Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இன்றைய அடிமைகள் யார்?

இன்றைய அடிமைகள் யார்?

இன்றைய அடிமைகள் யார்?

எண்ணிக்கையை கொஞ்சம் எண்ணிப் பாருங்கள். 15 வயதுக்குக் கீழ்ப்பட்ட 20, 25 கோடி பிள்ளைகள் விழித்திருக்கும் நேரத்தை வேலையில் செலவழிக்கின்றனர். போராயுதம் தாங்கி போர் புரிய 1995, 1996-⁠ல் மட்டுமே இரண்டரை லட்சம் பிள்ளைகளை பிடித்துக்கொண்டு போய்விட்டார்கள். இவர்களில் சிலருக்கு ஏழே வயசு! அவர்களுக்கு கிடைத்த பட்டம் போர் அடிமைகள். ஒவ்வொரு ஆண்டும் அடிமைகளாக விற்கப்படும் பெண்கள் மற்றும் சிறுவர்களின் எண்ணிக்கை பத்து லட்சத்தையும் தாண்டுகிறது.

ஆனால் உணர்ச்சியற்ற இந்த எண்ணிக்கைகள் இவர்களின் சோகத்தை சொல்லிவிடாது. உதாரணமாக, வட ஆப்பிரிக்க நாட்டில், குரூர குணம்படைத்த முதலாளியின் பிடியிலிருந்து தப்பிவந்த ஓர் இளம் பெண் ஃபாட்மாவை எழுத்தாளர் பர்கெட் சந்தித்தார். ஆனால் அவளிடம் பேசிய பிறகு, இவள் விடுதலையானவள்தான் என்றாலும் “மனதில் என்றும் அடிமையாகத்தான் இருப்பாள்” என்பதை பர்கெட் புரிந்துகொண்டார். ஒளிமயமான எதிர்காலத்தை ஃபாட்மா எண்ணிப்பார்க்க முடியுமா? “பொழுதுவிடிவதைத் தவிர வேறொன்றையும் அவளால் சிந்தித்துப்பார்க்க முடியாது.” “அவளை பொருத்தவரை எதிர்காலம் என்பது சூனியமான அநேக விஷயங்களில் ஒன்று” என்று சொல்கிறார் பர்கெட்.

ஆம், இந்த நொடிப்பொழுது வரைக்கும் கோடிக்கணக்கான சகமனிதர்கள் நம்பிக்கையற்ற அடிமைகளாகவே இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஏன் அடிமையானார்கள், எப்படி அடிமையானார்கள்? என்ன வகையான அடிமைத்தனத்தில் அமிழ்ந்து கிடக்கிறார்கள்?

சதையை விற்பவர்கள்

அமெரிக்காவில் பிரசுரிக்கப்படும் டூரிஸ்ட் வழிகாட்டி என்ற சிறுபுத்தகம் இப்படி அப்பட்டமாக விளம்பரப்படுத்துகிறது: “தாய்லாந்திற்கு செக்ஸ் டூர்ஸ். ரியல் பெண்கள். ரியல் செக்ஸ். ரியல் ச்சீப். . . . கன்னிப் பெண்ணை வெறும் 200 டாலருக்கு வாங்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?” ஆனால் இந்தச் சிறுபுத்தகம் சொல்லாதது: இந்தக் “கன்னிப் பெண்கள்” கிட்நாப் செய்யப்பட்டவர்கள் அல்லது பலவந்தமாக விலைமாதர்களாக விற்கப்பட்டவர்கள். அங்கே சராசரியாக ஒரு நாளைக்கு சுமார் 10 முதல் 20 வாடிக்கையாளர்கள் வருகிறார்கள். அவர்கள் ‘செக்ஸ் சர்வீஸ்’ செய்யவில்லையென்றால், அடிக்கப்படுகிறார்கள். தெற்கு தாய்லாந்திலுள்ள பியூகெட் தீவில் ஒரு விபச்சார விடுதியில் குபுகுபுவென தீ பற்றியெரிந்தபோது ஐந்து விலைமாதர்கள் விறகாக எரிந்து சாம்பலாகிவிட்டார்கள். ஏன்? ஏனெனில் அவர்களுடைய முதலாளி அவர்களை கட்டிலோடு கட்டிலாக சங்கிலியால் கட்டிப்போட்டிருந்தார்—அவர்களுடைய ‘அடிமை விலங்கை’ தகர்த்தெறியாமல் இருப்பதற்காக.

