Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

இறக்குமதியாகும் இறைச்சிகள்!

வெளவால் இறைச்சி விற்கப்படுவதை சட்டப்படி குற்றம் என சர்வதேச சட்டங்கள் கூறுகின்றன, ஐரோப்பாவில் அது உணவாக பயன்படுத்தப்படுவது தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனாலும்கூட பிரிட்டன் நாட்டு கடைகளிலும் உணவகங்களிலும் அது சட்டவிரோதமாக விற்கப்படுகிறது. “பாதுகாக்கப்பட்டுவரும் வெளவால்கள் கொல்லப்படுவதும் திருட்டுத்தனமாக ஏற்றுமதி செய்யப்படுவதும் உண்மையில் கவலைக்குரியது, சரியாக சோதிக்கப்படாத இறைச்சியால் பொது மக்களுக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பும் இருக்கிறது” என்பதாக உவார்ல்ட் வைட் ஃபண்டு ஃபார் நேச்சரை சேர்ந்த ரிச்சர்ட் பார்ன்வெல் குறிப்பிடுகிறார். பழந்தின்னி வெளவால்கள் வெகு காலமாக ஆப்பிரிக்காவின் சில பகுதியினருக்கு முக்கிய உணவாக இருந்திருக்கிறது. மலேசியாவிலும் இந்தோனீஷியாவிலும், இந்த இறைச்சி வியாபாரத்தின் காரணமாக, பழந்தின்னி வெளவால்களில் மிகவும் அரிதான இனங்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்திருக்கிறது. ஸேசேல்ஸ் வெளவால் குழம்பு மிகவும் விலையுயர்ந்த ஒரு அருஞ்சுவை உணவு. வெளவால்கள் “மட்டுமே, ஐரோப்பாவில் டிமான்டு அதிகமிருப்பதால் ஆபத்தில் இருக்கின்றன என்று சொல்ல முடியாது” என்று லண்டனில் வெளியாகும் த சண்டே டைம்ஸ் அறிக்கை செய்கிறது. பெல்ஜியத்தின் தலைநகரான புருஸ்ஸெல்ஸ்-⁠ல் உணவகங்களில் வாலில்லா குரங்கின் இறைச்சி பரிமாறப்படுகிறது.

நீங்கள் பதறுகிறவரா?

மக்கள் தொகையில் சுமார் 15 சதவீதத்தினருக்கு அமைதி இழந்து பரபரப்பாக எதையாவது செய்யும் பழக்கம் இருப்பதாக கனடாவில் வெளியாகும் குளோப் அண்ட் மெயில் செய்தித்தாள் கூறுகிறது. “முடியை சுருட்டுவது, பாதத்தை தட்டுவது, காலாட்டுவது, நகங்கடிப்பது போன்றவற்றைச்” செய்வதன் மூலம் சிலர் அமைதியாக இல்லை என்பதைக் காட்டுகின்றனர். அவர்கள் ஏன் அப்படி செய்கிறார்கள்? இதை ஒரு பழக்கமாக செய்வதால் அவர்களுக்கு ஒரு செளகரியமான உணர்வு கிடைக்கிறது என்று டோரன்டோஸ் சென்டர் ஃபார் அடிக்க்ஷன் அண்ட் மென்டல் ஹெல்த்தின் மன நல நிபுணர் பெக்கி ரிச்டர் நம்புகிறார். மறுபட்சத்தில், கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட், பால் கெல்லி என்பவர் இந்தப் பழக்கங்களுக்கெல்லாம் காரணம் பதட்டம்; உங்களை அறியாமலேயே திடீரென செயல்படுகிறீர்கள், இது அழுத்தத்திலிருந்து உங்களை விடுவிக்கிறது என்பதாக சொல்கிறார். “இந்தப் பழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாகவும் கடைசியில் அடியோடும் நிறுத்திவிட முடியும். ரீப்ளேஸ்மென்ட் தெரப்பி, அதாவது, பதட்டமாக இருக்கும்போது மற்றொரு பொருள்மீது கவனத்தை ஊன்ற வைப்பதன் மூலம் இதை மேற்கொள்ளலாம்” என்பது வல்லுநர்களின் கருத்து என்று குளோப் சொல்லுகிறது.

