Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“சிலந்திக்கூடு லேஸ்”—பராகுவேயின் கண்கவர் கைவேலை

“சிலந்திக்கூடு லேஸ்”—பராகுவேயின் கண்கவர் கைவேலை

“சிலந்திக்கூடு லேஸ்”—பராகுவேயின் கண்கவர் கைவேலை

பராகுவே விழித்தெழு! நிருபர்

அஸன்ஷியன், பராகுவே விமான நிலையத்தில் எங்கள் சாமான்கள் இறங்கிக்கொண்டிருந்தபோது கிடைத்த சிறிய இடைவேளையில் விமான நிலையத்தைச் சுற்றிப் பார்ப்பதற்கு கிளம்பினோம். சுவரில் ஒய்யாரமாக வைக்கப்பட்டிருந்த ஏதோ ஒன்றைப் பார்க்கும்படி என் மனைவி என்னை இழுத்துக்கொண்டு போனாள். போவோர் வருவோரின் கண்களை கொள்ளையடித்துக் கொண்டிருந்த அந்த நுணுக்கமான ஆனால் சிந்திக்க வைக்கும் வேலைப்பாடுகள் நிறைந்த அழகான லேஸ் மேசைவிரிப்பைக் காட்டி “ஆஹா, என்னே அழகு! என்னே அழகு! பாருங்களேன்” என்கிறாள். அதன் வேலைப்பாட்டில் ஒருகணம் மனதை பறிகொடுத்ததோடு, இதை எப்படித்தான் பின்னியிருப்பார்களோ என்று அவள் யோசிக்க ஆரம்பித்துவிடுகிறாள்.

சிலந்திக்கூடு லேஸ் தோன்றியது அரேபியாவில். பராகுவே, சுற்றுலா பயணமும் பொது தகவலும் என்ற ஆங்கில புத்தகத்தின்படி, “அது அங்கிருந்து கானரித் தீவுகளுக்கும் ஸ்பெயினுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு 17-ஆம், 18-ஆம் நூற்றாண்டுகளுக்கிடையில் பராகுவேக்கு கொண்டு வரப்பட்டது. கானரி தீவுகளில் மிகப் பெரிய தீவாகிய டெனிரிஃப்பிலிருந்து வந்த சன் லேஸ் என்றழைக்கப்பட்ட இது, பராகுவேயன் லேஸ் அல்லது நான்டுட்டி என்று அழைக்கப்படலானது. பராகுவேயில் இந்த அழகிய வேலைப்பாடுள்ள லேஸ் அதை செய்பவரின் ரசனைக்கேற்ப மெருகூட்டப்படுகிறது, உள்ளூரிலுள்ள காய்கறிகள், மிருகங்கள் ஆகியவற்றின் வடிவங்களை பின்னுகின்றனர். இந்த லேஸை பராகுவே மக்கள் கண்டுபிடிக்காவிட்டாலும் அவர்கள் புதிய தையல்கள் கொண்டு அதை பொலிவுறச் செய்திருக்கிறார்கள். லேஸ் பின்னுவதுதான் அநேக பழங்குடியினர் பிழைப்புக்காக செய்யும் தொழில்.

பார்ப்பதற்கு சிலந்திக்கூடு போல இருக்கும் நெருக்கமாக பின்னப்பட்ட இந்த லேஸை அவர்கள் எவ்வாறு தயாரிக்கிறார்கள்? இதைத் தெரிந்துகொள்ள சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் அஸன்ஷியனுக்கு கிழக்கே இட்டாகுவா என்ற சிறிய நகரத்துக்கு எங்கள் கைடு எங்களை அழைத்துச் சென்றார். சிலந்திக்கூடு லேஸ் இந்தப் பகுதியில்தான் அதிகமாக தயார்செய்யப்படுகிறது என்பதாக அவர் எங்களிடம் சொன்னார். ஆம், கடைவீதியில் பார்த்தால் எல்லா கடைகளிலும் பின்னப்பட்ட பொருட்களே காட்சியளிக்கின்றன.