இந்த இளம் பெண்கள் எங்கிருந்து வருகின்றனர்? இந்த செக்ஸ் தொழில் லட்சக்கணக்கான சிறுமியராலும் பெண்களாலும் நிரம்பிவழிகிறது; இவர்கள் கடத்தப்பட்டவர்கள், வலுக்கட்டாயப்படுத்தப்பட்டவர்கள், விபச்சார தொழிலுக்கு விற்கப்பட்டவர்கள். சர்வதேச செக்ஸ் வியாபாரம் செழித்தோங்குகிறது. இதற்கு காரணம் வளரும் நாடுகளில் நிலவும் வறுமையும் வசதிபடைத்த நாடுகளின் செல்வச் செழிப்பும் கைகோர்த்துக்கொள்வதே. அதோடு, சர்வதேச வாணிகத்தொடர்பு, காசும் விசாவும் கொடுத்து கொத்தடிமை வேலை வாங்கும் முறை போன்றவற்றையும் கண்டு சட்டங்கள் கண்மூடிக் கொள்கின்றன.

1970-களின் மத்திபம் முதல் 1990-களின் ஆரம்பம் வரை உலகம் முழுவதிலும் மூன்று கோடி பெண்கள் ‘முதலீடு’ செய்யப்பட்டிருக்கிறார்கள் என தென் கிழக்கு ஆசியாவிலுள்ள பெண்கள் அமைப்புகள் கணக்கிட்டிருக்கின்றன. ‘சதையை’ கடத்தல் செய்கிறவர்கள் கண்ணீரும் கம்பலையுமாக காட்சியளிக்கும் இளம் பெண்களையும் சிறுமியரையும் தேடி ரெயில்வே ஸ்டேஷன்களிலும் ஏழ்மை கோலத்தில் காட்சியளிக்கும் கிராமங்களிலும் நகர்ப்புறங்களிலும் அலைகின்றனர். பொதுவாக, பலியாகிறவர்கள் படிப்பறிவற்றவர்கள், அநாதைகள், அபலைகள், ஆதரவற்றவர்கள், அவர்களிடம் வேலைவாய்ப்பு எனும் பொய்யான வாக்குறுதி வலை வீசி பிடித்துவிடுகிறார்கள், பின்பு அந்நிய நாடுகளுக்குக் கடத்திச் சென்று விபச்சார விடுதிகளில் விலைபேசி விடுகிறார்கள்.

1991-⁠ல் கம்யூனிச கட்சிகள் உடைய ஆரம்பித்தது முதல், வறுமையில் வாடும் பெண்களும் சிறுமியரும் அடங்கிய புதிய ஜனத்தொகை உருவாகியிருக்கிறது. விதிமுறைகளை தளர்த்துதல், தனியார் மயமாக்குதல், வளர்ந்துவரும் வகுப்பார் சமத்துவமின்மை ஆகியவை குற்றச்செயல் அதிகரிப்புக்கும் வறுமைக்கும் வேலை வாய்ப்பின்மைக்கும் வித்திட்டிருக்கின்றன. பெரும்பாலான ரஷ்ய மற்றும் கிழக்கு ஐரோப்பிய பெண்களும் சிறுமியரும் இப்பொழுது சர்வதேச அளவில் விபச்சார தொழிலுக்கு பொன் முட்டையிடும் வாத்தாக இருக்கிறார்கள். “போதை மருந்துகளை கடத்துவதில் இருக்கும் ஆபத்தைவிட மனிதர்களை கடத்துவதில் ஆபத்து குறைவுதான்” என்று சொன்னார் முன்னாள் ஐரோப்பிய நீதி ஆணையர் அனிதா கிரேடின்.

பிள்ளைப் பருவத்திற்கு பிரியாவிடை

ஆசியாவிலுள்ள ஒரு சிறிய கம்பளி தொழிற்சாலையில், ஐந்து வயது பிள்ளைகள் காலை 4 மணிமுதல் இரவு 11 மணிவரை சம்பளமின்றி வேலை செய்கிறார்கள். இத்தகைய குழந்தை தொழிலாளர்களில் பெரும்பாலோர் மிக மோசமான உடல் பாதிப்பை எதிர்ப்படுகிறார்கள்: பாதுகாப்பற்ற இயந்திரம், போதுமான வெளிச்சமில்லாத, காற்றோட்ட வசதியில்லாத, ஆபத்தான இரசாயனங்களைப் பயன்படுத்தி பொருட்கள் தயாரிக்கப்படும் சூழலில்தான் மணிக்கணக்காக வேலை பார்க்கிறார்கள்.  a

