பதாக அவள் சொன்னாள். என் அன்னை நெஞ்சம் கனக்க, கண்கள் குளமாக வீடு திரும்பினாள். இந்த “தீயோன்” யாராக இருக்கும்? என்ற கேள்வி என் மனதில் விதையாக விழுந்தது.

1948-⁠ல் எனக்கு 12 வயதாக இருந்தபோது, எங்கள் வீட்டிலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில், சுவாஷ் ரிப்பப்ளிக்கில் மெரன்கி என்ற ஒரு கிராமத்துக்கு என்னை அழைத்துச் சென்றார்கள். அங்கே “சுகமளிக்கும்” நீரூற்றுகள் இருந்தன, அந்தத் தண்ணீரால் நான் சுகமடைந்துவிடமாட்டேனா என்பது அம்மாவின் நப்பாசை. நான் குணமடைய வேண்டுமானால் மூன்று நாட்களுக்கு நான் சாப்பிடவே கூடாது என்று அங்கிருந்த மதகுருக்கள் சொன்னார்கள். சர்ச்சில் நான் கம்யூனியன் பெற்றுக்கொள்ள வேண்டும். சர்ச்சில் எனக்கு அதிகம் நம்பிக்கை இல்லாவிட்டாலும் இந்த நிபந்தனைகளை நான் ஏற்றுக்கொண்டேன். பயணம் எனக்கு நீண்டதாகவும் களைப்பாயும் இருந்தது, ஆனால் இயற்கை காட்சிகளை ரசித்துக்கொண்டே இதைத் தாங்கிக் கொண்டேன்.

சர்ச்சில் கூட்டம் நிரம்பி வழிந்தது. கூட்டத்தின் மத்தியில் அம்மா என்னைத் தூக்கிக்கொண்டு சென்றபோது, வயதான ஒரு பெண்மணி எனக்கு ஒரு மிட்டாய் கொடுத்தார்கள். அதை நான் என் பாக்கெட்டில் போட்டுக்கொண்டேன். கம்யூனியன் பெற்றுக்கொள்ள என் முறை வந்தபோது, “ஃபாதர், அவனுக்கு கம்யூனியன் கொடுக்காதீர்கள்! இப்போதுதான் அவன் மிட்டாய் சாப்பிட்டான்!” என்று அந்த வயதான பெண்மணி கூறினாள். இல்லை, மிட்டாய் என் பாக்கெட்டிலிருக்கிறது என்று நான் சொன்னேன். ஆனால் பாதிரியோ “கோமாளி பயலே! நீ பொய் வேறு பேசுகிறாயா? சர்ச்சிலிருந்து அவனை அப்புறப்படுத்துங்கள்!” என்று கத்தினார். ஆனால் அடுத்த நாள் மற்றொரு பாதிரியார் கம்யூனியன் சடங்கை நடத்தி அந்த “அற்புத நீரினால்” என்னைக் கழுவினார். அப்போதும் எந்த அற்புதமும் நிகழவில்லை. எனக்கு சுகமும் கிடைக்கவில்லை.

அறிவாற்றலில் சாதனைகள்

சரீரத்தில் மோசமான குறைபாடுகள் இருந்தபோதிலும் பருவ வயதில் கல்வியிலும் அறிவாற்றலிலும் சாதனைகள் புரிந்தேன். 1956-⁠ல் கம்யூனிஸ்ட் இளைஞர் அணியில் (Komsomol) சேர்ந்துகொண்டேன், அதன்பிறகு சிறு பிள்ளைகளுக்கு அதன் வரலாற்றை பற்றி கற்றுக்கொடுத்தேன். ஊனமுற்றவர்களின் இல்லத்தில் ஹோம் அண்டு கல்சுரல் கமிஷனில் உறுப்பினராக இருந்தேன், அங்கே வானொலி இயக்குநராகவும் அறிவிப்பாளராகவும் பணிபுரிந்தேன்.

