ஏதன்ஸ் புகழ்மிகு கடந்த காலமும் சவால்மிகு எதிர்காலமும்
ஏதன்ஸ் புகழ்மிகு கடந்த காலமும் சவால்மிகு எதிர்காலமும்
கிரீஸிலுள்ள விழித்தெழு! நிருபர்
ஏதன்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையில் கால்பதிப்பதற்கு கடைசி தடவையாக திரும்புகிறது. நான் இரண்டு வருடங்களுக்குப்பின், இருபது ஆண்டுகளாக வசித்துவந்த இடத்திற்கு திரும்பி வருகிறேன். கீழே இருக்கும் நகரம்தான் குடியாட்சி பிறந்த இடம் என்று அநேகர் கருதுவதை நான் வரலாற்று பக்கங்களில் படித்திருக்கிறேன்.
கிரேக்கரின் சிறப்புமிக்க வரலாறு, பிரமிக்க வைக்கும் கலைகள், பிரம்மாண்டமான நினைவுச்சின்னங்கள் ஆகியவை ஒருபுறமிருக்க, கிரீஸின் சிறப்புவாய்ந்த தலைநகரத்தில் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் மக்கள்கூட்டம் திரண்டிருப்பது எனக்குத் தெரிகிறது. முகம் மலர சிநேகப்பான்மையுடன் பழகும் சுபாவமுள்ள அதன் மக்கள் நகரை சிங்கார நகரமாக்கும் முயற்சியில் கடினமாக வேலை செய்வது தெரிகிறது. இதற்கு முக்கிய காரணம் இங்கே 2004 ஒலிம்பிக் விளையாட்டுகள் நடைபெற உள்ளது.
சிறப்பான கடந்த காலம்
ஏதன்ஸின் வரலாறு கிறிஸ்துவுக்கு முன் 20-வது நூற்றாண்டு வரையாக செல்கிறது, கிரேக்க தேவதை அதீனாவின் பெயர் இந்நகருக்கு சூட்டப்பட்டுள்ளது. நீங்கள் இன்றும் சாக்ரட்டீஸ் நடந்துசென்ற சாலைகளில் நடந்து செல்லலாம், அல்லது அரிஸ்டாட்டில் கற்பித்த பள்ளியை வலம் வரலாம். கிரேக்க நாடக ஆசிரியர்கள் சோபோகிளியஸ், அரிஸ்டோபானஸ் ஆகியோர் தங்கள் நாடகங்களை அரங்கேற்றிய அதே மேடைகளில் அர்த்தமுள்ள சோக அல்லது சிரிப்பு நாடகத்தைக் கண்டுகளிக்கலாம்.
ஏதன்ஸ் மாநில சுயாட்சி பெற்ற முதல் கிரேக்க நகரங்களில் ஒன்று, பொ.ச.மு. ஐந்தாம் நூற்றாண்டில் பொற்காலமாக திகழ்ந்தது. மக்களாட்சி நடந்த ஏதன்ஸ்தான் அந்தக் காலப்பகுதியில் பெர்சியாமீது கிரேக்கர் பெற்ற வெற்றிகளுக்கு முக்கிய காரணம். அது கிரீஸின் இலக்கியத்துக்கும் கலைக்கும் மையமாக ஆனது. அந்தச் சமயத்தில்தான் அதன் புகழ்பெற்ற சிற்பக்கலை நினைவுமண்டபங்கள் எழுப்பப்பட்டன—அதில் பார்த்தினன் மிகவும் பிரபலமானது.
