நவீன அடிமைத்தனம்—அஸ்தமனம் அருகில்!
நவீன அடிமைத்தனம்—அஸ்தமனம் அருகில்!
“தனி மனிதனுடைய சுதந்திரம் சர்வதேச சுதந்திரத்தின் முக்கிய பாகம். தனி மனிதனுடைய சுதந்திரத்தைப் பறித்துவிட்டு அதேசமயத்தில் சர்வதேச சுதந்திரத்தை காக்க முடியாது.”—1848-ல் வாழ்ந்த பிரெஞ்சு இதழாசிரியரும் அரசியல்வாதியுமான விக்டர் ஷோலர்.
“இகழ்ச்சிக்கும் அடக்குமுறைக்கும் சகமனிதரை சிறுமைப்படுத்துவதற்கும் எப்போதும் காரணமான மனிதனின் மோசமான மறுபக்கம்தான் எது?” என கேட்கிறார்கள் தி யுனெஸ்கோ கூரியர் பதிப்பாசிரியர்கள். “மனித இனத்திற்கு எதிராக இழைக்கப்படும் இப்படிப்பட்ட குற்றச்செயல் மனித உரிமைகளுக்கான குரல் ஓங்கி ஒலிக்கும் சமயத்திலும் எவ்வாறு தண்டிக்கப்படாமல் இருந்துவருகிறது?”
பதில் மிகவும் கடினம். மலிவான குழந்தை தொழிலாளர்களை புகுத்துவதற்கும் கடன் அடிமை எனும் விந்தைக்கும் காரணம் பேராசையே. இளம் பெண்களை விபச்சாரத்திற்கும் அடிமை மணவாழ்வுக்கும் அர்ப்பணிக்கும் செயலுக்கு வறுமையும் கல்வி அறிவின்மையுமே காரணம் என குற்றம் சாட்டப்படுகிறது. சடங்காச்சார அடிமைத்தனத்தின் திரைமறைவில் இருப்பது மத சட்டங்களும் கலாச்சார கொள்கைகளுமே. எய்ட்ஸ் இல்லா சிறுவரை அல்லது சிறுமியரை சில்லரையில் சிக்கவைப்பதற்கு பாங்காங்கிற்கோ மணிலாவிற்கோ செல்லும் ஆண்களுடைய விஷயத்தில், அவர்களுடைய உள்நோக்கம் அப்பட்டமாக தெரிகிறது: பாலியல் வேட்கையும் ஒழுக்கயீனமுமே. இவையனைத்தும், முதல் நூற்றாண்டில் வாழ்ந்த வழக்கறிஞரின் வார்த்தைகளில் விளம்பினால், “மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், . . . சுபாவ அன்பில்லாதவர்களாயும், . . . இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும்” வாழ்கிற உலகத்தின் பாகமாக இருக்கின்றன. (2 தீமோத்தேயு 3:1-5) பூர்வகால அரசியல் மேதகை சாலொமோனின் வார்த்தைகளில் விவரித்தால், ‘கோணலானதை நேராக்கவோ குறைவானதை எண்ணவோ முடியாத’ உலகத்தின் பாகமாக இருக்கிறது இவையெல்லாம்.—பிரசங்கி 1:15.
மனதில் மாற்றம்
அடிமைத்தனம்—பாரம்பரியம் எனும் போர்வையில் படமெடுத்தாலும்சரி நவீனகால வடிவங்களில் தலைதூக்கினாலும்சரி—அதை நிரந்தரமாக வெட்டி வீழ்த்த எதுவுமே செய்ய முடியாது அல்லது செய்யப்படாது என்பதை இது அர்த்தப்படுத்துகிறதா? இல்லவே இல்லை!