இதோடு கண்பார்வையற்றோருக்காக இயங்கிய நடமாடும் நூலகக்தில் நான் நூலகராக இருந்தேன். மதுபான துஷ்பிரயோகத்துக்கு எதிரான போராட்டத்திற்காக நீதிபதி கமிஷனில் உறுப்பினராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். பொழுதுபோக்கு கலைஞர் கிளப்பில் நான் சேர்ந்துகொண்டு பாடினேன், இசைக் கருவிகளை வாசித்தேன்.

ஊனமுற்றோர் இல்லத்தில்

1957-⁠ல் எனக்கு வயது 21, என் உடல் ஊனத்தின் காரணமாக கட்டாயமாக ஒரு ஊனமுற்றோர் இல்லத்தில் சேர வேண்டியதாயிற்று. ஆனால் அப்போதும் நான் சோர்ந்துவிடவில்லை. அக்டோபர் 1963-⁠ல் மாஸ்கோவில் இருந்த புராஸ்தெட்டிக் சையன்ஸ் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்டுக்கு புறப்பட்டேன். அங்கே என் கால்களை நேராக்குவதற்காக 18 ஆபரேஷன்கள் செய்தார்கள்.

முதலில் என் கால்களை நீட்டினார்கள். அதன் பிறகு எட்டு நாட்கள் கழித்து ஒரு ஆபரேஷன் நடந்தது. அதற்குப்பிறகு அடுத்த ஆபரேஷன் வரையாக அது திரும்பிவிடாதிருப்பதற்காக என் கால்களுக்கு மாவுக்கட்டு போட்டுவிட்டார்கள். நான் படும் வேதனையைப் பார்த்து நர்ஸ் அழுதே விடுவார்.

அடுத்த நான்கு மாதங்கள் கட்டைவைத்து நடக்க நான் கற்றுக்கொண்டேன். கட்டையின் உதவியோடு என்னால் எழுந்துநிற்க முடியும். அப்போது நான் மூன்றரை அடி உயரமாக இருப்பேன். என்னுடைய எடை 25 கிலோவுக்கு சற்று கூடுதலாக இருக்கும். நான் கட்டை வைத்து நடக்க நன்றாக கற்றுக்கொண்ட பிறகு 1964-⁠ல் ஊனமுற்றோரின் இல்லத்துக்கு திரும்பி வந்துவிட்டேன். என்னுடைய உடலின் எடையை பலவீனமான கால் எலும்புகளால் தாங்கிப்பிடிக்க முடியவில்லை. மறுபடியும் தவழ்ந்துதான் செல்ல முடிந்தது அல்லது சக்கர நாற்காலியில் நடமாடிக் கொண்டிருந்தேன். இன்று வரை நான் நடமாடிக்கொண்டிருக்கிறேன் என்றால் அது முக்கியமாக அந்தச் சக்கர நாற்காலியின் துணையினால்தான்.

மறுபடியும் நான் சர்ச்சு பக்கமே போகவில்லை. “தீயோனால்” நான் பிறந்தேன் என்று சொல்லப்பட்டதை நினைத்து உள்ளுக்குள் குமுறிக்கொண்டிருந்தேன். அம்மாவும் அப்பாவும்தான் எனக்கு உயிர், ஆகவே என்னுடைய இந்த நிலைக்கு அவர்களும் கடவுளும் பொறுப்பு என்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. நான் சந்தோஷமாக இருக்கவே முயன்று வந்திருக்கிறேன். எல்லாருக்கும் நல்லது செய்ய விரும்பினேன், என்னால் நல்லது செய்ய முடியும் என்பதை நிரூபிக்க ஆசைப்பட்டேன்.

‘சொந்தக்காலில்’ வாழ்ந்தேன்

1970-⁠ல் எனக்கும் லிடியாவுக்கும் திருமணம் நடந்தது. லிடியா சிறுவயதில் பக்கவாதத்தினால் ஒரு பக்கம் பாதிக்கப்பட்டவள். ஒரு சிறிய வீட்டை வாங்கி அதில் நாங்கள் 15 வருடங்கள் வாழ்ந்தோம். அந்தச் சமயத்தில் நாங்கள் இருவரும் வேலைசெய்து ஜீவிதம் செய்தோம். கைக்கடிக்காரங்களையும் சில சிறிய கருவிகளையும் ரிப்பேர் செய்ய கற்றுக்கொண்டேன்.

