Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உறுதியான நம்பிக்கை

உறுதியான நம்பிக்கை

உறுதியான நம்பிக்கை

சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன், இதுவரை வாழ்ந்தவர்களிலேயே தலைசிறந்த நபரென அழைக்கப்படும் இயேசு அநியாயமாக மரண தண்டனை விதிக்கப்பட்டு கழுமரத்தில் அறையப்பட்டார். அவரோடு வேறு இரு குற்றவாளிகளும் கழுமரத்தில் அறையப்பட்டனர். அதில் ஒரு குற்றவாளி கிண்டலாக, “நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள்” என்றான்.

உடனடியாக இன்னொரு குற்றவாளி அவனைக் கடிந்துகொண்டு, “கடவுளுக்கு நீ அஞ்சுவதில்லையா? நீயும் அதே தீர்ப்புக்குத்தானே உள்ளாகி இருக்கிறாய். நாம் தண்டிக்கப்படுவது முறையே. நம் செயல்களுக்கேற்ற தண்டனையை நாம் பெறுகிறோம். இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே!” (பொது மொழிபெயர்ப்பு) என்றான். பின்பு இயேசுவை நோக்கி, “நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்” என கேட்டுக்கொண்டான்.

அதற்கு இயேசு, “நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்” என்றார்.​—லூக்கா 23:39-43.

இயேசுவுக்கு அருமையான எதிர்காலம் காத்திருந்தது. இந்த எதிர்பார்ப்பு அவரை எவ்வாறு பாதித்ததென அப்போஸ்தலன் பவுல் குறிப்பிடுகிறார்: ‘அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்தார்.’​—எபிரெயர் 12:⁠2.

இயேசுவுக்கு முன் வைக்கப்பட்ட ‘சந்தோஷத்தில்,’ மீண்டும் தம் தகப்பனோடு பரலோகத்தில் வாழ்வதும் இறுதியில் கடவுளுடைய ராஜ்யத்தின் ராஜாவாக ஆட்சிபுரிவதும் அடங்கும். மேலும், பூமியின் மேல் ராஜாக்களாக ஆட்சி செய்வதற்குத் தகுதியான நம்பகமான ஆட்களை பரலோகத்திற்கு வரவேற்கும் சந்தோஷத்தையும் அவர் பெறுவார். (யோவான் 14:2, 3; பிலிப்பியர் 2:7-11; வெளிப்படுத்துதல் 20:5, 6) அப்படியென்றால், மனந்திரும்பிய குற்றவாளி இன்பப் பூங்காவனமான பரதீஸில் இருப்பான் என இயேசு எந்த அர்த்தத்தில் சொன்னார்?

அந்த குற்றவாளிக்கு என்ன நம்பிக்கை?

அவன் பரலோகத்தில் இயேசுவோடு ஆட்சி செய்ய தகுதி பெறவில்லை. “எனக்கு நேரிட்ட சோதனைகளில் என்னோடேகூட நிலைத்திருந்தவர்கள் நீங்களே. ஆகையால், என் பிதா எனக்கு ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்தினதுபோல், நானும் உங்களுக்கு ஏற்படுத்துகிறேன்” என இயேசு சொன்ன வகுப்பாரில் ஒருவன் அல்ல. (லூக்கா 22:28, 29) இருந்தாலும் அவன் தம்மோடு பரதீஸில் இருப்பான் என இயேசு வாக்குறுதி அளித்தார். அது எப்படி நிறைவேறும்?

முதல் ஜோடியான ஆதாமையும் ஏவாளையும் யெகோவா தேவன் பரதீஸில், அதாவது ஏதேன் என அழைக்கப்பட்ட இன்பப் பூங்காவனத்தில் குடிவைத்தார். (ஆதியாகமம் 2:8, 15) ஏதேன் தோட்டம் பூமியில் இருந்தது. இம்முழு பூமியும் பரதீஸாக வேண்டும் என்பது கடவுளின் நோக்கம். ஆனால் ஆதாம் ஏவாள் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போய், அந்த அழகிய தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். (ஆதியாகமம் 3:23, 24) இருந்தாலும் பரதீஸ் மீண்டும் இப்பூமி முழுவதும் ஸ்தாபிக்கப்படும் என்பதை இயேசு காட்டினார்.

