Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தலைமறைவில் தலைவிரித்தாடும்—தற்கொலை

தலைமறைவில் தலைவிரித்தாடும்—தற்கொலை

தலைமறைவில் தலைவிரித்தாடும்—தற்கொலை

ஜான், மேரி a தம்பதியினருக்கு கிட்டத்தட்ட 60 வயது. அமெரிக்க கிராமப்புறத்தில் ஒரு சின்ன வீட்டில் வசித்துவருகின்றனர். நுரையீரல் நோயும் இதயநோயும் ஜானின் உயிரை மெதுமெதுவாய் குடித்துக் கொண்டிருக்கின்றன. விதவை கோலம் கொடுங்கனவாய் மேரியை வதைக்கிறது. கண்முன்னரே கணவன் கொஞ்சம் கொஞ்சமாய் செத்துக் கொண்டிருப்பதை பார்த்து வேதனையால் கரைந்துகொண்டிருக்கிறார். மேரியும் ஒரு நோயாளி, பல வருடங்களாக மன உளைச்சலின் பிடியில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறார். வாழ்க்கை கசந்துவிடவே, சாவைத் தழுவ துடிக்கிறார். கொஞ்ச நாளாக இதை வாய்விட்டும் சொல்ல ஆரம்பிக்கிறார். ஜானுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச நிம்மதியும் போய்விடுகிறது. மன உளைச்சலால் மேரி மனத்தெளிவை இழக்கிறார். மருந்து மாத்திரைகளும் நிலைமையை மோசமாக்குகின்றன. தனிமரமாய் வாழும் யோசனையைக்கூட ஜீரணிக்கவே முடியவில்லை என்கிறார்.

வீட்டில் எங்கு பார்த்தாலும் மருந்து மாத்திரைகள் மயம். இதயநோயிற்கு மனச்சோர்வுக்கு கவலைக்கு என, மருந்துக்கடையே வீட்டிற்குள் வந்துவிட்டது போலிருக்கிறது. ஒருநாள் விடிஞ்சதும் விடியாததுமாய் மேரி சமையற்கட்டுக்குள் செல்கிறார். மாத்திரைகளுக்கு மேல் மாத்திரைகளாக மடமடவென்று முழுங்க ஆரம்பிக்கிறார். எதேச்சையாக அந்தப் பக்கம் வந்த ஜான் பதறிப்போய், மீதியிருந்த மாத்திரைகளை பிடுங்கியெறிந்து, உடனடியாக டாக்டர்களை வரவழைக்கிறார். மேரி பேச்சு மூச்சில்லாமல் கிடக்கிறார். ஜானுக்கு நெஞ்சு வெடித்துவிடும்போல் படபடக்கிறது, மேரிக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது ஆண்டவனே என அவரின் உதடுகள் உச்சரித்துக்கொண்டே இருக்கின்றன.

புள்ளிவிவரங்கள் காட்டுபவை

இளைஞர்கள் அதிகமாய் தற்கொலை செய்துகொள்வதைப் பற்றித்தான் கொஞ்ச காலமாக எங்கும் எதிலும் பேச்சு அடிபடுகிறது. இந்தப் பரிதாபம் இந்தளவு சமூகத்தின் மனதில் இடம்பிடித்திருப்பது ஆச்சரியம் இல்லை. உயிர்த்துடிப்புடன் நம்பிக்கை நட்சத்திரங்களாக மின்ன வேண்டிய வயதில் உயிரின் துடிப்பையே அடக்கிவிட்டு மண்ணோடு மண்ணாய் மக்கிப்போகும் இவர்களது சோகக் கதை புறக்கணிக்கக்கூடிய ஒன்றா என்ன! ஆனால், கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயமும் உண்டு. பெரும்பாலான நாடுகளில், வயது அதிகரிப்பதற்கு ஏற்ப தற்கொலை வீதமும் சீராக அதிகரிக்கிறது. இது ஏனோ அறிக்கை செய்யப்படுவதில்லை. என்றாலும், ஒட்டுமொத்த தற்கொலை வீதம் அதிகமாய் இருந்தாலும் சரி குறைவாக இருந்தாலும் சரி இதுவே உண்மையாக இருக்கிறது. முந்திய பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள பெட்டி இதைத்தான் காட்டுகிறது. அதிலுள்ள புள்ளிவிவரங்கள், இந்தப் பித்து உலகையே தலைமறைவில் பீடித்திருப்பதை தெளிவாய் படம்பிடித்துக் காட்டுகின்றன.

தற்கொலை செய்துகொண்ட, 65 வயதிற்கு மேற்பட்ட அமெரிக்கர்களின் எண்ணிக்கை 1980 முதற்கொண்டு 36 சதவீத அதிகரிப்பை கண்டிருப்பதாய் ஐ.மா. நோய் கட்டுப்பாட்டு மையம் 1996-⁠ல் அறிவித்தது. இந்த அதிகரிப்பிற்கு காரணம் அமெரிக்காவில் முதியோர் அதிகமாய் இருந்ததே ஆகும். ஆனால் இது மட்டுமே காரணமல்ல. 1996-⁠ல், 65 வயதிற்கு மேற்பட்டவர்களின் தற்கொலை வீதம் 40 ஆண்டுகளில் முதன்முறையாக 9 சதவீதம் அதிகரித்தது. அதுபோக கீழே விழுந்ததாலும் விபத்துக்களாலுமே அதிக வயதானவர்கள் இறந்தனர். சொல்லப்போனால் அதிர்ச்சியளிக்கும் இந்தப் புள்ளிவிவரங்கள்கூட மிகக் குறைவாகவே இருக்கலாம். “மரண சான்றிதழ்களில் தற்கொலையே மிக மிக குறைவாக அறிக்கை செய்யப்படுவதாய் சந்தேகிக்கப்படுகிறது” என தற்கொலை பற்றிய புத்தகம் (ஆங்கிலம்) சொல்கிறது. அறிக்கை செய்யப்படும் எண்ணிக்கையைவிட உண்மையில் இரண்டு மடங்கு அதிகமாக இருக்கலாம் என சிலர் கணக்கிடுவதாகவும் அந்தப் புத்தகம் சொல்கிறது.