ஏன் சிறுபிள்ளைகளையே ஆவலோடு தேடிச்செல்கிறார்கள்? ஏனென்றால் குழந்தை தொழிலாளிகள் மலிவாக கிடைக்கிறார்கள், அதோடு சிறுவர்களை வசப்படுத்துவதும் கண்டிப்பதும் எளிது, புகார் செய்வதற்கும் பயப்படுவார்கள். கம்பளி நெய்தல் போன்ற சில வேலைகளுக்கு, அவர்களுடைய இளம் தேகமும் பிஞ்சு விரல்களும் பழிபாவங்களுக்கு அஞ்சாத முதலாளிகளுக்கு ஆஸ்தியாக தெரிகிறது. பெரும்பாலும் இப்படிப்பட்ட சிறுவர்களுக்கே வேலை கொடுக்கப்படுகிறது, அதேசமயத்தில் அவர்களுடைய பெற்றோர்கள் வீட்டில் ஈ ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்​—⁠வேலையில்லாமல்.

இந்த அவலத்தோடுகூட, குழந்தை தொழிலாளர்கள் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்படுவது, அடிக்கப்படுவது போன்ற அபாயத்தில் இருக்கிறார்கள். அநேக பிள்ளைகளை கடத்திக்கொண்டுபோய் தொலைதூர முகாம்களில் போட்டுவிடுகிறார்கள்; அதோடு, தப்பிச் செல்லாதபடிக்கு இராத்திரியில் அவர்களை சங்கிலியில் கட்டிப்போட்டு விடுகிறார்கள். ரோடு போடுவதற்கும் கல்கோரியில் வேலை செய்வதற்கும் அவர்களை பகலில் பயன்படுத்துகிறார்கள்.

அடிமை மணவாழ்க்கை​—⁠பிள்ளைப் பருவத்தை பறித்துவிடும் மற்றொரு வகை. அடிமைத்தனத்தை எதிர்க்கும் சர்வதேச நிறுவனம் இதற்கு ஓர் உதாரணத்தை தருகிறது: “12 வயது சிறுமிக்கு 60 வயது ஆளை கலியாணம் செய்ய ஏற்பாடு செய்திருப்பதை அவளுடைய பெற்றோர் அவளிடம் சொன்னார்கள். நியாயப்படி பார்த்தால் இதை மறுக்க அவளுக்கு உரிமை இருக்கிறது என்றாலும், நடைமுறையில் பார்த்தால் அந்த உரிமையை கையில் எடுத்துக்கொள்ள அவளுக்கு வாய்ப்பில்லை, அப்படி மறுக்க அவளுக்கு உரிமை இருக்கிறது என்பதும் தெரியாது.”

கடன் அடிமைகள்

லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்களுடைய முதலாளிக்கும் தொழிலுக்கும் அடிமைப்பட்டிருக்கிறார்கள். காரணம்? அவர்களோ அல்லது அவர்களுடைய பெற்றோர்களோ வாங்கிய கடன்களே. முக்கியமாக விவசாய பண்ணைகளில்தான் வாங்கிய பணத்திற்காக தொழிலாளர்களை அடிமையாக வைத்திருப்பார்கள். இப்படிப்பட்ட இடங்களில் பொதுவாக தொழிலாளர்கள் வேலைக்காரர்களாகவோ அல்லது விவசாயிகளாகவோ இருப்பார்கள். சிலருடைய விஷயங்களில், கடன்கள் தலைமுறை தலைமுறையாக கடத்தப்படுகிறது. இதனால் ஒரு குடும்பத்திலுள்ள அங்கத்தினர்கள் காலம்பூராவும் கடன் அடிமையாக இருக்கின்றனர். வேறுசிலருடைய விஷயங்களில், பணம் கொடுத்த முதலாளிகள் புதிய முதலாளிக்கு கடன் பத்திரத்தை விற்றுவிடுகிறார்கள். சில இடங்களில் கடன்பட்ட தொழிலாளர்கள் தாங்கள் செய்யும் எந்த வேலைக்கும் சம்பளம் எதுவும் பெறுவதில்லை. அல்லது முன்பணமாக வாங்கிய சிறிய தொகைக்காக அவர்களுடைய கூலியை பிடித்து வைத்துக்கொள்ளலாம். இது வாழையடி வாழையாக நடப்பதால், அவர்கள் தங்களுடைய முதலாளிகளுக்கே காலமெல்லாம் அடிமையாகிவிடுகிறார்கள்.