அடிமைத்தனம் என்பது “ஒரு மனநிலை” என மனித உரிமைகளுக்கான ஐநா உயர் ஆணையர் அலுவலகம் (OHCHR) குறிப்பிடுகிறது. அது மேலும் கூறுவதாவது: “அதை அடியோடு ஒழித்தாலும் அதன் தடயங்கள் இருக்கும். அதற்கு பலியானவர்கள், அவர்களுடைய சந்ததியார் மத்தியிலும், அதை பழக்கமாக செய்துவந்தவர்களின் சந்ததியிலும் அது சிந்தையில் தொடர்ந்து இருக்கக்கூடும்—அது தடைசெய்யப்பட்டு வெகுகாலத்திற்குப் பின்னரும்கூட.”
ஆகவே அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கு ஒரு வழி, உலகளாவிய அளவில் சிந்தையில்—இருதயத்தில்—மாற்றத்தை கொண்டுவருவதே. அது கல்வியில் மாற்றத்தைக் கொண்டுவருவதையும்
உட்படுத்துகிறது. அதுதான் ஒருவரையொருவர் நேசிக்கவும் ஒவ்வொருவருடைய கண்ணியத்தை மதிக்கவும் கற்றுத்தரும் கல்வி. மக்களுடைய மனதிலிருந்து பேராசையை வேரோடு பிடுங்கி, உயர்ந்த ஒழுக்க தராதரங்களைக் கடைப்பிடிப்பதற்கு உதவி செய்வதை குறிக்கிறது. இப்படிப்பட்ட கல்வியை யார் வழங்க முடியும்? “மனிதநேயமற்ற சுரண்டலை இனிமேலும் பொறுத்துக் கொள்ளாத உலகை உருவாக்குவதற்கு ஒவ்வொருவரும் உதவ வேண்டும்” என்று சொல்கிறது OHCHR.யெகோவாவின் சாட்சிகளாலான கிறிஸ்தவ சமுதாயம் உலகளாவிய அளவில் சாதித்திருக்கிற கல்வித் திட்டத்தை கவனியுங்கள். நல்மனமுள்ளவர்கள் மனிதநேயமற்ற சுரண்டலை பொறுத்துக் கொள்ளவோ அல்லது கண்டும் காணாமல் விட்டுவிடவோ அனுமதிக்காத கல்வியை இத்திட்டம் வெற்றிகரமாக கற்பித்திருக்கிறது. இத்திட்டத்தின் வாயிலாக 230-க்கும் அதிகமான தேசங்களில் உள்ள லட்சக்கணக்கானோர் தங்களுடைய சகமனிதரை கண்ணியத்தோடு நடத்துவதற்கு கற்பிக்கப்பட்டிருக்கிறார்கள். இத்திட்டத்தின் வெற்றிக்கு காரணம்?
மனிதனை படைத்தவரால் ஏவப்பட்டு எழுதப்பட்ட புத்தகமாகிய பைபிளே வெற்றிக்கு காரணம். இது, மனித கண்ணியத்தை முன்னேற்றுவிக்கிறது. யெகோவாவின் சாட்சிகளுடைய இக்கல்வி திட்டத்தின் வாயிலாக பைபிளை கற்றுக்கொள்ளும் ஆட்கள், நம்முடைய படைப்பாளராகிய யெகோவாதாமே கண்ணியத்தின் கடவுள் என்பதை அறிந்துகொள்கிறார்கள். (1 நாளாகமம் 16:27, NW) தம்முடைய படைப்புகள் அனைத்திற்கும் கண்ணியத்தை வழங்குகிறார். எல்லா வகை இனம், சமுதாய பின்னணி, பொருளாதார சூழ்நிலைகளிலிருந்தும் வருகிற ஆண்களையும் பெண்களையும் இது உட்படுத்துகிறது.—“மனித சுதந்திரமும் கண்ணியமும்—எங்கிருந்து?” என்ற பெட்டியைக் காண்க.