ஏதன்ஸ் மக்கள் பெர்சியரின் நுகத்திலிருந்து தப்பித்துக்கொண்டார்கள். ஆனால், பிற்காலத்தில் அவர்கள் தேசத்துக்கு அருகிலிருந்த நீண்ட கால விரோதியின்—ஸ்பார்ட்டாவின்—தாக்குதலில் தோல்வியைத் தழுவினார்கள். தொடர்ந்துவந்த நூற்றாண்டுகளில் ஏதன்ஸ் ஓர் அடிமை நகரமாகவே இருந்தது. இதனை ஒன்றன்பின் ஒன்றாக மாசிதோனியா, ரோம், கான்ஸ்டான்டிநோப்பிளிலிருந்து பைஸான்டீன் அரசர்கள், சிலுவைப் போர்களின் சிற்றரசர்கள், துருக்கியர்கள் ஆகியோர் ஆட்சிசெய்தனர். கிரேக்கர் 1829-ல் சுதந்திரம் அடைந்தபோது சில ஆயிரம் பேர் மாத்திரமே வாழும் ஒரு சிறிய நகரமாக ஏதன்ஸ் விளங்கியது.
நவீன நாளைய நிஜங்கள்
ஏதன்ஸ் 1834-ல் கிரீஸின் தலைநகரமானது, அது முதற்கொண்டு இந்நகரம் வேகமாக வளர்ச்சியடைந்துள்ளது. இப்போது இதன் நிலப்பரப்பு
சுமார் 450 சதுர கிலோமீட்டராக அட்டிகா சமவெளி முழுவதுமாக பரந்துகிடக்கிறது. பார்னஸ், பென்டெலிக்கான், ஹைமெட்டஸ் ஆகிய மலைச்சரிவுகள் இதன் புறநகர் பகுதிகளாகும். இந்த மாநகரத்தில் 45 லட்சத்துக்கும் அதிகமான ஆட்கள் வசிக்கிறார்கள்—கிரீஸின் மக்கள்தொகையில் இது சுமார் 45 சதவீதமாகும். இத்தலைநகர் பெரும்பாலும் திட்டமிட்டோ அல்லது முறைப்படியோ உருவாக்கப்படவில்லை. இதில் கட்டப்பட்டிருக்கும் மூன்றில் ஒரு பகுதிக்கும் அதிகமான வீடுகள் சட்டப்படி கட்டப்பட்டவை கிடையாது. இன்று ஏதன்ஸின் ஒரு சிறிய பகுதியில் மட்டுமே கட்டடங்கள் எதுவும் இல்லை.ஏதன்ஸில் தற்கால கட்டடங்கள் புதுமுறையில் கான்கிரீட் கலவை ஊற்றி கட்டப்படுகின்றன. பார்ப்பதற்கு இந்த நகரம் மிகவும் தாழ்வாக இருப்பதுபோல தோன்றுகிறது. பண்டைய காலத்து தூண்கள் ஆங்காங்கே காணப்படுகிறது. தொழிற்சாலையிலிருந்தும் மோட்டார் வாகனங்களிலிருந்தும் வரும் புகை அதன்மீது தூசியாக படிந்திருப்பதை காண முடிகிறது.
நவீன மாநகரங்களைப் போலவே, ஏதன்ஸும் புகைப்படலங்களால் அவதியுறுகிறது. உள்ளூர்வாசிகள் நெஃபோஸ் என்றழைக்கும் புகைப்படல மேகங்கள் டெலிவிஷன் அன்டென்னாவுக்கு சில மீட்டருக்கு மேல் திரண்டு காணப்படுகின்றன. புகைப்படலம் வேகமாக இந்தப் பண்டைய நினைவு மண்டபங்களை அரித்துக்கொண்டிருப்பதால் புதைபொருள் ஆய்வாளர்கள் நகரின் உள்ளரணை (Acropolis) கண்ணாடியால் மூடிவிட வேண்டும் என்று ஒரு சமயம் யோசித்தார்கள். தூய்மைக்கேடு பற்றிய எச்சரிக்கைகள் அடிக்கடி கேட்கப்படுகிறது. ஏதன்ஸை சுற்றியுள்ள மலைகளுக்குள் புகைப்படலம் அகப்பட்டுக் கொள்ளும்போது நெஃபோஸினால் மனிதர்களுக்கு ஆபத்து. இப்படிப்பட்ட நாட்களில் நகரத்திற்குள் சொந்த கார்களை ஓட்டி வருவதற்கு தடைவிதிக்கப்படுகிறது, தொழிற்சாலைகள் நுகரும் எரிபொருளின் அளவைக் குறைத்துக்கொள்கின்றன, வயதானவர்கள் வீட்டிலேயே இருக்கும்படி சொல்லப்படுகிறார்கள், ஏதன்ஸ் நாட்டு மக்கள் தங்கள் கார்களை