Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உயிர்மேல் ஆசை ஊட்டுதல்

உயிர்மேல் ஆசை ஊட்டுதல்

உயிர்மேல் ஆசை ஊட்டுதல்

மேரி மன உளைச்சலுக்கு சிகிச்சை பெற்றுவந்தார். போதாக்குறைக்கு மற்ற வியாதிகள் வேறு. ஆனால் அவருக்கு குடும்பத்தின் பற்றுபாசம் கிடைக்காமல் இல்லை. குடியும் போதைப்பொருளுமே கதியென்று கிடந்தவரும் அல்ல. அப்படியென்றால் எதிர்பார்க்கப்படும் காரணங்கள் இல்லாதபோதுகூட ஒருவர் தற்கொலை முயற்சி செய்யலாம் என்பதற்கு மேரி சிறந்த எடுத்துக்காட்டு.

அவசர சிகிச்சை பிரிவில் நினைவின்றி, செயலிழந்து, கோமாவில் கிடந்த மேரியின் உயிர் ஊசலாடிக்கொண்டிருந்தது. சாமர்த்தியமாக தற்கொலை செய்துகொள்ளும் முதியோர் பட்டியலில் மேரியும் சேர்க்கப்படுவார் போல் தோன்றியது. மேரியைவிட்டு ஜான் ஒரு அடியும் நகரவில்லை. பிரமைபிடித்தது போல் ஆகிவிட்டார். டாக்டர்களோ கைவிரித்துவிட்டனர். ஒருவேளை மேரி உயிர் பிழைத்தாலும் அவரது மூளை நிரந்தரமாய் பாதிக்கப்படும் என சொல்லிவிட்டனர்.

மேரியின் பக்கத்து வீட்டில் வசித்த சாலி என்ற பெண்மணி, தினமும் ஆஸ்பத்திரிக்கு வந்து சென்றார். அவர் ஒரு யெகோவாவின் சாட்சி. அவர் சொல்கிறார்: “‘மனச விட்டுடாதீங்க. சில வருஷங்களுக்கு முன்னால என்னோட அம்மாவும் சக்கரை வியாதியால கோமாவில் இருந்தாங்க. இனி அவ்வளவுதான்னு டாக்டர்ஸ் சொல்லிட்டாங்க. ஆனா இப்ப அம்மா உயிரோட இருக்காங்க’ என்று சொல்லி அவர்களை தேற்றினேன். அம்மா ஆஸ்பத்திரியில் கிடந்தபோது எப்போதும் அவர் கையைப் பிடித்துக்கொண்டு பேசுவேன். அதேபோல் மேரியோடும் பேசினேன். அவர் லேசாக அசைவது எனக்கு தெரிந்தது.” மூன்றாம் நாள் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. மேரியால் பேச முடியாவிட்டாலும் ஆட்களை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது.

‘நான் ஏதாவது செய்திருக்கலாமோ?’

சாலி சொல்கிறார்: “ஜானின் மனசு சமாதானம் ஆகவே இல்லை. எல்லாத்துக்கும் தானே காரணம் என்ற குற்றவுணர்வால் புழுங்கிக் கொண்டிருந்தார்.” அன்புக்குப் பாத்திரமானவர் தற்கொலை செய்துகொள்ளும்போது அல்லது தற்கொலை முயற்சி செய்யும்போது யாராக இருந்தாலும் இப்படித்தான் உணருவார்கள். சாலி, ஜானை இப்படி ஆறுதல்படுத்தினார்: “உங்களையே உதாரணத்துக்கு எடுத்துக்குங்க. உங்களுக்கு உடம்பு சரியில்லை, அத உங்களால தவிர்க்க முடியுதா? இல்லையே. அப்படித்தான் மேரிக்கும். மனசு சரியில்லாம விரக்தியால அவஸ்தப்பட்டுக்கிட்டு இருந்தாங்க. அதுக்காக சிகிச்சையும் எடுத்துக்கிட்டு இருந்தாங்க. அவங்களாலயும் அத தவிர்க்க முடியல, அவ்வளவுதான்.”