கோலா​—⁠‘குடி’மகனா நீங்கள்?

மெக்ஸிகோ நாட்டவர் ஒருவர் வருடத்துக்கு சராசரியாக 160 லிட்டர் கோலா குடிக்கின்றனர் என்பதாக மெக்ஸிக்கன் அஸோசியேஷன் ஆஃப் ஸ்டடீஸ் ஃபார் கன்ஸ்யூமர் டிஃபென்ஸ் அறிக்கை செய்கிறது. ஒரு வருடத்துக்கு கோலா பானங்களுக்காக நிறைய பணம் செலவிடப்படுகிறது. இது, அடிப்படையாக இருக்கும் பத்து உணவுப்பொருட்களுக்காகும் மொத்த செலவைவிட அதிகமாகும். அதிகமாக இந்த பானங்களைப் பருகுவதுதான் மெக்ஸிக்கோவில் ஊட்டச்சத்து குறைவுக்கு ஒரு முக்கிய காரணம் என்று சிலர் கூறுகின்றனர். கோலாவில் இருக்கும் சில பொருட்கள் கால்சியத்தையும் இரும்புச் சத்தையும் உடல் உறிஞ்சிக்கொள்வதை தடைசெய்துவிடலாம். கோலா பருகுவதால் கிட்னியில் கல், சொத்தைப் பல், உடல் பருமன், இரத்தக்கொதிப்பு, தூக்கமின்மை, குடல் புண், கவலை ஆகியவை ஏற்பட அதிக வாய்ப்புண்டு. ‘முன்பெல்லாம் கார்ன் சாப்பிடுகிறவர்களாக இருந்தோம், ஆனால் இப்போதே நாங்கள் “கோலா” குடிக்கிறவர்களாகிவிட்டோம்’ என்று கன்ஸ்யூமர்ஸ் கைடு மேகஸீன் கூறுகிறது.

ஒரு “நியாயமான போர்”?

“யூகோஸ்லாவியாவில் நடைபெற்ற போரினால் சர்ச்சுகளில் பிரிவினைகள் வந்துவிட்டன. ‘நியாயமான போர்’ என்ற பாரம்பரியமான கருத்துக்கு கொடுக்கப்படும் விளக்கத்தின் அடிப்படையில் இந்தப் பிரிவினைகள் ஏற்பட்டிருக்கின்றன” என்று பிரெஞ்சு செய்தித்தாள் லா மான்ட் கூறுகிறது. நியாயமான போர்jus ad bellum) என்ற கருத்து ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்துவந்த அகஸ்டீன் காலத்தில் ஏற்பட்டது. லா மான்ட்-ன் பிரகாரம் பின்னால் வந்த ஒரு கத்தோலிக்க தத்துவஞானி தாமஸ் அக்குன்னாஸ் என்பவர் இப்படிப்பட்ட போருக்கு முறைப்படி கொடுத்த “தார்மீக” விளக்கம்: அதற்கு “நியாயமான” காரணம் இருக்க வேண்டும், போர் என்பது வேறு வழியே இல்லாதபோது “கடைசியாக” செய்யப்படும் ஒன்றாக இருக்க வேண்டும். போர் தொடுப்பவர் “சட்டப்படி அதிகாரமுடையவராக” இருக்க வேண்டும். “ஒழிக்கப்பட வேண்டிய தீமையைக் காட்டிலும் அதிகமான தீங்கையும் குழப்பத்தையும் உண்டுபண்ண ஆயுதங்கள் பயன்படுத்தப்படக் கூடாது.” 17-வது நூற்றாண்டில் கூடுதலாக சேர்க்கப்பட்ட மற்றொரு நிபந்தனை “வெற்றி பெறும் வாய்ப்பு” இருக்க வேண்டும். “புனிதப் போரை” இன்று பெரும்பாலான சர்ச்சுகள் நிராகரிக்கிற போதிலும் “நியாயமான போர்” என்பது என்ன என்பதின்பேரில் சர்ச்சை முடிந்தபாடில்லை.

