ரகசியத்திலும் ரகசியம்
ரகசியத்திலும் ரகசியம்
“யாருமே அடிமைகளாக இருக்க மாட்டார்கள்: எல்லா விதமான அடிமைத்தனமும் அடிமை வியாபாரமும் அடியோடு ஒழிக்கப்படும்.”—மனித உரிமைகளின் சர்வதேச உறுதிமொழி.
அடுத்தமுறை நீங்கள் காபிக்கு சர்க்கரை போடும்போது ஹைதியை சேர்ந்த பிரேவோ என்பவரை நினைத்துக்கொள்ளுங்கள். கரிபியன் நாட்டில் கைநிறைய சம்பளம் கிடைக்கும் வேலை இருப்பதாக இவரிடம் இனிமையாக பேசி அனுப்பிவிட்டனர். ஆனால் கசப்பான உண்மை என்னவென்றால், இவரை எட்டு டாலருக்கு விலைபேசி விற்றுவிட்டனர்!
தன்னுடைய நாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான சகமனிதரோடு பிரேவோவும் அடிமையானார். இவர்களுக்கு கொஞ்சம் சம்பளம் கொடுத்து அல்லது அதுகூட கொடுக்காமல் ஆறு ஏழு மாதத்திற்கு கரும்பு வெட்டும் காட்டில் சக்கையாக பிழிந்தெடுக்கிறார்கள். இப்படி இழுத்துவரப்பட்ட அடிமைகளை பட்டியில் ஆடுமாடுகளை அடைத்து வைப்பது போல மோசமான சூழலில் கூட்டமாக அடைத்து வைக்கிறார்கள். அவர்களிடமிருந்து எல்லாவற்றையும் உரித்துக்கொள்கிறார்கள். கையில் கொடுப்பதோ ஒரு கொடுவாள். வயித்துப்பாட்டுக்காக அவர்கள் செக்கு மாடாக உழைக்க வேண்டும். தப்பிக்கப் பார்த்தால், தோல் கிழிய துவைத்துவிடுவார்கள்.
தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த லின்-லின் என்ற சிறு பெண்ணின் கதையை கேளுங்கள். இவள் 13 வயதிலேயே அன்னையை இழந்துவிட்டாள். இவளுக்கு நல்ல வேலை வாங்கித் தருவதாக ஆசைகாட்டி, வேலை வாய்ப்பு ஏஜென்ஸி இவளுடைய அப்பாவிடமிருந்து 480 டாலருக்கு இவளை வாங்கியது. அவளுக்கு கொடுக்கப்பட்ட இந்தத் தொகை “முன்பணம்” என எழுதப்பட்டிருந்தது. இது, அவளை நிரந்தரமாக வைத்துக்கொள்வதற்கு அவளுடைய முதலாளிக்கு நல்ல பிடிமானமாய் அமைந்துவிட்டது. அவளுக்கு நியாயமான சம்பளம் கொடுப்பதற்கு பதிலாக, லின்-லின் விலைமாதாய் விற்கப்பட்டாள். அவளுடைய வாடிக்கையாளர்களால் அவளுடைய முதலாளிக்கு கிடைத்த வரும்படி—மணிக்கு 4 டாலர்! லின்-லின் ஏறக்குறைய ஒரு சிறைக்கைதி போல ஆகிவிட்டாள். ஏனென்றால் விலைமாதாக வைத்திருக்கும் முதலாளிக்குரிய பணத்தையும், அவளுடைய கடனையும் கட்டித்தீர்க்கும் வரை இதிலிருந்து அவள் தப்பவே முடியாது. அவளுடைய முதலாளியின் விருப்பப்படி செய்ய மறுத்தால், அவள் அடிக்கப்படலாம், சித்திரவதை செய்யப்படலாம். இதைவிட கொடுமை என்னவென்றால், தப்பிக்க முயன்றால், தலையே போய்விடும்!
அனைவருக்கும் விடுதலை?
அடிமை என்ற வார்த்தையே அகராதியிலிருந்து அழிக்கப்பட்டுவிட்டது என அநேகர் ஆரவார ஒலி எழுப்பலாம், மேடைபோட்டு பேசலாம், உறுதிமொழி கோஷமிடலாம், சட்டங்கள் இயற்றலாம், அடியோடு ஒழிக்கப்பட்டுவிட்டதாய் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கலாம். அடிமைத்தனத்தின் மீது கசப்பையும் வெறுப்பையும் இன்று எங்கும் காட்டலாம். தேசிய சட்டங்கள் அடிமைத்தனத்தின் மீது தடைவிதித்திருக்கின்றன, அதை அடியோடு ஒழிப்பதை சர்வதேச சட்ட ஆவணங்கள் பொறித்து வைத்திருக்கின்றன. ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 1948-ம் வருட மனித உரிமைகளின் சர்வதேச உறுதிமொழி பிரிவு 4 குறிப்பிடத்தக்கதாகும்.
அடிமைத்தனம் என்பது சிலருக்கு ரகசியத்திலும் ரகசியமாக இருந்தாலும், அது இன்றும் அழியாமல் செழித்தோங்குகிறது. ப்னாம் பென் முதல் பாரிஸ் வரைக்கும், மும்பை முதல் பிரேஸிலியா வரைக்கும் கோடானு கோடி சகமனிதர்கள்—ஆண்களும் பெண்களும் பிள்ளைகளும்—அடிமைகளாக அல்லது அடிமை போன்ற நிலைமைகளில் வாழவோ வேலை செய்யவோ வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். லண்டனில் உள்ள அடிமைத்தன எதிர்ப்பு நிறுவனம்—இது கொத்தடிமை வாழ்வை கவனிக்கும் உலகிலேயே மிகப் பழைய நிறுவனம்—அடிமைத்தனத்தில் வாழும் மக்களின் எண்ணிக்கையை கோடிகளில் காட்டுகிறது. சரித்திரம் காணாத அளவு அதிக அடிமைகள் இப்போது உலகில் இருக்கலாம் என்பதே உண்மை.