வீட்டில் விட்டுவரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நகரவாசிகள் ஒட்டுமொத்தமாக நகரத்தை விட்டு கிளம்பிவிடுகிறார்கள். “காருக்குள் ஏறிவிட்டால்போதும், சில மணிநேரத்தில் மலைகளில் அல்லது சமுத்திரத்தின் பக்கத்தில் இருப்பீர்கள்” என்று கூறுகிறார் வாசில்லஸ். இவர் பல வருடங்களாக ஏதன்ஸில் வசித்து வருகிறார். உணவகம் ஒன்றில் முந்திரியும் தேனும் கலந்த இனிப்பான பண்டத்தையும்
சர்க்கரை இல்லாத ஒரு கப் காபியையும் ருசித்துக்கொண்டே அவர் இவ்வாறு கூறுகிறார். உங்கள் காருக்குள் ஏறிவிட்டால் போதும், வரிசையாக எறும்புபோல முட்டிக்கொள்ளாத குறையாக சாலையில் செல்லும் கார்களோடு நீங்கள் சேர்ந்துகொண்டு ஒரு சில மணிநேரத்தில் நகரத்திலிருந்து ஒரு கிராமத்துக்கு வந்துவிடுவீர்கள்.சுத்தம் செய்வதும் சீரமைப்பதும்
ஏதன்ஸ் நகரை தூய்மைப்படுத்த மக்கள் உறுதிபூண்டிருக்கிறார்கள், அதை நாம் கண்முன் காண்கிறோம். உதாரணமாக, நகரில் வியாபார ஸ்தலங்கள் இருக்கும் இடங்களில் வாகனங்கள் போவதற்கு தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்னால் அதிக நெருக்கமான இடமாக இருந்ததே இந்தக் கடைகள் இருக்கும் தெருக்கள்தான். காலாற நடந்துசெல்லும் வேகத்தில்தான், அதாவது மணிக்கு ஐந்து கிலோமீட்டர் வேகத்தில்தான் கார்கள் நகர்ந்தன. இப்போது ஆங்காங்கே அலங்கார செடிகள் வைக்கப்பட்டிருப்பதால் கார் வரிசைகளை பார்க்க முடிவதில்லை. சாதாரணமாக கேட்கப்படும் கர்ண கடூரமான கியர் சத்தத்துக்கும் ஸ்கூட்டர் சத்தத்துக்கும் பதிலாக பறவைகளின் இனிய கானம்தான் கேட்கிறது. மத்தியதரை கடல் பகுதியில் வாழும் மக்களின் பழக்கப்படி பிற்பகலில் சிறிதுநேரம் தூங்குவதற்காக வீட்டுக்குச் செல்லும் பழக்கத்துக்குக்கூட இங்கே தடை விதிக்கப்பட்டுள்ளது, ஏனெனில் இந்தப் பழக்கத்தினால் கூடுதலாக இரண்டு மணிநேரம் சாலையில் நெரிசலாக இருந்தது.
ஏதன்ஸின் துணை மேயர் நிக்கோஸ் யாட்ரக்காஸின் அலுவலகத்தில் மிகச் சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்ற ஆவலிருப்பது தெரிகிறது. இவருடைய அலுவலகத்துக்கு வந்துசேர இரண்டு மணிநேரம் எடுத்ததை நான் சொன்னபோது அவர் அனுதாபத்தோடு தலையை ஆட்டுகிறார். “ஆனால் 2004 ஒலிம்பிக் விளையாட்டுகள் வரப்போவதை மறந்துவிடாதீர்கள்” என்று அவசர அவசரமாக அழுத்தமாக கூறுகிறார். “இதை எழில்மிகு நகரமாக்க நாங்கள் தீர்மானித்திருக்கிறோம், அதை செய்தே தீருவோம்.” விளையாட்டுகளின் முக்கிய அமைப்பாளர் பக்கெளரிஸ் இவ்வாறு கூறினார்: “விளையாட்டுகளை நாங்கள் வெற்றிகரமாக நடத்தியாக வேண்டும். எங்களைப் பொருத்தவரை அதற்கு பின்வரும் காலத்தையும் நாங்கள் மனதில்வைத்து செயல்படுகிறோம். . . . எப்போதும் பயன்படும் வகையில் நாங்கள் எல்லாவற்றையும் செய்ய வேண்டும்.”