பிரேஸிலில் பிஞ்சிலே பழுத்தவர்கள்

பிரேஸிலில் “33 சதவீத பெண்களும் 64 சதவீத வாலிப பையன்களும் 14 முதல் 19 வயதுக்குள்ளாகவே முதல் முறையாக உடலுறவில் ஈடுபட்டுவிடுகிறார்கள்” என்று ஓ எஸ்டடோ ட எஸ். பாலோ அறிவிக்கிறது. மேலுமாக, 15 முதல் 19 வயதுக்குள் திருமணத்துக்கு முன் உடலுறவுகொள்ளும் பிரேஸில் நாட்டு பெண்களின் எண்ணிக்கை பத்தே வருடங்களில் இரண்டு மடங்கு அதிகமாகிவிட்டது. “பாலியல் குறித்த மனப்பான்மையில் பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது” என்று பிறப்பு-இறப்பு புள்ளியியல் ஆய்வாளர் எலிசபெத் ஃபெராஸ் சொல்கிறார். உதாரணமாக, இந்நாட்டில் வளரிளமைப் பருவத்திலிருக்கும் 18 சதவீதமானவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது அல்லது இப்போது ஒரு குழந்தை பிறக்க இருக்கிறது.

உங்கள் மருத்துவமனை பாதுகாப்பானதா?

“அயர்லாந்து நாட்டில் நோயாளிகளுக்கு ஹாஸ்பிட்டலில் நோய் தொற்றக்கூடிய வாய்ப்பு 10-⁠ல் ஒன்றுக்கும் அதிகமாயிருப்பதாக” தி ஐரிஷ் டைம்ஸ் அறிவிக்கிறது. இது ஹாஸ்பிட்டல் அக்குவயர்டு இன்ஃபெக்ஷன் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு கூடுதலான நாட்கள் ஹாஸ்பிட்டலில் தங்கி கூடுதலான சிகிச்சை பெறுவதும் அவசியம். இதன் காரணமாக சராசரியாக ஒரு நோயாளிக்கு ஆகும் செலவு 2,200 டாலர். இப்படி தொற்றும் நோய் இரத்த ஓட்டத்தை பாதிக்கும் பட்சத்தில் கூடுதலாக ஒருவர் 11 நாட்கள் ஹாஸ்பிட்டலில் தங்க வேண்டியிருக்கும். மருந்துக்கு அசையாத “சூப்பர் நுண்கிருமி”களால் வரும் நோய்களே விசேஷமாக கவலைக்குரியவை. “எத்தனையோ ஆன்டிபையாட்டிக்ஸ் கொடுத்தாலும் இவை சாவதில்லை” என்று செய்தித்தாள் கூறுகிறது. ஹாஸ்பிட்டலிலிருந்து நோய்தொற்றிக் கொள்ளும் ஆபத்து “வயதானவர்களுக்கும், மிகவும் சிறிய குழந்தைகளுக்கும், நீண்ட காலமாக ஹாஸ்பிட்டலில் தங்கியிருப்பவர்களுக்கும், இருதய கோளாறுகள் அல்லது நாள்பட்ட மார்புசளி நோயுள்ளவர்களுக்கும்” அதிகம்.

