Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

என் தோழனே என்னை நோகடித்தது ஏன்?

என் தோழனே என்னை நோகடித்தது ஏன்?

இளைஞர் கேட்கின்றனர் . . .

என் தோழனே என்னை நோகடித்தது ஏன்?

“எனக்கு முதல்ல நெறைய பிரண்ட்ஸ் இருந்தாங்க. அதுக்கப்புறம் இன்னொரு பெண்ணோட அவங்க பழக ஆரம்பிச்சாங்க, அப்புறம் நான் போனா டக்குண்ணு பேச்சை நிறுத்திடுவாங்க. . . . நாள் ஆக ஆக எதிலேயும் சேத்துக்காம அப்படியே என்ன ஒதுக்கி வச்சுட்டாங்க. நிஜம்மா எம்மனச நோகடிச்சிட்டாங்க.”—செல்வி.  a

உயிருக்கு உயிராக பழகும் நண்பர்களுக்கும் இது நடக்கலாம். ஒரு நாள் பார்த்தால் அவர்கள் நீயின்றி நானில்லை என்றிருப்பார்கள்; அடுத்த நாள் பார்த்தால் ஒருவரோடொருவர் பேசிக்கொள்ளக்கூட மாட்டார்கள். “சிநேகிதின்னா எப்பவும் நம்பிக்கையானவளாக இருக்கணும், நாம எந்தச் சூழ்நிலையில இருந்தாலும் நம்மை ஏத்துக்கணும்” என்று சொல்கிறாள் 17 வயதுள்ள ஜெயந்தி. ஆனால் சில சமயங்களில் உங்கள் உயிர் நண்பர்கூட மிகவும் கீழ்த்தரமாக விரோதிபோல நடந்துகொள்ள ஆரம்பிக்கலாம்.

நட்புக்கு சோதனை

இனிமையான நட்பு வெறுப்பாக மாறுவதற்கு காரணங்கள் என்ன? கவிதா மிகவும் விரும்பி அணியும் ஓர் ஆடையை அவளின் சிநேகிதி அனிதா போட்டுவிட்டு தருவதாக கேட்டு வாங்கிச் சென்றபோது இவர்களுக்குள் பிரச்சினை வந்துவிட்டது. “அதை அவள் திரும்ப என்கிட்ட தந்தபோது அது அழுக்காக இருந்துச்சு, கையிலே தையல் விட்டுப்போயிருந்திச்சு. நான் கவனிக்க மாட்டேன் என்று நினைச்சிக்கிட்டா போல. என்கிட்ட அதைப் பத்தி மூச்சுவிடல” என்று கவிதா மனம் குமுறுகிறாள். இப்படி அனிதா இங்கிதமில்லாமல் நடந்துகொண்டது கவிதாவுக்கு எப்படி இருந்தது? “எனக்கு கோபம் பத்திக்கிட்டு வந்துச்சி, என்னோட பொருட்களையும் . . . என்னோட உணர்ச்சிகளையும் அவள் மதிக்கலைன்னுதான் அர்த்தம்” என்று அவள் சொல்கிறாள்.

உயிருக்கு உயிரான உங்கள் நண்பர் நீங்கள் சங்கடமாக உணரும்படி எதையாவது செய்து, அல்லது சொல்லி உங்கள் மனதை நோகடித்துவிடலாம். இதுதான் லதாவுக்கு சம்பவித்தது. அன்று அவள் ஒரு புத்தகத்தைப் படித்து அதைப் பற்றி ஒரு ரிப்போர்ட் கொடுக்க வேண்டும். ஆனால் லதா இதற்கு இன்னும் தயார் செய்யவில்லை. அதை அவள் தன் பள்ளித் தோழர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். அப்போது அவளுடைய சிநேகிதி தீபா அவளை திட்ட ஆரம்பித்துவிட்டாள். “பிரண்ட்ஸ் முன்னாலே இப்படி அவ பேசியது எனக்கு சங்கடமாகிவிட்டது” என்று லதா கூறுகிறாள். “அவ மேல எனக்கு கோபம் கோபமா வந்திச்சு. அதுக்கப்புறம் எல்லாமே மாறிடிச்சு.”

