Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

கேடுவிளைவிக்கும் வாழ்க்கை-பாணி சில மாதங்களாக என் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. ஆகவே, வாழ்க்கை பாணியை மாற்றினால் நாம் ஆரோக்கியமாக இருக்கலாம் என்பதை தெரிந்துகொள்வது உற்சாகமளித்தது. “உங்கள் வாழ்க்கை-பாணி உயிருக்கு உலை வைக்கிறதா?” (ஜூலை 8, 1999) என்ற தொடர் கட்டுரைகளிலிருந்து அநேக நல்ல விஷயங்களை கற்றுக்கொண்டேன். உதாரணமாக, நான் சாப்பிடும் உணவு வகைகள் சிலவற்றை குறைப்பது, அதோடு இன்னும் சமநிலையான உணவு திட்டத்தை கடைப்பிடிப்பது, அதாவது பழவகைகள், காய்கறிகள் போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும் என்பதை அந்தக் கட்டுரை எனக்கு கற்றுக்கொடுத்தது.

ஈ.பி.எம்., பிரேஸில்

தாமதமான பிரதிபலிப்பு “அன்று விதைத்தது இன்று விளைந்தது” (ஜூலை 8, 1999) என்ற கட்டுரை எனக்கு புத்துயிரூட்டியது. இது என்னுடைய முழுநேர ஊழியத்தின் மூன்றாம் ஆண்டு. நான் எதிர்பார்த்த பலன் கிடைக்காத சமயங்களில், நான் சோர்வடைந்துவிடுவேன். அதோடு தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் போய்விடும். ஆனால் பலனைப் பற்றி எதுவும் கவலைப்படாமல் அதை யெகோவா தேவனிடம் விட்டுவிட்டு, என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய இந்தக் கட்டுரை எனக்கு உதவியது.

டி.என்., ஜப்பான்

கேலி கிண்டல் ஜூன் 22, 1999-⁠ல் வெளிவந்த “இளைஞர் கேட்கின்றனர் . . . கேலி கிண்டலை சமாளிப்பது எப்படி?” என்ற கட்டுரையை வாசிப்பதில் அதிக மகிழ்ச்சி அடைந்தேன். நான் கிண்டர்கார்டனுக்கு சென்றது முதற்கொண்டே பள்ளி சகாக்கள் என் நம்பிக்கையைப் பற்றி அநேக கேள்விகளை கேட்டிருக்கிறார்கள். அவர்கள் கேட்கும் விதம் சில சமயம் என் உணர்ச்சிகளை அதிகம் புண்படுத்துகிறது. நான் அநேக சந்தர்ப்பங்களில் என் பொறுமையை இழந்திருக்கிறேன். ஆனால் இவையெல்லாம் என் விசுவாசத்திற்கு வரும் சோதனைகள் என்பதை இப்போது நான் உணர்கிறேன். இருந்தபோதிலும், சிலசமயம் நான் பள்ளியில் மற்ற சிலரிடம் சிறந்த விதத்தில் சாட்சி கொடுத்திருக்கிறேன்.

எல்.கே., ஐக்கிய மாகாணங்கள்

பண்டிகைகள், தேசிய நிகழ்ச்சிகள் போன்றவற்றில் நான் கலந்துகொள்ளாததால் நானும்கூட இப்படிப்பட்ட கேலி கிண்டலுக்கு இரையாகியிருக்கிறேன். நான் நேர்மையாக இருந்ததற்காகவும், பைபிளின் ஒழுக்க தராதரங்களை கடைப்பிடித்ததற்காகவும் அநேக முறை தொல்லைகளுக்கு ஆளாகியிருக்கிறேன். ஆனால் திருத்தமான அறிவை ஒழுங்காக எடுத்துக்கொள்வது இவற்றை எல்லாம் எதிர்த்துப் போராட எனக்கு உதவியிருக்கிறது. என் நம்பிக்கைகளைப் பற்றி நான் கூச்சப்படாமல் தைரியமாக பேச இது எனக்கு உதவியிருக்கிறது.

