Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நோவா—கடவுளோடு சஞ்சரித்தார் வீடியோவின் ஜனனம்

நோவா—கடவுளோடு சஞ்சரித்தார் வீடியோவின் ஜனனம்

நோவா—கடவுளோடு சஞ்சரித்தார் வீடியோவின் ஜனனம்

“காலையில் கண்விழிக்கும்போதே இதைப்பற்றி பேசிக்கொண்டே அவன் எழுந்திருக்கிறான். பகலில் மூன்று அல்லது நான்கு தடவை அதைப் பார்க்கிறான். இரவில் தூங்கப்போவதற்கு முன்பு மறுபடியும் அதைப் பார்க்கிறான்.” கலிபோர்னியாவைச் சேர்ந்த இந்தத் தாய் எதைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்? அவருடைய இரண்டு வயது மகனுக்கு “நோவா​—⁠கடவுளோடு சஞ்சரித்தார்”  a என்ற வீடியோ எவ்வளவு பிடித்திருந்தது என்பதைப் பற்றி சொல்கிறார். அவர் மேலும் சொல்கிறார்: “வெளியில் விளையாடும்போது, கையில் சுத்தி ஒன்றை வைத்துக்கொண்டு உயிர் காக்கும் பேழை ஒன்றை கட்டுவதுபற்றி பேசுகிறான்.”

மற்றொரு தாய் இவ்வாறு எழுதினார்கள்: “நோவா வீடியோ தயாரிப்பதற்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும் முயற்சி, நேரம், அன்பு ஆகியவற்றிற்காக நான் உங்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். என்னுடைய மூன்று வயது பையன் முழு வீடியோவையும் மனப்பாடம் செய்துவிட்டான், இடையில் வரும் சப்தங்களும் அவனுக்கு அத்துப்படி! இது அவனுக்கு மிகவும் பிடித்தமான வீடியோ, ஒவ்வொரு நாளும் இரண்டு அல்லது மூன்று முறை இதை போட்டுக்காட்டும்படி கேட்கிறான்.”

டான்யல் என்ற சிறுமி இவ்வாறு எழுதினாள்: “எனக்கு இது ரொம்ப பிடிச்சிருக்கு, நோவா செய்ததுபோல எனக்கும் செய்ய ஆசையாயிருக்கு. குழந்தைகளுக்கென்று நீங்கள் அதிகமான வீடியோக்களை தயார் செஞ்சீங்கன்னா நல்லா இருக்கும்.”

நிச்சயமாகவே பைபிள் வீடியோக்களை தயார்செய்வதற்கு அதிக நேரமெடுக்கிறது. ஏன் அப்படி?

நோவா வீடியோ எவ்வாறு தயாரிக்கப்பட்டது?

படப்பிடிப்புக்கு முன்பு அல்லது படங்களை வரைய ஆரம்பிப்பதற்கு முன்பு பைபிள் பதிவை அடிப்படையாக வைத்து வசனகர்த்தா கதையை எழுதிக்கொண்டார். அதன்பின் ஒரு ஸ்டோரிபோர்டும் பின்னர் ஸ்கிரிப்டும் தயாரிக்கப்பட்டது. ஸ்டோரிபோர்டில் தோராயமாக வரையப்பட்ட சிறிய படங்கள் இருக்கும். இதை வைத்து இதில் நடிப்பவர்கள் எதற்குப்பின் எது வரும் என்பதையும் கதை அமைப்பையும் புரிந்துகொண்டார்கள். நடிகர்கள் உட்பட பல பேர் சேர்ந்து நோவாவின் வரலாற்றை எவ்வாறு சித்திரமாக வரைய முடியும் என்பதைப் பற்றி கலந்து பேசினார்கள். எந்தப் பகுதிகளில் நடிகர்களை பயன்படுத்தலாம், எந்தப் பகுதிகளை ஓவியங்களாக காட்டலாம் என்பதை தீர்மானித்தார்கள். நடந்த சம்பவத்தை நடித்துக்காட்டினால் அந்தப் பதிவு உண்மையானது என்பதை ஒரு குழந்தையின் மனதில் பதிய வைக்கலாம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் யெகோவாவை சேவித்த, உண்மையில் வாழ்ந்த மனிதர்களைப் பற்றியே பைபிள் பேசுகிறது என்பதை எடுத்துக் காட்டலாம். தயாரிப்பில் அடுத்த வேலை என்ன?