நண்பர் ஒருவர் புதிய தோழர்களோடு நேரத்தை செலவிட ஆரம்பித்துவிட்டால் சில சமயங்களில் விரிசல் ஏற்பட்டுவிடுகிறது. “அப்படித்தான், எனக்கு ஒரு நல்ல பிரண்டு இருந்தா, அவ இவங்களோடே சேர்ந்துகிட்டு என்னை கண்டுக்காம இருக்க ஆரம்பிச்சா” என்று 13 வயது ஷீபா சொல்கிறாள். அல்லது ஏதோ காரியம் ஆகவேண்டும் என்பதற்காக ஒருவர் உங்களுக்கு நண்பராக இருக்கிறார் என்று உங்களுக்குத் தோன்றலாம். “ஜானியும் நானும் உண்மையில் நல்ல பிரண்ட்ஸா இருந்தோம். என்னை அவனுக்கு பிடிச்சிருந்ததால் எனக்கு பிரண்டாக இருந்தான் என்று நான் நினைச்சிக்கிட்டிருந்தேன். ஆனால் அப்புறந்தான் எனக்கு காரணமே புரிஞ்சுது. என் அப்பா விளம்பர கம்பெனியிலே வேலை பார்த்ததால் எப்போதும் விளையாட்டுகள், இசை நிகழ்ச்சிகள் இதெல்லாத்துக்கும் அவனுக்கு டிக்கெட் கிடைச்சிடும், அதனால்தான் பிரண்டாக இருந்தான்” என்று கூறுகிறான் 13 வயது பிரபு. இப்போது என்ன நினைக்கிறான்? “ஜானியை நான் திரும்ப நம்பவே மாட்டேன்!” என்று அவன் சொல்கிறான்.

சில சமயங்களில் ரகசியமாக வைத்துக்கொள்ளும்படி நீங்கள் சொன்ன விஷயத்தை உங்கள் நண்பன் மற்றவர்களுக்கு சொல்லிவிடலாம். உதாரணத்துக்கு பிரேமா அவளோடு வேலை பார்த்து வந்தவரின் சொந்த பிரச்சினையைப் பற்றி தன் சிநேகிதி சாராவிடம் சொன்னாள். அடுத்த நாள் சாரா அவர் முன்னாலேயே அந்த விஷயத்தைப் போட்டு உடைத்துவிட்டாள். “இப்படி அவள் படபடவென பேசிவிடுவாள் என்று நான் கனவிலும் நினைக்கல! எனக்கு ரொம்ப எரிச்சலா இருந்துச்சு” என்று பிரேமா கூறுகிறாள். உயிருக்கு உயிராக பழகின தோழியிடம் ரேச்சல் இரகசியமாக வைக்கும்படி சொன்ன விஷயத்தைப் போட்டு உடைத்துவிட்டபோது இந்த 16 வயது பெண்ணுக்கும் அதே அனுபவம்தான். “எனக்கு ரொம்ப சங்கடமா இருந்திச்சு, அவள் என்னை காட்டிக்கொடுத்துட்டா. திரும்ப எப்படி அவளை நம்பி ஒரு விஷயத்தைச் சொல்ல முடியுன்னு நான் நினைச்சிக்கிட்டேன்.”

நண்பர்களிடமிருந்து உணர்ச்சிப்பூர்வமான ஆதரவை பெறுவதற்கு அங்கே பரஸ்பர அக்கறை, நம்பிக்கை, மரியாதை ஆகியவை இருக்க வேண்டும். நெருக்கமான நட்பிலும் சோதனையான காலங்கள் வரலாம். பைபிள் மிகவும் யதார்த்தமாக இவ்வாறு கூறுகிறது: “கேடு வருவிக்கும் நண்பர்களுமுண்டு.” (நீதிமொழிகள் 18:24, பொது மொழிபெயர்ப்பு) காரணம் என்னவாக இருந்தாலும் உங்கள் நண்பர் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டாரென்று உங்களுக்கு தெரிந்தால் அது மிகவும் கொடுமையாக இருக்கும். இது ஏன் நடக்கிறது?