ஹெச்.சி., ஜாம்பியா

என் இளமைப் பருவம் என்னைவிட்டு பறந்து வெகு காலம் ஆகிவிட்டது​—⁠எனக்கு இப்போது 50 வயது! இருப்பினும், அந்தக் கட்டுரையை பாராட்டுகிறேன். ஊழியத்தில் நாம் எதிர்ப்படும் எதிர்ப்பு அலைகள் சில சமயம் நம்மை நிலைகுலைய வைக்கிறது. நாம் அப்படிப்பட்ட எதிர்ப்புகளை எதிர்த்துப் போராட வேண்டும் என்ற உணர்வும் நமக்குள் வரக்கூடும். அதனால்தான், “பேச்சுக்கு பேச்சு பதிலடி கொடுத்துக் கொண்டிருந்தால், அது எவ்வளவுதான் புத்திசாலித்தனமான பதிலாக இருந்தாலும் எரிகிற கொள்ளியில் எண்ணெய் வார்ப்பதுபோல் மேலும் மேலும் வார்த்தை வளர்ந்து கொண்டேதான் போகும்” என்ற நினைப்பூட்டுதலை நான் பாராட்டினேன். அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் நான் சண்டை ஏதும் போடாமல் நியாயவிவாதம் செய்ய முயற்சி செய்கிறேன். நான் செய்வது சரியே அவ்வாறே தொடர்ந்து செய்ய வேண்டும் என இந்த நினைப்பூட்டுதல் வலியுறுத்தியது.

எ.எஃப்., ஐக்கிய மாகாணங்கள்

நீடூழி வாழ்க “நலமுடன் நீடூழி வாழ்வது எப்படி?” (ஜூலை 22, 1999) என்ற அருமையான தொடர் கட்டுரைகளை வாசித்தேன். அதற்காக உங்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. ஆயுட்காலம் என்பதற்கும் சராசரி வயது என்பதற்கும் உள்ள வித்தியாசத்தைப் பற்றிய விளக்கத்தை இப்போது பெற்றுக்கொண்டேன். அதோடு, முதிர்வயதால் ஏற்படும் பாதிப்புகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதைப் பற்றி நீங்கள் கொடுத்த அருமையான அறிவுரைகள், தன்னைப் பற்றி அதிகம் கவலைப்பட்டுக்கொள்ளும் என் 88 வயது தாத்தாவுக்கு உதவிசெய்ய நல்ல ஆலோசனைகள்.

டி.என்., ஐக்கிய மாகாணங்கள்

நடமாடும் காது “டுவிங்கி ஒரு நடமாடும் காது!” (ஜூலை 22, 1999) என்ற கட்டுரைக்காக நன்றி சொல்ல விரும்புகிறேன். காதுகேளாதோர் அநேக கஷ்டங்களையும் துன்பங்களையும் எதிர்ப்படுவார்கள் என்று நான் அறிந்திருப்பதால், அவர்களிடம் இரக்கத்துடன் நடந்துகொள்ள முடிகிறது. எனக்கும் நாய்களை ரொம்ப பிடிக்கும், இவை எவ்வாறு அநேகருக்கு உதவியாகவும் ஆறுதலாகவும் இருக்க முடியும் என்பதை தெரிந்துகொண்டதில் அதிக மகிழ்ச்சி.

எல்.பி., இத்தாலி

எனக்கும்கூட என் நாயே ‘அசிஸ்டென்ட்.’ எனக்கு முதுகெலும்பு பிரச்சினையும் ஃபைப்ரோமையால்கியாவும் இருப்பதால் என்னால் அதிக வேலை செய்ய முடிவதில்லை, பெரும்பாலும் சக்கர நாற்காலியிலேயே கிடப்பேன். ஆனால் என் நாய் எனக்கு செய்யும் உதவிகளையெல்லாம் வர்ணிக்க வார்த்தைகள் போதாது. நான் கடைக்கு செல்லும்போதும் வீட்டை சுத்தம் செய்யும்போதும் எனக்கு அநேக உதவிகளை செய்கிறது. நான் ஊழியத்திற்குச் செல்லும்போது என் புத்தகங்களையும் சுமந்து வருகிறது.

கே.டபிள்யு., ஐக்கிய மாகாணங்கள்