Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மெய்யான விசுவாசம்—எது?

மெய்யான விசுவாசம்—எது?

பைபிளின் கருத்து

மெய்யான விசுவாசம்—எது?

“விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும்.”—எபிரெயர் 11:⁠6.

விசுவாசம் என்பது என்ன? கடவுள் இருக்கிறார் என்பதற்கு திடமான ஆதாரம் ஏதுமின்றி அவரில் வைக்கும் மதநம்பிக்கையே விசுவாசம் என சிலர் விளக்கம் கொடுக்கின்றனர். “நடக்கக்கூடாதவைகள் நடக்கும் என்ற அர்த்தமற்ற நம்பிக்கையே” விசுவாசம் என அமெரிக்க பத்திரிகை எழுத்தாளர் ஹெச். எல். மென்கன் விளக்கம் தருகிறார். பைபிளில் விவரிக்கப்பட்டுள்ள மெய்யான விசுவாசம் இதுவா? விசுவாசம் உண்மையில் என்ன என்பதைப் பற்றி தெளிவான புரிந்துகொள்ளுதல் மிக அவசியம். ஏனென்றால், மேலே குறிப்பிட்டுள்ள வசனம் சொல்கிறபடி, ‘விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம்.’

“விசுவாசம் என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி” என பைபிள் சொல்கிறது. (எபிரெயர் 11:1, NW) எனவே, திருத்தமான அறிவின்பேரில் சார்ந்ததே விசுவாசம். அதாவது, சரியான தீர்மானங்கள் எடுக்க அடிப்படையாய் இருக்கும் உண்மைத் தகவல்களைச் சார்ந்ததே விசுவாசம். அதற்கு நம்பிக்கை மட்டுமல்ல, நம்புவதற்கான காரணமும் வேண்டும்.

உதாரணத்திற்கு உங்களுக்கு ஒரு நண்பர் இருக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். “அவரை நான் நம்பறேன். அவர் சொன்ன வார்த்தை தவறமாட்டார் என்று நான் முழுக்க முழுக்க நம்பறேன். எனக்கு ஏதாவது பிரச்சினை என்றால் அவர் நிச்சயம் எனக்கு உதவிக்கரம் நீட்டுவார்” என நீங்கள் அவரைப் பற்றி சொல்கிறீர்கள். உங்களுக்கு ஓரிரு நாட்களே பரிச்சயமான ஒருவரைப் பற்றி நீங்கள் இப்படிச் சொல்வீர்களா? உங்கள் நம்பிக்கைக்கு பாத்திரமான ஒருவரைப் பற்றித்தான் இப்படிச் சொல்வீர்களல்லவா. அதைப் பல தடவை நிரூபித்த ஒருவரைப் பற்றித்தான் நீங்கள் இப்படிச் சொல்ல முடியும். மத விசுவாசத்தைக் குறித்ததிலும் இதுவே உண்மை. நம்பத்தக்க, பலமான ஆதாரங்கள்மீது சார்ந்த நம்பிக்கையையும் உறுதியையும் அது பிறப்பிக்க வேண்டும்.

விசுவாசமா அல்லது குருட்டு நம்பிக்கையா?

தகுந்த அடிப்படை அல்லது காரணமின்றி எளிதில் நம்பிவிடும் தன்மையே இன்று விசுவாசம் என தவறாக கருதப்படுகிறது. அது உண்மையில் குருட்டு நம்பிக்கையே. இது நிலையற்ற உணர்ச்சிகளாலும் மூடநம்பிக்கைகளாலுமே பெரும்பாலும் தோன்றுகிறது. நம்பிக்கைக்கான தகுந்த ஆதாரம் ஏதும் அதற்கில்லை. ஆகவே அது நல்ல அஸ்திவாரத்தைக் கொண்ட விசுவாசமல்ல.

பதட்ட நிலையில் அவசரமாக, நிதானமின்றி தீர்மானங்களை எடுக்க குருட்டு நம்பிக்கை ஒருவரை வழிநடத்தக்கூடும். இவை, பைபிள் சத்தியத்திற்கு முரணாக இருக்கலாம். இப்படிப்பட்ட ஆதாரமற்ற விசுவாசத்தைப் பற்றி பைபிள் இவ்வாறு எச்சரிக்கிறது: “பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்.” (நீதிமொழிகள் 14:15) அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார்: “எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்.” (1 தெசலோனிக்கேயர் 5:21) குருட்டு நம்பிக்கையை பைபிள் ஆதரிப்பதில்லை. ஆதாரங்கள் மேல் சார்ந்த விசுவாசத்தை வளர்க்கும்படியே அது தூண்டுகிறது.

குருட்டு நம்பிக்கை எது மெய்யான விசுவாசம் எது என்பதை வேறுபடுத்தி புரிந்துகொள்வது மிக முக்கியமானது. ஒரு நபர் மதப்பற்று உள்ளவராக இருக்கலாம். இருந்தபோதிலும், மெய்யான விசுவாசமின்றி இருக்கலாம். “விசுவாசம் எல்லாரிடத்திலுமில்லையே” என பவுல் குறிப்பிட்டார். (2 தெசலோனிக்கேயர் 3:2) இருந்தாலும் பைபிள் அடிப்படையிலான விசுவாசம் சிலரிடத்தில் நிச்சயம் இருக்கத்தான் செய்கிறது. அது அவர்களுடைய வாழ்க்கையையும் பாதிக்கிறது.