நோவாவையும் அவன் குடும்பத்தையும் பிரதிநிதித்துவம் செய்யும் நடிகர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்களுடைய உடைகள் என்ன விதமாக இருக்கும், ஒவ்வொரு காட்சிக்கும் என்ன வண்ணங்கள் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்பதெல்லாம் முடிவுசெய்யப்பட்டது. இவையெல்லாம் அவசியமாக இருந்தது, ஏனென்றால் ஒப்பனையில் நடிகர்கள் எப்படி இருப்பார்கள் என்பது ஆர்ட்டிஸ்டுகளுக்குத் தெரிந்தாலொழிய நோவா, அவனுடைய மனைவி, மகன்கள், மருமகள்கள் ஆகியோரை வரைந்து வர்ணம் தீட்ட முடியாது. படங்களும் நிஜ வாழ்க்கை காட்சிகளும் பொருத்தமாக இருத்தல் வேண்டும். ஆனால் இந்தக் காட்சிகள் எங்கே படமாக்கப்படும்?

இதற்காக டென்மார்க் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த நாட்டின் உவாட்ச் டவர் சொஸைட்டியின் கிளை அலுவலகத்தில்தான் திறமையான கட்டடக் கலை வல்லுநர்கள் இருந்தார்கள், உட்புற காட்சிகளை படமாக்க போதுமான இடவசதியும் இருந்தது. நியூ யார்க், பேட்டர்ஸன் உவாட்ச்டவர் கல்வி மையத்திலுள்ள ஆடியோ/வீடியோ இலாக்காவை சேர்ந்த படப்பிடிப்புக் குழு ஒன்று சென்றது, இதில் டென்மார்க் நாட்டவரும் இருந்தனர். வர்ணனை வடிவில் முழு கதையும் எடுத்துச் சொல்லப்பட்டது. இதன் காரணமாக இந்த வீடியோவை மற்ற மொழிகளில் டப்பிங் செய்யாமலே எடுக்க முடிந்தது. இதனால் கதை-வசனத்தை மொழிபெயர்த்து வாய் அசைவுக்கு ஏற்ப இடையில் புகுத்தும் வேலை இல்லை. ஆனால் கலைவேலைபாடு மிகவும் கடினமாயிற்றே, அது எவ்வாறு தயாரிக்கப்பட்டது?

கலையும் விசேஷமான காமிராவும்

படைப்பாளிகள் தயாரித்த ஸ்டோரிபோர்டை வைத்து ஓவியர்கள் நூற்றுக்கணக்கான வாட்டர்கலர் வண்ண ஓவியங்களைத் தயார் செய்தார்கள். இவை எப்போதும் சதுர அல்லது செங்கோண ஓவியங்களாக இல்லை. சில சமயங்களில் அவை வளைவாக அல்லது முட்டை வடிவாக இருந்தன. இவை காமிரா கோணத்தைப் பொருத்து தயாரிக்கப்பட்டிருந்தன. ஓவியங்கள் 56 சென்டிமீட்டருக்கு 76 சென்டிமீட்டர் அளவில்தான் இருந்தன. பெரும்பாலானவை 28 சென்டிமீட்டருக்கு 38 சென்டிமீட்டர் என்ற அளவில் மிகவும் சிறியதாக இருந்தன.

ஓவியங்களை படம்பிடிக்க விசேஷமான மோஷன் கன்ட்ரோல் காமிரா தேவைப்பட்டது. முப்பரிமாண தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக ஆர்ட் வேலைப்பாடு மூன்று அடுக்குகளில் வைக்கப்பட்டது​—⁠முன்புறத் தோற்றம், நடுப்பகுதி, பின்புறத் தோற்றம். இப்படிச் செய்வதால் மரங்களுக்கு இடையில், ஒரு யானையின் கால்களுக்கு இடையில் அல்லது ஆழத்தை காண்பிப்பதற்கு இருக்கும் இடைவெளியின் வழியாக காட்சியை படமாக்க முடியும். காமிரா ஒரு கம்ப்யூட்டரால் கட்டுப்படுத்தப்பட்டதால் ஸ்பெஷல் எஃபெக்ட் உண்டுபண்ணுவதற்காக அதை சுழற்ற முடியும் அல்லது அதை அருகிலோ தூரத்திலோ காட்ட முடியும். இதனால் காட்சி நகருவதுபோல தோன்றும், ஆனால் உண்மையில் காமிராவே நகருகிறது.