கொஞ்சக் காலம் ஒரு நாயை பழக்குவித்து பல பிரயோஜனமான வேலைகளை அதன்மூலம் செய்துகொண்டேன். நாய்களை பழக்குவிக்கும் ஒருவரும் நானும் சேர்ந்து விசேஷமாக வடிவமைக்கப்பட்ட சேணத்தை கண்டுபிடித்தோம். என்னிடம் இரண்டு நாய்கள் இருந்தன. ஒரு நாயின் பெயர் வல்கன், மற்றொன்று பால்மி. பால்மி பல வருடங்களாக உண்மையான நண்பனாக இருந்தது. கடையில் எனக்குத் தேவையான உணவுப் பொருட்களை பொறுக்கி எடுத்துக்கொள்ளும். பணம் செலுத்தும் இடத்தில் வரிசையில் நிற்பதுதான் பால்மிக்கு பிடிக்காத விஷயம். என்னுடைய பணப்பையை வாயில் கவ்விக்கொள்ளும். வாங்கிய பொருட்களைப் போடுவதற்கு அதனுடைய தோள்ப்பட்டையில் ஒரு சிறிய கொக்கி மாட்டப்பட்டிருக்கும்.

1973-⁠ல் அம்மா படுத்தப்படுக்கையாகி விட்டார்கள். நான் எப்போதும் வீட்டில் இருந்தபடியால் அம்மாவை எங்களுடன் தங்க வைக்க என் மனைவியும் நானும் முடிவுசெய்தோம். அதற்குள் என் அப்பாவும் என் ஐந்து அண்ணன்களும் இறந்துவிட்டார்கள், என்னுடன் பிறந்த மற்ற மூன்று பேர் ரஷ்யாவில் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்துவந்தனர். அம்மா எங்களோடு தங்கியிருந்தபோது என்னால் முடிந்ததை அவர்களுக்குச் செய்தேன். கடைசியாக 85 வயதில் அம்மா இறந்துபோனார்கள்.

1978-⁠ல் எனக்காக ஒரு வாகனத்தை நான் தயாரிக்க தீர்மானித்தேன். பல வாகனங்களை வைத்து சோதனை செய்து கடைசியாக ஒன்றை கண்டுபிடித்தேன். அது எனக்கு மிகவும் திருப்தியாக இருந்தது. உள்ளூர் மாநில ஆட்டோமொபைல் மேற்பார்வை அலுவலகம், ஓட்டுநர் சோதனைகளில் கலந்துகொண்டு என்னுடைய வாகனத்தை ரெஜிஸ்டர் செய்ய அனுமதித்தது. அதற்கு ஓசா (தேனீ) என்று பெயர் வைத்தேன். 300 கிலோ எடையை இழுத்துச் செல்லும் சிறிய ட்ரெயிலர் ஒன்றை என்னுடைய மனைவியும் நானும் சேர்ந்து தயாரித்தோம். எங்களுக்குத் தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு இப்போது எங்களால் அதில் பிரயாணம் செய்ய முடிந்தது. மோட்டார் பொருத்தப்பட்ட இந்த வாகனம் 1985 வரை எங்களுக்கு மிகவும் பிரயோஜனமாயிருந்தது.

இந்தச் சமயத்தில்தான் என் இடது கண்பார்வை மறைந்தது, என் வலது கண் பார்வை மங்க ஆரம்பித்தது. அதற்குப் பிறகு லிடியாவுக்கு இருதய கோளாறு ஏற்பட்டது. மே 1985-⁠ல் எங்கள் சூழ்நிலை காரணமாக நாங்கள் டிமிட்ரிகிராட் நகரில் ஊனமுற்றவர்களுக்கான இல்லத்துக்கு போகவேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டோம்.