அன்பானவர் தற்கொலை செய்துகொள்ளும்போது, நான் ஏதாவது செய்திருக்கலாமோ என்ற கேள்வி மனதை குத்திக்கொண்டே இருக்கும். அறிகுறிகள் தெரிந்தவுடன் உஷாராகிவிட்டால் தற்கொலை முயற்சியை தவிர்க்கலாம். அது முடியாவிட்டாலும்கூட இன்னொருவர் தன் உயிரை போக்கிக்கொள்வதற்கு நீங்கள் காரணமாக முடியாது என்பதை நினைவில் வையுங்கள். (கலாத்தியர் 6:5) முக்கியமாய், மற்றவர்கள் குற்றவுணர்வால் துடிக்க வேண்டும் என்பதற்காகவே தற்கொலை முயற்சி நடக்கும்போது இதை நினைவில் வைக்க வேண்டும். முன்பு குறிப்பிட்ட டாக்டர் ஹென்டின் இவ்வாறு சொல்கிறார்: “தான் இறந்தால்தான் மற்றவர்கள் வழிக்கு வருவார்கள், உணருவார்கள், திருந்துவார்கள் என நினைப்பவர்கள்தான் தற்கொலையில் இறங்குகின்றனர். நினைத்தபடி நடக்கிறதா இல்லையா என்பதை கண்ணால் பார்க்க இருக்க மாட்டார்கள் என தெரிந்தும் தற்கொலை செய்துகொள்கின்றனர்.”

டாக்டர் ஹென்டின் மேலும் இப்படி சுட்டிக்காட்டுகிறார்: “வயதுவந்த பிள்ளைகளை, கூடப்பிறந்தவர்களை, அல்லது திருமணத் துணைவரை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும், தன் சொல்படி நடக்க வைக்க வேண்டும், அல்லது குடும்ப நலனில் இன்னுமதிக அக்கறைகாட்ட வைக்க வேண்டும் என்பதற்காகவே முதியோர் தற்கொலை முயற்சி செய்யலாம். அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவது கடினம், வளைந்துகொடுக்கவே மாட்டார்கள். முதலில் அவசரப்பட்டு ஏடாகூடமாக தற்கொலை முயற்சி செய்வார்கள், பிற்பாடோ நன்கு திட்டமிட்டு சீரியஸாக முயற்சி செய்வார்கள்.”

தற்கொலை செய்துகொள்வோரின் குடும்ப அங்கத்தினர்கள் தாங்க முடியாத வேதனையில் துடிக்கலாம். இருந்தாலும் யெகோவா தேவனால் இறந்தவர்களை உயிருக்குக் கொண்டுவர முடியும்; மன உளைச்சலால் வேதனையால் அல்லது மனநோயால் உயிரைப் போக்கிக்கொண்ட நம் அன்பானவர்களையும் அவர் உயிருக்குக் கொண்டுவருவார் என்பதை மறந்துவிடாதீர்கள்.—⁠செப்டம்பர் 8, 1990, ஆங்கில விழித்தெழு!, பக்கங்கள் 22-3-⁠ல் வெளிவந்த “பைபிளின் கருத்து: தற்கொலை செய்துகொண்டோருக்கு உயிர்த்தெழுதல் உண்டா?” என்ற கட்டுரையைக் காண்க.

தற்கொலையை நியாயப்படுத்த முடியாது என்றாலும் பலவீனங்களாலும் குறைகளாலும்தான் உயிரைப் போக்கும் அளவுக்கு மக்கள் துணிந்துவிடுகின்றனர் என்பதை கடவுள் நன்கு புரிந்திருக்கிறார். இப்படிப்பட்ட கடவுளின் கையிலேயே இறந்துபோன நம் அன்பானவர்களின் எதிர்காலம் இருக்கிறது என்பதை அறிவது எவ்வளவு ஆறுதலளிக்கிறது. பைபிள் யெகோவாவைப் பற்றி இப்படி சொல்கிறது: “பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது. மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார். தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார். நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்.”​—சங்கீதம் 103:11-14.