நட்பு தடுமாறுவது ஏன்?

இளைஞராயிருந்தாலும் சரி, பெரியவர்களாயிருந்தாலும் சரி எந்த மனித உறவிலும் பிரச்சினைகளே இல்லாமல் இருக்காது. கிறிஸ்தவ சீஷன் யாக்கோபு என்ன எழுதினார் என்பதுதான் நமக்கு தெரியுமே: “நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்; ஒருவன் சொல் தவறாதவனானால் அவன் பூரணபுருஷனும், தன் சரீரமுழுவதையும் கடிவாளத்தினாலே அடக்கிக்கொள்ளக் கூடியவனுமாயிருக்கிறான்.” (யாக்கோபு 3:2; 1 யோவான் 1:8) எல்லாரும் தவறு செய்வதால், எப்போதாவது ஒரு சமயம் ஒரு நண்பர் உங்கள் மனதை நோகடிக்கும் விதமாக எதையாவது செய்துவிடலாம் அல்லது சொல்லிவிடலாம் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம். ஒருவேளை நீங்கள் அந்த நண்பரின் மனதை நோகடித்ததுகூட உங்கள் நினைவுக்கு வரலாம். (பிரசங்கி 7:22) “நாமனைவரும் அபூரணர், எப்போதாவது ஒரு சமயம் நாம் அடுத்தவரை எரிச்சல் மூட்டிவிடுவோம்” என 20 வயது கலா சொல்கிறாள்.

மனித அபூரணத்தைத் தவிர மற்ற காரியங்களும் இருக்கலாம். நீங்கள் வளர்ந்து பெரியவர்களாகும்போது உங்கள் விருப்பங்களும் உங்கள் நண்பர்களின் விருப்பங்களும் மாறிவிடலாம். ஆகவே அநேக காரியங்களை ஒன்றாகவே செய்துவந்த இரண்டு பேர் மெதுவாக ஒருவரையொருவர் பிரிந்து செல்வதாக உணரலாம். தன் உயிர்த்தோழியைக் குறித்து பருவ வயது பெண் ஒருத்தி இவ்வாறு வருத்தமாக கூறினாள்: “இப்போதெல்லாம் நாங்கள் அடிக்கடி போன்செய்து பேசிக்கொள்வதில்லை, அப்படியே பேசினாலும் எந்த விஷயத்திலும் நாங்கள் ஒத்துப்போவதே இல்லை.”

வெறுமனே விலகிப்போவது என்பது ஒரு காரியம். ஆனால் சிலர் ஏன் தங்கள் நண்பர்களின் மனதை நோகடிக்கிறார்கள்? பொறாமைதான் காரணம். உதாரணமாக, உங்களுக்கிருக்கும் திறமைகளைப் பார்த்து அல்லது சாதனைகளைக் கண்டு அவர்கள் பொறாமை கொள்ளலாம். (ஒப்பிடுக: ஆதியாகமம் 37:4; 1 சாமுவேல் 18:7-9.) பைபிள் சொல்கிற விதமாக, “பொறாமையோ எலும்புருக்கி”தான். (நீதிமொழிகள் 14:30) அது எரிச்சலையும் போட்டியையும் உண்டாக்குகிறது. காரணம் என்னவாக இருந்தாலும், ஒரு நண்பர் உங்கள் மனதை நோகடித்துவிட்டால் நீங்கள் என்ன செய்யலாம்?