ஜீன்களின் மதிப்பீடு அதிகமாகிறது

ஒவ்வொரு மனித உயிரணுவில் இருக்கும் ஜீன்களின் எண்ணிக்கை 1,40,000 என்பதாக ஆய்வாளர்கள் சமீபத்தில் திருத்தியிருக்கின்றனர் என்று த நியூ யார்க் டைம்ஸ் அறிவிக்கிறது. கடந்தகாலத்தில் செய்யப்பட்ட மதிப்பீடுகளின்படி இந்த எண்ணிக்கை 50,000 முதல் 1,00,000 ஜீன்கள். அப்படியென்றால் மனித உடல்கூறு முன்பு நினைத்ததைவிட அதிக சிக்கலானது. ஒவ்வொரு ஜீனும் அமினோ அமிலங்களை சரியான வரிசையில் இருப்பதற்கு உடலின் செல்களுக்கு உத்தரவுகொடுக்கிறது, அமினோ அமிலங்களை புரதங்களை உருவாக்க பயன்படுகிறது. “மனித மரபணு திட்ட அமைப்பில் கற்றுக்கொள்வதற்கு இன்னும் ஏராளம் இருப்பதையே கண்டுபிடிக்கப்பட்ட கூடுதலான எண்ணிக்கை காண்பிக்கிறது” என்று செய்தித்தாள் கூறுகிறது.

நரகம்​—⁠மாறுபட்ட கருத்து

நரகம் என்பது பொல்லாதவர்களின் ஆத்துமா நித்திய வாதனையை அனுபவிக்கும் ஓரிடம் என்றுதான் கத்தோலிக்க சர்ச் பல நூற்றாண்டுகளாக கற்பித்துவந்திருக்கிறது. ஆனால் இந்தக் கருத்து மாறிவிட்டது. நரகம் என்பது “கடவுளால் விதிக்கப்படும் ஒரு தண்டனை அல்ல, இதே வாழ்க்கையில் மனநிலைகளாலும் செயல்களாலும் உண்டாகும் வெறும் நிலைமையே அது” என்பதாக இரண்டாவது போப் ஜான் பால் கூறுவதாக லோசர்வேட்டோ ரொமானோ அறிவிக்கிறது. “நரகம் ஒரு இடமாக இருப்பதற்கு பதிலாக, அது எல்லா உயிருக்கும் சந்தோஷத்துக்கும் காரணராக இருக்கும் கடவுளிடமிருந்து தங்களை திட்டவட்டமாக பிரித்துக்கொண்டிருப்பவர்களின் நிலைமையை குறிக்கிறது” என்பதாக போப் கூறுகிறார். ஆக “நித்திய தண்டனை” என்பது கடவுள் கொடுக்கும் தண்டனை அல்ல, மனிதன் கடவுளுடைய அன்பு தன்னை வந்தடையாதவாறு தன்னைச் சுற்றி வேலிபோட்டுக் கொள்கிறான்” என்று மேலுமாக அவர் கூறுகிறார்.

நடக்க நடக்க ஆரோக்கியம்

உங்கள் எடையை குறைப்பதற்கும் அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கும் நடப்பது உதவுகிறது; “இரத்த அழுத்தமும் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறைகிறது” என்று டோரன்டோவில் வெளியாகும் த குளோப் அண்ட் மெயில் கூறுகிறது. ஆரோக்கியமாக இருப்பதற்கு குறிப்பிட்ட நேரம் நடப்பது அவசியம். எவ்வளவு நேரம்? நீங்கள் மிதமான வேகத்தில் நடந்தால் நாளொன்றுக்கு 60 நிமிடங்கள் நடக்க வேண்டும்; குறைந்தபட்சமாக ஒரு சமயத்தில் 10 நிமிடங்கள் என்று பிரித்துக்கொண்டு நடக்கலாம் என்று கூறுகிறது கனடாஸ் ஃபிசிக்கல் அக்டிவிட்டி கையிட் டு ஹெல்தி அக்டிவ் லிவிங்.” நாளொன்றுக்கு 30-லிருந்து 60 நிமிடங்கள் வரை வேகமாக நடப்பது அல்லது சைக்கிள் ஓட்டுவது அல்லது தினந்தோறும் 20-லிருந்து 30 நிமிடங்கள் ‘ஜாகிங்’ செய்வது போன்றவை நீங்கள் ஆரோக்கியமாக இருக்க உதவும். காலணிகளைப்பற்றி குளோப் இவ்வாறு சிபாரிசு செய்கிறது: காற்றுப் புகும் இலேசான காலணியை அணிய வேண்டும், காலணியின் அடிபாகம் வளைந்து கொடுப்பதாக இருக்க வேண்டும். மேலும், காலணி பாதத்தை நன்கு தாங்குவதாகவும் உட்பாகம் மெத்தென்றும் கால்விரலை இறுக்கிப் பிடிக்காமலும் இருக்க வேண்டும் என்று குளோப் சிபாரிசு செய்கிறது.