சமத்துவமும் கண்ணியத்திற்கு மதிப்பும்
‘மனுஷ ஜாதியான சகல ஜனங்களையும் அவர் [கடவுள்] ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்தார்’ என பைபிள் கற்பிக்கிறது. (அப்போஸ்தலர் 17:26) இதனால், சகமனிதர் எவரையும்விட தான் உயர்ந்தவன் என்றோ மற்றவர்களை ஒடுக்குவதற்கோ சுரண்டுவதற்கோ உரிமை இருக்கிறது என்றோ எவரும் சொல்லிக்கொள்ள முடியாது. ‘தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்பதையும், எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்பதையும்’ உணர்ந்துகொள்கிறார்கள். (அப்போஸ்தலர் 10:34, 35) கடவுளுடைய அன்பு அனைத்தையும் உள்ளிட்டது என்பதை புரிந்துகொள்கிறார்கள். ஏனென்றால் அவருடன் நெருங்கிய உறவை அனுபவிக்கும் பாக்கியம் அனைவருக்கும் இருக்கிறது. சொல்லப்போனால், ‘தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.’—யோவான் 3:16.
பைபிள் அடிப்படையிலான கல்வி மக்களை அடியோடு மாற்றியிருக்கிறது. அது மக்களுடைய மனதையும் இதயத்தையும் “முற்றிலும் புதிதாக்க” முடியும். (எபேசியர் 4:22-24, டுடேஸ் இங்லிஷ் வர்ஷன்) சகமனிதரை கண்ணியத்தோடும் மரியாதையோடும் நடத்துவதற்கு இது தூண்டுவிக்கிறது. எனவே அவர்கள் ‘எல்லாருக்கும் நன்மை செய்ய’ வேண்டும் என்று உறுதியுடன் இருக்கிறார்கள். (கலாத்தியர் 6:10, NW) மனிதநேயமற்ற சுரண்டலிலும் ஒடுக்குதலிலும் ஈடுபட்டுக்கொண்டு அதேசமயத்தில் எவரும் உண்மையான கிறிஸ்தவராக இருக்க முடியாது. யெகோவாவின் சாட்சிகள் முதல் நூற்றாண்டில் இருந்த கிறிஸ்தவ சபையைப் போல ஒரு கிறிஸ்தவ சமுதாயமாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறார்கள்; அதில் ‘யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, அனைவரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறார்கள்.’—கலாத்தியர் 3:28.
அரசாங்கத்தில் மாற்றம்
ஆனால், எல்லா வகை அடிமைத்தனத்திற்கும் நிரந்தர முடிவுகட்டுவதற்கு, மனித சமுதாயத்தில் இமாலய மாற்றங்கள் நிகழ வேண்டும். மனித சுரண்டலை ஒழிப்பதற்கு, இப்படிப்பட்ட பழக்கங்களை “அனுமதிக்கிற, கண்மூடிக்கொள்கிற சமுதாயம், கலாச்சாரம் மாற வேண்டும்.” சர்வதேச நடவடிக்கைகள், சர்வதேச ஒத்துழைப்பு, உலக சமுதாயத்தின் உறுதி—இவையெல்லாம் அந்த ஏஜென்ஸி பரிந்துரைக்கும் கூடுதலான ஆலோசனைகள்.
ஆகவே, நமது கோளத்தை பரந்த அளவில் கட்டுப்படுத்தும் ஓர் அதிகாரம், சர்வதேச சுதந்திரத்தை உறுதியளிக்கும் ஓர் அதிகாரம் நியாயமாகவே தேவை. நமது பிரச்சினைகள் “உலகளாவிய அளவில்” தீர்க்கப்பட வேண்டும் என சொன்னார் முன்னாள் ஐநா பொதுச் செயலாளர் பூட்ரோஸ் பூட்ரோஸ் காலி. இது என்றாவது நிஜமாகும் என்ற நம்பிக்கை எல்லாருக்கும் இல்லை. இப்பேர்ப்பட்ட சர்வதேச ஒத்துழைப்பு நிகழாத அளவுக்கு செல்வாக்குமிக்க அநேகர் சுயநலத்தோடும் தங்களுடைய விருப்பங்களிலும் லட்சியங்களிலுமே கண்ணும் கருத்தோடும் இருப்பதை கடந்த கால அனுபவங்கள் காட்டுகின்றன.