நமக்கு பரிச்சயமான அடிமை விலங்குகளோ சவுக்குகளோ ஏலங்களோ நவீன நாளைய அடிமைத்தனத்தில் இல்லாமல் இருக்கலாம். கொத்தடிமை, அடிமை மணவாழ்க்கை, கடன் அடிமை, குழந்தை தொழில், வேசித்தொழில் ஆகியவை இன்றைய நாளில் காணப்படும் அடிமைத்தனத்தில் ஒரு சிலவே. அடிமைகள் வைப்பாட்டிகளாக இருக்கலாம், ஒட்டக ஓட்டிகளாக இருக்கலாம், கரும்பு வெட்டுபவர்களாக இருக்கலாம், கம்பளம் நெய்பவர்களாக இருக்கலாம், சாலைகள் போடுகிறவர்களாக இருக்கலாம். பெரும்பாலானோர் சந்தையில் ஏலம் விடப்படுவதில்லை என்பது உண்மைதான், ஆனால் இவர்கள் அடிமைகளைவிட மோசமாகவே நடத்தப்படுகின்றனர். சிலருடைய விஷயத்தில் அவர்களுடைய உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கிறது.
யார் அடிமைகளாகின்றனர்? எப்படி அடிமைகளாகின்றனர்? என்ன உதவி அளிக்கப்படுகிறது? அடிமைத்தனத்தை அடியோடு ஒழிக்கும் காலம் கண்ணில் தெரிகிறதா?
[பக்கம் 4-ன் பெட்டி/படம்]
நவீன அடிமைத்தனம் என்றால் என்ன?
வருஷக்கணக்கான முயற்சிக்குப் பின் ஐக்கிய நாட்டு சங்கமும்கூட பதிலளிக்க தடுமாறும் கேள்வி இது. 1926-ல் நடைபெற்ற அடிமைத்தன மாநாட்டில், அடிமைத்தனம் என்பதற்கு ஒரு விளக்கம் உருவாக்கப்பட்டது. அது இவ்வாறு கூறியது: “அடிமைத்தனம் என்பது ஒருவரை உரிமைப்பொருளாக பாவித்து எல்லாவித அதிகாரத்தையும் பிரயோகிக்கையில் அவருக்கு ஏற்படும் நிலைமை.” ஆனாலும், இன்னும் இந்த வார்த்தைக்கான விளக்கம் மாற்றத்திற்குட்பட்டது. “அடிமைத்தனம் என்பது ஆடைகளும் விளையாட்டு சாதனங்களும் தயாரிக்கும் நிறுவனங்களிலும் அமெரிக்க நகரங்களிலும் மோசமான சூழலில் குறைந்த கூலிக்கு கடினமாக உழைக்கும் தொழிலாளர்களுக்கு பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தை” என இதழாசிரியர் பார்பரா குரோசெட் சொல்கிறார். “செக்ஸ் தொழிலையும் சிறையில் கொத்தடிமை தொழிலையும் கண்டனம் செய்வதற்கு இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.”
“அடிமைத்தனம் புதுப் புது ரூபங்களில் வலம்வருவதால்—அல்லது அந்த வார்த்தை வெவ்வேறு சூழ்நிலைமைகளுக்குப் பயன்படுத்தப்படுவதால்—அதன் அர்த்தம் மாறிவிடும் அல்லது மறைந்துவிடும் அபாயம் இருப்பதாக” அடிமைத்தனத்தை எதிர்க்கும் சர்வதேச நிறுவனத்தின் இயக்குநர் மைக் டாட்ரிஜ் கருதுகிறார். “ஒருவரை உரிமைப்பொருளாக நடத்துவது அல்லது ஒருவருடைய வாழ்க்கையை ஆதிக்கம் செலுத்துவது போன்றவற்றால் அடிமைத்தனம் அடையாளம் காட்டப்படுகிறது” என்பதாக அவர் நினைக்கிறார். அது பலவந்தப்படுத்துவதையும் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதையும்—அதாவது, “தப்பிச்செல்ல முடியாத நிலையையும், முதலாளியை மாற்றிக்கொள்ள இயலாத நிலையையும்” உட்படுத்துகிறது.
ஏ. எம். ரோஷன்டால் என்பவர் த நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு எழுதுகையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “அடிமைகள் அடிமை வாழ்க்கை வாழ்கின்றனர்—அதாவது, கொத்தடிமை வேலை, கற்பழிப்பு, பசி, சித்திரவதை, மிகவும் தரக்குறைவாக நடத்தப்படுதல் ஆகிவற்றை அனுபவிக்கின்றனர்.” அவர் மேலும் சொன்னார்: “வெறும் ஐம்பது டாலருக்கு ஒரு அடிமையை வாங்கலாம், அதனால் அவர்கள் எவ்வளவு காலம் உயிர் வாழ்ந்தாலும் [அவர்களுடைய முதலாளிக்கு] கவலையே இல்லை; அவர்களுடைய உடல்கள் ஏதாவதொரு ஆற்றில் தூக்கியெறியப்படுகின்றன.”
[படத்திற்கான நன்றி]
Ricardo Funari