இப்போது என் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதற்கு காரணம்

1990 கோடையில், யெகோவாவின் சாட்சிகள் ஊனமுற்றவர்கள் இல்லத்துக்கு வந்திருந்தார்கள். அவர்கள் சொல்லிக் கொடுத்த காரியங்களைக் கேட்கையில் எனக்கு மிகவும் ஆர்வமாக இருந்தது. பிறவிக் குருடனாயிருந்த ஒரு மனிதனைப் பற்றிய ஒரு பகுதியை யோவான் சுவிசேஷத்திலிருந்து எனக்கு அவர்கள் காண்பித்தனர். அவனைக் குறித்து இயேசு இவ்வாறு சொன்னார்: “அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல.” (யோவான் 9:1-3) பாவத்தையும் நோயையும் நம்முடைய முற்பிதாவாகிய ஆதாமிடமிருந்து நாம் சுதந்தரித்திருக்கிறோம் என்பதை எனக்கு விளக்கிச் சொன்னார்கள்.—ரோமர் 5:⁠12.

எல்லாவற்றையும்விட, கடவுளுடைய மகனின் ராஜ்ய ஆட்சியின்கீழ், பூமியில் பரதீஸ் திரும்ப நிலைநாட்டப்படும்போது, ஜீவனைப்பெறும் அனைவரையும் அவர் சுகப்படுத்திவிடுவார் என்ற உண்மை என்னை மிகவும் கவர்ந்தது. (சங்கீதம் 37:11, 29; லூக்கா 23:43; வெளிப்படுத்துதல் 21:3, 4) ஆனந்த கண்ணீர் வழிந்தோட நான் “இதுதான் சத்தியம்! இதுதான் சத்தியம்! இதேதான் சத்தியம்!” என்று எனக்குள்ளே சொல்லிக்கொண்டேன். யெகோவாவின் சாட்சிகளோடு நான் ஒரு வருடம் பைபிளை படித்தேன், 1991-⁠ல் யெகோவா தேவனுக்கு நான் செய்த ஒப்புக்கொடுத்தலின் அடையாளமாக தண்ணீர் முழுக்காட்டுதல் பெற்றேன்.

யெகோவாவை சேவிக்கவும் அவருடைய மகத்தான நோக்கங்களைப் பற்றி மற்றவர்களுக்கு பிரசங்கிக்கவும் தீவிரமான ஆசையை நான் வளர்த்துக்கொண்டேன். ஆனால் என்ன செய்வது, எத்தனையோ இடையூறுகளை நான் சந்திக்க வேண்டியதாயிருந்தது. முன்பெல்லாம் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. ஆனால் இப்போதோ என்னுடைய விசுவாசத்தை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வதற்கு நான் வெளியே செல்லவேண்டுமே. பிரசங்கிப்பதற்கு என்னுடைய முதல் பிராந்தியம் 300-⁠க்கும் அதிகமானவர்கள் வாழ்ந்துவந்த ஊனமுற்றோர் இல்லம். முடிந்தவரை நான் நிறைய பேரை சந்திக்க வேண்டும், அதற்காக இல்லத்தின் விவகாரங்களைக் கவனித்துகொள்ளும் அறையில் எனக்கு வேலை கொடுக்கும்படி கேட்டு வாங்கிக்கொண்டேன்.

ஒவ்வொரு நாள் காலையும் நான் என்னுடைய இடத்தில் உட்கார்ந்துகொண்டு என்னுடைய வேலைகளை கவனிப்பேன். இந்த வேலையில் எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள், அவர்களோடு பைபிள் விஷயங்களைப் பற்றி பலமுறை பேசினேன். பைபிளைப் புரிந்துகொள்ள உதவும் புத்தகங்களையும் பத்திரிகைகளையும் நிறைய பேர் ஏற்றுக்கொண்டார்கள். பைபிளிலிருந்தும் பைபிள் அடிப்படையில் எழுதப்பட்ட பிரசுரங்களிலிருந்தும் நான் வாசிப்பதைக் கேட்பது பார்வையாளர்களுக்கு வழக்கமான விஷயமாயிற்று. உணவு இடைவேளையின்போது, என் மனைவியும் நானும் தங்கியிருக்கும் அறையில் மக்கள் கூட்டம் சில சமயங்களில் நிரம்பி வழியும்.