ஆனால், இப்படிப்பட்ட ஓர் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதே கடவுளுடைய நோக்கம் என்பதை பைபிள்—சக மனிதரின் கண்ணியத்தை மதிக்க கோடிக்கணக்கானோருக்கு கற்றுக்கொடுத்திருக்கிற அதே புத்தகம்—காட்டுகிறது. நீதி வாசமாயிருக்கும் ஒரு புதிய உலகைப் பற்றிய அநேக வாக்குறுதிகளை பைபிளில் நீங்கள் காண்பீர்கள். (ஏசாயா 65:17; 2 பேதுரு 3:13) கடவுளையும் அயலகத்தாரையும் நேசிக்காத எவரும் பூமியிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்பது கடவுளுடைய நோக்கம். இந்தப் பூமியை நீதியோடு ஆளுவதற்கு மனிதவர்க்கத்தின் மீது ஓர் உலகளாவிய அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் தம் நோக்கத்தை கடவுள் வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த அரசாங்கத்திற்காக ஜெபிக்கும்படி பரமண்டல ஜெபத்தில் இயேசு நமக்கு கற்றுக்கொடுத்தார்.—மத்தேயு 6:9, 10.
மனித சுரண்டலும் அடிமைத்தனத்தின் எல்லா வகை கோர முகங்களும் இந்த அரசாங்கத்தில் அடியோடு ஒழிக்கப்படும், ஏனெனில் கிறிஸ்து ராஜா “நியாயத்தினாலும் நீதியினாலும்” ஆளுகை செய்வார். (ஏசாயா 9:7) ஒடுக்கப்பட்டோர் யாவரும் அவருடைய நீதியான ஆட்சியில் சுதந்திரம் பெற்று சுகமாய் வாழ்வார்கள், பைபிள் இவ்வாறு சொல்கிறது: “கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார். பலவீனனுக்கும் எளியவனுக்கும் அவர் இரங்கி, எளியவர்களின் ஆத்துமாக்களை இரட்சிப்பார். அவர்கள் ஆத்துமாக்களை வஞ்சகத்திற்கும் கொடுமைக்கும் தப்புவிப்பார்; அவர்களுடைய இரத்தம் அவருடைய பார்வைக்கு அருமையாயிருக்கும்.”—சங்கீதம் 72:12-14.
அடிமைத்தனம் அடியோடு ஒழிக்கப்படுவதை நீங்கள் காண வாஞ்சையாக இருந்தால்—விடுதலை அளிக்கும் இந்த உலக அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கான கடவுளுடைய நோக்கத்தைப் பற்றி கற்றுக்கொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறோம். உங்களுடைய பகுதியிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் உங்களுக்கு உதவிசெய்ய மகிழ்ச்சியோடு காத்திருக்கிறார்கள்.
[பக்கம் 11-ன் பெட்டி/படம்]
மனித சுதந்திரமும் கண்ணியமும்—எங்கிருந்து?
பிறவியிலேயே நாம் அனைவரும் கண்ணியத்திற்கும் சுதந்திரத்திற்கும் ஏங்கும் ஆசையோடும் அதற்கான தேவையோடும் பிறந்திருக்கிறோம். ஐநா பொதுச் செயலாளர் கோஃபி அன்னன் இவ்வாறு சொன்னபோது உலகத்தாருடைய உணர்ச்சிகளை எதிரொலித்தார்: “பயமோ சித்திரவதையோ வேற்றுமையோ இல்லாத வாழ்க்கையை நம்மில் யார்தான் விரும்பமாட்டோம்? . . . சுதந்திரமாக இருக்கும் ஒருவர் சுதந்திரத்திற்கு முடிவு கட்ட குரலெழுப்புவதை நீங்கள் எப்போது கேட்டிருக்கிறீர்கள்? அடிமைத்தனத்தை விரும்பி ஓர் அடிமை வாக்குவாதம் செய்வதை நீங்கள் எங்கே கேட்டிருக்கிறீர்கள்?”