ஒரு கடைக்கார பெண் புன்முறுவலுடன் வரவேற்று கண்கவர் பொருட்கள் சிலவற்றை எங்களுக்குக் காண்பித்தார். அவள் இவ்வாறு விளக்கினாள்: “கையால் செய்யப்படும் லேஸ், அது எவ்வாறு செய்யப்படுகிறது என்பதைப் பொருத்து தரம்வாரியாக பிரிக்கப்படுகிறது. சிலந்திக்கூடு லேஸ் என்பது ஊசி கொண்டு செய்யும் பின்னல்வேலை. பராகுவேயில் லேஸ் பின்னுகிற அநேகர் டிசைன்களை நினைவில் வைத்து பின்னுகிறார்கள், மற்றவர்கள் முதலில் வரைந்துகொண்டு பின்னர் பின்னுகிறார்கள். அவர்கள் எல்லாருமே மரச்சட்டத்தில் பூட்டப்பட்ட ஒரு துண்டுதுணியை பயன்படுத்தி ஊசி நூலை வைத்து லேஸ் தயாரிக்கிறார்கள். சிறு வயதிலேயே அம்மாக்களிடம் இந்தக் கைத்திறனை கற்றுக்கொண்டு இவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்கிறார்கள்.”

சிலந்தி தன் கூட்டைக் கட்ட இரண்டு அல்லது மூன்று மணிநேரம் மட்டுமே எடுத்துக்கொள்கிறது. “எட்டுபேர் உட்காரும் ஒரு மேசைவிரிப்பை சாதாரணமான நூலை பயன்படுத்தி தயாரிக்க இரண்டிலிருந்து மூன்று மாதங்களும் அதே மேசைவிரிப்பை மிகவும் நைசான நூலை பயன்படுத்தி தயாரிக்க ஆறிலிருந்து எட்டு மாதங்களும் ஆகின்றன. எந்த அளவுக்கு நூல் நைசாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அழகும் கூடுகிறது” என்றாள் எங்களை உபசரித்த பெண்மணி.

வெண்மையான லேஸ் கைத்துண்டை கையில் வைத்துக்கொண்டு அவள் இவ்வாறு விளக்குகிறாள்: “நடுவில் இருக்கும் டிசைன் கொய்யா மரத்தின் பூ. இதை நூல்களை எண்ணிக்கொண்டே பின்ன வேண்டும். இந்த டிசைன்தான் மிகவும் கஷ்டமானது, மெல்லிய நூல்கொண்டு இதை செய்வதற்கு இரண்டு வாரங்கள் எடுக்கிறது. ஆரம்பத்தில் இந்த லேஸ் வேலைபாடு செய்பவர்கள் நைசான நூலையே பயன்படுத்தினர், அதனால் லேஸ் என்றாலே விலை அதிகமாகவே இருந்தது. ஆகவே மலிவான விலையில் விற்பதற்காகவும் வேகமாக இவற்றை தயாரிப்பதற்காகவும் சாதாரணமான நூலையே அநேகர் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.”

பல வண்ணங்களிலும் வெள்ளை நிறத்திலும் தட்டுவிரிப்புகள், மேசை விரிப்புகள், கைத்துண்டுகள், கோஸ்டர்கள் ஆகியவை காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன. உடைகளைப் பற்றி நாங்கள் கேட்டபோது, அந்தப் பெண் உடனடியாக தன் மகளின் உடையைக் கொண்டுவந்து எங்களிடம் பெருமையாக காட்டினாள். அது ஒரு அழகான வானவில் நிற ஃபுல் ஸ்கர்ட். மற்ற கடைகளில் சில அழகான மெல்லிய லேஸ்கொண்ட நேர்த்தியாக செய்யப்பட்ட போஸ்ட் கார்டுகளை பார்த்தோம். சிலந்திக்கூடு லேஸ் பராகுவேயின் பிரசித்திபெற்ற கைவேலையாக கருதப்படுவது ஆச்சரியப்படுவதற்கில்லை.

[பக்கம் 18-ன் முழுபக்க படம்]