மெக்ஸிகோ மனசாட்சிக்கு சுதந்திரம் தருமா?
மெக்ஸிகோ மனசாட்சிக்கு சுதந்திரம் தருமா?
மெக்ஸிகோவிலுள்ள விழித்தெழு! நிருபர்
மெக்ஸிகோ நாட்டு சட்டம் மத சுதந்திரத்துக்கு உத்தரவாதம் அளிக்கிறது. ஆனால் சில கட்டுப்பாடுகளையும் விதிக்கிறது. உதாரணமாக மத அடிப்படையில் இராணுவ சேவையை மறுப்பதென்பது இந்த நாட்டின் சரித்திரத்தில் இல்லாதது. இதற்காகவே மெக்ஸிகோவின் தேசிய தன்னாட்சி பல்கலைக்கழகத்தின் (UNAM) சட்ட புலனாய்வு நிறுவனம் சர்வதேச கருத்தரங்கம் ஒன்றை நடத்த தீர்மானித்தது. இதன் தலைப்பு “மெக்ஸிகோவிலும் பிறநாடுகளிலும் மத அடிப்படையில் ஆட்சேபணை.” UNAM-ன் சட்ட புலனாய்வு நிறுவனம் அரசுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. ஆனால் ஸ்தாபிக்கப்பட்ட சட்டங்களையும் அவை எவ்வாறு பின்பற்றப்படுகிறது என்பதையும் ஆய்வு செய்வதே அதன் நோக்கம். மெக்ஸிகோவில் “யெகோவாவின் சாட்சிகளும் மத அடிப்படையில் ஆட்சேபணையும்” என்ற தலைப்பில் ஒரு பேச்சைக் கொடுப்பதற்கு பிரதிநிதி ஒருவரை அனுப்பும்படி சாட்சிகளிடம் கேட்கப்பட்டது.
பேராசிரியர்கள் தைரியமாக கருத்து தெரிவித்தனர்
ஸ்பெயினிலுள்ள க்ரனடா சட்ட பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் ஹேவியர் மார்டினஸ் டாரன் என்பவர் “சர்வதேச சட்டத்தில் மத அடிப்படையில் ஆட்சேபணை” என்ற தலைப்பில் பேசினார். மனசாட்சிப்படி நடப்பதற்கான சுதந்திரமும் மனசாட்சி காரணமாக ஒரு சில சட்டங்களுக்கு கீழ்ப்படிய மறுப்பதற்கான உரிமையும் ஏற்கெனவே உலகம் முழுவதிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது என்பதைக் காண்பித்தார். ஸ்பெயினில் யெகோவாவின் சாட்சிகளுடைய நிலையையும் கிரீஸில் கோக்கினாக்கீஸ் என்பவரின் வழக்கையும் அவர் குறிப்பிட்டார். a
UNAM-ன் சட்ட புலனாய்வு நிறுவனத்தின் பேராசிரியர் டாக்டர் ஹோஸா லூயிஸ் சோபரானஸ் பெர்னான்டஸ் “இந்த விஷயத்தில் மெக்ஸிகன் அனுபவம்” என்ற தலைப்பில் பேசினார். “மத அமைப்புகள் மற்றும் பொது வழிபாடு பற்றிய மெக்ஸிகோ நாட்டு சட்டம் மத அடிப்படையில் ஆட்சேபணை தெரிவிப்பதை உண்மையில் தடைசெய்கிறது என்பதை நாம் இங்கே குறிப்பிட கடமைப்பட்டிருக்கிறோம்” என்று அவர் சொன்னார். சட்டத்தில் முதலாம் பிரிவை அவர் இங்கே குறிப்பிட்டார். அது இவ்வாறு சொல்கிறது: “மத நம்பிக்கைகளின் காரணமாக இந்தத் தேசத்தின் சட்டங்களுக்கு இணங்குவதிலிருந்து எவரும் விலக்கப்பட்டவரல்ல. சட்டம் வற்புறுத்தும் பொறுப்புகளையும் கடமைகளையும் தட்டிக்கழிக்க எவரும் மத சம்பந்தமான காரணங்களை கூற இயலாது.” டாக்டர் சோபரானஸ் இவ்வாறு முடிவாக கூறினார்: “மெக்ஸிகோவில் மத அடிப்படையில் ஆட்சேபணை குறித்த விஷயத்தில் நாம் சட்டங்களை அவசரமாக இயற்ற வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.”