பரிகாரம்

“முதலாவதாக அவளோ அவனோ வேண்டுமென்றே அதைச் செய்தார்களா என்பதைத் தெரிந்துகொள்ள அந்த நபரை நான் நன்றாக கவனிப்பேன்” என்று ரேச்சல் கூறுகிறாள். உங்களை அவமானப்படுத்துவதற்காக ஒருவர் ஏதோ ஒன்றை சொல்லிவிட்டதாக அல்லது செய்துவிட்டதாக நீங்கள் நினைத்தால் உடனடியாக உணர்ச்சி வேகத்தில் பேசிவிடாதீர்கள். இதற்கு பதிலாக பொறுமையாக இருந்து முழுவதுமாக யோசித்துப் பாருங்கள். (நீதிமொழிகள் 14:29) அவசரப்பட்டு கோபமாக பேசிவிட்டால் உங்களுக்கு நேர்ந்த அவமானம் நீங்கிவிடுமா அல்லது அது பெரிய விஷயமாக ஆகிவிடுமா? காரியங்களை யோசித்துப் பார்த்தப்பின் சங்கீதம் 4:4-⁠ல் உள்ள ஆலோசனையைப் பின்பற்ற நீங்கள் விரும்பலாம்: “நீங்கள் கோபங்கொண்டாலும், பாவஞ்செய்யாதிருங்கள்; உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள்.” அதன்பிறகு “அன்பு திரளான பாவங்களை மூடும்”படி நீங்கள் விட்டுவிடலாம்.​—1 பேதுரு 4:⁠8.

உங்கள் நண்பர் உங்கள் மனதை நோகடித்ததை உங்களால் அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டுவிட முடியவில்லை, அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? அப்போது, அந்த நபரை அணுகி அவரிடம் பேசுவதுதான் நல்லது. “நீங்க இரண்டுபேரும் தனியா சந்தித்துக்கொண்டு பேசி விஷயத்தை தீர்த்துக்கொள்ளப் பாருங்கள்” என்று 13 வயது குமார் கூறுகிறான். “அப்படி செய்யாட்டி அவன்மேல வஞ்சம் வச்சுட்டே இருக்கத் தோணும்.” 16 வயது சூசனும் இதுதான் சரி என்று நினைக்கிறாள். “நான் உன்னை முழுசா நம்பியிருந்தேன், நீ என்னை இப்படி ஏமாத்திட்டே என்று சொல்லிறதுதான் நல்லது” என்று அவள் சொல்கிறாள். “தனியா பேசி தீர்த்துக்கறதுதான் நல்லது” என்று ஜேக்கலின்கூட சொல்கிறாள். “மனசுல வெச்சிக்காம எல்லாத்தையும் நான் வெளிப்படையா பேசிடுவேன்” என்று அவள் சொல்கிறாள். “பொதுவா உங்க பிரண்டும் எதையும் மறைக்காமல் உங்களிடம் பேசிடுவார், பிரச்சினையை அப்போதே அந்த இடத்திலேயே தீர்த்துக்கலாம்.”

ஜாக்கிரதை, உங்கள் நண்பரிடம் பேச போகும்போது ‘வரிஞ்சுக்கட்டிக்கிட்டு’ கோபத்தோடு போகாதீர்கள். பைபிள் இவ்வாறு சொல்கிறது: “கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்; நீடிய சாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான்.” (நீதிமொழிகள் 15:18) ஆகவே உங்கள் கோபம் கொஞ்சம் தணிந்தப்பின் நிலைமையை சரிசெய்துகொள்ள முயற்சி எடுங்கள். “முதல்ல உங்களுக்கு கோபம் சர். . .ண்ணு தலைக்குமேல ஏறிடும், ஆனால் அது கொஞ்சம் தணிவதற்கு நீங்க டைம் கொடுக்கணும். அவர்மேல் உங்கள் கோபம் தணியும்வரை காத்திருங்கள். பின்பு அந்த நபரிடம் போய் உட்கார்ந்து அமைதியாக காரியங்களைப் பேசி தீர்த்துக்கொள்ளலாம்.”