சடங்காச்சார அடிமைத்தனம்

மேற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பின்டிக்கு 12 வயது. ட்ரூகோஸியாக சேவிக்கும் ஆயிரக்கணக்கான சிறுமிகளில் இவளும் ஒருத்தி. ஈவ் மொழியில் இதன் அர்த்தம் “தேவர்களின் அடிமைகள்.” அடிமை வாழ்க்கைக்குள் பலவந்தமாக தள்ளப்பட்டு, தான் செய்யாத குற்றத்திற்கு​—⁠அதாவது, அவள் பிறப்பதற்கு காரணமான கற்பழிப்புக்கு​—⁠ஈடுகட்டும்படி வற்புறுத்தப்பட்டாள்! தற்பொழுது அவளுடைய வேலை உள்ளூர் ஃபெடிஷ் பூசாரியின் வீட்டு வேலைகளை செய்வது. பிற்காலத்தில், பின்டி செய்ய வேண்டிய மற்றொரு “சேவை” அவளுக்கு எஜமானராக இருக்கும் பூசாரியின் பாலின்பங்களை தீர்த்து வைப்பது. பின்பு, நடுத்தர வயதை எட்டியவுடன், பின்டிக்குப் பதிலாக வேறொரு பெண் “சேவை” செய்வாள். ஆம், ட்ரூகோஸியாக சேவைசெய்ய மற்றொரு கவர்ச்சியான பெண்ணை அந்தப் பூசாரி அமர்த்திக்கொள்வார்.

பின்டியைப் போல, சடங்காச்சார அடிமைக்கு பலியான ஆயிரக்கணக்கானோரை அவர்களுடைய குடும்பங்களே அர்ப்பணித்து விடுகின்றன. இது, ஒரு பாவம் அல்லது பரிசுத்த கட்டளைக்கு விரோதமானது என விளக்கப்படும் ஒரு செயலுக்குப் பிராயச்சித்தமே இந்த அடிமை வேலை. உலகின் பல பாகங்களில், பெண்களும் சிறுமியரும் மத சம்பந்தமான வேலைகள் செய்யவும் பூசாரிகளுக்கு அல்லது மற்றவர்களுக்கு பாலியல் சேவை செய்வதற்கும் கடமைப்பட்டிருக்கிறார்கள்​—⁠இப்படிப்பட்ட பெண்கள், தெய்வத்திற்கு திருமணம் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்ற போர்வையில் இதெல்லாம் செய்யப்படுகிறது. பெரும்பாலோருடைய விஷயங்களில் இந்தப் பெண்கள் சம்பளமின்றி மற்ற சேவைகளையும் செய்கிறார்கள். தங்களுடைய குடியிருப்பை அல்லது வேலையை மாற்றிக்கொள்ளும் உரிமையில்லை, பெரும்பாலும் அடிமைகளாகவே ஆண்டாண்டுகளாக இருக்கிறார்கள்.

பாரம்பரிய அடிமைத்தனம்

அடிமை விலங்கை அடியோடு தகர்த்தெறிந்துவிட்டதாக அநேக நாடுகள் பெருமையடித்துக் கொண்டாலும், சில இடங்களில் பாரம்பரிய அடிமைத்தனம் மறுமலர்ச்சி அடைந்திருக்கிறது. இது பொதுவாக, உள்நாட்டு சண்டைகளாலோ அல்லது போர்களாலோ சின்னாபின்னமாக்கப்பட்ட இடங்களில் தலைதூக்குகிறது. “சண்டை நடைபெறும் இடங்களில் நாட்டின் சட்டம் செயல்படுத்தப்படாமல் செத்தநிலையில் கிடக்கிறது. படைவீரர்களும் அவசர கால ராணுவ வீரர்களும் சம்பளமின்றி தங்களுக்காக வேலை செய்வதற்கு அப்பாவி மக்களை பலவந்தம் செய்ய முடிகிறது . . . அதுவும் தண்டனை கிடைக்கும் என்ற பயமில்லாமல்; பொதுவாக, அங்கீகாரம் இல்லாத போராளிகள் ஆதிக்கம் செலுத்தும் இடங்களில் இப்படிப்பட்ட பழக்கங்கள் நடைபெறுகின்றன” என்று சர்வதேச அடிமைத்தன எதிர்ப்பு நிறுவனம் அறிவிக்கிறது. ஆனால், “சட்டத்திற்குப் புறம்பாக, அரசாங்க படைவீரர்களும் பொதுமக்களை அடிமைகளைப் போல் நடத்துவதாக சமீபகால அறிக்கைகள் காட்டுகின்றன” என இதே நிறுவனம் சொல்கிறது. “படைவீரர்களும் அவசரகால ராணுவத்தினரும் இந்த அடிமை வியாபாரத்தில் ஈடுபடுவதாக அறிக்கைகள் வருகின்றன; மற்றவர்களுக்காக வேலை செய்வதற்கு தாங்கள் பிடித்து வைத்தவர்களை விற்றுவிடுகிறார்கள்.”