இப்படிப்பட்ட கருத்துகள் புதியதல்ல. சிலர் அடிமைகளாவதற்கே பிறந்திருக்கிறார்கள் என்ற எண்ணத்தை எடுத்தெறிந்து, லெட்டர்ஸ் டு லுஸிலியஸ் என்ற நூலில் முதல் நூற்றாண்டு ரோம தத்துவஞானி செனிகா இவ்வாறு எழுதினார்: “உங்களுடைய அடிமை என்று நீங்கள் அழைக்கும் மனிதன் அதே மனித இனத்தவன்தான், அவனுக்கு மேலே இருப்பதும் அதே நீலவானம்தான், உங்களைப் போலவே சுவாசிக்கிறான், உங்களைப் போலவே வாழ்கிறான், உங்களைப் போலவே சாகிறான் என்பதை புரிந்துகொள்ளுங்கள்!”
முகமதுவுக்குப் பின்வந்த நான்காம் காலிப் என்று உயர்வாக மதிக்கப்பட்ட இமாம் அலி, எல்லா மனிதரும் “படைப்பில் சமம்” என்றார். 13-ம் நூற்றாண்டு பெர்சிய கவிஞர் சாடி இவ்வாறு அறிவித்தார்: “ஆதாமின் பிள்ளைகள் ஒவ்வொருவரும் உடலின் அங்கங்கள், படைப்பில் ஒரே வஸ்துவால் உருவானவர்கள். ஒரு அங்கத்திற்கு இந்த உலகம் வலியுண்டாக்குகையில், மற்ற அங்கங்கள் வலியில்லாமல் இருக்காது.”
எல்லா மனிதருடைய கண்ணியத்தையும் பற்றி கடவுளால் எழுதப்பட்ட பைபிளில் உள்ள சரித்திரப் பதிவும் சிறப்பித்து கூறுகிறது. உதாரணமாக, ஆதியாகமம் 1:27 மனிதனுடைய படைப்பை விவரித்து இவ்வாறு சொல்கிறது: “தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.” நம்முடைய படைப்பாளர் விடுதலையின் கடவுள். “கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு” என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (2 கொரிந்தியர் 3:17) தம்முடைய சாயலிலும் தோற்றத்திலும் மனிதனைப் படைத்தபோது, மனிதருக்கு மதிப்பையும் சுயமரியாதையையும் கண்ணியத்தையும் யெகோவா வழங்கினார். ‘அழிவுக்குரிய அடிமைத்தனத்திலிருந்து’ தம்முடைய சிருஷ்டியை விடுதலை செய்வதன்மூலம், மக்கள் என்றென்றும் இப்படிப்பட்ட சுதந்திரத்தையும் கண்ணியத்தையும் அனுபவிக்கும்படி பார்த்துக்கொள்வார்.—ரோமர் 8:20.
[பக்கம் 9-ன் படம்]
கண்ணியத்தையும் சுதந்திரத்தையும் பெற அனைவருக்கும் உரிமை உண்டு
[பக்கம் 10-ன் படங்கள்]
மனித கண்ணியத்தை மதிக்க பைபிள் கற்பிக்கிறது, புதிய உலக எதிர்கால நம்பிக்கையை தருகிறது
பெனினில் குடும்ப பைபிள் படிப்பு
எத்தியோப்பியாவிலுள்ள இந்த நீல நைல் நீர்வீழ்ச்சிகளின் அழகு புதுப்பிக்கப்பட இருக்கும் பரதீஸுக்கு முற்காட்சி