ஏதன்ஸ், 2004 ஒலிம்பிக்ஸ் விளையாட்டு வீரர்களை வரவேற்க இருப்பதால் அங்கே முன்னொருபோதும் இல்லாத அளவில் வேலை மும்முரமாக நடந்துகொண்டிருக்கிறது. மெஷின்கள் எல்லா இடங்களிலும் தோண்டிக்கொண்டும் புதிய சாலைகளையும் விளையாட்டுக்கான இடங்களையும் அமைத்துக்கொண்டும் இருப்பதைக் காணமுடிகிறது. இந்நகரில் இயங்கும் சுரங்க வழி இருப்புப்பாதையில் செய்யப்படும் 18 கிலோமீட்டர் விஸ்தரிப்பு வேலை ஏறக்குறைய முடிந்துவிட்டது. திட்டப்படி எல்லாம் நடக்கும் பட்சத்தில் மார்ச் 2001-ல் முதல் விமானம் ஏதன்ஸில் புதிய சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கும். இந்த விமான நிலையம் ஐரோப்பாவிலேயே அதிநவீன முறையில் கட்டப்பட்டுள்ளது.
2001 வருடத்துக்குள் மொத்தம் 72 கிலோமீட்டர் தூரத்துக்கு புதிய நெடுஞ்சாலை தயாராகிவிடும். வாகனங்கள் வேறு வழியில் ஏதன்ஸுக்கு வெளிப்புறமாக
திருப்பிவிடப்படும், இதனால் அரசு போக்குவரத்தை பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்துவார்கள். நகரில் நாளொன்றுக்கு 2,50,000-க்கும் அதிகமான கார்கள் ஓடுவது குறையும், வளிமண்டலத்தின் தூய்மைக்கேடும் 35 சதம் குறையும். ஏதன்ஸ் நகரின் கழிவுநீரை புதிய அறிவியல் திட்டப்படி சுத்திகரிப்பதால் தலைநகரைச் சுற்றியுள்ள கடலோடு சேர்ந்த சுற்றுச்சூழல் தூய்மையடைய வாய்ப்புண்டு. ஒரு சில வருடங்களுக்குள் ஏதன்ஸ் நகரை புதுப்பொலிவு பெறச் செய்ய வேண்டும், போக்குவரத்து அமைப்புகளைச் சீர்செய்ய வேண்டும், அதிகமான இடங்களை பசுமையாக்க வேண்டும், சுற்றுச்சூழலை சுத்தம் செய்ய வேண்டும் என்பதே குறிக்கோள்.பழைய ஏதன்ஸின் ஒரு பகுதி
புதிய அலுவலக டவர்கள், புதிப்பிக்கப்பட்ட நெடுஞ்சாலைகள், நீரூற்றுகள், கண்கவர் தோற்றமுள்ள கடைகள், ஆட்கள் நடமாட்டமுள்ள தெருக்கள் ஆகியவற்றின் மத்தியிலும் அநேகருக்கு ஏதன்ஸ் ஒரு கிராமமாகவே இருக்கும், அங்கே கட்டுப்பாடுகள் இல்லை அதற்கு பதிலாக எல்லாம் இயல்பாய் நடக்கிறது. அங்கே எல்லாம் ஒழுங்குமுறைப்படி இல்லை, ஆனால் ஆங்காங்கே எல்லாம் அரைகுறையாக காட்சியளிக்கிறது. ஏதன்ஸ் நகரின் கிராம பாணி இடங்களில் இன்னும் ஓட்டு வீடுகளையும் பால்கனியில் இரும்பு கிரில் வேலைப்பாட்டையும் காட்டு மலர்செடி தொட்டிகளையும் காணமுடிகிறது.