முடிவிலோ சந்தோஷம்

இரண்டு நாட்களாக உயிருக்கு போராடிய மேரி, இறுதியில் பிழைத்துக்கொண்டார். கொஞ்ச கொஞ்சமாய் மனம் தெளிவானது. ஜான் அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்றார். முன்ஜாக்கிரதையாக எல்லா மருந்துகளையும் பூட்டிவைத்துவிட்டார். மேரி இப்போது தவறாமல் மனநல சேவகர்களை சந்திக்கிறார். எதனால் அந்த விபரீத முடிவுக்கு வந்தாரென்று தனக்கே தெரியவில்லை என்கிறார், அந்த ஞாபகமும் இல்லையாம்.

இப்போது ஜானும் மேரியும் சாலியோடு வாராவாரம் பைபிளைப் படித்துவருகிறார்கள். முக்கியமாய் முதியோர் எதிர்ப்படும் கடும் பிரச்சினைகளையும் கடவுள் வெகு சீக்கிரத்தில் தீர்த்து வைப்பார் என்பதை பைபிளிலிருந்து அவர்கள் கற்றிருக்கிறார்கள். சாலி சொல்கிறார்: “என்னயிருந்தாலும் பைபிளைப் படித்தவுடன் பிரச்சினைகள் பறந்துவிடும் என சொல்ல முடியாது. ஒவ்வொருவரும் தீர ஆராய்ந்து அதிலுள்ள வாக்குறுதிகள் உண்மைதான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அதன்பின் படிப்பதற்கு ஏற்ப வாழ வேண்டும். ஜான் மேரியைப் பொறுத்தவரை, அவர்கள் வாழ்க்கையில் புது நம்பிக்கை பிறந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.”

உங்கள் எதிர்காலம் இருண்டிருப்பதாய் தோன்றுகிறதா? உங்கள் வாழ்விலும் நம்பிக்கை பிறக்க வேண்டும்? யெகோவாவின் சாட்சிகளை தொடர்புகொள்ளுங்கள். கடவுளால் தீர்த்துவைக்க முடியாத அல்லது அவர் தீர்க்கப் போகாத பிரச்சினை எதுவுமே இல்லை என்பதை ஜானுக்கும் மேரிக்கும் எடுத்துக் காட்டியதைப் போலவே உங்களுக்கும் எடுத்துக் காட்டுவார்கள். இப்போது பிரச்சினைகள் முத்திப்போயிருப்பதாய் தோன்றினாலும் அவற்றிற்கு தீர்வு நிச்சயம் உண்டு. எதிர்காலம் ஒளிவீசும் என்ற உறுதியான நம்பிக்கையால் அநேகர் இப்போது வாழ ஆசைப்படுகிறார்கள். இந்த நம்பிக்கையை சேர்ந்து சிந்திப்போமா?

[பக்கம் -ன் பெட்டி6]

காரணிகளும் அபாய அறிகுறிகளும்

“தற்கொலைக்கான காரணங்கள் முதியோர் விஷயத்திலும் இளைஞர் விஷயத்திலும் வேறுபடுகின்றன” என த ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் மெடிக்கல் அசோஸியேஷன் குறிப்பிடுகிறது. “அளவுக்கதிகமாய் குடித்து வெறித்துப்போவது, மன உளைச்சல், தீவிர தற்கொலை முயற்சி, சமூகத்திலிருந்து ஒதுங்கி வாழ்வது போன்றவையே சில காரணிகள். முதியோருக்குத்தான் . . . அதிக உடல்நல, மனநல பிரச்சினைகள் இருக்கிறது.” ஸ்டீஃபன் ஃப்ளான்டர்ஸ் என்பவர் எழுதிய தற்கொலை என்ற ஆங்கில புத்தகம், கீழ்க்கண்ட காரணிகளை அளிக்கிறது. இவை ஒவ்வொன்றும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்.