மனிதனை கடவுளோடு பிணைப்பது மெய்யான விசுவாசம்

விசுவாசம் என்பது மனிதனை கடவுளோடு பிணைக்கும் சங்கிலி எனலாம். நம்பிக்கை, பற்று எனும் வளையங்களால் கோர்க்கப்பட்ட சங்கிலி இது. இந்த வகையான விசுவாசம் பேணி வளர்க்க வேண்டிய ஒன்று. விசுவாசத்தோடே நாம் பிறக்கவில்லை. அப்படியென்றால் மெய்யான விசுவாசத்தை நீங்கள் எப்படி வளர்க்கலாம்? பைபிள் சொல்கிறது: “அறிவிப்பதைக் கேட்பதால்தான் விசுவாசம் உண்டாகிறது என்பது தெளிவு; நாங்கள் அறிவிப்பதற்கோ கிறிஸ்துவின் வார்த்தையே ஊற்று”​—⁠ரோமர் [உரோமையர்] 10:⁠17, தமிழ் கத்தோலிக்க மொழிபெயர்ப்பு.

ஆகவே, கடவுளையும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் போதகங்களையும் தெரிந்துகொள்ள நீங்கள் நேரத்தை ஒதுக்க வேண்டும். இந்த அறிவு முயற்சியின்றி வந்துவிடாது. (நீதிமொழிகள் 2:1-9) பைபிள் என்ன சொல்கிறது என்பதை தெரிந்துகொள்ள நீங்கள் முயற்சி எடுக்க வேண்டும். அப்போதுதான் அதிலுள்ள அனைத்தும் உண்மை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

என்றாலும், வெறுமனே அறிவைக்கொண்டிருப்பதோ அல்லது சரியானது என ஏதோவொன்றை நம்புவதோ மெய்யான விசுவாசமல்ல. அது உணர்ச்சிகளின் பிறப்பிடமான இருதயத்தையும் உட்படுத்துகிறது. எனவேதான், ‘விசுவாசம் இருதயத்தில் பிறக்கிறது’ என ரோமர் 10:10 (NW) சொல்கிறது. இது எதை அர்த்தப்படுத்துகிறது? கடவுளுடைய காரியங்களைப் பற்றி நீங்கள் தியானிக்கையில், அவற்றிற்கான உங்களுடைய போற்றுதல் வளருகிறது. இப்படியாக, பைபிள் செய்தியை உங்கள் இருதயத்தில் ஆழ பதிய வைக்கிறீர்கள். இவ்வாறு கடவுளுடைய வாக்குறுதிகளுக்கு இசைய நடக்க தூண்டப்பட்டு, கடவுளுடைய ஆசீர்வாதத்தையும் ருசிக்கையில் உங்கள் விசுவாசம் அதிகரிக்கிறது. மேலும் மேலும் பலப்படுகிறது.​—2 தெசலோனிக்கேயர் 1:⁠3.

எப்பேர்ப்பட்ட மதிப்புமிக்க, அரிய பொக்கிஷம் இந்த மெய்யான விசுவாசம்! நம் பாதைகளை கடவுள் செம்மைப்படுத்த முடியுமென அவரில் நம்பிக்கையாய் இருக்கலாம். மேலும், நம் தேவைகள் அனைத்தையும் கவனிக்க அவர் விருப்பம் உடையவராய் இருக்கிறார். கடவுளில் இருக்கும் இந்த நம்பிக்கையோடு எப்பேர்ப்பட்ட கடினமான நிலைமைகளையும் நம்மால் சமாளிக்க முடியும். இவையனைத்தும் விசுவாசத்தால் கிடைக்கும் நன்மைகள். மேலும், விசுவாசத்தினால் கிடைக்கும் நீண்டகால நன்மை ஒன்றை கடவுளுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து சுட்டிக்காட்டுகிறார்: ‘தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.’ (யோவான் 3:16) நித்திய ஜீவன்​—⁠விசுவாசம் உடையவர்களுக்கு என்னே அருமையான பரிசு!

கடவுள் தம்முடைய வாக்குறுதிகளில் விசுவாசம் வைப்போருக்கு பலன் அளிப்பார் என்று விசுவாசிப்பது வாழ்க்கைக்கு புது அர்த்தத்தைக் கொடுக்கிறது. “தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்”கும் கடவுளுடைய வல்லமையில் நம்பிக்கை வைப்பதையே மெய்யான விசுவாசம் அர்த்தப்படுத்துகிறதென எபிரெயர் 11:6 சொல்கிறது. அப்படியென்றால், மெய்யான விசுவாசம் என்பது குருட்டு நம்பிக்கை அல்ல. வெறுமனே கடவுள் இருக்கிறார் என்று நம்புவதைவிட அதிகத்தை குறிக்கிறது. தம்மை ஊக்கமாக தேடுகிறவர்களுக்கு பலனளிக்க கடவுளுக்கு வல்லமை உண்டு என்பதை ஏற்றுக்கொள்வதும் இதில் அடங்கும். உண்மையிலேயே கடவுளை தெரிந்துகொள்ள நீங்கள் மனப்பூர்வமாக விரும்புகிறீர்களா? அப்படியென்றால், கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளில் இருந்து திருத்தமான அறிவைப் பெறுங்கள். உங்கள் விசுவாசத்திற்கு பலன் நிச்சயம் கிடைக்கும்.—கொலோசெயர் 1:9, 10.

[பக்கம் 26-ன் படத்திற்கான நன்றி]

Drawings of Albrecht Dürer/Dover Publications, Inc.