படங்களை கார்டூன் போல அசையவைக்கும் திறமைகளோ அல்லது அதற்குண்டான வழிமுறைகளோ உவாட்ச் டவர் சொஸைட்டியிடம் இல்லை என்பதால் நடிப்பு, ஓவியங்கள் ஆகிய இரண்டையும் வைத்து படமெடுக்கப்பட்டது. 3 முதல் 12 வயதிலுள்ளவர்களுக்காக இந்த முறையில் தயார் செய்யப்பட்டிருக்கும் இந்த வீடியோவை அவர்கள் மகிழ்ந்து அனுபவிக்கிறார்கள். நோவாவின் முன்மாதிரியிலிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய அநேக பாடங்களை வீடியோ தெளிவாக காட்டுகிறது. கதையின் முக்கிய குறிப்புகளை தங்கள் பிள்ளைகளோடு மறுபார்வை செய்வதற்கு வீடியோ கவரின்மீதுள்ள வினாடிவினா பெற்றோருக்கு உதவியாக இருக்கிறது.

ஜலப்பிரளயத்தின்போது கொட்டிய மழை அதிகரிப்பது போன்ற மற்ற ஸ்பெஷல் எஃபெக்டுகளுக்கு கம்ப்யூட்டர் டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டது. நோவா வீடியோவை தயாரிப்பதில் நேரமும் படைக்கும் திறனும் அதிகளவில் உட்பட்டிருந்தது என்பதைக் காணமுடிகிறது.

பைபிள் பதிவுகள் மாறுவதில்லை, ஆகவே நோவா​—⁠கடவுளோடு சஞ்சரித்தார் என்ற வீடியோ எப்போதும் காலத்துக்கு ஏற்றதாக இருக்கும், புதிய இளைய தலைமுறைகளுக்கு கற்பிப்பதற்கு உதவியாக இருக்கும். பிள்ளைகளும் பெற்றோரும் இதை பாராட்டி அதிகமான வீடியோக்களை கேட்டு எழுதும் கடிதங்கள் வந்து குவிந்துகொண்டிருக்கின்றன. ஒரு பெண்மணி இவ்வாறு எழுதினார்: “எனக்கு 50 வயதாகிறது. நான் பிள்ளைகளை வளர்த்து வெகு நாளாகிறது. ஆனால் சிறு பிள்ளைகளையுடைய பெற்றோர் பைபிள் கதைகள் அடங்கிய ஒரு வீடியோ நூலகத்தை வைத்திருந்தால் அவர்களுக்கு கற்றுக்கொடுப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.”

[அடிக்குறிப்புகள்]

a இந்த வீடியோ 1997-ல் வெளியிடப்பட்டது, இது அல்பேனியன், சைனீஸ், குரோவேஷன், செக், டேனிஷ், டச், ஃபின்னிஷ், பிரெஞ்சு, கிரேக்கு, ஹங்கேரியன், இத்தாலியன், ஜாப்பனீஸ், கொரியன், லாட்வியன், நார்வீஜியன், போர்ச்சுகீஸ், செர்பியன், ஸ்லோவாக், ஸ்பானிஷ், ஸ்வீடிஷ், தாய் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இன்னும் பல மொழிகளில் இதை மொழிபெயர்க்க திட்டமிருக்கிறது.

[பக்கம் -ன் படங்கள்22, 23]

ஸ்டோரிபோர்டோடு தயாரிப்பு துவங்கியது

[பக்கம் -ன் படங்கள்23]

நடித்துக்காட்டப்பட்ட பெரும்பாலான பாகம் டென்மார்க்கில் படமாக்கப்பட்டது

[பக்கம் -ன் படங்கள்24]

ஓவியர்கள் சுமார் 230 வித்தியாசமான படங்களை வரைந்து வர்ணம் தீட்டினார்கள்

[பக்கம் -ன் படங்கள்25]

நகர்ந்துகொண்டே படம்பிடிக்கும் மோஷன் கன்ட்ரோல் காமிரா ஆர்ட் வேலைபாடுகளுக்கு உயிரூட்டுகிறது

[பக்கம் -ன் படங்கள்25]

கம்ப்யூட்டர் எடிட்டிங், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ், வர்ணனை, இசை, ஒலி ஆகியவை சேர்ந்தபோது வீடியோ தயாரானது