Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

க்லேடியோலஸ்—அழகின் சிகரம் மென்மையின் இலக்கணம்

க்லேடியோலஸ்—அழகின் சிகரம் மென்மையின் இலக்கணம்

க்லேடியோலஸ்—அழகின் சிகரம் மென்மையின் இலக்கணம்

பூக்களின் ‘சிரிப்பில்’ மயங்காதவர் எவருமில்லை. இவ்வுலகிலுள்ள பூக்களின் அழகையெல்லாம் மொத்தமாக குத்தகைக்கு எடுத்திருப்பது போல காட்சியளிக்கும் பூவே இந்த க்லேடியோலஸ். இது அழகையும் புகழையும் ஒருங்கே பெற்றிருக்கிறது. இதனால், இஸ்ரேல், நெதர்லாந்து உட்பட பல நாடுகளில் இந்தப் பூ வியாபாரத்திற்கென்றே விசேஷமாக வளர்க்கப்படுகிறது. அமெரிக்காவில் இந்த பூக்களுக்கென்று பண்ணைகள் இருக்கின்றன. பாரெல்லாம் பரந்திருக்கும் இதன் ரசிகர்கள் வாங்கி மகிழவும், பக்கத்திலேயே ‘குடி’ வைத்துக்கொள்ளவும் இந்த பண்ணைகள் உலகம் முழுவதிலுமுள்ள பல்வேறு பகுதிகளுக்கு இவற்றை ஏற்றுமதி செய்கின்றன.

அழகான இந்தப் பூவின் குடும்பம் இப்போது பரந்து விரிந்து அழகின் சாம்ராஜ்யமாக திகழ்கிறது. அந்த ஒரே குடும்பத்தில் நாம் நினைத்துக்கூட பார்க்கமுடியாத வண்ணங்கள், வண்ணக்கலவைகள், வடிவங்கள் என இந்தப் பூக்களின் வகைகள் இப்போது 2000-ற்கும் மேல். இவற்றை வளர்ப்பவர்கள் எவ்வாறு ஒரே இனத்திலிருந்து இப்படி கணக்கிலடங்கா வகைகளை உருவாக்கினார்கள்?

புதுசு புதுசா பூக்கள்

இந்த பூக்களை வளர்ப்பவர், ஒட்டக-முடியாலான பிரஷ்ஷைப் போன்று தோற்றமளிக்கும் ஒரு கருவியை கொண்டிருக்கிறார். அக்கருவியைக் கொண்டு அந்த மலரிலுள்ள ஆணுறுப்பாகிய மகரந்தத்தாளிலிருந்து மகரந்தத்தை எடுத்து, வேறொரு மலரிலுள்ள பெண்ணுறுப்பாகிய சூலக முகுடிற்கு அதை மாற்றுகிறார். எடுக்கப்பட்ட அந்த மகரந்தம் பொதுவாக பூவில் தாழ்வான அல்லது கடைசி இதழில்தான் வைக்கப்படுகிறது. இவ்வாறு செய்தபிறகு, அப்பூவை நன்றாக மூடிவிடுகின்றனர்; ஏனென்றால், தேனீக்கள் அல்லது ஈக்கள் மூலமாக மற்ற பூவிலிருந்து மகரந்தம் இயற்கையாகவே வந்து இந்த பூவுடன் சேர்ந்து, அவர்கள் எதிர்பார்க்கும் வகை கெட்டுவிடாமல் இருக்க அவ்வாறு செய்கின்றனர். ஒரு குறிப்பிட்ட நிறத்தை அல்லது தோற்றத்தை பெற ஒரு வகை க்லேடியோலஸ் அவர்கள் விரும்பும் அம்சங்களையுடைய மற்றொரு வகை க்லேடியோலஸுடன் க்ராஸ் செய்யப்படுகிறது.