ஒவ்வொரு ஆண்டும் மெக்ஸிகோவில் நூற்றுக்கணக்கான சாட்சிகளின் பிள்ளைகள் தங்கள் கல்வியின் சம்பந்தமாக பிரச்சினைகளை எதிர்ப்படுகிறார்கள். பைபிள் அடிப்படையிலான காரணங்களுக்காக கொடியை வணங்க மறுப்பதே இதற்கு காரணம். சில சாட்சிகளின் பிள்ளைகள் பள்ளியில் சேர்த்துக்கொள்ளப்படுவதே இல்லை. ஆனால் அவர்களில் அநேகர் மனித உரிமைகள் கமிஷனின் மூலமாக அப்பீல் செய்து கல்வி கற்பதற்கான தங்கள் உரிமையை திரும்பவும் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். கல்வி அதிகாரிகள் சிலர், பிள்ளைகள் பள்ளியிலிருந்து வெளியேற்றப்படுவதை தடைசெய்யும் நடவடிக்கைகளை எடுத்திருந்தபோதிலும் சில ஆசிரியர்கள் அவற்றை அசட்டை செய்துவிடுகிறார்கள். சாட்சிகள் எடுக்கும் நிலைநிற்கையை அதிகாரிகள் பெருந்தன்மையாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள், ஆனால் மெக்ஸிகோவில் பள்ளிகள் பின்பற்றுவதற்கென ஒரு நிலையான நியதி இல்லை.
மற்ற மதங்களைச் சேர்ந்தவர்கள் மத அடிப்படையில் ஆட்சேபிக்கும் காரியங்களும் இந்தக் கருத்தரங்கில் இடம் பெற்றிருந்தன. பரிசுத்தமானதாக கருதப்படும் நாட்களில் வேலை செய்ய கட்டாயப்படுத்துதல், வேலை செய்யும் இடங்களில் அவர்களுடைய மத நம்பிக்கைகளை மீறும் வகையில் உடுத்தும்படி கேட்கப்படுதல் போன்றவை இதில் இடம் பெற்றன. இராணுவ சேவைக்கும் குறிப்பிட்ட மருத்துவ சிகிச்சைகளுக்கும்
ஆட்சேபணைகள் ஆகியவையும் இதில் சேர்த்துக்கொள்ளப்பட்டன.யெகோவாவின் சாட்சிகளும் இராயனும்
மெக்ஸிகோ நாட்டிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலக அங்கத்தினர் ஒருவர் யெகோவாவின் சாட்சிகளுடைய அடிப்படை நம்பிக்கைகளைப் பற்றி சுருக்கமாக பேசினார். பைபிள் நியமங்களை அவர்கள் உண்மையோடு பின்பற்றுவதை அவர் விளக்கினார். லூக்கா 20:25 சொல்வதுபோல, “இராயனுடையதை இராயனுக்கு” கிறிஸ்தவர்கள் கொடுப்பதை அவர் விளக்கினார். கிறிஸ்தவர்கள் அதிகாரிகளுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று கூறும் ரோமர் 13:1-ஐயும் அவர் காட்டினார். யெகோவாவின் சாட்சிகள் தேசத்தின் சாதாரண குடிமக்கள், சட்டத்தை கடைப்பிடித்து வரிகளைச் செலுத்துபவர்கள், ஒழுங்காக வாழ்க்கை நடத்துபவர்கள், தங்கள் வீடுகளைச் சுத்தமாக வைத்திருப்பவர்கள், தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புகிறவர்கள் என்பதை எல்லாம் அவர் அழுத்திக் கூறினார்.
அதற்குப் பின் சாட்சிகள் ஏன் கொடி வணக்கம் செய்ய மறுக்கிறார்கள், அதற்கு வேதாகம ஆதாரம் என்ன என்பதை அவர் முக்கியப்படுத்திக் காட்டினார். இந்த ஆதாரத்தை யாத்திராகமம் 20:3-5-ல் காணப்படும் பத்து கற்பனைகளில் காணமுடியும் என்று விளக்கினார். அது இவ்வாறு வாசிக்கிறது: “என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம். மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்; நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்.”