ஆரம்பகால எச்சரிக்கை

“அடுத்த பத்தாண்டுகளில் உலகத்தில் ‘சூப்பர் அழிவுகளை’ எதிர்ப்பார்க்கலாம்” என்பதாக உவார்ல்ட் பிரஸ் ரிவ்யூ அறிக்கை செய்கிறது. இது லண்டனில் வெளியாகும் ஃபின்னான்ஷியல் டைம்ஸ்-⁠ல் வந்த ஒரு கட்டுரையின் அடிப்படையில் வெளியிடப்பட்ட அறிக்கை. புயல், நிலநடுக்கம் போன்ற இயற்கை அழிவுகளை பெயர் குறிப்பிட்டு, இதனால் அதிகமதிகமானோர் பாதிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது என்று செஞ்சிலுவை, செம்பிறை சங்கங்களின் சர்வதேச கூட்டுக் கழகங்கள் எச்சரிக்கிறது. “உலகில் வேகமாக வளர்ந்துவரும் 50 நகரங்களில் 40 நகரங்கள் நிலநடுக்க பகுதியில் இருக்கின்றன; உலக மக்கள்தொகையில் பாதிபேர் கடல் மட்டம் உயரும் வாய்ப்புள்ள கரையோர பகுதிகளிலும் வாழ்கின்றனர்” என்று பத்திரிகை சொல்கிறது. அச்சுறுத்தலாக இருக்கும் மற்றொரு காரியம் என்னவென்றால் அழிவுகள் ஒரு பக்கம் அதிகரித்துக்கொண்டிருக்கையில் நெருக்கடி நிலைக்காக ஒதுக்கப்படும் அரசின் நிவாரண நிதி அநேக தேசங்களில் குறைந்துவிட்டது.

ஒரு நீண்ட இரவு

“கம்பீரமான இருள்.” இப்படித்தான் நார்வேவுக்கு வடக்கே சூரியன் உதயமே ஆகாத அந்த காலத்தை, அல்லது “மோயர்கெட்டிட்”டை நார்வே துருவ ஆய்வாளர் ஃபிரிட்ஜாப் நான்சன் என்பவர் விவரித்தார். இரண்டு மாதங்களுக்கு நண்பகல் நேரத்தில் ஒரு சில மணிநேரத்துக்கு சாம்பல்-சிவப்பு நிற மங்கலான ஒளிதான் இருக்கிறது. ஆனால் இந்த இருண்ட காலத்தை அனைவரும் வரவேற்பதில்லை. இபன்பியூரன் ஃபோக்ஸ்டிடுங் என்ற செய்தித்தாளின்படி துருவ வட்டத்துக்கு அப்பால் வாழும் நார்வே நாட்டு மக்களில் 21.1 சதவீதத்தினர் குளிர்காலத்தில் ஏற்படும் மன உளைச்சலால் அவதிப்படுகிறார்கள். மூளையில் உற்பத்தியாகும் மெல்லட்டோனின் என்ற ஹார்மோன் குறைவு இதற்கு காரணமாக இருக்கலாம். இதற்கு ஒரே நிவாரணம் வெளிச்சமே. இருப்பினும், மினுக்கு மினுக்கென்ற துருவ மின்னொளியும், நிலா வெளிச்சத்தில் வெண்பனியின் பிரகாசமும், அங்குமிங்குமாக சிதறியிருக்கும் கிராமங்களிலிருந்து வரும் வெளிச்சமும் அதிகமான எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கிறது.