இந்த ஏதன்ஸைப் பற்றி தெரிந்துகொள்ள நான் ப்ளாக்கா என்ற பகுதிக்குச் செல்கிறேன். நகரின் உள்ளரணின் வடப்பக்க மலைச்சரிவின் அருகில் இது இருக்கிறது. அங்கே தெருக்கள் குறுகலாக, சரிவாக, வளைந்து வளைந்து செல்கின்றன. அங்கே இடிந்துவிழும் நிலையில் வீடுகள், மது கடைகள், திரிந்துகொண்டிருக்கும் பூனைகள், நாய்கள், சாராயக் கடைகள், தள்ளுவண்டிகள் ஆகியவற்றை நான் காண்கிறேன். கடந்த கால தாறுமாறான கேளிக்கை கொண்டாட்டங்களின் வாசனை இன்னும் அங்கு இருப்பதால் சுற்றுலா பயணிகளை இந்த இடம் கவர்ந்திழுக்கிறது. ஓர நடைபாதைகளில் சில சமயங்களில் குட்டையும் நெட்டையுமான கால்களை உடைய மேசைகளும் அதற்கு பொருத்தமே இல்லாத நாற்காலிகளும் வரிசையாக போடப்பட்டிருக்கின்றன. மெனு கார்டை கையில் திறந்து வைத்திருக்கும் வெய்ட்டர்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க கூவுகிறார்கள்.
மோட்டார்பைக் போடும் சத்தத்தில் தெருவில் ஆர்கன் வாசிப்பவனின் இசை அடங்கியே போய்விடுகிறது. நினைவு பரிசுப் பொருட்களை விற்கும் கடைகளில் புதிதாக பதனிட்ட தோல்களில் செய்யப்பட்ட பர்ஸுகள் வரிசையாக தொங்கவிடப்பட்டிருக்கின்றன. கிரேக்க தெய்வங்களின் சாயலில் செய்யப்பட்ட பளிங்கு சதுரங்க காய்கள் படைவீரர்களாய் நிற்பது, நாட்டுப்புற பொம்மலாட்டம், சுழலும் மட்பாண்ட காற்றாடி இயந்திரம். நகரின் இந்தப் பகுதியை நவீனப்படுத்த முயற்சிகள் எடுப்பது வீண் என்பது தெளிவாக உள்ளது.
இரவில் ஏதன்ஸ்—காட்சிகளும் சப்தங்களும்
ஏதன்ஸின் கலாச்சார செல்வத்தை கவனிக்கத் தவறினால் அந்நகருக்கு நாம் சென்றது அர்த்தமற்றதாயிருக்கும். நகரின் உள்ளரணின் தெற்கு சரிவில் அமைந்துள்ள ஹெரட்டின் வட்டரங்கத்தில் நடைபெறவிருக்கும் இசை நிகழ்ச்சிக்கு என்னுடைய மனைவியோடு செல்ல நான் முடிவு செய்கிறேன். தியேட்டருக்குள் செல்லும் பாதசாரிகளின் வழியில் சந்தடி இல்லை, மங்கலான வெளிச்சம், நிழலாட்டமாக தோன்றும் தேவதாரு மரத்தின் கீழ் நடைபாதை. கட்டிடத்தின் முகப்பில் காவிநிற கற்களின்மீது படும் பிரகாசமான ஒளி மரங்கள் வழியாக லேசாக வருகிறது. முதல் வகுப்பு டிக்கட்டுகளை நாங்கள் எடுத்திருக்கிறோம், ஆகவே மார்பிள் படிக்கட்டுகளில் ஏறி வட்டரங்கத்தினுள் ரோமர் காலத்துக்கு வாயில் வழியாக நுழைகிறோம்.