இதன் விளைவென்ன? மற்ற அநேக நாடுகளைப் போல ஐக்கிய மாகாணங்களிலும் முதியோர் தற்கொலை தலைமறைவில் தலைவிரித்தாடுகிறது. இதில் நிபுணரான டாக்டர் ஹெர்பர்ட் ஹென்டின் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “ஐக்கிய மாகாணங்களில் வயது அதிகரிப்பதற்கு ஏற்ப தற்கொலை வீதமும் சீராக அதிகரித்தாலும், முதியோர் தற்கொலையை சமுதாயம் இன்னும் ஏறெடுத்துப் பார்க்கவில்லை.” ஏன் அப்படி? முதியோர் மத்தியில் தற்கொலை எப்போதுமே அதிகமாக இருந்துவந்திருப்பது ஒரு காரணம். அதனால்தான், “கிடுகிடுவென அதிகரித்த இளைஞர் தற்கொலையின் அளவுக்கு இது பீதியை உண்டாக்கவில்லை” என்றும் சொல்கிறார்.

பயங்கர சாமர்த்தியம்

அதிர்ச்சியளிக்கும் இந்தப் புள்ளிவிவரங்கள் உண்மையைக் காட்டுகின்றன, உள்ளத்தைக் காட்டுவதில்லை. உயிருக்கு உயிரான துணையை இழந்த பரிதவிப்பு, சுதந்திரத்தை பறிகொடுத்த சோகம், தீராத வியாதின் விரக்தி, மன உளைச்சலின் வெறுமை, நிவாரணமில்லாத கொடிய நோயால் சுக்குநூறாகும் நம்பிக்கை என எந்த உணர்ச்சிகளையும் அந்த எண்கள் காட்டுவதில்லை. பிரச்சினைகள் முளைத்துவிட்டால் போதும், இளைஞர்கள் முன்பின் யோசிக்காமல் தற்கொலையில் குதித்துவிடுகின்றனர். முதியோரோ தீர்வில்லாத நிரந்தர பிரச்சினைகளை எதிர்ப்படுவதாக தோன்றுவதால் இளைஞரைவிட அதிக மனவுறுதியோடும் பயங்கர சாமர்த்தியத்தோடும் உயிரைப் போக்கிக்கொள்கின்றனர்.

“தற்கொலை முதியோர் மத்தியில் பரவலாக இருக்கிறது. அதேசமயம் அது முதியோருக்கும் இளைஞருக்கும் உள்ள முக்கிய வித்தியாசங்களை எடுத்துக்காட்டுகிறது” என்பதாய் அமெரிக்காவில் தற்கொலை என்ற ஆங்கில புத்தகத்தில் டாக்டர் ஹென்டின் குறிப்பிடுகிறார். “குறிப்பாக, தற்கொலை முயற்சிக்கும் தற்கொலைக்கும் உள்ள விகிதம் முதியோர் விஷயத்தில் முற்றிலும் மாறுபடுகிறது. ஒட்டுமொத்த ஜனத்தொகையில், தற்கொலை முயற்சிக்கும் தற்கொலைக்கும் உள்ள விகிதம் 10:1 என்பதாய் கணக்கிடப்படுகிறது; இளைஞர் (15-24) விஷயத்தில் இது 100:1. ஆனால் 55 வயதிற்கு மேற்பட்டவர்கள் விஷயத்திலோ இது 1:1 என்று கணக்கிடப்படுகிறது!”

இந்தப் புள்ளிவிவரம் காட்டும் நிஜம் சுடுகிறது! வயதாகி, வலுவிழந்து, வலியோடும் வியாதியோடும் வாழ்க்கையை ஓட்டுவது வேதனையிலும் வேதனையானது! சாவதே மேல் என்ற முடிவுக்கு இத்தனை பேர் வரக் காரணம் இதுதானே. இருந்தாலும் உயிரை உயர்வாய் மதிப்பதற்கு நல்ல காரணம் இருக்கிறது​—⁠பிரச்சினைகள் நம்மை நெருக்கும்போதும். ஆரம்பத்தில் குறிப்பிட்ட மேரிக்கு என்னவாயிற்று என கவனியுங்கள்.

[அடிக்குறிப்புகள்]

a பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

[பக்கம் 3-ன் அட்டவணை]

தற்கொலை வீதம்—1,00,000 பேருக்கு ஒருவர்

வயது 15-24 வயது 75, அதற்கும் மேற்பட்டவர்கள்

ஆண்கள்/பெண்கள் நாடு ஆண்கள்/பெண்கள்

8.0/2.5 அர்ஜன்டினா 55.4 /8.3

4.0/0.8 கிரீஸ் 17.4/ 1.6

19.2/3.8 ஹங்கேரி 168.9/60.0

10.1 / 4.4 ஜப்பான் 51.8/37.0

7.6 / 2.0 மெக்ஸிகோ 18.8/ 1.0

53.7 / 9.8 ரஷ்யா 93.9 /34.8

23.4 / 3.7 ஐக்கிய மாகாணங்கள் 50.7/ 5.6