அப்போஸ்தலன் பேதுரு, இயேசுவைப் பின்பற்றுவதற்காக தனக்கும் மற்ற அப்போஸ்தலருக்கும் என்ன வெகுமதி கிடைக்கும் என கேட்டார். அதற்கு இயேசு இவ்வாறு வாக்குறுதி அளித்தார்: ‘மறுஜென்மகாலத்திலே [“மறுசிருஷ்டிப்பின் காலத்தில்,” NW] மனுஷகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது, என்னைப் பின்பற்றின நீங்களும், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களின்மேல் வீற்றிருப்பீர்கள்.’ (மத்தேயு 19:27, 28) இதை பதிவு செய்கையில், “மறுசிருஷ்டிப்பு” என்பதற்கு பதிலாக “வரவிருக்கும் உலகம்” என இயேசு சொன்னதாய் லூக்கா எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.​—லூக்கா 18:28-30.

ஆகவே இயேசு கிறிஸ்து பரலோகத்தில் மகிமையான சிங்காசனத்தில் அமரும்போது, தம்மோடு ஆட்சி செய்யப்போகும் மற்றவர்களோடு சேர்ந்து நீதியுள்ள உலகை கொண்டுவருவார். (2 தீமோத்தேயு 2:11, 12; வெளிப்படுத்துதல் 5:10; 14:1, 3) கிறிஸ்து பரலோகத்திலிருந்து ஆட்சி செய்யும்போது, இப்பூமி முழுவதும் பரதீஸாக மாற வேண்டும் என்ற கடவுளுடைய ஆரம்ப நோக்கம் நிறைவேறும்!

இந்த ஆட்சியின்போது, இயேசு அந்தக் குற்றவாளியை உயிர்த்தெழுப்பி, அவனுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவார். அவனும் ஒரு குடிமகனாக பூமியில் வாழ்வான். கடவுள் எதிர்பார்க்கிறபடி நடக்கவும் கடவுளுடைய ராஜ்ய ஆட்சியின்கீழ் என்றென்றும் வாழவும் அவனுக்கு வாய்ப்பு தரப்படும். பூங்காவனம் போன்ற பூமியில் என்றென்றும் இன்பமாய் வாழும் நம்பிக்கையை பைபிள் தருவதில் நாம் களிகூரலாம்!

வாழ்க்கைக்கு அர்த்தமுண்டு

இப்படிப்பட்ட மகத்தான நம்பிக்கை நம் வாழ்க்கைக்கு எந்தளவு அர்த்தமளிக்கும் என நினைத்துப் பாருங்கள். எதையாகிலும் ஏடாகூடமாக நினைத்து விபரீத காரியங்களை செய்துவிடாதபடி மனதை காக்க அது உதவும். இப்படிப்பட்ட நம்பிக்கையை முக்கிய ஆவிக்குரிய ஆயுதமாக அப்போஸ்தலன் பவுல் குறிப்பிட்டார். “இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவை” தரித்துக்கொள்ள வேண்டும் என்றார்.​—⁠1 தெசலோனிக்கேயர் 5:8; சங்கீதம் 37:29; வெளிப்படுத்துதல் 21:3, 4.

இப்படிப்பட்ட நம்பிக்கை உயிர் காக்கிறது. வரவிருக்கும் பரதீஸில் தனிமையின் கண்ணீர் துடைக்கப்படும். “மரித்தோரை எழுப்புகிற தேவன்” நம் உயிருக்கு உயிரானவர்களை உயிர்த்தெழுப்புகையில் ஆனந்தக் கண்ணீர் பெருகும். (2 கொரிந்தியர் 1:9) பலவீனமும், வலியும், ஊனமும் என்னவென்றுகூட ஞாபகம் இருக்காது. ஏனெனில் “முடவன் மானைப்போல் குதிப்பான்.” ஒருவரது “மாம்சம் வாலிபத்தில் இருந்ததைப்பார்க்கிலும் ஆரோக்கியமடையும்; தன் வாலவயது நாட்களுக்குத் திரும்புவான்.”​—ஏசாயா 35:6; யோபு 33:⁠25.

அப்போது “வாழ்பவர் எவரும் ‘நான் நோயாளி’ என்று சொல்லமாட்டார்.” (ஏசாயா 33:24, பொ.மொ.) ஆக, தீராத வியாதியின் வேதனை நினைவைவிட்டு நீங்கும். மன உளைச்சலுக்கும் வெறுமைக்கும் பதிலாக “நித்திய மகிழ்ச்சி” நிறைந்திருக்கும். (ஏசாயா 35:10) கொடிய வியாதியும் மனிதனது பரம விரோதியான மரணமும் ஒழிந்துபோகும்.—1 கொரிந்தியர் 15:⁠26.

[பக்கம் -ன் படங்கள்8, 9]

கடவுளது புதிய உலகின் அருமையான நம்பிக்கையை எப்போதும் கண்முன் வையுங்கள்