ஆனால் ஒன்றை நாம் மனதில் வைக்க வேண்டும். இப்போது உருவாகியிருக்கும் அந்த புது வகை, புதிய இனமல்ல. இந்த இனத்திலிருந்து வகைவகையான பூக்களை உருவாக்கும் திறன் நேற்று இன்று வந்ததல்ல, ஆதிமுதலிருந்தே க்லேடியோலஸின் மரபியல் தொகுப்பில் பதிவு செய்யப்பட்டிருப்பதுதான். குறிப்பிட்ட சில வகைகளை தேர்ந்தெடுத்து க்ராஸ் செய்வதன் மூலம், வெவ்வேறு நிற பூக்களை உருவாக்கலாம். உதாரணமாக பளபளக்கும் வெள்ளை நிறத்திலிருந்து கரும்சிவப்பு நிறம்வரையிலும் உருவாக்கலாம். அதுமட்டுமின்றி, க்லேடியோலி இனப்பூக்கள் வித்தியாசப்பட்ட வர்ணங்களிலும், புள்ளி புள்ளியாகவும், மடிப்புகளையுடையதாகவும், இரு இதழ்களைக் கொண்டதாகவும் பல வகைகளில் உள்ளன. சிலவற்றிலிருந்து வெளிப்படும் மெல்லிய நறுமணம் நம் நாசியை ஊடுருவி நம்மை மயக்கிவிடும்.

பட்டுபோன்ற அழகு

இங்கு படத்தில் கொடுக்கப்பட்டுள்ள க்லேடியோலஸின் பல வகைப் பூக்களை கொஞ்சம் உற்றுப்பாருங்கள். இங்கு காணப்படும் பல்ச்ரிடியூட் என்ற பூ நம் மனதை கவரவில்லையா! அழகாக பட்டு போல மலர்ந்து விரிந்துள்ள அதன் இதழ்களை பாருங்கள், எவ்வளவு மென்மையாகவும், மடிப்புகளுடனும், ஓரங்கள் லாவன்டர் நிறத்திலும் அதன் முனை கரும்லாவன்டர் நிறத்திலும் அழகாக கண்ணைப் பறிக்கின்றன! அப்பூவிற்குள் பிரவேசிக்கும் அதன் கடைசி இதழ்களின் அழகே அழகுதான்; கருஞ்சிவப்பு மற்றும் ஊதா நிறத்தை அள்ளித் தெளித்ததுபோல இருக்கின்றன.

இதில் காணப்படும் மற்றொரு வகையான ஆர்கிட் லேஸ்-ஐ கவனியுங்கள், தொட்டாலே கிழிந்துவிடும் போல தோற்றமளிக்கிறது, அவ்வளவு மென்மை. அதன் மலர்கள் தண்டோடு ஒட்டினார்போலேயே வளர்கின்றன, ஆனால் அந்த மலரின் நடுவிலுள்ள அழகிய தொண்டைப் பகுதியிலிருந்து வெளிப்படும் மகரந்தத்தாள்கள் வெளியே நீண்டு காணப்படுகின்றன. மற்ற பூக்களுக்கும் ஆர்வத்தை தூண்டும் பெயர்கள் உண்டு; கிலிட்டரிங் ஸ்டார், டிரீம்ஸ் என்ட், ரெட் அலெர்ட், பியர்லெஸ் மற்றும் சில்வர் மூன்.

க்லேடியோலியை வளர்ப்பது எப்படி?

க்லேடியோலஸ் விவசாயிகள், இப்பூக்களிலிருந்து விதைகளை எடுப்பது மட்டுமல்லாமல், பூவினுடைய தண்டின் அடிப்பகுதியில் வளரும் குமிழ்போன்ற பாகத்தை அதாவது கார்ம்களையும் அறுக்கின்றனர். இந்த கார்ம்களில் வளரும் மற்றொரு பாகமான கார்மெல்களையும் அறுத்து சேகரிக்கின்றனர்.

இன்று வளர்க்கப்படும் க்லேடியோலி பெரும்பாலும் ஆப்பிரிக்க இனத்திலிருந்தே உண்டாக்கப்பட்டவை. ஆகவே, இதன் பூர்வீகம் வெப்ப மண்டத்தைச் சேரும். அத்துடன் இவை தட்பவெப்பநிலையால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. சில பகுதிகளிலுள்ள குளிரை இந்த செடிகளால் தாக்குப்பிடிக்க முடியாது, ஆனால் வெதுவெதுப்பான வெயில் காலத்தில் நன்கு வளர்கின்றன.