யெகோவாவின் சாட்சிகளுடைய சபையிலுள்ள என்னுடைய கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் பிரசங்க வேலையில் எனக்கு மிகவும் உதவியாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் பைபிள் பிரசுரங்களைக் கொண்டுவந்து எங்களுக்கு கொடுத்து என் மனைவியோடும் என்னோடும் நேரத்தை செலவழிக்கிறார்கள். சபை கூட்டங்களுக்குச் செல்வதற்கு எனக்கு உதவிசெய்கிறார்கள். என்னை அழைத்துச் செல்வதற்காகவே ஒரு சாட்சி, சைடு கார் ஒன்று பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை வாங்கினார். மிகவும் குளிராக இருக்கும் குளிர் காலங்களில் கார்களை வைத்திருப்பவர்கள் என்னை வந்து அழைத்துச் செல்கிறார்கள்.

இப்படிப்பட்ட கரிசனையின் காரணமாக, யெகோவாவின் சாட்சிகளுடைய பல மாநாடுகளுக்கு, அதாவது கல்விபுகட்டும் செமினார்களுக்கு என்னால் செல்ல முடிந்தது. நான் சென்ற முதல் மாநாடு ஜூலை 1993-⁠ல் மாஸ்கோவில் நடந்த சர்வதேச மாநாடாகும். இந்த மாநாட்டுக்கு உச்ச எண்ணிக்கையாக 23,743 பேர் 30-⁠க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வந்திருந்தார்கள். இந்த மாநாட்டுக்குச் செல்ல நான் 1,000 கிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டியதாயிருந்தது. அப்போது முதற்கொண்டு யெகோவாவின் மக்களுடைய மாநாட்டில் ஒரு மாநாட்டைக்கூட நான் தவறவிட்டது கிடையாது.

எங்களுடைய இல்லத்தின் நிர்வாகிகளுக்கு என் மீது ஆழ்ந்த மரியாதை இருந்தது. இதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். 30 ஆண்டுகளுக்கும் மேலாக நான் என் மனைவி லிடியாவோடு குடும்பம் நடத்தி வருகிறேன். என்னுடைய மத நம்பிக்கைகள் அவளுக்கு இல்லாவிட்டாலும் எனக்கு ஆதரவாக இருந்து உதவிசெய்து வருகிறாள். ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக யெகோவா அவருடைய பலத்த கரத்தினால் என்னை ஆதரித்துவருகிறார், எனக்கு மகத்தான ஆசீர்வாதங்களை அருளியிருக்கிறார். செப்டம்பர் 1, 1997-⁠ல் நான் ஒரு பயனியராக நியமிக்கப்பட்டேன், யெகோவாவின் சாட்சிகளுடைய முழுநேர ஊழியர்கள் இவ்வாறுதான் அழைக்கப்படுகிறார்கள்.

எத்தனையோ தடவை என்னுடைய இருதயம் நின்றுவிடுவது போலவும் நான் மரிக்கபோவது போலவும் இருந்திருக்கிறது. ஆனால் அப்படி எதுவும் நடக்காதது எனக்கு இப்போது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது தெரியுமா, இல்லாவிட்டால் உயிரின் ஊற்றுமூலரான யெகோவா தேவனை நான் அறிந்திருக்க முடிந்திருக்காது! அவரை நேசிக்கவும் முடிந்திருக்காது! என் இதய துடிப்பு இருக்கும்வரை உலகம் முழுவதிலும் இருக்கும் என்னுடைய ஆவிக்குரிய சகோதர சகோதரிகளோடு சேர்ந்து அவரைத் தொடர்ந்து சேவிக்க வேண்டும் என்பதே என் ஆசை.

[பக்கம் 20-ன் படம்]

என் மனைவி லிடியாவோடு

[பக்கம் 21-ன் படம்]

எங்களுடைய ஊனமுற்றோர் இல்லத்தில் ஒருவருக்கு போதித்தல்