கருப்பு வெல்வட் வானம், பஞ்சுபோன்ற தோற்றமுள்ள மேக கூட்டத்தின் பின்னால் ஏறக்குறைய ஒரு முழு நிலா, இயற்கையின் பேரழகில் மனம் மயங்கி ஒருகணம் எங்கள் விழிகள் விண்ணை பார்த்துவிட்டு திரும்பியது. பாதி கூம்பு வடிவத்திலுள்ள அரங்கின் உட்புறத்தை பிரகாசிக்கச் செய்யும் பேரொளி நாலாப் பக்கத்திலிருந்தும் வருகிறது. 5,000 ஆட்கள் அமரக்கூடிய இந்த மாபெரும் அரங்கினுள் தூரத்திலிருந்து பார்ப்பதற்கு குட்டிக்குட்டியாக தெரியும் நூற்றுக்கணக்கான ஆட்கள் அரை வட்டத்தில் அமைந்திருக்கும் வெள்ளை நிற மார்பிள் படிகளில் தங்கள் இடத்தைத் தேடிக்கொண்டிருப்பது தெரிகிறது. வெயிலில் காய்ந்த இந்தக் கல் இருக்கைகள் இன்னும் இளஞ்சூடாக இருக்கின்றன. ஆயிரமாயிர வருடங்களாக நாடகத்தையும் இசையையும் சிரிப்பையும் கைத்தட்டலையும் அமைதியாக கண்டு ரசித்த அதே கற்கள் இவை.
இந்நகரில் அதிகமான எண்ணிக்கையில் காணப்படும் அருங்காட்சியகங்களை நாம் பார்க்காமல் இவ்விடத்தைவிட்டு போகக்கூடாது. இதில் மிகவும் புகழ்பெற்றது தேசிய புதைப்பொருள் அருங்காட்சியகம். இங்கே நூற்றாண்டுகளினூடாக கிரேக்கரின் கலை வளர்ச்சி பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளலாம். நாம் பார்க்க வேண்டிய மற்ற அருங்காட்சியகங்கள் மியூசியம் ஆஃப் சைக்ளாடிக் ஆர்ட் மற்றும் பைஸான்டின் மியூசியம். மெகரான் ஏதன்ஸ் கான்சர்ட் ஹால், இது தனிச்சிறப்பான ஒலி அமைப்பு கொண்ட கம்பீரமாக உயர்ந்து நிற்கும் மார்பிள் கட்டடம். 1991-ஆம் ஆண்டு முதற்கொண்டு வருடம் முழுவதும் இங்கு இசை நாடகம், கூட்டு நடனம், கிளாஸிக்கல் இசை ஆகியவை நடைபெறுகின்றன. உணவகங்கள் பலவற்றிலும் கிரேக்க நாட்டுப்புற இசையை நீங்கள் கேட்டு மகிழலாம்.
உங்களுக்கு நல்வரவு!
நவீன நாளைய ஏதன்ஸ் மக்கள் எழில்மிகு கடந்த காலத்தின் சுவடுகளோடும் சவால்மிகு எதிர்கால அழுத்தங்களோடும் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் இவர்கள் முடிந்த அளவு நகைச்சுவை உணர்வோடும், புதுப்புனைவுத் திறனோடும், பிலோடிமோ—சொல்லர்த்தமாக, சுயமரியாதையை நேசிக்கிறவர்களாயும் வாழ கற்றுக்கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலான சுற்றுலா பயணிகளுக்கு ஏதன்ஸ் கவர்ச்சியான
[பக்கம் 13-ன் தேசப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
ஏதன்ஸ்
[பக்கம் 14-ன் படம்]
பூர்வ புறமத கோயில் பார்த்தினான் சர்ச்சாகவும் மசூதியாகவும் காட்சியளிக்கிறது
[பக்கம் 15-ன் படம்]
ஏதன்ஸ்—நாற்பத்தைந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் வீடு
[பக்கம் 16-ன் படம்]
ப்ளாக்காவிலுள்ள சாராயக்கடை, ஏதன்ஸில் மிகவும் பழைமையான இடம்
[படத்திற்கான நன்றி]
M. Burgess/H. Armstrong Roberts
[பக்கம் 17-ன் படம்]
நினைவு பரிசுப்பொருட்களை விற்கும் சில கடைகளின் முகப்பு
[படத்திற்கான நன்றி]
H. Sutton/H. Armstrong Roberts