யெகோவாவின் சாட்சிகள் கடவுளை மாத்திரமே வணங்குவர். எக்காரணத்தை முன்னிட்டும் அவர்கள் ஒரு உருவத்தை வணங்கமாட்டார்கள். அதே சமயத்தில் அவர்கள் ஒருபோதும் தேசிய சின்னத்தை அவமதிக்கும் விதமாக நடந்துகொள்ளவோ அல்லது அதைக் குறித்து மரியாதையற்ற முறையில் பேசவோ மாட்டார்கள்.
இந்த விஷயத்தின் பேரில் சாட்சிகளுடைய நோக்குநிலையை வலியுறுத்தும் பொருட்டு பர்ப்பிள் டிரையாங்கில்ஸ் வீடியோ போட்டு காண்பிக்கப்பட்டது. இது நாசி ஜெர்மனியில் (1933-45) யெகோவாவின் சாட்சிகளுடைய அசைக்க முடியாத நிலைநிற்கையை எடுத்துக்காட்டுகிறது. நாசி ஆட்சியின்போது b தங்கள் நம்பிக்கைகளுக்காக மிகவும் உறுதியாக நின்ற குசெரோ குடும்பத்தின் கதையை வீடியோ விளக்கிக் கூறுகிறது.
யெகோவாவின் சாட்சிகள் இரத்தம் ஏற்றிக்கொள்ள மறுப்பதற்கு வேதப்பூர்வமான காரணம் என்ன என்பது சொல்லப்பட்டது. (ஆதியாகமம் 9:3, 4; அப்போஸ்தலர் 15:28, 29) உலகம் முழுவதிலுமுள்ள மருத்துவமனை தொடர்பு குழுக்களின் ஏற்பாடு விளக்கப்பட்டது. அதோடு, யெகோவாவின் சாட்சிகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்து இரத்தமில்லாமல் அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்திருக்கும் மருத்துவர்களின் சாதனைகள் உயர்த்திக் காட்டப்பட்டன.
ஒவ்வொரு நாளும் சுமார் 100 பேர் கருத்தரங்குக்கு வந்திருந்தனர், இவர்களில் பலர் வழக்கறிஞர்கள். மெக்ஸிகோவில் மத விவகார அலுவலக பிரதிநிதிகள்கூட ஆஜராயிருந்தனர். மத அடிப்படையில் தெரிவிக்கப்படும் ஆட்சேபணை மதிக்கப்பட வேண்டும் என்ற வல்லுநர்களின் கருத்தை அங்கிருந்த அனைவரும் கேட்டனர். இந்தக் கருத்து மெக்ஸிகோவில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு புதிதாக இருந்தபோதிலும் பிரான்சு, போர்ச்சுகல், ஸ்பெயின், ஐக்கிய மாகாணங்கள் மற்றும் செக்கிய, ஸ்லோவாக்கிய போன்ற முன்னாள் கம்யூனிச நாடுகளில் இது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றே.
[அடிக்குறிப்புகள்]
a “ஐரோப்பிய உயர்நீதி மன்றம் கிரீஸில் பிரசங்கிக்கும் உரிமையை ஆதரிக்கிறது” மற்றும் “சட்டத்தின் பாதுகாப்புச் சுவருக்குள் நற்செய்தி” என்ற கட்டுரைகளை செப்டம்பர் 1, 1993 மற்றும் டிசம்பர் 1, 1998 காவற்கோபுரம் இதழ்களில் பார்க்கவும்.
b 1985, செப்டம்பர் 1 காவற்கோபுரம் (ஆங்கிலம்) இதழில் “சிறைவாசம், மரணம்—இவற்றின் மத்தியிலும் என்னுடைய குடும்பத்தார் கடவுளை நேசித்தார்கள்” என்ற கட்டுரையைக் காண்க. 1994, ஜனவரி 15 இதழ், பக்கம் 5-ஐயும் காண்க.
[பக்கம் 21-ன் படம்]
மெக்ஸிகோவிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் பிரசங்கிக்க தங்களுக்கு இருக்கும் சுதந்திரத்தை பொக்கிஷம் போல் கருதுகின்றனர்