மன உளைச்சல்:

“தற்கொலை செய்துகொண்டோரில் 50% அல்லது அதற்கும் அதிகமானோர் மன உளைச்சலால் அவதிப்பட்டவர்கள்.”

நம்பிக்கையின்மை:

விரக்தியடையாத நபர்கள்கூட, எதிர்கால நம்பிக்கை இல்லாதபோது தற்கொலை முயற்சி செய்ததை சில ஆராய்ச்சிகள் காட்டின.

குடியும் போதைமருந்தும்:

“பொதுவான ஜனத்தொகையில் 1%-⁠க்கும் குறைவானவர்களே தற்கொலை செய்துகொள்கின்றனர். ஆனால் குடிபோதைக்கு அடிமையானவர்களில் 7-21% தற்கொலை செய்துகொள்வதாய் கணக்கிடப்பட்டிருக்கிறது.”

குடும்ப சூழல்:

“குடும்பத்தில் ஏற்கெனவே தற்கொலை நடந்திருந்தால் இன்னொரு தற்கொலை நடப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.”

சுகமின்மை:

“உடல்நலம் சீர்கெட்டுப்போய் ஆஸ்பத்திரியே கதியென கிடக்க வேண்டிவருமோ என்ற பயமே போதும், முதியோர் தற்கொலை முயற்சி செய்ய.”

இழப்பு:

“இழப்பு என்கையில் திருமணத் துணை, நண்பர், வேலை அல்லது உடல்நலம் என எதுவாகவும் இருக்கலாம். அதேசமயம் தன்மானம், கௌரவம், பாதுகாப்பு உணர்வு போன்ற இழப்புகளும் தற்கொலைக்கு வழிநடத்தலாம்.”

இந்தக் காரணிகள்போக, சில அபாய அறிகுறிகளையும் அந்தப் புத்தகம் குறிப்பிடுகிறது. இவற்றையும் ஒருபோதும் அசட்டை செய்ய முடியாது.

முன்னரே தற்கொலைக்கு முயன்றிருப்பது:

“மறுபடியும் முயலுவார்கள் என்பதற்கு மிக முக்கிய அறிகுறி.”

தற்கொலை பற்றியே பேச்சு:

“ ‘அவங்க இனியும் என்னை பத்தி கவலைப்பட வேண்டியதில்லை,’ ‘நான் இருந்தா தானே அவங்க எல்லாருக்கும் கஷ்டம்’ போன்ற பேச்சுக்கள் தெளிவான அறிகுறிகள்.”

இறுதி ஏற்பாடுகள்:

“உயில் எழுதி வைப்பது, பேணிக் காத்த உடைமைகளை கொடுத்துவிடுவது, செல்லப் பிராணிகளை யாரிடமாவது ஒப்படைப்பது போன்ற செயல்களை உட்படுத்துகிறது.”

குணத்தில் அல்லது நடத்தையில் மாற்றம்:

இந்த மாற்றத்தோடு, “நான் எதற்கும் பிரயோஜனமில்லாதவன் அல்லது வாழ்ந்து வாழ்ந்து எதை சாதித்துவிட்டோம் போன்ற பேச்சும் அடிபட்டால்,” “பயங்கர மன உளைச்சல் ஏற்பட்டிருக்கிறது, தற்கொலையில் போய் முடியலாம் என அர்த்தம்.”

[பக்கம் 7-ன் படம்]

கணவனோ மனைவியோ தற்கொலை செய்துகொள்ளும்போது அந்த கொடிய வேதனையிலிருந்து மீள உதவி தேவை