அடிமைத்தனம் எனும் சாபம் பல்வேறு விதங்களிலும் போர்வைகளிலும் இன்னும் மனிதவர்க்கத்தை சுற்றி வருகிறது. எத்தனை பேர் என்பதை ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள்​—⁠உலக முழுவதிலும் கோடிக்கணக்கானோர் அடிமைகளாக அவதியுறுகிறார்கள். இந்தப் பத்திரிகையின் பக்கங்களில் நீங்கள் வாசித்த நவீனகால அடிமைகளைப் பற்றிய ஓரிரண்டு கதைகளை​—⁠லின்-லின் அல்லது பின்டியை​—⁠சிந்தித்துப் பாருங்கள். நவீனகால அடிமைத்தனம் அழிவதை நீங்கள் காண விரும்புகிறீர்களா? அடிமைத்தனம் அடியோடு ஒழிவது என்றாவது நிஜமாகுமா? இதற்கு முன்பு, அடிப்படை மாற்றங்கள் நடைபெற வேண்டும். பின்வரும் கட்டுரையில் தயவுசெய்து அவற்றை வாசியுங்கள்.

[அடிக்குறிப்பு]

a விழித்தெழு! இதழில் மே 22, 1999-⁠ல் வெளிவந்த “குழந்தை தொழிலாளிகள்​—⁠விடிவு விரைவில்.!” என்ற கட்டுரையை காண்க

[பக்கம் 6-ன் பெட்டி/படம்]

தீர்வு காணுதல்

நவீன அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கு ஐக்கிய நாட்டு குழந்தைகள் நல நிதி நிறுவனம், சர்வதேச தொழிலாளர் அமைப்பு போன்ற பல்வேறு நிறுவனங்கள் ஊக்கமாக பல வழி முறைகளை ஆரம்பித்தும் அமல்படுத்தியும் வருகின்றன. அதோடு, நவீன அடிமைத்தனத்தைப் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்ச்சியூட்டுவதற்கும் அதற்கு பலியானவர்களுக்கு விடுதலை அளிப்பதற்கும் சர்வதேச அடிமைத்தன எதிர்ப்பு நிறுவனம், மனித உரிமைகள் கவனிப்பு நிறுவனம் போன்ற அரசாங்கம் சாராத எண்ணற்ற அமைப்புகளும் கடும் முயற்சி செய்கின்றன. இப்படிப்பட்ட அமைப்புகளில் சில, அடிமையால் அல்லது குழந்தை தொழிலாளர்களால் உற்பத்தி செய்யப்படாத பொருட்கள் என்பதை சுட்டிக்காட்டும் ‘ஸ்பெஷல் லேபில்களை’ அறிமுகப்படுத்துவதற்கு விரும்புகின்றன. மற்ற ஏஜென்ஸிகள் “செக்ஸ் டூர்கள்” நடத்தப்படும் நாடுகளில் சட்டத்தின் உதவியை நாடுகின்றன. இதன்மூலம், பிள்ளைகளுடன் பாலுறவு கொள்ளும் ஆட்கள் தங்களுடைய தாய்நாடு திரும்புகையில் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள். மனித உரிமைகளுக்காக தீவிரமாய் போராடும் சிலர், அடிமை வியாபாரிகளுக்கும் முதலாளிகளுக்கும் பணம் கொடுத்து தங்களால் முடிந்த வரை அநேக அடிமைகளை விடுதலை செய்யும் அளவுக்கும்கூட செல்கின்றனர். இது காரசாரமான சில வாக்குவாதங்களை உண்டுபண்ணியிருக்கிறது, ஏனெனில் இப்படிப்பட்ட பழக்கங்கள் அடிமை வியாபாரம் செழித்தோங்குவதற்கும் அடிமைகளின் விலையை உயர்த்துவதற்கும் வழிவகுக்கும்.

[பக்கம் 7-ன் படம்]

சிறுமிகள் அநேகர் கட்டாய திருமணத்திற்குள் தள்ளப்படுகிறார்கள்

[படத்திற்கான நன்றி]

UNITED NATIONS/J.P. LAFFONT

[பக்கம் 8-ன் படம்]

அடிமைகளுக்கான சாப்பாட்டு வரிசை

[படத்திற்கான நன்றி]

Ricardo Funari

[பக்கம் 8-ன் படம்]

சிலசமயங்களில் சிறுவர்கள் ராணுவ சேவையில் தள்ளப்படுகிறார்கள்

[படத்திற்கான நன்றி]

UNITED NATIONS/J.P. LAFFONT