“அமைதியாக” என்பதே இங்கு முக்கியமான வார்த்தை. உங்கள் நண்பரை வார்த்தை அம்புகளால் துளைத்துவிட்டு வருவது உங்கள் நோக்கமில்லை என்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் அவரிடம் போவது சுமுகமாக பேசி உங்கள் நட்பை திரும்ப புதுப்பித்துக் கொள்வதற்குத்தான். (சங்கீதம் 34:14) ஆகவே இருதயத்திலிருந்து பேசுங்கள். “நான் உன்னோட பிரண்டு, நீ என்னோட பிரண்டு; என்ன நடந்துச்சின்னுதான் நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்” என்று சொல்லும்படி லிசா சொல்கிறாள். “அந்தச் செயலுக்கு பின்னால் இருக்கும் காரணத்தை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அது தெரிந்துவிட்டால், அதை சரிசெய்வது ஒன்றும் கஷ்டமில்லை.”

பழிக்குப் பழி வாங்குவது, ஒருவேளை அந்த நபரைப் பற்றி வீண்பேச்சு பேசி மற்றவர்களை உங்கள் பக்கத்தில் சேர்த்துக்கொள்ள முயற்சிப்பதெல்லாம் நிச்சயமாகவே தவறு. ரோமர்களுக்கு கிறிஸ்தவ அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு கூறினார்: “ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள்.” (ரோமர் 12:17) உண்மையில் எத்தனை ஆழமாக உங்கள் மனதை ஒருவர் நோகடித்திருந்தாலும் பழிக்குப் பழி வாங்குவதால் நிலைமை இன்னும் அதிக மோசமாகத்தான் ஆகும். “பழிவாங்குவதில் பிரயோஜனமில்லை, ஏன்னா திரும்ப நீங்கள் நண்பர்களாக முடியாது” என்று ஜெயந்தி சொல்கிறாள். அதற்கு பதிலாக நட்பில் ஏற்பட்ட விரிசலை சரி செய்ய உங்களால் ஆன எல்லாவற்றையும் செய்யும்போது “அது உங்களை மேம்பட்ட நபராக உணரச் செய்யும்.”

சமாதானமாகிவிட நீங்கள் முயற்சி செய்யும்போது உங்கள் நண்பர் பாராமுகமாய் இருந்துவிட்டால்? நட்பின் நெருக்கம் வித்தியாசமாக இருக்கலாம் என்பதை நினைவில் வையுங்கள். “எல்லா நண்பர்களும் ஒரே அளவு நெருக்கமாக இருக்க மாட்டார்கள்” என குடும்ப ஆலோசகர் ஜூடித் மெக்லஸ் கூறுகிறார். “பல்வேறு விதமான உறவுகள் உங்களுக்கு இருக்கலாம் என்பதை மறந்துவிட வேண்டாம்.” ஆனால் சமாதானமாக போய்விடுவதற்கு உங்களால் செய்ய முடிந்ததை நீங்கள் செய்துவிட்ட திருப்தி உங்களுக்கு இருக்கும். அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: ‘கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்.’​—ரோமர் 12:⁠18.

மிகச் சிறந்த நட்பிலும் புயல் வீசலாம். மற்றவர்களைப் பற்றிய உங்கள் கருத்தை அல்லது உங்கள் சுய தகுதியை அழித்துவிட அனுமதியாமல் உங்களால் அதை தாக்குப்பிடிக்க முடிந்தால் நீங்கள் முதிர்ச்சியுள்ள ஒரு நபராக வளர்ந்து வருகிறீர்கள் என்று அர்த்தமாகும். நண்பர்களில் சிலர் ‘கேடுவருவிப்பவர்களாய்’ இருந்தபோதிலும் “உடன் பிறந்தாரைவிட மேலாக உள்ளன்பு காட்டும் தோழருமுண்டு” என பைபிள் நமக்கு உறுதியளிக்கிறது.—நீதிமொழிகள் 18:⁠24, பொ.மொ.

[அடிக்குறிப்பு]

a இந்தக் கட்டுரையில் சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

[பக்கம் -ன் படங்கள்15]

நடந்ததை மனம்விட்டு பேசினால் நட்பு மீண்டும் பூத்துக்குலுங்கலாம்