குளிர் காலத்தின்போது அதுவும் வளரும் பருவம் முடியும் சமயத்தில் கார்மை தோண்டி எடுத்து ஜாக்கிரதையாக சுத்தம் செய்யவேண்டும். அப்போது, அதில் ஒரு புதிய கார்ம் வளர்ந்திருக்கும், தண்டிற்கு கீழே இருக்கும் பழைய உயிரற்ற கார்மை நீக்கிவிடுவது இந்த புதிய கார்ம் வேர்விட்டு வளர உதவும். அதோடு, அந்த ஒவ்வொரு கார்முடன் பட்டாணி சைஸில் கொத்தாக ஒட்டிக்கொண்டுள்ள கார்மெல்களையும் அகற்றிவிட வேண்டும். குளிர் சமயத்தில் கார்மெல் மற்றும் கார்மை உறைநிலைக்கு அதிகமான தட்பவெப்பநிலையில், உலர்ந்த, குளிர்ந்த இடத்தில் வைக்க வேண்டும்.

இவற்றை நட்ட பிறகு, ஒவ்வொரு கார்மிலுமிருந்து மெல்லிய இலைகள் வெளிப்படுகின்றன. வளரும் பருவகாலம் முடிவதற்குள் அந்த கார்ம் முதிர்ந்த கார்மாக வளர்ந்துவிடும். அடுத்த வளரும் பருவ காலத்தில் இந்த கார்ம்களை நட்டால், செழிப்பான, அழகிய பூக்களை பூக்கும் பெரிய செடியாக விரைவில் வளர்ந்துவிடும்.

மிதமான வெப்பநிலையுள்ள சமயத்தில், இவற்றை வசந்த காலத்திலேயே நட ஆரம்பித்துவிடலாம். வெப்ப காலத்தில் இப்போதுதான் நடவேண்டும் அப்போதுதான் நடவேண்டும் என்று எதுவுமில்லை. ஆனால் இந்த கார்மெலும் கார்மும் ஈரத்தன்மையுள்ள, சிறிது அமிலத்தன்மையுடைய மண்ணில்தான் நடப்படவேண்டும். நிழலுள்ள இடங்களில் இந்த க்லேடியோலி சரியாக வளருவதில்லை அதனால் எங்கு சூரிய ஒளி அதிகம் கிடைக்குமோ அங்கு நடவேண்டும்.

எட்டு சென்டிமீட்டர் ஆழமுள்ள குழியில் இந்த கார்மெல்களை தூவி மண்ணால் மூடிவிடவேண்டும். ஆனால் கார்ம்களை 13 சென்டிமீட்டர் ஆழமுள்ள குழியில் விதைக்க வேண்டும். வீட்டு தோட்டத்தில் இவை வதவதவென வளர்ந்து நெருக்கிக்கொண்டிருக்காமல் இருக்க, அவை சாதாரண மீடியம் சைஸ் கார்மாக இருந்தால் இரு கார்ம்களுக்கும் இடையில் எட்டு செண்டிமீட்டர் இடைவேளை இருக்க வேண்டும். அவை பெரிய கார்ம்களாக இருந்தால், அவற்றிற்கு இடையில் பதிமூன்று செண்டிமீட்டர் இடைவேளை இருக்க வேண்டும். இந்த க்லேடியோலஸ் கார்ம்களை சரியாக கவனமாக சுத்தம் செய்து நட்டால், சில மாதங்களில் அவை பெரிய செடிகளாக வளர்ந்துவிடும், அதில் பூத்துக்குலுங்கும் பூக்கள் உங்களைப் பார்த்து ‘சிரிப்பதை’ கண்டு மனம் ஆனந்தக் கூத்தாடும். ஆம், க்லேடியோலஸ் அழகின் சிகரம் மென்மையின் இலக்கணம்.

[பக்கம் 16-ன் படம்]

ஆர்கிட் லேஸ்

[பக்கம் 16, 17-ன் படம்]

கோரல் டிரீம்

மோனட்

டிரீம்ஸ் என்ட்

சன்ஸ்போர்ட்

[பக்கம் 17-ன் படம்]

பல்ச்ரிடியூட்